முள்வேலிக்குள் தொடரும் வாழ்க்கையும் ஐநா அறிக்கையும்




வேலிக்கு ஓணானே சாட்சி என்பதை போல போர்குற்றங்களுக்கு இலங்கை அரசே சாட்சி என்பதாகத்தான் பொருள் கொள்ள வேண்டும் . அவர்களே விசாரணை நடத்தி அவர்களுக்கே தண்டனை அவர்கள் வழங்கினால் விளங்கிடும் .


ஏனெனில் ஐநாவின் அறிக்கையை பற்றிய ஒரு கேள்விக்கு இப்படி பதில் சொல்கிறார் அமைச்சர்

//'இன்னும் தமிழர்களை முள்வேலி முகாமுக்குள் ஏன் வைத்திருக்கிறீர்கள்?'' - இரக்கம் தோய்ந்த வார்த்தைகளால் கொழும்பு நிருபர் ஒருவர் கேட்டார்!

''முகாமில் இருக்கும் மக்களை விலங்குகள் கடித்துவிடக் கூடாது என்பதற்காகத்தான்!'' - இந்தத் திமிரான பதில் ஆளும்கட்சி எம்.பி. அப்துல் காதர் தந்தது!//

இந்த லட்சனத்தின் ஐநாவின் அறிக்கையை ஏற்கவில்லை எனவே விசாரணைக்கு ஒத்துகொள்ளாத இலங்கை அரசு இந்த அறிக்கையை டிஸ்ஸு பேப்பர் போல தூக்கி போடும் என தெரிகிறது .

காரணம் ருஸ்யாவும் , சீனாவும் வீட்டோ அதிகாரம் கொண்ட நாடுகள் இவற்றின் அனுமதி கிடைக்காது .

போர் நடக்கும் போது புல் புடுங்கி கொண்டிருந்ததா ஐநாவும் மேற்குலக நாடுகளும் கொத்துகுண்டுகளும் மக்களின் அரண்களின் மேலும் குண்டுகள் போடும் போது ஐநா லீவில் இருந்ததா என்கிறா கேள்வியைத்தான் எழுப்ப முடியும் ஏனெனில் ஒரு லட்சம் பேர் வரை கொல்லப்பட்ட பிறகு இன்னும் ஐம்பதினாயிரம் பேர்வரை முள்வேலிக்கு பின்னுள்ள நிலையில் இந்த அறிக்கை வருவதும் கூட மனிதநேய அமைப்புகளின் பிரசரினால்தான் .

சங்கை ஊதிவிட்டோம் என அடுத்த வேலையை பார்க்க ஐநா நிச்சயம் கிளம்பி விடும் என தெரிகிறது .


மாஸ் கொலை நடக்கும் போது மேற்குலக நாடுகள்தான் தூங்கி கொண்டு இருந்ததவென்றால் நமது இனமான தலைவனோ முக்கியமான 200 கோடி ரூபாயை ஸ்வான் டெலிகாமில் இருந்து தனது டிவிக்கு கொண்டு வருவதை பற்றி சிந்தித்து இருப்பார் .


மூட்டை மூட்டையாய் கொள்ளை அடித்தவருக்கும் கூட்டம் கூட்டமாய் மக்கள் சாவதை தடுக்கும் எண்ணம் இருக்கும் என நினைக்கும் பேதமை நமக்கில்லை .இந்த ஐநாவேதான் ஈராக்கின் மேல் படையெடுக்க அனுமதி அளித்தது தற்போது ஈரானின் மேல் படையெடுக்க போகிறோம் என மிரட்டும் ஐநா தான் இலங்கை படுகொலையை போஸ்டு மார்டம் செய்கிறது

http://www.wsws.org/tamil/articles/2010/nov/101110_moun_p.shtml

போருக்கு பின்னர் இந்த இரண்டு ஆண்டுகளில் என்ன செய்தது ஐநா

அரசியல் தீர்வு காணவோ அல்லது சிறை செய்யப்பட்டவர்கள் சித்தரவதைக்குள்ளாவதை தடுக்கவோ ஐநா எதுவும் செய்யவில்லை

இந்தியாவின் நலன் என்பது ஈழத்தமிழர்களை இலங்கை ஒடுக்குவதில் இருப்பதையே காட்டுகிறது இந்த பாசிச ஒடுக்கும் நலனுக்கு ஐநா

மறைமுகமாக துணை போனதையே ஐநாவின் கடந்த கால மெளனங்கள் காட்டுகிறது .



