தனிமனிதனும் சமூகமும்

எப்போதாவது நினைத்ததுண்டு ஒவ்வொரு தனிமனிதனும் திருந்திவிட்டால்
சமூகம் மொத்தமும் மாறி புதுயுகம் பிறந்து விடும் என்று .

தனிமனிதர்களுக்கு இடையே உறவு அந்த உறவில் சார்பு நிலையும் அந்த
சார்புநிலையில் சுரண்டலும் அதிகாரத்துவமும் இல்லை என்றால் அப்படி நடக்கலாம்.

மனிதர்கள் எல்லாம் ஏற்கனவே படைக்கப்பட்ட ஒரு மன அமைப்புக்கு
வந்து விட்டால் சொல்லிவைத்தமாதிரி இயங்கினால் கூட மொத்த சமூகத்தில்
தனிமனிதன் என்பவன் இருக்கமுடியாது (அதாவது சமூகத்தை சாராதவன் இருக்க முடியாது)

உண்மையில் அப்படி ஒரு தனிமனிதன் இருக்கிறானா?
மனிதர்களில் எந்த உறவும் இல்லாமல் அடர்ந்த கானகத்தில் வாழும் ஒரு
மனிதன் கூட தனிமனிதன் அல்ல.

யாரோ ஒரு மனிதன் நெய்த துணி நாம் சட்டையாக்கி அணிகிறோம்.
யாரோ தைத்த செருப்பை நாம் போடுகிறோம் .யாரோ உழுத செந்நெல் மூலம்
வயித்துக்கு சோறு. இந்த யாரோவுக்கெல்லாம் இந்த தனிமனிதன்
என்ன செய்ய போகிறான் .

வாங்கியதற்கெல்லாம் காசுகொடுத்தாச்சு என சுருக்கமா சொல்வான்.
காசு கொடுத்தால் கூட ஒருநாள் நமக்கு குடிக்க தண்ணீர்க் கிடைக்காமல்
போகலாம் , காசு கொடுத்தால் கூட உங்களுக்கு காடுகள் இருக்காது
காசு கொடுத்தால் கூட பச்சை பசேரென்ற வயல்களை காண முடியாது
காசின் எல்ல அவ்ளோதான் .

சமூகவலைபின்னலின் ஒரு சிறிய கண்ணிதான் தனிமனிதன் என்ற எண்ணம்
மிககுறைவாகவே இருக்கிறது.

நெய்வேலி நிலக்கரி தொழிலாளர்` போராட்டம் , போக்குவரத்து ஊழியர் `
போராட்டம் ,விலைவாசி உயர்வுக்காக சாலைமறியல் போராட்டம்
இதெல்லாம் ஆட்டோவில் பஸ்ஸில் செல்லும் ஒரு தனிமனிதனுக்கு
அவனுக்கு அந்நியமான அவனுக்கு இடஞ்சல் ஏற்படுத்தும் ஒரு செயலாக
தெரிகிறது .

உண்மையில் சமூக பொருளாதார விளைவுகளுக்கு உட்படாத
எந்த துறையும் இங்கு இல்லை அதே போல உலகமயமாக்கபட்ட
சுழலில் பாதிக்கப்படாத தனிநபர் எங்கேயும் இல்லை.

ஒருபுறம் வளர்ச்சி அடைந்த நாடுகளுக்கு ஏற்ப உருவாகும்
விற்பனை அமைப்புகள் வளராத நாடுகளில் ஏற்படுத்தும் பாதிப்புகள்
தன் வீட்டை வந்து சேராது என நினைக்கும் தனிமனிதன்
பூனை கண்ணை மூடிக்கொண்டால் உலகம் இருண்டு விடும் என
நினைக்கும் தனிமனிதனே.

நாங்க வெளி நாட்டில் வேலை செய்கிறோம் இந்தியாவின்
எந்த பொருளாதார போராட்டமும் தேவை இல்லை என நினைக்கும்
ஒரு தனிநபர் மீண்டும் இந்தியாவுக்கு வந்து கொஞ்சம் பணத்தை
வைத்து செட்டிலாகிடமுடியுமா என்றால் முடியாது .

சிறு தொழில்கள் 2 லட்சம் ஐந்து லட்சத்தில் ஆரம்பிக்கும் தொழில்கள்
கொஞ்சம் கொஞ்சமாக முடங்கி போய் பெரிய மூலதனக்காரர்களால்
அன்றாடம் கபலீகரம் செய்யப்படுகிறது .

சிறு உற்பத்தியாளர்கள் , சிறு வியாபாரிகளின் இடம் இன்றைக்கும்
வாழ்வா சாவா போராட்டத்தில் இருக்கிறது.

ஒரு பெட்டிகடை வைத்தால் பிழைத்து கொள்ளலாம் என்றோ
கருவேப்பிலை வித்து பிழைத்து கொள்ளலாம் என்றோ
நினைப்பது சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சாத்தியம் இப்போது
இல்லை .

