ம.க.இ.க மருதையனுக்கு ஒரு மனு
பெறுநர்:
மருதையன் அவர்கள்
மாநிலப் பொதுச் செயலாளர்
மக்கள் கலை இலக்கியக் கழகம்
தமிழ்நாடு
அனுப்புனர்:
ஷோபாசக்தி
25, Rue D' Enghien
93600 Aulnay Sous Bois
பிரான்சு.
அய்யா,
தற்போது இணையத்தளங்களில் நிகழ்ந்துகொண்டிருக்கும் DAN தொலைக்காட்சி அதிபர் குகநாதன் x அருள் சகோதரர்கள் குறித்த விவாதங்களில் மக்கள் கலை இலக்கியக் கழகம் தலையீடு செய்து ஒரு பகிரங்க விசாரணையைக் கோரி 'வினவு' இணையத்தளத்தில் முன்வைத்த கருத்துகளில் நான்கு புள்ளிகள் மிகமிக முக்கியமானவை என்றே நான் கருதுகிறேன்.
அந்த நான்கு புள்ளிகள் வருமாறு:
1. ஒரு குற்றத்தைக் குறித்து இவ்வாறான இணைய விவாதங்கள் வெறும் வதந்திகளையும் அரட்டைகளையும் மட்டுமே உருவாக்குவதற்கு மேலாக வேறெதையும் சாதிக்க வக்கற்றவை.
2. எனவே ம.க.இ.க இது குறித்து ஒரு பகிரங்க விசாரணைக்கு அழைக்கிறது. விசாரணையின் முடிவில் குற்றமிழைத்தவர்கள் மீது ம.க.இ.கவே முன்னின்று நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்யும்.
3. குற்றம் சாட்டியவருக்கே குற்றத்தை நிரூபிக்க வேண்டிய கடமைப்பாடு உள்ளது.
4. குற்றம் சாட்டியவருக்கே குற்றத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நபரை அல்லது நபர்களை பகிரங்க விசாரணைக்கு அழைத்துவர வேண்டிய கடப்பாடு உள்ளது.
ஒரு சர்ச்சைக்குரிய விவகாரத்தில் நீதியான தீர்வொன்றைக் காண்பதற்கு இதைவிடச் சிறந்த வழிமுறைகள் இருக்க முடியாது என்பதே எனது கருத்தாகவுமுள்ளது. இந்த நான்கு புள்ளிகளிலும் நான் ம.க.இ.கவினரோடு முற்று முழுவதுமாக உடன்படுகிறேன். இந்தியா வருவதற்கான விசா, மற்றும் பாதுகாப்புக் காரணங்களைத் தவிர்த்துப் பார்த்தால் உங்களது பகிரங்க விசாரணைக்கான அழைப்பு மிக நீதியானதும், குற்றமிழைத்தவர்களை அல்லது அவதூறு செய்பவர்களை அடையாளம் காண்பதற்கு நடைமுறைச் சாத்தியமான வழியெனவும் கருதுகிறேன்.
தவிரவும் நடந்ததாகச் சொல்லப்படும் குற்றத்தில் அல்லது குற்றமின்மையில் உங்களுக்கு நேரடியான தொடர்புகள் ஏதும் இல்லாதிருந்தும் கூட நீங்கள் பிரச்சினையில் தன்னார்வமாகத் தலையீடு செய்து அதற்குத் தீர்வு காண்பதற்கான வழியையும் முன்வைத்ததையிட்டு உங்களை உள்ளபடியே பாராட்டவும் நான் கடமைப்பட்டுள்ளேன். "படாடோபமான வாய்ச்சொற்களை எடுத்து வீசுவது வர்க்கத் தன்மை இழந்த குட்டி முதலாளித்துவப் படிப்பாளிகளின் குணமாகும்" என்பார் லெனின் ( பாட்டாளி வர்க்க சர்வதேசியவாதம் - பக்:294). மாறாக நீங்கள் உறைப்பான சொற்கள் மூலம் ஒரு பகிரங்க விசாரணைக்கு, அதாவது செயலுக்கு அழைத்திருப்பது சிறப்பானதாகும்.
இப்போது எனது மனுவின் மையக் கருத்திற்கு வருகிறேன்.