அதே வேளையில் தமிழினத்துக்குளேயே துரோகிகள் தலைவர்களானது தலைவர்கள் துரோகிகளானதும் மிகப்பெரிய படுகொலைக்கு துணையாக நின்றது .

தமது பொருளாதார நலனை காக்க இனத்தின் நலனை விட்டு கொடுக்க ஒரு தலைவனுக்கு முடியும் போது ஐநா போன்ற அனைத்துலக நாடுகளின் மன்றமும் ஒற்றை சார்பாய்த்தான் செயல்படும் என்பதை புரிந்து கொள்ள

பெரிய மூளை தேவை இல்லை .



போராட்டம் தான் தீர்வு - அறிக்கைகள் நொண்டி சாக்குகளும்

குப்பை மேடுகளாகவும்தான் இருக்கும்



கொடுமைகளை விளக்கும் யமுனா ராஜேந்திரனுடைய கட்டுரை

---------------

ஒரு துப்பாக்கியின் சுடுமுனைக்கும் அது குறிப்பார்க்கும் இலக்குக்கிற்கும் இடையே வெகு குறைவான தூரம் இருக்குமானால் அதனால் இரண்டு விஷயங்கள் இலகுவாகும். ஒன்று குறி தப்பாது சுடலாம், இன்னொன்று வெகு அருகில் இருந்து சுடுவதால் துப்பாக்கியின் புல்லட் உடலில் நுழையும்போது ஏற்படும் தாக்கம் காற்று, உராய்வு போன்றவற்றால் புல்லட்டிற்கு ஏற்படும் எதிர்மறையான விஷயங்கள் நடக்காது, குண்டு அதிக தாக்கத்துடன் தனக்கான வேலையை செய்யும். இந்த பெயர் ப்ரெஞ்சில் இருந்து வந்ததாம். குறி பார்த்தல் ( aim ) இதற்கு point என்றும், சுடும் வட்ட வடிவமான இலக்கின் மைய புள்ளி வெள்ளையாக இருந்ததால் blanc என்றும் சொல்ல தொடங்கி POINT BLANK RANGE என்று கூறப்படுகிறதாம்.
இன்று(மே 18 2010) Channel 4 இணையதளத்தில் இலங்கையில் இருக்கும் ரிப்போர்ட்டர் ஜோனாதன் மில்லர் (Jonathan Miller) என்றவரால் பேசப்பட்டிருக்கும் விஷயம் இந்த பாயிண்ட் ப்ளாங்க் ரேஞ்ச். யார் யாருக்கு எதிராக இத்தனை வன்மையை காட்டியிருக்கிறார்கள் என்பது ஒன்றும் கம்பசூத்திரம் இல்லை. ஈழத்தில் நடந்தேறிய நிகழ்வுகளை இன்னமும் இல்லை என்று மறுக்கும் சிங்கள அரசாங்கத்திடம், இப்போது கைக்குள் கிடைத்திருக்கக்கூடிய புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், நேர்காணல்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் தான் இவை.

ஆகஸ்ட் 2009ம் ஆண்டு, சேனல் 4 செய்திகளில் போடப்பட்ட சில வீடியோ காட்சிகளை மறுத்தது சிங்கள அரசு. பிறகு அந்த வீடியோ காட்சிகளை பொய் என்ற ரீதியில் பேச, ஐக்கிய நாடுகள் சபை தலையிட்டு, அவை நிஜமானவை தான் என்று புலனாய்வு செய்து சொன்னதற்கும் ஒன்றும் பதில் சொல்லவில்லை சிங்கள அரசு.