ஆக இந்தியாவின் சமூக பொருளாதார அரசியல் சூழலுக்கு
அல்லது எந்த ஒரு நாட்டின் இந்த சூழலுக்கு அப்பாற்பட்டு
சிந்திக்கும் இயங்கும் தனிநபர் உண்மையில் இருக்கிறானா?

கடலுக்குள் இருக்கும் உயிரினம் தண்ணீர் சாராமல் வாழ முடியுமா?

உண்மை இப்படி இருக்க மேலும் மேலும் தனிநபர் வாதம்
முன்வைக்கப்படுகிறது .

எங்கோ தூரதேசத்தில் இருந்து கிடைக்கும் பெட்ரோல் நமக்கு வேண்டும்
ஆனால் அந்த பெட்ரோல் வளத்தை ஒரு நாடு சூறையாடி வருகிறது
அது ஏனென்ற காரணம் தேவையில்லை அந்த நாட்டு மக்களின் அவதி
அது பேப்பரில் பார்க்கும் செய்தி மட்டுமே.அதெல்லாம் அரசியல்
அரிசிவிலையை கூட்டிட்டான், பருப்பு என்னா விலை விக்குதுன்னு
அங்கலாய்ப்பு மட்டும் நமக்கு.

ஒரு புறம் விவசாயிக்கு விவசாயப்பொருளுக்கு கூலி கிடைக்கவில்லை
மறுபுறம் நமக்கு அந்த பொருட்களை கடையில் வாங்கிகொள்ள இயலாத விலை
சிந்திக்காதே அதெல்லாம் அரசியல் .

திடீரென்று மதகலவரமோ , சாதிகலவரமோ வந்தால் வேலைக்கு போன
கணவன் , அண்ணன், தம்பி , தங்கை வீடு திரும்பி விட்டனரா என்ற
பதைப்பு ! அவர்களுக்கு ஒன்றுமில்லை ஆனால் நேற்றைய கலவரத்தில்
நாலுபேர் செத்தார்கள் .

"தேவையில்லாத" ஒரு செய்தி மட்டுமே இது "
இதோ அடுத்த வருடம் தேர்தல் வரும் ஓட்டு போடுவோம் எல்லாரும்
திருடந்தான் சரி இந்த திருடன் பரவாயில்லை என தீர்மானிப்போம்.
ஆனால் கடந்த ஆண்டு இவன் விலைவாசியை ஏற்றினானா ?,
இறக்கினானா? வாழ முடிந்த விலை வித்ததா இதெல்லாம் அவசியமில்லை
இலவசமாய் என்ன கொடுக்கிறான் . கலர் டிவி கொடுப்பான்
நமது வறுமையை கலரில் பார்க்க.

நாடே கெட்டு போயிடுச்சுங்க எவன் நல்லவனா இருக்கான். நீ
நல்லவன எங்க கண்ட நீ முதலில் நல்லவனா இருந்தியா ?

ஒதுங்கி போய் வீட்டு கதவை சாத்திகொள்பவன் நல்லவனா ?
தானுண்டு தன் வேலையுண்டுன்னு இருப்பவன் நல்லவனா?
தனக்குன்னு எதுவும் நடக்காதவரை சமூகத்தின் மீது கேள்வி
எழுப்பாதிருப்பவன் நல்லவன் அல்ல சுயநலவாதி .

தானாய் எல்லாம் மாறும் என்பது பழைய பொய்.

எனகென்ன என வாழ்பவன் . மணியடிச்சா சோறு என வாழ்பவன்
சமூகத்தில் பெரும்பகுதி இவன் மாறனும் .

உன் வீட்டு பைப்பில் தண்ணீர் வராவிட்டால் கொதிக்கும் கொதிப்பு
ஏன் பொதுவான பிரச்சனைக்கு வரவில்லை. நான் இரண்டு கனெக்சன்
வைச்சு இருக்கேன் எவனுக்கு வந்தா என்ன வராட்டா என்ன
என்பது சுத்த சுயநலம் மட்டுமல்ல உனக்கே நாளைக்கு இரண்டு
பைப்பிலும் தண்ணீர் வராது.

எனக்கு மந்திரியை தெரியும் , மந்திரி தம்பியை தெரியும்
அவன் வைப்பாட்டியை தெரியும் நான் சாதிச்சு கொள்வேன்
என இருப்பவன் நாளை மந்திரி சபையே காணாமல் போகும்
என்பதை அறியாதவன்.

நாம் சமூகத்தில் இருந்து பெற்றதை சமூகத்து கொடுக்கனும்.
சமூக மனிதன் அல்லாது தனிமனிதன் இல்லை
சமூக மனிதனை தவிர்த்0து தனி நலம் இல்லை

சமூக சிந்தனைக்கு உட்பட்டதே தனி சிந்தனை
தனி சிந்தனைக்கு இடமும் சமூக சிந்தனைக்கு
குழியும் பறிப்பவன் பாவமாய் அந்தக் குழிக்குள்
கிடப்பவன்

சமூக மனிதன் , சமூக உயர்வு , சமூக பண்பு
சமூக நலம் இதை உயர்த்தி பிடிப்போம்



--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post