இலைமறை காயை போல செய்யப்பட்டு வந்த ஊழல்
உள்ளங்கை நெல்லிகனி போல செய்யப்படுகிறது
அங்கிங்கெனாதபடி நீக்கமற நிறைந்தவன் இறைவனோ
இல்லையோ ஆனால் ஊழல் நிறைந்து கிடக்கிறது
பதுக்கப்பட்ட பணமோ சுவிட்சர் லாந்தில் பூட்டப்பட்டு கிடக்கிறது .
ஒரு குடும்பத்தின் ஆட்சியில் தமிழகம் சிக்கி தவிக்கிறது .
ஊழலால்கிழிந்த வேட்டியை இனாமால் மறைக்க முடியவில்லை.
மானம் கப்பலேறிய பிறகு கூறும் சமாதானங்கள் நொண்டி சாக்குகளே!
எங்கள் வாழ்வு விலைவாசியால் நாளுக்கு நாள் குறுகி போன
ஒற்றையடி பாதையாகி போய் விட்டது .
வாழ்க்கை மாயமானை போலபோக்கு காட்டுகிறது அரசியல் வாதிகளால் .
நீ யோக்கியமா நீ யோக்கியமா எனும் சண்டையால் காது சவ்வு கிழிவதை தவிர மேற்கொண்டு நிவாரணம் இல்லை .
பேய்க்கு பிசாசே தேவலை என்பதை தவிர ஓட்டு போடும் நமக்கு
அழியாத மையால் சொல்கிறார்கள் ஊழல் அழிவதில்லை என்று .
இந்த முகர கட்டைகளுக்குத்தான் தலைவர்கள் என்கிற தகுதியை
தந்திருக்கிறோம் தரித்திரம் நம்மை துரத்தாமல் என்ன செய்யும்?
மக்களில் இருந்து இங்கே தலைவர்கள் உருவாவதில்லை
தலைவர்கள் பெற்றெடுக்கிறார்கள் வாரிசாக தலைவர்களை.
ஊழல் பெற்றெடுக்கிறது ஊழலை வாரிசாக.
அரசர்களின் கோமணத்தை உருவிட்டு ஜனநாயகம் வந்திருக்கலாம்
அதே கிழிந்த கோமணம்தான் மாற்றி கட்டப்படுகிறது தற்போது
புதுபெயரில் கட்சியின் கொடியாக.
ஒரு விதமான வெக்கை ஆட்கொள்கிறது - இருள் நிறைந்த ஒரு வெப்பமிகு
அறைக்குள் அடைக்கப்பட்டது போல மக்கள் உணருகிறார்கள்
உண்மை நேர்மை எனும் காற்று வீசாதா ?
-----------
முகவின் பேச்சை மனம் பலகீனமானவர்கள் படிக்க வேண்டாம்
-------------------------------------------------------------------
சென்னை: இயற்கை ஒன்றுதான் என்னை அகற்ற முடியும் என்று முதல்வர் கருணாநிதி கூறினார்.
ஸ்பெக்ட்ரம் வழக்கு தொடர்பாக 2வது குற்றப் பத்திரிக்கையை சிபிஐ தாக்கல் செய்துள்ளது. அதில் கனிமொழியின் பெயர் கூட்டுச் சதியாளராக சேர்க்கப்பட்டுள்ளது. அதேபோல கலைஞர் டிவியின் நிர்வாகி சரத்குமார் ரெட்டியின் பெயரையும் சேர்த்துள்ளனர். இதனால் திமுக அதிர்ச்சியும், கடும் அதிருப்தியும் அடைந்துள்ளது.
ஊழல் தடுப்புச் சட்டப் பிரிவுகளின் கீழ் அவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளதால், நீதிமன்ற உத்தரவுப்படி வரும் மே 6ம் தேதி சிபிஐ சிறப்பு நீதிமனறத்தில் ஆஜராகும்போது, கைது செய்யப்படக் கூடும் என்றும் பரவலாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இக் கூட்டத்தில் முதல்வரும் கட்சித் தலைவருமான கருணாநிதி, நிதியமைச்சரும் பொதுச் செயலாளருமான க.அன்பழகன், துணை முதல்வரும் பொருளாளருமான மு.க.ஸ்டாலின், மத்திய அமைச்சரும் திமுக தென் மண்டல அமைப்புச் செயலாளருமான மு.க.அழகிரி, மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், கனிமொழி, அமைச்சர்கள் உள்ளிட்ட 27 பேர் பங்கேற்றனர்.
அதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தில், “2ஜி விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும், 2ஜி விவகாரத்தில் உண்மையை நிலைநாட்ட முடியும் என திமுக நம்புகிறது. ஊடகங்களின் பிரசார மாயைக்கு திமுக இரையாகாது”, என்று கூறப்பட்டுள்ளது.
பூதத்தை விழுங்கியது பூனைக்குட்டி என்பதைப் போல…
தீர்மான விவரம்:
பூதத்தைப் பூனைக்குட்டி விழுங்கி விட்டதாகக் கூறுவது போல, அனுமானமாக பலபல கோடி ரூபாய் மத்திய அரசுக்கு இழப்பு ஏற்படுத்தி விட்டதாக இந்தியாவின் தலைமைக் கணக்காயர் தெரிவித்தது முதலாக, இந்தப் பிரச்சினையில் அரசியல் சதுரங்கம் ஆடுவதற்கு ஓர் ஆதிக்க வட்டாரம் தொடர்ந்து முயற்சித்து வருவதை நாடறியும்.
2-ஜி ஸ்பெக்ட்ரம் அலைவரிசை வழங்கியதில் பின்பற்றப்பட்ட நடைமுறையால், அரசுக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்பட்டது என்ற குற்றச்சாட்டின் மீது சி.பி.ஐ. விசாரணை தொடங்கப்பட்டு, அதன் தொடர்பாக தொலைத் தொடர்பு துறை மந்திரி ஆ.ராசாவை கைது செய்து திகார் சிறையில் வைத்துள்ளதோடு, பல்வேறு நிறுவனங்களின் இயக்குநர்களையும் கைது செய்துள்ள நிலையில், அவற்றில் ஒரு நிறுவனத்தினிடமிருந்து கலைஞர் தொலைக்காட்சிக்காக 200 கோடி ரூபாய் கடன் பெறப்பட்டு, பின்னர் வட்டி யுடன் திரும்பச் செலுத்தியுள்ள விவரத்தை, வருமான வரித்துறை சான்று ஆவணங்களுடன் ஒப்படைத்திருப்பினும், கலைஞர் தொலைக்காட்சி நிறுவனத்தின் பங்குதாரரான மாநிலங்கள் அவை உறுப்பினர் கனிமொழியையும், இயக்குநர் சரத்தையும் சி.பி.ஐ. துறையினர் நீதிமன்றத்திற்கு அளித்த 2-வது குற்றப்பத்திரிகையில் சேர்த்திருக்கும் செய்தி இந்தக் குழுவை வியப்பில் ஆழ்த்துகிறது.
2-ஜி அலைக்கற்றை வழக்கு தொடர்பான குற்றச்சாட்டுகள் வெளிவரத் தொடங்கியதில் இருந்து, எப்படியாவது தி.மு.க. தலைமை மீது பழி சுமத்துவதற்கு கிடைத்த அரிய வாய்ப்பாக கருதி, தொடர்ந்து பல ஏடுகளும், ஊடகங்களும் செய்தி பரப்பி வருவதுடன், இதை ஒரு அரசியல் பிரச்சினையாக்கி, இன்று தொடரும் ஐக்கிய முற்போக்கு கூட்டணியின ரிடையே அவநம்பிக்கையை உருவாக்கிடவும், பிரச்சினையைப் பெரிதுபடுத்தி மாறுபாடுகளை வளர்த்து கூட்டணியை உடைக்கும் நோக்கத்துடனேயே ஊழல் செய்வதையே தமது கலாச்சாரமாகவும், வாழ்க்கை முறையாகவும் கொண்ட சில அரசியல் கட்சி தலைவர்களும் திராவிட இயக்கத்தின் ஆணிவேராக உள்ள தி.மு.க.வையும் அதன் செல்வாக்கு மிகுந்த தமிழக முதல்வர் தலைவர் கலைஞரையும், எப்படியேனும் அரசியல் தலைமையில் இருந்து வீழ்த்திவிட வேண்டும் என்னும் அவலாசை கொண்டு அலையும் ஏடு களும், இந்தச் செய்தியை மூல தானமாகக் கொண்டு, கழகத்திற்கு அதிர்ச்சி ஏற் படுத்தி, அதைக் கலகலக்கச் செய்யலாம் என்னும் உள் நோக்கத்துடன், பல வகை யிலும் செயல்படுவதை, ஊடகங்களின் நிருபர்கள் எழுப்பும் கேள்விகளாலும், வெளியிடும் செய்திகளாலும் அறியலாம்.