அய்யா! எனது மனு யாரோ யாருக்கோ இழைத்த குற்றங்களிலும் அவதூறுகளிலும் உங்களைத் தன்னார்வமாகத் தலையீடு செய்யக் கோரும் மனுவல்ல. நீங்களே, அதாவது மக்கள் கலை இலக்கியக் கழகத்தின் இணையத்தளமான 'வினவு' இணையத்தளம் என்மீது சுமத்திய அநீதியான குற்றச்சாட்டுகள் குறித்தே எனது மனுவைத் தங்கள் முன்னே சமர்ப்பிக்கின்றேன்.
வினவு இணையத்தளம் கடந்த 2010 ஜனவரி மாதம் முதலாக ஏப்ரல் மாதம் வரையிலுமாக என்மீது இரண்டு பாரிய குற்றச்சாட்டுகளைப் பரப்பிக்கொண்டிருந்தது. அந்தக் குற்றச்சாட்டுகளாவன:
1. நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேன். (பார்க்க: 'எங்களது எதிர்ப்புக்கு கவிதையென்று பெயர் வை' என்ற வினவு கட்டுரை).
2. நான் 'செங்கடல்' திரைப்படப் படப்பிடிப்பில் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன். ( ஜனவரியிலிருந்து ஏப்ரல்வரை இது குறித்து என்மீது குற்றம் சுமத்தி வினவுவில் ஆகக் குறைந்தது மூன்று கட்டுரைகளாவது வெளியாகியுள்ளன).
அய்யா நான் இந்தக் குற்றச்சாட்டுகளை முற்று முழுவதுமாக மறுக்கிறேன். இவை வெறும் அவதூறுகள் என்கிறேன். வினவுவில் இக்குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து நான் எனது மறுப்புகளையும் எனது தரப்பையும் எனது வலைப்பக்கத்தில் எழுதினேன் (பார்க்க: 'உனது கேள்விக்குக் காவாலித்தனம் என்று பெயர் வை', 'பழி நாணுவார்' ஆகிய கட்டுரைகள்). இந்தக் குற்றச்சாட்டுகளை உங்களால் நிரூபிக்க முடியுமா எனக் கேட்டேன். பதிலேதும் சொல்லாமல் வினவுக் கோஷ்டியினர் பம்மிவிட்டார்கள் அய்யா.
நான் ஏப்ரலில் 'நிரூபிக்க முடியுமா?' என எழுப்பிய கேள்விக்கு ஆறு மாதங்களாகியும் அவர்களால் பதில் சொல்லவோ, அவர்களது அருவருக்கத்தக்க குற்றச்சாட்டுகளை அவர்களால் நிரூபிக்கவோ முடியாமலேயே உள்ளது.
நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேன் என்ற குற்றச்சாட்டு அருள் சகோதரர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விடப் பாரதூரமானது. நான் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்பது குகநாதன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச்சாட்டை விடவும் பாரதூரமானது.
நான் ஏற்கனவே எனது மறுப்புகளை விரிவாகவும் பக்கம் பக்கமாகவும் பொயின்ட் ரூ பொயின்டாகவும் எனது வலைப்பக்கத்தில் எழுதியிருந்தபோதும் இம் மனுவிற்காக அந்த மறுப்புகளைச் சுருக்கமாகக் கீழே தர நீங்கள் என்னை அனுமதிக்க வேண்டும்.
1. டக்ளஸ் தேவானந்தாவை நான் என் வாழ்நாளில் நேரில் சந்தித்ததோ, தொலைபேசியில் உரையாடியதோ, மின்னஞ்சல் வழி தொடர்பு கொண்டதோ கிடையவே கிடையாது. அவரை ஆதரித்து ஒரு சொற்கூட நான் எழுதியதோ, பேசியதோ கிடையாது. ஆனால் அவரைக் கடுமையாக விமர்சித்துப் பல பத்துப் பக்கங்களை நான் எழுதியுள்ளேன் (எ-டு: அல்லைப்பிட்டியின் கதை, எம்.ஜி.ஆர். கொலைவழக்கு). டக்ளஸ் தேவானந்தவின் EPDP கட்சியோடும் எனக்கு எந்தவிதமான அரசியல் உறவுகளோ கொடுக்கல் வாங்கல்களோ கிடையாது. இவ்வாறு உண்மை இருக்கையில் நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேன் என மக்கள் கலை இலக்கியக் கழகத்தினர் என்மீது குற்றம் சுமத்தியது எந்த வகையில் நியாயமானதும் புரட்சிகரமானதும்? இந்தக் குற்றச்சாட்டை ம.க.இ.கவால் நிரூபிக்க முடியுமா?
