அரைநாள் கஞ்சிக்கே முழுநாளும் நெய்தாக
வேண்டுமொருபட்டை சொந்தமாகவொரு பட்டில்லை கட்ட
எத்தனை கிலோ அப்பளம் தேய்த்தாலும் கொஞ்சம்
அப்பளத்துடன் சோறுண்ண கிடைப்பதில்லை தினமும்
குண்டி தேய உக்கார்ந்து தைத்தாலும் அழகான
"டி சர்டொன்றை" வாங்கவொரு வழியிருப்பதில்லை
குண்டுமணி போல அரிசி விளைவித்தாலும்
குருணைதான் குடியிருக்கு சட்டியில் நிறைய
வேர்வையே பாராத அந்த முகம்தான் போடுது
அதிக விலை கொடுத்து வாங்கிய பவுடர்
கழனி இறங்கி முழங்கால்வரை சேலையுயர்த்தி
வேலையொன்றும் செய்யாத பெண் கட்டுகிறாள் பட்டை
நீர்பாய்ச்சி நாத்து நட்டுக் களைபறிக்காத
கணவான் வீட்டில் பொங்குதுபார் பொன்னியரிசி
உழைத்தால் உயரலாமெனச் சொன்னானே
யாருழைத்தால் யார் உயரலாமெனச் சொன்னானா?
அடித்து ஓட்டுவார்கள் அதிகமுழைக்கும்
மாட்டைத்தான் முழித்து நின்று பயனில்லை
அந்நியமாக்கப்பட்ட உழைப்புடன்
அவதிபட்டுச் சாகயில் வந்து
உழைத்து உழைத்து முன்னேறச் சொல்பவனை
அழைத்து வாருங்கள்
அரை நாள் வேலை செய்யட்டும்
அய்யா வீட்டு மாட்டுக்கு சாணி பொறுக்கி
சொல்லுதல் யாருக்கும் எளிதாம் எனச்
சொல்லுவோமவனை பார்த்து
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================
Tags
கவிதை