அப்படிப்பட்ட ஒரு பிரச்சார மாயைக்கு கழகம் இரையாகாது என்பதுடன், எதையும் அளவறிந்தும், முறை அறிந்தும், செயற் படுவதன் மூலம் உண்மையை நிலைநாட்டிடும் சிறப்புடைய தி.மு.க., இந்த வழக்கிலும், உண்மையை நிலைநாட்ட முடியும் என்று நம்புவதுடன், அதற்குரிய சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்வதே நம் கடமை என்று இந்த உயர்மட்டக் குழு தீர்மானித்து அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதென முடிவெடுக்கிறது.”
-இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தொண்டுள்ளம் கொண்ட கனிமொழி!
முன்னதாக கருணாநிதி பேசுகையில், “என்னைப் பொறுத்த வரையில் நம்மை மக்களிடத்தில் காட்டிக் கொடுக்கின்ற சூழ்ச்சிக்கு என்றைக்கும் அடி பணிந்தவனல்ல. என்னைத் தலைவனாகக் கொண்டு இயங்குகின்ற இந்த இயக்கமும் அடி பணிய வேண்டுமென்று கருதுகிறவனும் அல்ல.
நானே கைது செய்யப்பட்டபோது கூட என்னை இழிவான அடக்குமுறைகளுக்கு ஆளாக்கியபோது கூட அவைகளை சிரித்த முகத்தோடு தான் ஏற்றுக் கொண்டேன். இன்றைக்கு கனிமொழியை நான் இந்தக் கட்சியின் தொண்டர் என்ற முறையிலேதான் பார்க்கிறேனே தவிர, கனிமொழி என்னுடைய மகள் என்பதால் மாத்திரம் வளர்ச்சி பெற்றதாக யாரும் கருத முடியாது.
நான் இன்று காலையில் ஒரு புள்ளி விவரத்தை எடுத்துப் பார்த்தேன். அரசு சார்பில் வேலையில்லாதோருக்கு பணிகள் கிடைக்கப்பாடுபட்டிருக்கிறோம் என்ற போதிலும் தொண்டறம் பேணும் அமைப்புக்களின் துணையுடன்; மாநிலங்களவை உறுப்பினர், கவிஞர் கனிமொழி அந்தந்த மாவட்ட அமைச்சர்களோடும், மாவட்ட ஆட்சியர்களோடும், தொழில் நிறுவனங்களோடும் இணைந்து, காரியாபட்டி, நாகர்கோவில், வேலூர், உதகமண்டலம், விருதுநகர், கடலூர், திருச்சி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய நகரங்களில் வேலை வாய்ப்பினைத் தேடித்தரும் முகாம்களை நடத்தி, இந்த அனைத்து இடங்களிலும் 2 லட்சத்து 33 ஆயிரத்து 712 வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டு, அவர்களில் 1 லட்சத்து 33 ஆயிரத்து 998 பேர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைத்துள்ளது.
இவர்களில் குறிப்பாக திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் மட்டும் 36 ஆயிரத்து 297 பேர்கள் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 22 ஆயிரத்து 408 பேர் கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 19 ஆயிரத்து 98 பேர் வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 17 ஆயிரத்து 2 பேர் தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 16 ஆயிரத்து 663 பேர் குமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 5 ஆயிரத்து 77 பேர் நீலகிரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் 2 ஆயிரத்து 165 பேர் காரியாப்பட்டியில் 1 ஆயிரத்து 196 பேர்.
