சாயிபாபா வும் கலைஞரும் வர்க்க பாசமும்

என்னதான் முற்போக்கு கூடாரத்தில் கருணாநிதி வார்த்தெடுக்கப்பட்டாலும் இராமன் எந்த எஞ்சினியரிங்க் காலேசில் படித்து பாலம் கட்டினான் என கேட்டு தனது அடிக்கும் தலைக்குமான பழைய ஈரோட்டு வாசத்தின் ஒரு துளியை காட்டினாலும் வர்க்க பாசத்தில் ஒன்றாகிறார்கள் கருணாநிதியும் சாயிபாபாவும் .

அதென்ன வர்க்கம் உழைப்பவனை சுரண்டி திங்கும் வர்க்கம் இங்கே அரசியல் என்றால் அங்கே ஆன்மீகம் இங்கே மக்கள் என்றால் அங்கே பக்தர்கள் இங்கே பகுத்தறிவு என்றால் அங்கே ஆன்மீகம் கல்லா பெட்டி என்னவோ ஒரே தன்மையுடையதுதான்

ஒரு பக்கம் கலைஞர் அரசியல் எம் என் சி கம்பெனி நடத்துகிறார் மறுபக்கம் சாயி பாபா ஆன்மீக எம் என் சி நம்பிக்கைதான் இதில் மூலதனம் பலன்களை ஒரு குறிப்பிட்ட வர்க்கம் அறுவடை செய்கிறது .

கடவுள் இல்லவே இல்லை கடவுளை மற மனிதனை நினை என்கிற கோட்பாடு மேடைகளில் முழங்க அரசியல் கோசமாக வைக்க பயன்படும் ஆனால் நிஜத்தில் ஆன்மீக வாதிகள் எனும் கார்பரேட் சாமியார்களின் உலகமும் இந்த அரசியல் லோலாய்களின் உலகமும் ஒரே பக்கமாய் சூரியன் எட்டிபார்க்காத பக்கமாய் சுழல்கிறது .

ஈழத்தின் தாய் என சொல்லப்பட்ட போராளி பிரபாகரனின் தாயார் இந்தியாவில் குண்டு வைக்க அல்லது புலிகள் அமைப்பை திருப்பி கட்ட அல்லது ஈழத்துக்காக குரல் கொடுக்க வரவில்லை அவர் தள்ளாத வயதில் தனது உடல் நிலைக்கு மருத்துவம் பார்க்க வந்தார் .

அவரை விமானத்தில் இருந்து இறங்கவிடாமல் அப்படியே அனுப்பி தனது எஜமான விசுவாசத்தை காட்டிய கலைஞர் இன்று ஒரு சாமியாருக்காக கசிந்துருகி அவரு நல்லவரு வல்லவரு என்கிறார்.

தனது கொள்கை கோட்பாடு இனம் என்கிற எல்லா வரையறைகளையும் உடைத்து கொண்டு பொங்குகிறது சுரண்டி திண்ணும் வர்க்க பாசம்

ஒரு வேளை என்னதான் சொர்க்கமில்லை என்று வரட்டு கத்து கத்தினாலும் ஒரு வேளை சொர்க்கம்னு ஒன்று இருந்து தொலைத்துவிட்டால் என்ன செய்வது என்கிற பயம் வயசான காலத்தில் வந்து தொலைத்ததால் சொர்க்க உலகத்தில்

ஒரு டிக்கெட் செய்ய இப்பவே முந்திக்கிறாரோன்னு அய்யமாகவும் ஐயரவாகவும் இருக்கு.





மேற்கொண்டு கலைஞரின் பகுத்தறிவை இங்கே புட்டு வைத்துள்ளார்கள்

--------------------------------------------------------
குத்தறிவு பகலவனாக பவனி வந்த திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கலைஞர் அவர்கள் மஞ்சள் துண்டின் மகிமையில் மனதை பறிகொடுத்த சம்பவம் அனைவரும் அறிந்ததே!

பெரியாரின் பகுத்தறிவு பாசறையில் பாடம் பயின்றதாக படம் காண்பிக்கும் கலைஞர் வருகிற தமிழக சட்டமன்றத் தேர்தலுக்காக சென்னையில் பிரச்சாரத்தை துவக்கியுள்ளார். அவர் புறப்பட்ட பிரச்சார வேனுக்கு முன்னால் தேங்காய் உடைத்து ஆசிர்வாதித்துள்ளனர் அவரது கட்சியின் கொள்கை கோமான்கள்.

