எப்படியாவது பணத்தைப் பெருகச்செய்து, வசதி வாய்ப்புகளை அனுபவித்து விடவேண்டும் என நினைக்கிறார்கள் மக்கள். எப்படியெல்லாம் ஏமாற்றி அவர்களின் பணத்தைச் சுருட்டிக் கொண்டு ஓடலாம் என திட்டம் போட்டுச் செயல்படுத்துகின்றன பண சுழற்சி நிறுவனங்கள்.
படிப்பறிவு குறைவான கிராமத்தினரை ஏமாற்றுவதற்கு சாமியார் வேடம் தேவைப்படும். அதிலும் சாதா சாமியாராக இல்லாமல் பீடி சாமியார், சுருட்டு சாமியார், பீர் சாமியார், பிராந்தி சாமியார், சந்தன சாமியார், சாக்கடை சாமியார் என ஏதேனும் அடையாளம் கொண்ட சிறப்புச் சாமியாராகவும் இருக்க வேண்டும். பில்லி&சூனியம், யந்திர&தந்திரம், மந்திர&மாயாஜாலம் ஆகிய கூடுதல் தகுதிகளும் இருந்தால்தான் படிப்பறிவு குறைவான மக்களை ஏமாற்ற முடியும். படித்தவர்களை ஏமாற்றுவதற்கு இத்தனை சிரமங்கள் இல்லை. "உங்கள் பணத்தை எங்களிடம் கொடுங்கள். ஓர் ஆண்டுக்குள் 2 மடங்கு, 3 மடங்கு ஆக்கிக் காட்டுகிறோம்" என்று சொன்னால்போதும் கோடிக்கணக்கில் கொட்டி ஏமாறுவதற்கு படித்தவர்கள் தயாராகவே இருக்கிறார்கள்.
அதனால்தான் 10 ஆண்டுகளுக்கு முன் நிதி நிறுவனங்கள் பட்டை நாமம் போட்டன. சில ஆண்டுகளுக்கு முன் வீகேன் என்ற நிறுவனத்தால் மக்கள் ஏமாற்றப்பட்டனர். இப்போது, கோல்டு குவெஸ்ட் என்ற நிறுவனம் தங்கக்காசு தருகிறேன் என மோசடி செய்துள்ளது. இவையெல்லாம் ஊடகங்களால் அம்பலப்படுத்தப்பட்டாலும், நாளை இன்னொரு நிறுவனம் நிச்சயமாக இவர்களை ஏமாற்றவே செய்யும். அதுவும் ஊடகங்களில் வெளியாகவே செய்யும்.
குறுகிய காலத்தில் பணக்காரராகி விட வேண்டும் என்கிற ஆசை நடுத்தர & உயர் நடுத்தர வகுப்பினரிடம் இருப்பதைத் தங்களுக்குச் சாதகமாக்கிக் கொள்கின்றன இந்த நிறுவனங்கள். "எங்களிடம் பணத்தை முதலீடு செய்யுங்கள். நைல் நதிக்கரையில்(!) உங்களுக்காக நாங்கள் தேக்கு மரக்கன்றுகள் நடுகிறோம். அது வளர்ந்தபிறகு உங்களுக்கு பல மடங்கு பணம் கிடைக்கும்" என முதலீட்டாளர்களை ஈர்த்தது அனுபவ் நிறுவனம். ஆனால், அதனிடம் முதலீடு செய்த மக்கள் பெற்ற அனுபவமோ வெறும் ஏமாற்றம்தான்.
சூடு கண்ட பூனை கூட அதே பால் பாத்திரங்களில் வாய் வைக்கத் தயங்கும். ஆனால், பலவடிவங்களிலான நிதிநிறுவனங்களிடம் ஏமாறும் மக்களோ மீண்டும் மீண்டும் அதே வகையான நிறுவனங்கள் மீது நம்பிக்கை கொண்டு தொடர்ந்து ஏமாறுகிறார்கள். மக்களை ஏமாற்றுவதற்காக புதுப்புது யுக்திகளைக் கையாள்கின்றன இந்த நிறுவனங்கள். "உட்கார்ந்து யோசிப்பாய்ங்களோ!" என்ற வடிவேலு வசனம்தான் நினைவுக்கு வருகிறது.
1996 - 2001ல் தி.மு.க. ஆட்சி நடைபெற்ற காலம். அப்போதுதான் சினேகா, அனுபவ், ஆர்.பி.எஃப்., பாரதி, பாலு ஜூவல்லர்ஸ், கலைமகள் சபா என பலவகையான நிதி நிறுவனங்களின் மோசடிகள் அம்பலமாகி பூட்டுகள் தொங்கவிடப்பட்டன. நிறுவன அதிபர்கள் சிறைக்குச் சென்றார்கள். பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசாரிடம் புகார் மனுக்கள் குவிந்தபடியே இருந்தன. (ஆனால், முதலீட்டாளர்களுக்கு இன்றுவரை பணம் வந்து சேரவில்லை என்பது தனி கதை). நிதி நிறுவனங்கள் மீதான முதற்கட்ட நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான், எம்.எல்.எம். என்கிற சங்கிலித் தொடர் வணிக மோசடிக்கு படாடோபமாக பட்டுக் கம்பளம் விரிக்கப்பட்டது.