இன்று ஒரு சீனியர் ஆர்மி கமேண்டரும், போரில் பங்குப்பெற்ற பெயர் சொல்லாத நபர் பேட்டி அளித்திருக்கிறார். அவர் சொல்வதாவது

``30 ஆண்டுகளாக நடந்துக்கொண்டிருந்த போராட்டத்தின் இறுதியாண்டான 2009ல், எல்லா சிங்கள ராணுவவீரர்களுக்கும் சொல்லப்பட்டது ஒரே விஷயம் தான். அது `` Kill everybody and Finish them off ‘’ அதாவது எல்லா ஈழ தமிழர்களையும் கொல்லுங்கள், அவர்கள் சகாப்தத்தை முடியுங்கள் என்பது தான். இந்த உத்தரவு அவர்களுக்கு வந்தது மேலிடத்தில் இருந்து என்பதையும் இங்கே உறுதி செய்கிறேன்.``
போர் முடிவடைந்து ஒரு வருடமாகி இருக்கும் இந்த நிலையில் பேசியிருக்கும் இந்த ராணுவ வீரர் எத்தனை கொடுமையான நிகழ்வுகள் நடந்தேறியிருக்கிறது தமிழர்களுக்கு எதிரே என்பதை விவரிக்கையில், வேறு வழியே இல்லை என்று சமாதானமாக வெள்ளைக்கொடியோடு சரணடைந்த தமிழ் போராளிகளையும், பொது மக்களையும் ஈவு இரக்கமில்லாது சுட்டுக்கொன்றது உண்மை தான் என்றும் அதுவும் மேலிடத்து உத்தரவு என்று சொல்கிறார்.``

இந்த போர் முடிவடைந்த நேரத்தில் சிக்கிய சிலரை புகைப்படம் எடுத்துள்ள ஒரு ராணுவ வீரர் காட்டிய படங்கள் நெஞ்சை நிச்சயம் உலுக்கும். தென்படும் படங்களில் உறைந்து நிற்கும் முகங்கள் எல்லாவற்றிலும் நீக்கமற நிறைந்திருக்கும் விஷயம் பயம், பயம், பயம் மட்டுமே. நிர்வாணமாகவோ அரை நிர்வாணமாகவோ கைகளும் கால்களும் பின்னப்பட்டு இருக்கும் கூட்டத்தில் ஆண்கள் மட்டுமில்லை குழந்தைகளும் உண்டு.

ரத்தம் தோய்ந்த பூட்ஸ் கால்களும், கரும்பச்சை பேண்ட்களும், காந்த புகையோடு நகரும் கருப்பு துப்பாக்கிகளும் மட்டும் தான் தெரிந்திருக்கும் அங்கு அமர்ந்திருக்கும் கணக்கிலடங்கா தமிழ் முகங்களுக்கு. வாழ்வின் கடைசி நொடிகளை எதிர்நோக்குவது போல இருக்கும் இந்த முகங்களில் போராளிகள் யார், விவசாயி யார், கூலி தொழிலாளி யார், படித்தவர் யார், படிக்காதவர் யார் என்று தெரியவில்லை. ஆனால் என்ன ஆயிற்று இந்த நொடிக்கு பிறகு என்பதில் ஒரு பெரிய கருப்பு திரை தான் இறங்குகிறது. ஆயிரக்கணக் கானவர்களை பத்திரமாக அகதிகள் முகாமில் விட்டதாய் சிங்கள அரசு சொல்வதை நம்ப யாரும் தயாராக இல்லை.

சரணடைந்த பின்னர் கூட கொன்று குவிக்கப்பட்ட உடல்களின் எண்ணிக்கையை பார்க்கையில் வெகு நாட்களாக இழுபறியாக இருக்கும் ஒரு சச்சரவை இப்படி தான் முடிப்பேன் என்று கங்கணம் கட்டிக்கொண்டதாக தான் தெரிகிறது சிங்கள அரசு. போர் முடிந்தது என்று அறிவிக்கப்பட்டு ஒரு வருடம் முடிவுற்ற இந்த சூழலில், இது வரை அடுக்கமாட்டாத போர்குற்றங்களை செய்ததாக சிங்கள அரசிற்கு எதிராக குவியும் ஆதாரங்களை பற்றி அரசாங்கம் ஒன்றும் பெரிதாக யோசித்ததாகவோ பதில் சொல்வதாகவோ தெரியவில்லை இன்று வரை.