2. 'செங்கடல்' திரைப்படத்தில் நான் எழுத்தாளராகப் பணிபுரிவதால், தமிழக மீனவர்கள் கடலில் கொல்லப்படுவதற்கு விடுதலைப் புலிகளே காரணம் என்ற வகையில் 'செங்கடல்' திரைப்படம் எடுக்கப்பட்டுவருவதாக ஒரு வதந்தியை - கொஸிப்பை வினவு இணையத்தளம் எழுதியது குறித்த பஞ்சாயத்துக்கு நான் இப்போது வரவில்லை. அந்தப் பஞ்சாயத்தைப் படம் வெளியானதும் வைத்துக்கொள்வோம்.
செங்கடல் திரைப்படத்தின் இயக்குனர் ஒரு கோடி ரூபாயை சமுத்திரக்கனியிடம் பெற்றுக்கொண்டார் என நீங்கள் எழுதிய அப்பட்டமான வதந்தியும் திரைப்படத்தின் இயக்குனர் இராமேசுவரப் பொலிசாரால் கைதுசெய்யப்பட்டார் என நீங்கள் எழுதிய அட்டகாசமான கட்டுக்கதையும் எனது இந்த மனுவோடு நேரடியாகத் தொடர்புடையவையல்ல எனினும், நீங்கள் என்னமாதிரியான கொஸிப் மனநிலையிலிருந்து என்மீது குற்றஞ்சாட்டிய அந்தக் கட்டுரையை வனைந்துள்ளீர்கள் என்பதைச் சுட்டிக்காட்டவே நான் மேலுள்ள வதந்திகளைச் சுட்டிக்காட்ட நேர்ந்தது.
ஊதியம் கேட்ட தொழிலாளர்களை நான் தாக்கினேன் என்பது வினவுவின் குற்றச்சாட்டு. அவ்வாறு ஊதியப் பிரச்சினை எதுவுமில்லை, படச்சுருள்கள் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்பட்டதால் நடந்த தகராறில் நான் என்னோடு பணிபுரிந்த உதவி இயக்குனரைத் தாக்கியதுதான் உண்மையில் நடந்தது என்பதை நான் விளக்கிச் சொல்லி, ஊதியப் பிரச்சினை என உதவி இயக்குனர் சொல்வது பொய் என்று அவரது வாக்குமூலத்திருந்தே நிரூபித்துக்காட்டி (பார்க்க: shobasakthi.com ல் 21.04.2010 அன்று வெளியாகியிருக்கும் கட்டுரை ) "நடந்தது வினவு எழுதியதுபோல பேட்டா - ஊதியப் பிரச்சினைதான் என வினவுவால் நிரூபிக்க முடியுமா?" எனக் கேட்டிருந்தேன். ஆறுமாதங்களாகிவிட்டன, ஏன் அதை வினவுவால் நிரூபிக்க முடியவில்லை?
பார்த்தீர்களா அய்யா! வினவு எழுத நான் எழுத மறுபடியும் வினவு எழுத மறுபடியும் நான் எழுதப் பிரச்சினைகள் நீண்டு செல்கின்றனவே தவிர பிரச்சினைக்கு ஒரு நீதியான தீர்வு கிட்டமாட்டேனென்கிறது.
இந்த இடத்தில்தான் "இவ்வாறான இணைய விவாதங்களால் வதந்திகளையும் அரட்டைகளையும் தவிர வேறெவெற்றையும் சாதிக்க முடியாது, ஒரு பகிரங்க விசாரணையே இதற்கான தீர்வு" என்ற உங்களது கருத்து வரலாற்று முக்கியத்துவம் பெறுகிறது.