இதுக்குறித்து கேள்வி எழுப்பினால்,வட நாட்டிலிருந்து வந்த பிள்ளையாருக்கு உடைக்கும் தேங்காயை எனக்கு உடைத்தால் என்னவாம்? என கலைஞர் எதிர்கேள்வி கேட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

முன்பு இவரது கட்சியின் அமைச்சர் ஒருவர் பண்ணாரி மாரியம்மன் கோயிலில் தீ மிதித்தபொழுது தனது காலையே மிதித்ததுபோல் துள்ளிக் குதித்தார் கலைஞர். காட்டுமிராண்டித்தனம் என கண்டித்தார். ஆனால்,கோவில் கும்பாபிஷேகங்களில் குடும்ப உறுப்பினர்கள் கலந்துகொள்வது, வாஸ்து நிபுணர்கள் மற்றும் ஜோதிடர்கள் பின்னால், தன் குடும்பத்தினர் சுற்றுவது இவற்றை எல்லாம் மறந்துவிட்டார், பகுத்தறிவு குறித்து அறிக்கை விடும் கலைஞர்.

பாசிச பா.ஜ.க பரிவாரத்தை பண்டாரங்கள், பரதேசிகள் என திட்டித் தீர்த்தவர்தாம் பின்னர் அவர்களோடு கூட்டணி வைத்தார். சர்ச்சைக்குரிய சாயிபாபவுடன் கூடிக்குலாவி கொஞ்சநஞ்ச பகுத்தறிவையும் பறிகொடுத்தார். சாயிபாபா கலைஞரை சந்தித்த வேளையில் அவர் கொடுத்த மந்திர மோதிரத்தை (இது ஒரு மோசடி என நிரூபிக்கப்பட்டுள்ளது என்பது வேறு விஷயம்) விரலில் அணிவதற்கு போட்டிப் போட்டார்களாம் கலைஞரின் போர்ப் படைத் தளபதிகள்.

தஞ்சை பெரிய கோவிலின் பிரதான வாசல் வழியாக ஆபத்து ஏற்படும் என்ற மூட நம்பிக்கையால் பின்வாசல் வழியாக சென்றவர். திருக்குவளையில் உள்ள அங்காள பரமேஸ்வரி கோயில் சார்பில் அளிக்கப்பட்ட பூரண கும்ப மரியாதையை கலைஞர் பெற்றுக் கொண்ட காட்சிகள் புகைப்படத்துடன் பத்திரிகைகளில் வெளிவந்தன.

கலைஞர் மருத்துவ காப்பீட்டு திட்டம் பற்றிய விளம்பரத்தில் எமதர்மன் வீசும் பாசக் கயிற்றை கலைஞர் தடுப்பது போன்ற படம் நாளிதழ்களில் விளம்பரமாக வந்தது. ஆர்.எஸ்.எஸ்ஸால் உருவாக்கப்பட்ட கிராமப் பூசாரிகள் சங்கத்திற்கு அதிகாரப்பூர்வ அந்தஸ்தை வழங்கியவர் கலைஞர்.

பா.ஜ.கவுடன் கூட்டணி வைத்தபொழுது அக்கட்சி இந்துத்துவாவை முன்னிறுத்தவில்லை என பேட்டியளித்தார். இவ்வாறு பகுத்தறிவுக்கும் தனக்கும் எவ்வித சம்பந்தமில்லை என தனது செயலால் பிரகடனப்படுத்தும் கலைஞர் பல ஆண்டுகளுக்கு முன்பு திருச்சி மாநாட்டில் பேசும் வேளையில், அரசியலைத் துறந்து பெரியார் வழியில் சமூக சீர்திருத்தத் தொண்டில் ஈடுபடுவதை நோக்கி என் மனம் அவாவுகிறது என்றார். உடனே, பலரும் பகுத்தறிவு பிரச்சாரம் தமிழகத்தில் சூடுபிடிக்கும் என கனவுக் கண்டனர். ஆனால், அவையெல்லாம் வெற்று வார்த்தைகளும், தனது கட்சியினரை ஏமாற்றும் தந்திரமும்தான் என்பதை நடுநிலையாளர்கள் புரிந்துக் கொண்டனர்................


--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post