காட்டப்படும் காட்சி ஒன்றில் நிர்வாணமாக நீல நிறத்துணியால் கண்களும், கைகள் பின்னால் கட்டப்பட்டிருக்கும் அந்த தமிழ் இளைஞரின் பெயர் எனக்கு தெரியாது. எங்கு பிறந்திருப்பார், எப்படி வளர்ந்திருப்பார், என்ன படித்திருப்பார், என்ன பிடித்திருக்கும், என்று எனக்கு தெரியாது. இருட்டில் சுற்றி நடக்கும் பூட்ஸ் ஓசைகளும், அங்கங்கே வெடிக்கும் துப்பாக்கி மற்றும் குண்டு சத்தங்களும், எச்சில் தெரிக்க மானம் போக பேசும் சிங்கள மொழியும், அடுத்த நொடி என்ன என்ற பயம் மட்டும் தான் அவரிடம் தெரிகிறது அந்த ஒரு நிமிடத்தில். பின்புறம் இருந்து கழுத்தில் வந்து இறங்கிய உதையில் இருந்த எழுவதற்குள், அந்த வலி மறைவதற்குள், தலையின் பின்புறத்தில் வந்து இறங்கிய குண்டு உயிர் எடுக்க மொத்தமாக சாய்வதை பார்க்கையில், என்னால் ஒரு மனுஷியாக, ஒரு மருத்துவராக, ஒரு தமிழச்சியாக, என் நிலையை சொல்ல வார்த்தைகள் அற்றுப்போகிறேன். கண்முன் தெரிந்த இந்த நிகழ்வு அந்த 25,000 sq. Mile பரப்பளவில் நடந்தேறிய பல சாவுகளில் வெறும் ஒரு புள்ளி மட்டும் தான் என்பது புரிந்தும், மனம் அதன் விஸ்தாரத்தை ஏற்கமுடியாது மலைக்கிறது.

மாற்றி மாற்றி இருட்டில் இருந்து பேசும் சிங்கள ராணுவ வீரர்களும், ஆர்மி கமேண்டரும் சொல்வது ஒன்று தான், `` எங்களுக்கு தரப்பட்ட உத்தரவு, நிர்தாட்சண்யமாய் எல்லோரையும் கொல்லுங்கள்`` என்பது தான். அது ஆணோ பெண்ணோ குழந்தையோ முதியவரோ, எல்லா தமிழர்களும் கொல்லப்படவேண்டும் என்பது தான். சிக்கிய எந்த உயிரையும் விட்டுவைக்காததற்கு காரணம் ஒருவேளை இந்த விஷயங்கள் பின்னொரு சமயம் யாராலும் பேச ஆதாரங்கள் கிடைக்காததற்காகவும் இருக்கலாம்.`` அதன் பின் தெரியும் சில காட்சிகளில் தாய் தகப்பனின்றி அங்கங்கே அடிப்பட்டு சுருண்டு கிடக்கும் சில குழந்தைகளும், வெடிக்கும் குண்டுகளின் நடுவே அய்யோ என்று மூச்சை நிறுத்தும் மரண ஓலமும் தான் நெஞ்சை அடைத்துக்கிடக்கிறது.

ஒரு காலத்தில் அழகு மட்டுமே நிறைந்திருந்த பசுமையான சொர்க்கம் போன்றதொரு இடம் இன்று ரத்த ஆறால் தோய்ந்த நிலங்களை தாங்கி இருப்பதாக சொல்கிறார் ஜோனாதன். இந்த பொன்னாட்டில், அரசாங்கத்திற்கு எதிராக எழுதும், கேள்வி கேட்கும் சிங்கள எழுத்தாளர்களும் அடக்குமுறை அரசியலிற்கு சிக்கியவர்கள் தான் என்கிறார். கைது செய்யப்பட்டவர்களில் பலரை காணவில்லை, பலர் கொல்லப்பட்டிருக்கிறார்கள், பலர் கைதாகி பல வருட கடுங்காவல் சிறைதண்டனை பெற்று வருகிறார்களாம்.

திரும்ப திரும்ப இந்த போராட்டத்தில் பொதுமக்கள் இறந்தார்களா என்று சிங்கள ராணுவ வீரரை கேட்கிறார் ஜான். அதற்கு அவரும் ``ஆமாம்! போராளிகள் இறந்தார்கள். பொது மக்கள் இறந்தார்கள். எங்கள் கைக்கு அகப்பட்ட எல்லா தமிழர்களும் கொன்று குவித்தோம்`` என்று ஒப்புக்கொள்கிறார். போராளிகளும் அவர்கள் குடும்பத்தினரும் வெள்ளைக்கொடி தாங்கி சரணடைய வந்தப்போது என்ன நடந்தது என்று ஜான் கேட்க, அதற்கு அவர் சொல்கிறார், ``முதலில் அவர்களை கைது செய்தோம், பிறகு அவர்களை சித்திரவதை செய்தோம், பின்னர் கொன்றோம், போரின் இறுதி சமயங்களில் சரணடைய வந்ததாலே கொன்றோம்” என்கிறார்.

