நாளை காலை வரிசையில் நான்

நாளை வாக்களிக்க வேண்டுமென்பதே
தீராத அயர்ச்சியை தருகிறது
நாட்பட்ட ஒரு வியாதிக்கு
தினமும் மருத்துவரை அனுகுவதை போல
ஆஸ்பத்திரி வராண்டாவில்
காத்திருப்பதன் எரிச்சலையும்
டாக்டரின் நம்பிக்கை வார்த்தையை மீறி
அவநம்பிக்கை தோன்றும் எனது முகத்தை
திருப்பி கொள்கையில் எழும் எரிச்சல்

நான்குமுறை வாக்களித்துள்ளேன்
என்னை போலவே என்னைவிட
அதிகம் வாக்களித்தவனும்
முன்னால் நிற்கிறான்
ஒரே நோய்க்காக விதவிதமான
ஆட்கள் நிற்பதையும்
சரக் சரக்கென நர்சுகள் செல்லும்
காலடியோசையில் நோயின் தன்மை
இன்னும் அதிகமாகிறது

ஏதுமற்ற வெளியில் மனம் லயிக்கிறது
இந்த கட்சி சார் அந்த கட்சி சார்
அவன் ஊழல் இவன் ஊழலல்ல
இலவசங்களின் லிஸ்டு
என நோய் நாளுக்கு நாள் அதிகமாகி
அழுகிடும் நிலையில் தள்ளாமல்
நிற்கிறேன்

சீல் பிடித்த புண்ணை அகற்ற காலை
எடுக்க சொல்லிடுவார் டாக்டர்
என அஞ்சுகிறேன்
வேறு வழியில்லாமல் ஐந்து வருடம்
மருந்து கட்டி பார்க்கிறேன் என்கிறார்கள்
அடுத்தும் இதைத்தான் சொல்வார்கள்

ஜனநாயகம் சர்வாதிகாரம் புரட்சி
என்கிற வார்த்தைகளை மந்திரம் போல
உச்சரிக்கும் ஜனங்களும்
கோரிக்கைகளுக்காக மறியல் செய்து
அடிபட்டு இரத்தம் ஒழுக நிற்கும்
ஜனங்களும் என்னுள்ளே சென்றுவிட்டார்கள்

அவர்களது சத்தம் என்
காதுகளை பிளக்கிறது
ஓயாமல் கூவுகிறார்கள்
மூடனே இன்னுமா ஓட்டு போட
வரிசையில் நிற்கிறாய்


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post