இவ்வாறு வேலை வாய்ப்பு கிடைத்தவர்களை அணியில் 55 ஆயிரத்து 656 பேர்களின் வேலை வாய்ப்பு ஆய்விலே உள்ளது. இவர்களுக்கும் பணி கிடைப்பதற்கான வாய்ப்புக் கூறுகள் உள்ளன என்றும் சொல்லியிருக்கிறார்கள்.
எனவே கனிமொழி கருணாநிதியின் மகள் என்ற முறையிலே மட்டும் இந்த இயக்கத்திலே பயன்படவில்லை. அவர் தொண்டுள்ளத்தோடு பாடுபட்டு வருகிறார். இன்னும் சொல்லப்போனால், நாட்டுப்புற கலைகளை வளர்க்க வேண்டும் என்பதற்காக சென்னை சங்கமம் நிகழ்ச்சிகளை நடத்தி, அதன் காரணமாக அவருக்கு எந்த அளவுக்கு பெயரும், புகழும் ஏற்பட்டுள்ளது என்பதையெல்லாம் நான் நன்றாக அறிவேன்.
சென்னையிலே பல இடங்களில் மக்களைக் கவருகின்ற அளவிற்கு சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. மேலும் குறிப்பாகவும் சிறப்பாகவும் கிறித்தவ பெருமக்கள் இந்த நிகழ்ச்சிகளின் வாயிலாக தங்களை இந்த இயக்கத்திலே ஒப்படைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
கனிமொழி மீது பொறாமை
இந்த இயக்கத்தின் மீது அன்பைப் பொழிந்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் பார்த்துப் பொறாமை காரணமாக, பொறுத்துக் கொள்ள முடியாமல், சகித்துக் கொள்ள முடியாமல் கனிமொழி மீது எதிர்ப்பைக் காட்டுகிறார்கள்.
இன்று காலையில் கூட இந்தக் கூட்டத்திற்கு வருவதற்கு கனிமொழி தயக்கம் காட்டினார். ஏனென்றால் நூற்றுக்கணக்கான புகைப்படக் கருவிகளோடு செய்தியாளர்கள் வீட்டின் வாயிலிலே நின்று கொண்டு பல கேள்விகளைக் கேட்க காத்துக் கொண்டிருந்த காரணத்தால் நானே நேரில் சென்று அழைத்துக் கொண்டு வந்தேன்.
அப்படிப்பட்ட நிலையில் நான் என்னுடைய மகளைக் காப்பாற்ற வேண்டும் என்கிற எண்ணத்தோடு அல்ல கட்சி சார்பாக கனிமொழியைக் காப்பாற்றுவது என்பது கட்சியின் செல்வாக்குக்கு ஊனம் வந்து விடாமல் பாதுகாப்பது தான் என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
கனிமொழி மாத்திரமல்ல, வீட்டிலே உள்ளவர்கள், அவருடைய தாயார் மற்ற உறுப்பினர்கள் வீட்டிலே படுகின்ற பாடு எனக்குத் தான் தெரியும். நான் மூன்று நாட்களாக அந்த வீட்டிற்கே செல்வதில்லை. கோபாலபுரத்திலேயே தங்கி விடுகிறேன். எனக்குள்ள சங்கடங்களை பெரிதுபடுத்தி, நான் என்றைக்கும் யாருக்கும் கட்சியைக் காட்டிக் கொடுக்க மாட்டேன் என்பதை எடுத்துச் சொல்லத்தான் இதையெல்லாம் கூறினேன்,” என்றார் கருணாநிதி.
நீதிமன்றத்தில் கனிமொழி ஆஜராவாரா?- ஜெ. ஆஜரானாரா?
கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கருணாநிதி, 2ஜி விவகாரத்தைப் பொறுத்தவரை அதில் உண்மையை நிலை நாட்டி, நாங்கள் நிரபராதிகள் என நிரூபிப்போம். 2ஜி ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் ஊடகங்கள் செய்து வரும் பிரசார மாயைக்கு திமுக இரையாகாது என்பதை உறுதியாகத் தெரிவித்துக் கொள்கிறோம்,” என்றார்.