பின் வரும் படங்களில் தரை முழுக்க ரத்தம் தோய இருக்கும் தமிழ் மக்களின் பிணக் குவியல்களை பார்த்தப்படி பல்வேறு கோணத்தில் மொபைல் போனிலும், டிஜிடல் கேமராவிலும் படமெடுத்து கொண்டு இருக்கிறார்கள் சிங்கள ராணுவ வீரர்கள். எல்லோர் முகத்திலும் பரவி இருக்கும் ஒரு இறுமாப்பும், சிரிப்பும், எக்காளமும், தன்மானமுள்ள யாருக்கும் வெறியை தூண்டிவிடுவதாய் தான் உள்ளது. சில படங்களில் அத்தனை தெளிவாய் தெரியாத போதும், புலிகளின் தலைவரின் உடலை ராணுவ வீரர்கள் பார்ப்பது போல எடுக்கப்பட்டவை எல்லாம் ``Trophy video`` என்று சொல்லிக் கொள்கிறார்களாம் ராணுவமும், அரசாங்கமும்.

அதன் பின் அந்த ராணுவ உயர் அதிகாரி சொல்வதாவது, குடும்பசகிதமாய் இருக்கும் தலைவர் பிரபாகரனின் படத்தை காண்பித்து, அதில் இருக்கும் அவருடைய 13 வயது மகனும் அந்த சிறுவனுக்கு பாதுக்காப்பாய் சிலரும் வந்து சரணடைந்ததாகவும், அந்த பச்சை குழந்தையை, அப்பாவின் மறைவிடத்தை பற்றி கேட்டு சித்திரவதை செய்து, பின்னர் சுட்டு கொல்லப்பட்டதாகவும் சொல்கிறார். அந்த குழந்தையின் சிரிக்கும் கண்கள் எப்படி அழதபடி உயிர் இழந்ததோ?

காட்டப்படும் புகைப்படங்கள் எல்லாமே குவியலாய் பிணங்கள் தான். ரத்தம் ஒழுக, கண் பாதி திறந்து, கைகள் கட்டப்பட்டு, வலி தோய்ந்து இறந்த முகங்கள். பெண்கள் பலமுறை பலரால் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு பின்னர் கொல்லப்பட்டனர். கைதிகள் என்று ஒருவரும் கொண்டு வரக்கூடாது. அப்படி கைதிகளாக உயிரோடு விட்டுவைத்தால், இன்னும் ஒரு தலைமுறைக்கு இவர்கள் சண்டை இழுத்துக்கொண்டே போகும். அதனால் இந்த இனத்தை விட்டே வைக்கக்கூடாது என்றும் தெளிவாக கூறி, போருக்கு மேலிடம் அனுப்பியதாம் எல்லா ராணுவ அதிகார்களிடமும்.

ஆம்னெஸ்டி (Amnesty international) போன்ற உலக நிறுவனங்களை சேர்ந்த ஸ்டீபன் க்ராஷாவ் `` இது வரை நடந்த விஷயங்களை அங்கீகரிக்காது இருக்கும் சிங்கள அரசு, இப்படி போர் குற்றங்கள் நடக்கவே இல்லை என்று அடித்து சொல்கிறது. இது வரை சேர்ந்து கொண்டே இருக்கும் தடயங்கள் எத்தனை கொடூரமான மனிதநேயமற்ற செயல்களை அரங்கேற்றியிருக்கிறது அரசு என்றாலும் அதை பற்றி ஒரு பதிலும் சொல்லாது இருக்கும் இந்த நிலை, உலக பொது தொண்டு நிறுவனங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு உண்மை புலனாய்வு செய்யவேண்டும் என்பதை உறுதியாகச் சொல்கிறது`` என்று சொல்கிறார்.