எனவே நான் டக்ளஸ் தேவானந்தாவிடம் பணம் பெறுகிறேன் மற்றும் ஊதியம் கேட்ட தொழிலாளர்களைத் தாக்கினேன் என்ற என்மீதான வினவுவின் இரு குற்றச்சாட்டுகள் குறித்தும் ஒரு பகிரங்க விசாரணையை ஏற்பாடு செய்து நடத்த வேண்டுமென நான் பணிவுடன் மக்கள் கலை இலக்கியக் கழகத்திடம் கேட்டுக்கொள்கிறேன். அதாவது குகநாதன் - அருள் சகோதரர்கள் விவகாரத்தில் நீங்கள் ஏற்பாடு செய்யத் தயாராகயிருப்பதாகச் சொன்ன அதே மாதிரியான ஒரு பகிரங்க விசாரணையை எனது - வினவு விவகாரத்திலும் நீங்கள் கருணைகூர்ந்து ஏற்பாடு செய்ய வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன்.
குற்றம் சாட்டியவரே குற்றத்தை நிரூபிக்கக் கடமைப்பாடு உள்ளவர் என்ற உங்களது கூற்றுப்படி நீங்களே குற்றத்தை நிரூபிக்க வேண்டும். அந்தப் பகிரங்க விசாரணைக்கு நான் சமூகமளிப்பேன் என உறுதி கூறுகிறேன். அதேபோன்று ஊதியப் பிரச்சினையால் என்னால் தாக்கப்பட்டாதாகக் கூறப்படுபவர்களையும் நீங்களே அழைத்து வரவேண்டியிருக்கும். ஏனெனில் குற்றம் சாட்டுபவருக்கே குற்றத்தால் பாதிக்கப்பட்டதாகச் சொல்லப்படும் நபர்களை அழைத்துவர வேண்டிய கடப்பாடு உள்ளதென நீங்கள் சொல்லியிருக்கிறீர்கள்.
என்மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால் ம.க.இ.கவினரே என்மீது பாதிக்கப்பட்டவர்களின் சார்பில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யலாம். நான் அதற்குப் பூரண ஒத்துழைப்பை வழங்குவேன் என இத்தால் உறுதி கூறுகின்றேன்.
வினவு இணையத்தின் பின்னூட்டப் பகுதியில் மணி என்ற தோழர் "நிரூபிக்கும்வரை அது குற்றச்சாட்டுத்தான், நிரூபிக்க முடியாவிட்டால் அது அவதூறு" என்றொரு அருமையான சொலவடையைச் சொல்லியிருந்தார். என்மீதான குற்றச்சாட்டுகளை நிரூபிக்க முடியாத பட்சத்தில் அவை வெறும் அவதூறுகளே என்று மக்கள் கலை இலக்கியக் கழகம் ஒப்புக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.
குகநாதன் - அருள் சகோதரர்கள் பிரச்சினையில் அவதூறுக்கு உள்ளானவர்களது தொழில், பொது வாழ்வு, தனிப்பட்ட வாழ்வு ஆகியவை பாதிக்கப்பட்டிருப்பதாகச் சொல்லியிருந்தீர்கள். நான் மட்டும் என்ன ஷங்கரின் ரோபாவா? எனக்கும் ம.க.இ.கவினரின் அவதூறுகளால் - குறிப்பாக டக்ளஸ் தேவானந்தாவோடு முடிச்சுப்போடும் அவதூறு - இவ்வாறான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதை நீங்கள் கவனத்தில் எடுக்க வேண்டும்.
முன்பு ஒருமுறை 'நிதர்சனம்' இணையத்தளத்தில் நான் ராஜஸ்தான் சென்று வரதராஜப்பெருமாளோடு சதியாலோசனை செய்ததாகப் பொய்ச் செய்தியை வெளியிட்டிருந்தார்கள். இன்னொரு புலிகள் ஆதரவு இணையம் எனது நிழற்படத்தை வெளியிட்டு என் கையில் இரத்தம் வடியும் ஒரு பெரிய கத்தியையும் கிராபிக்ஸ் செய்து ஒட்டவைத்து என்னைக் கருணாவின் அடியாள் எனச் செய்தி வெளியிட்டது. அண்மையில் இலங்கையின் புகழ்பெற்ற சிங்கள மொழித் தினசரியான 'திவயின' பத்திரிகை என்னை விடுதலைப் புலிகளின் சூத்திரதாரிகளில் ஒருவர் என்றும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் முக்கியஸ்தர் என்றும் எழுதியது. இவைகளை ஒத்த கேவலமான அவதூறுதான் ம.க.இ.க. என்மீது சுமத்திய டக்ளஸ் தேவானந்தாவிடம் நான் பணம் பெறுகிறேன் என்ற குற்றச்சாட்டு.
