பிரபாகரன் பற்றிய வதந்திகளை நம்பவேண்டாம்

 
ஒரு இன அழிப்பில் ஈடுபட்டுள்ள அரசானது முற்றிலும் உண்மைகளை வெளியிடும் என நம்ப முடியாது
-தியாகு
 
 
 
விடுதலைப்புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டமைக்கான எந்த சாட்சியங்களும் கிடைக்கவில்லை என இராணுவப் பேச்சாளர் உதய நாணயக்கார இன்றைய ஊடக மகாநாட்டில் தெரிவித்திருக்கிறார்.

வெள்ளை முள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் இன்று அதிகாலை இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் கொல்லப்பட்ட விடுதலைப்புலிகளின் உறுப்பினர்களிடையில் பிரபாகரன் இருப்பதற்கான தகவல்கள் இல்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

விடுதலைப்புலிகள் தற்போது ஒரு சிறிய நிலப்பரப்பில் முடக்கப்பட்டுள்ளனர் அவர்களிடையேதான் பிரபாகரனும் இருக்கலாம் என தாம் நம்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார்.

ஆயின் வேலுப்பிள்ளை பிரபாகரன் எங்கே? படையினர் சுற்றிவளைத்துள்ள 800 கிலோ மீற்றர் பரப்பிற்கு உள்ளேயா? அல்லது, அதற்கு வெளியே வன்னியிலா அல்லது அதற்கும் அப்பால் இலங்கையினுள்ளேயா? இல்லை வெளிநாடொன்றிற்கு தப்பிச் சென்றுவிட்டாரா? ஏன்ற கேள்விகள் பலரையும் உலுப்பிவிட்டு இருக்கிறது.

இன்று இலங்கையில் ஜனாதிபதி தரையிறங்கி மண்ணை முத்தமிட்ட போது நாட்டில் பட்டாசுகள் வெடித்துக் கிழம்பின. சிங்கள மக்கள் நாட்டிற்கு இரண்டாவது தடவையாகக் சுதந்திரம் கிடைத்துவிட்டதெனக் கூறி பால்பொங்கல் பொங்கி உண்டு மகிழ்ந்தனர்.

இன்று கொழும்பிலும் நாட்டின் ஏனைய பகுதிகளிலும் காவற்துறை மற்றும் இராணுவ வாகணங்களில் சென்று வீதி உயர வானுயர சிங்கக் கொடிகளையும் தேசியக் கொடிகளையும்;, பௌத்த கொடிகளையும் பாதுகாப்பு தரப்பினர் கட்டுகின்றனர். திருமலையில் வெள்ளவத்தையில், கண்டியில் நுவரெலியாவில் என எல்லா இடங்களிலும் கொழுத்தப்பட்ட வெடிகள் மணித்தியாளக்கணக்காக வெடித்தனவாம். தமிழ் மக்கள் கூனிக் குறிகி பார்த்து நிற்கிறார்களாம்.

இந்த மகிழ்ச்சியைத் தூண்டுமுகமாக தலைநகரில் கையடக்கத் தொலைபேசியில் தககவல்களையும்; செவி வழியான தகவல்களையும் அரசாங்கத் தரப்பினர் வேகமாகப் பரப்பி விட்டனர்;. பிரபாகரனின் சடலம் கொழும்பு வைத்தியசாலையில் என்றனர். பனாங்கொட ராணுவ முகாமில் என்றனர். இல்லை அவரது சடலம் எரிந்துவிட்டதகவும் கூறினர்.

இந்தியாவிலும் வேகமாகவே செய்திகள் பரவின. பல ஊடகங்களும் செய்திகளை வேகமாகவே வெளியிட்டன.

அரசாங்கத்திற்கும் ஒரு தேவை உண்டு யுத்தத்தை முடிப்பதாக இருந்தால் ஆகக் குறைந்தது பிரபாகரனை அல்லது பொட்டு அம்மானை முடித்தாக வேண்டும். அப்போதுதான் யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவிக்க முடியும்.

அதனால் முடிந்து விட்டதாகக் கூறினால்த்தான் மக்களிடம் இவர்கள் யுத்தம் முடிந்ததாக கூற முடியும்.

ஆனால் களத்தில் நடப்பதுவோ வேறு. அரச படைகளின் தாக்குதல்களால் அப்பாவிப் பொதுமக்களே பெருமளவில் கொல்லப்பட்டு பெருமளவில் காயம் அடைகின்றனர்.

நடக்கும் சண்டையில் புலிகளும் கொல்லப்படுகின்றனர். சில முக்கியஸ்த்தர்களுடன் பல போராளிகளும் கொல்லப்படுகின்றனர். காயமடையும் கொல்லப்படும் மக்கள் தொகையுடன் ஒப்பிடும் போது மிகக் குறைவான புலிகளே மரணிக்கின்றனர். இந்த நிலையில் கொல்லப்படும் மக்களும் புலிகளின் பட்டியலிலேயே சேர்க்கப்பட்டுள்ளனர்.

இவை இவ்வாறு இருக்க ஜோர்டானில் இருந்து முண்டியடித்துக் கொண்டு இலங்கை சென்ற ஜனாதிபதி இன்று இலங்கை நேரம் 1.30ற்கு நாட்டு மக்களுக்கு உரையாற்ற இருந்தார். முடியவில்லை. எதிர்வரும் செவ்வாய்க்கிழமைக்கு பிற்போட்டுள்ளார்.