சிங்கள தூதுவரான Dr. Palitha kohanaவை இதை பற்றி கேட்டதற்கு மனிதர் வெகுண்டு, திக்கி திணறி இப்படி பட்ட போர்குற்றங்கள் எல்லாம் நடக்கவே இல்லை என்றும் சிங்கள் அரசு ஒன்பது பேர் அடங்கிய குழு ஒன்றை இந்த விஷயத்தை பற்றி ஆராய ஒழுங்குப்படுத்தியிருக்கிறது என்று சொல்கிறார். இது வரை நடந்தவைகளை ஒழுங்காக ஒத்துக்கொள்ளாத போது இப்போது மட்டும் ஏன் இந்த குழு சொல்வதை நம்பவேண்டும் என்ற கேட்ட ரிப்போர்ட்டரை பார்த்து சிங்கள அரசியலும், நீதித்துறையும் உலகத்தில் தலைசிறந்த ஒன்று என்று சொன்னதை கேட்டு எனக்கு அழுவதா சிரிப்பதா என்று தெரியவில்லை.

சிங்கள அரசு தொடர்ந்து இது போன்ற குற்றச்சாட்டுகளை முற்றிலும் மறுத்தும், பொதுமக்களுக்கு அரசாங்கம் எந்த ஒரு உயிர் பொருள் சேதமோ செய்யவில்லை என்று கூறுவதோடு, புலிகள்தான் பொது மக்களை கேடயமாக பயன்படுத்தியதாக குற்றம் சாட்டுகிறது. போரின் இறுதிகளில் யாரிடம் இருந்து இது போன்ற உத்தரவுகள் வந்தது என்று கேட்கையில் எல்லா விரல்களும் Defence secretaryம், அதிபரின் தம்பியுமான கோடபாயா ராஜபக்‌ஷாவை தான் சுட்டிக்காட்டுகிறது. இலங்கையிலும், அமெரிக்காவிலும் பிரஜாவுரிமை பெற்று இருக்கும் இவரால் அண்ணன் வலிமையாக இருக்கிறாரா அல்லது அண்ணன் மாஹிந்தா ராகபக்‌ஷாவால் இவர் வலிமையாக இருக்கிறாரா என்று எனக்கு புரியவில்லை. ஆனால் கோடபாயாவுடைய இணையதளத்திற்கு சென்றால், என்னுடைய மகத்தான வெற்றி என்று அவர் பேசுவது கேட்க சகிக்கவில்லை.

ஆனால் குடும்ப அரசியலிற்காக ஒரு மொத்த தமிழினத்தை கொன்றிருக்கிறார்கள் என்பது மட்டுமே மறுக்கமுடியாத உண்மை. இதை எதிர்த்து இருக்கும் சிங்கள மக்கள் இன்று மறைவிடத்தில் இருப்பதாய் சொல்கிறார்கள். இப்போது எஞ்சி இருக்கும் ஒரு லட்சத்திற்கும் குறைவான தமிழ் மக்கள் சொல்வதை பார்க்கும்போது சென்ற வருடம் இந்த மாதம் மட்டும் எப்படியும் 50000 தமிழ் மக்கள் இறந்திருக்கக்கூடும் என்பது தான். இந்த முப்பது வருடத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை கணக்கிலடங்கா.

ரத்த வெள்ளத்தில் இருந்து கிடக்கும் அந்த பெண்ணும் அவள் கைக்குள்ளே குண்டு பாய்ந்து இறந்து கிடக்கும் அந்த 2 வயது குழந்தையும் பார்க்கையில், ஒரு தாயாக எண்ணி பார்க்கிறேன். தன்னை துளைத்த குண்டு தன்னோடு நின்றால் தன் குழுந்தையாவது உயிரோடு இருக்கும் என்று பதறியபடி உயிர் விட்ட தாயும் என் குலத்தில் வீழ்ந்த ஒவ்வொரு உயிரும் என்னையும் உங்களையும் கேளாமல் கேட்கும் கேள்விகளுக்கு என்ன பதில் இருக்கிறது இன்று நம்மிடம்.

- யமுனா ராகவன்

சேனல் 4 ல் இடம் பெற்ற செய்திகளுக்கும் படங்களுக்கும் இங்கு செல்லவும்.


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post