செங்கடல் படப்பிடிப்புத் தகராறில் என்னுடன் பணிபுரிந்த உதவி இயக்குனரை நான் தாக்கினேன் என்பதை நான் எனது வலைப்பக்கத்திலும் ஒப்புக்கொண்டுள்ளேன். பொலிஸ் விசாரணையிலும் ஒப்புக்கொண்டேன். நீதிமன்ற விசாரணையிலும் ஒப்புக்கொண்டேன். அதற்காக நான் நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டேன். படப்பிடிப்புக் கருவியை வாடகைக்குக் கொடுத்திருந்த முதலாளியின் உத்தரவின்பேரில் படச்சுருள்கள் திருட்டுத்தனமாக எடுத்துச் செல்லப்பட்டதால் நடந்த தகராறே அது. வினவு எழுதியது போல அங்கே பேட்டா - ஊதியப் பிரச்சினைகள் ஏதுமில்லை என்பதே எனது தரப்பு. அதுவே உண்மையும் கூட. இப்போது இந்த உண்மையை ஏற்றுக்கொள்ளாதவர்கள் யாராவது இருந்தாலும் பகிரங்க விசாரணையின் முடிவில் நான் சொல்வதே உண்மை என அவர்கள் தெரிந்துகொள்வார்கள். அதற்காகவே நான் பகிரங்க விசாரணையைக் கோருகிறேன்.
அய்யா! நீங்கள் என் மீதான வினவுவின் குற்றச்சாட்டுகள் குறித்து இவ்வாறான ஒரு பகிரங்க விசாரணைக்கு ஏற்பாடு செய்யும் பட்சத்தில்தான் குகநாதன் - அருள் சகோதரர்கள் விடயத்தில் பகிரங்க விசாரணையைக் கோரும் உங்களது நிலைப்பாடு நியாயம் எனக் கொள்ளப்படும். அதேபோல 'குற்றம் சுமத்தியவருக்கே குற்றத்தை நிரூபிக்கும் கடப்பாடு உள்ளது' என்ற உங்களது வார்த்தையையும் நீங்கள் கோழைத்தனமாக வாபஸ் பெற்றுக்கொள்ளமாட்டீர்கள் என்றே நம்புகிறேன். ஆளுக்கொரு நீதி சொல்வது ஆளும் வர்க்கத்தினருக்குச் சாதாரணம். ஆனால் புரட்சியாளர்களிற்கோ அது அவமானம்.
எனவே எனது இந்த மனுமீது நீங்கள் உடனடியாக நடவடிக்கை எடுப்பீர்கள் என நான் நம்புகிறேன். எனக்கு இந்தியா வருவதற்கு விசா, பாதுகாப்புப் பிரச்சினைகள் ஏதுமில்லை. எனினும் பயண ஏற்பாடுகளைச் செய்யவும் விமானச் சீட்டுக்கான பணத்தைத் திரட்டவும் எனக்குச் சிறிது கால அவகாசம் தேவைப்படும். எனவே பகிரங்க விசாரணை நாளுக்கு இரண்டு மாதங்களிற்கு முன்பாகவே நீங்கள் எனக்கு இது குறித்து உறுதிப்படுத்துவது நலம்.
அய்யா! மறுக்கப்பட்ட நீதியிலும் தாமதிக்கப்பட்ட நீதி ஒன்றும் மோசமானதல்ல. பகிரங்க விசாரணைக்கான உங்களது அழைப்புக்காக நான் காத்திருக்கிறேன்.
நன்றி, வணக்கம்--
ஷோபாசக்தி
-