முல்லைத் தீவின் கரை முள்ளிவாய்க்கால் பகுதியின் ஒரு கிலோ மீற்றர் பகுதிக்குள் இருந்து 2 ஆயிரத்திற்கு மேற்பட்ட புலிகள் தொடர்ந்தும் கடுமையான தாக்குதல்களை தொடுத்து வருவதாக படைத்தரப்பினர் இரகசியமாகக் கூறுகின்றனர்.

இதில் நேற்றைய தினம் இரவும் அதிகாலையும் தரை மற்றும் கடல்ப் பகுதிகளில் மோதல்கள் இடம்பெற்றுள்ளன. எனது நேற்றைய செய்தி ஆய்வில் நந்திக்கடல் பரப்பின் ஒரு பக்கம் யாருடைய கட்டுப்பாட்டில் என்ற கேள்வி எழுப்பப்பட்டு இருந்தது. அதற்கான விடையை இன்று பாதுகாப்பு படையினர் கூறியுள்ளனர்.

முல்லைத்தீவு நந்திகடல் களப்பு பகுதியில் விடுதலைப்புலிகளின் 6 படகுகளை தாம் அழித்துள்ளதாக பாதுகாப்பு படையினர் தெரிவித்துள்ளனர். விடுதலைப்புலிகள் தப்பிச் செல்ல முற்பட்ட படகு மீதே தாம் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் படையினர் கூறியுள்ளனர்.

இந்த சம்பவம் இன்று அதிகாலை 1.30 அளவில் இடம்பெற்றுள்ளதாக தெரிவித்த அவர்கள் பல படகுகள் தப்பிச் சென்றுள்ளதனை ஏற்றுக்கொண்டுள்ளனர்.
ஆயின் 26 வருடங்களின் பின் புலிகளிடம் இருந்து கடல்ப் பகுதியை கட்டுப்பாட்டுள் கொண்டு வந்ததாக நேற்று முன்தினம் பாதுகாப்புத் தரப்பு வெளியிட்ட அறிக்கையின் அர்த்தம் என்ன?

இந்த கடல்ப் பகுதியில் இடம்பெற்ற மோதலில் புலிகளின் புலநாய்வுத் துறையைச் சேர்ந்த இரண்டாம் கட்டத் தளபதிகள் கொல்லப்பட்டது உண்மை எனத் தெரிய வருகிறது. இதில் யாழ்மாவட்டத்திற்கு பொறுப்பாக இருந்த மாஸ்ரர் என்பவரும் உள்ளடங்குவதாக தெரிய வருகிறது. ஆயினும் புலிகள் தரப்பில் தகவல்கள் வெளியிடப்படவில்லை.

எனினும் மூழ்கடிக்கப்பட்ட படகுகள் மற்றும் கொல்லப்பட்டவர்கள் தவிர தப்பிச் சென்ற படகுகளில் சென்றவர்கள் யார் அவர்கள் எங்கு சென்றார்கள் என்ற கேள்வி பாதுகாப்புத் தரப்பை பெரும் குளப்பத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆனால் விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறைத் தலைவர் பொட்டு அம்மான் உட்பட பல உயர்மட்டத் தலைவர்கள் அந்தப் படகுகளில் பாதுகாப்பான தமது தளத்திற்குச் சென்றதுவே உண்மை என பேசப்படுகிறது.

அப்போ புலநாய்வுத் துறை தலைவர் நேற்று கரை முள்ளிவாய்க்கால் பகுதியில் இருந்து புறப்பட்டு சென்றார் ஆயின் புலிகளின் தலைவர் பிரபாகரன் இனியும் அங்கு இருப்பாரா? அல்லது கொல்லப்பட்டு இருப்பாரா? அல்லது தற்கொலை செய்திருப்பாரா? அவையும் பொய்யான பிரச்சாரம் என்றே புலிகளில் பலர் கூறுகின்றனர். அவர் முன்னரே தனது பாதுகாப்புத் தளத்திற்குச் சென்று விட்டதாகவே கூறுகிறார்கள்.

ஆக விடுதலைப் புலிகள் அமைப்பை வழிநடத்துகின்ற உயர் கட்டமைப்பு, புலனாய்வுக் கட்மைப்பு, அவற்றிற்குரிய ஆளணி தளபாடங்கள் என்பவை பாதுகாக்கப்பட்டுவிட்டதாகவே புலிகளின் உட்கட்டமைப்புத் தகவல்கள் கூறுகின்றன.
ஆனால் அரசாங்கம் முன்னெடுக்கும் தற்போதைய ஊடக பிரச்சாரத்தை புலிகளும் மறுக்கப் போவதில்லை எனவும் தெரிய வருகிறது. காரணம் தொடருகின்ற சர்வதேச பிராந்திய அரசியல் நகர்வுகளிற்கு அரசாங்கத்தின் பிரச்சாரம் வெகுவாக உதவும் என்பதால் புலிகள் மொனம் காக்கவே முற்படுவர்.

தமது சர்வதேசப் பொறுப்பாளர் செல்வராஜா பத்மநாதனின் அரசியல் நகர்வுகள், அமரிக்க ஜனாதிபதி ஒபாமாவின் கோரிக்கை, அதனை நோக்கிய புலிகளின் பதில்கள், இந்திய அரசின் முன் நடவடிக்கைகள் சர்வதேசத்தின் கைகளில் வழங்கப்பட்டுள்ள பந்தை அவர்கள் பிரயோகிக்கும் முறை முதலானவற்றைப் பொறுத்தே புலிகளின் அடுத்தகட்ட நகர்வுகள் அமையும் எனவும் புலிகள் தரப்பில் பேசப்படுகிறது.
 
-நன்றி: வில்லன்

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post