அப்போது வரும் 6ம் தேதி 2ஜி வழக்கில் கனிமொழி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளதே, அவர் ஆஜராவாரா என்று நிருபர்கள் கேட்டதற்கு, “சொத்துக் குவிப்பு வழக்கில் ஜெயலலிதா ஆஜரானாரா? 2ஜி விவகாரம் தொடர்பாக சட்ட நிபுணர்கள் பார்த்துக் கொள்வார்கள்,” என்றார்.
கேள்வி: சி.பி.ஐ. நடத்தி வரும் ஸ்பெக்ட்ரம் வழக்கில் மத்திய அரசின் செயல்பாடுகள் உங்களுக்கு திருப்தியாக உள்ளதா?
பதில்: இன்று நிறைவேற்றிய எங்கள் தீர்மானத்தில் இது பற்றி சொல்லி இருக்கிறோம்.
கேள்வி: இந்தப் பிரச்சினை உங்களுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தி இருக்கிறதா?
பதில்: தர்மருக்கு பாரதத்தில் ஏற்பட்ட சங்கடம் எங்களுக்கு ஏற்படாது. என்ன சங்கடம் என்பதை விவரிக்க விரும்பவில்லை.
கேள்வி: இந்த வழக்கில் கனிமொழி மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருப்பது பற்றி ஊடகங்கள் உள்நோக்கத்துடன் செயல்படுகிறது என்று கூறியிருக்கிறீர்களே?
பதில்: ஒவ்வொரு நாளும் காலையில் பத்திரிகை படிப்பவர்கள், மாலை இரவு டி.வி.யை பார்ப்பவர்களுக்கு இது தெரியும்.
கேள்வி: இந்த வழக்கை சட்ட ரீதியாக சந்திப்போம் என்று கூறியிருக்கிறீர்கள். கனிமொழி முன் ஜாமீன் வாங்குவாரா?
பதில்: இப்போது அது பற்றி சொல்ல இயலாது. இந்த வழக்கில் ஈடுபடக்கூடிய வழக்கறிஞர்கள் எடுக்க வேண்டிய முடிவு அது.
கேள்வி: அடுத்த மாதம் 6 ந்தேதி ஆஜராக வேண்டும் என்ற சி.பி.ஐ. கோர்ட்டு உத்தரவுப்படி கனிமொழி ஆஜர் ஆவாரா?
பதில்: சட்டப்படி அவர் நடந்து கொள்வார். பெங்களூர் கோர்ட்டில் நடந்து வரும் வழக்கில் ஜெயலலிதா இது வரை ஆஜராகவில்லை. உங்கள் கண்களுக்கு அது தெரியவில்லை.
கேள்வி: பெங்களூர் கோர்ட்டில் ஜெயலலிதா வழக்கு தொடர்ந்து நடந்து கொண்டு வருகிறதே?
பதில்: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவுப்படி ஜெயலலிதா மீதான சொத்து சேர்ப்பு வழக்கு பெங்களூரில் நடந்து வருகிறது. அதற்கு அவர் கெடு மேல் கெடு கேட்டு தாமதித்துக் கொண்டு வருகிறார். அங்குள்ள உயர்நீதி மன்றத்தில் தடை வாங்குகிறார். இது நீடித்துக் கொண்டே போகிறது. மீண்டும் இந்தப் பிரச்சினை சுப்ரீம் கோர்ட்டுக்கு சென்று அவர்கள் இறுதி முடிவு அறிவிப்பார்கள் என்று நம்புகிறேன்.
கேள்வி: போபர்ஸ் வழக்கில் சி.பி.ஐ. முறையாக செயல்படவில்லை என்ற கருத்து உள்ளது. ஸ்பெக்ட்ரம் வழக்கில் சி.பி.ஐ. நடந்து கொள்ளும் முறைப்பற்றி உங்கள் கருத்து என்ன?
பதில்: பழைய விவகாரங்களை கிளற விரும்பவில்லை.
கேள்வி: 87 வயதான உங்களுக்கு நீண்ட அரசியல் அனுபவம் உள்ளது. ஊடகங்களும், சில சதிகளும் உங்களை தலைமைப் பதவியில் இருந்து அகற்றி விடும் என்று நம்புகிறீர்களா?
பதில்: இயற்கை ஒன்றுதான் என்னை அகற்ற முடியும். இவ்வாறு திமுக தலைவர் கலைஞர் பதில் அளித்தார்.