அடுத்த சில ஆண்டுகளில்தான், உடல் ஆரோக்கியத்திற்கான காந்த படுக்கை தருவதாகக் கூறி சங்கிலித் தொடர் வணிகத்தில் ஈடுபட்ட வீகேன் நிறுவனத்தின் மோசடிகள் குறித்த புகார் பெருமளவில் எழுந்தது. "இந்த நிறுவனங்களே இப்படித்தான்" என அப்போது புலம்பிய மக்கள், அடுத்த சில ஆண்டுகளில் கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் தங்க காசுக்கு ஆசைப்பட்டு ஏமாந்து நிற்பதை இப்போது பார்க்கிறோம்.
மல்ட்டி லெவல் மார்க்கெட்டிங் (எம்.எல்.எம்.) எனப்படும் சங்கிலித் தொடர் வணிகம் என்பது, "நீங்கள் எங்களிடம் ஒரு குறிப்பிட்ட தொகை செலுத்தி உறுப்பினராகுங்கள். அதன் பின்னர் நீங்கள் பல உறுப்பினர்களை எங்களுக்குச் சேர்த்து விடுங்கள். எவ்வளவுக்கெவ்வளவு உறுப்பினர்கள் சேர்கிறார்களோ அதன்படி உங்களின் வருமானம் பல மடங்காகும்" என்ற அடிப்படையிலேயே நடைபெறுகிறது. இதனைக் கேட்கும்போது காது இனிக்கும்.
10 ஆயிரம் ரூபாய் கட்டி உறுப்பினராகச் சேர்ந்துவிட்டு, அதன்பிறகு நமக்குத் தெரிந்த 10 உறுப்பினர்களைச் சேர்த்துவிட்டால் மாதந்தோறும் பல்லாயிரம் ரூபாய் வருமானமாக கிடைக்குமே என மக்கள் நினைக்கிறார்கள். ஆனால், இந்தியா போன்ற பொருளாதார ஏற்றத்தாழ்வு மிகுந்த நாடுகளில் பல உறுப்பினர்களைச் சேர்த்துவிடுவது என்பது நடைமுறையில் சாத்தியமில்லாததாகவே காணப்படுகிறது. இதுதான் சங்கிலித் தொடர் வணிகத்தின் தோல்விக்கும், அந்த நிறுவனங்கள் மீதான மோசடிப் புகார்களுக்கும் அடிப்படைக் காரணம்.
சங்கிலித் தொடர் வணிகத்தின் முன்னோடியாக விளங்குவது 'ஆம்வே' என்கிற அமெரிக்க நிறுவனம். ஆக்டோபஸ் கால்கள் போல இந்தியாவிலும் கிளை பரப்பியுள்ள இந்த நிறுவனத்தை 1959இல் ஜாய் வான் ஆன்டேல், ரிச் டிவேஸ் எனும் இரு அமெரிக்கர்கள் உருவாக்கினார்கள். சுமார் 50 ஆண்டுகாலமாக இந்த நிறுவனம் தாக்குப்பிடித்திருக்கிறது. இதற்கு முக்கிய காரணம், இது மக்களின் அன்றாடப் பயன்பாட்டிற்கு உதவும் சோப்பு, எண்ணெய், ஷாம்பூ, தேயிலைத்தூள் போன்ற பொருட்களை மட்டுமே தனது சங்கிலி தொடர் வணிகத்தில் முன்னிலைப்படுத்துவதுதான். இதில் பணம் செலுத்தி உறுப்பினராகி இத்தகையப் பொருட்களைப் பெற்றுக் கொள்கிறவர்களால் மேற்கொண்டு உறுப்பினர்களைச் சேர்க்க முடியாவிட்டாலும், கட்டிய காசுக்கு இதுவாவது கிடைத்ததே என திருப்திப்பட்டுக்கொண்டு ஷாம்பூவைத் தேய்த்து தலை முழுகிவிடலாம்.
ஆம்வே நிறுவனம் தாக்குப்பிடிப்பதற்கான காரணம் இதுவென்றாலும், அந்த நிறுவனமும் படாடோபமான விழாக்களை நடத்தி, "எங்கள் உறுப்பினர்கள் உலகப் பணக்காரரர்களாக இருக்கிறார்கள். நீங்களும் இந்த அற்புத உலகத்திற்கு வாருங்கள்" என ஜெபக் கூட்டங்களைப் போல ஆளை மயக்கும் பரப்புரைகளை நடத்தியே வருகிறது. அந்த விழாவுக்குச் செல்லும் ஆம்வே உறுப்பினர்கள் கோட் சூட் அணிந்து காரில் செல்வதைப் பார்க்கும் நடுத்தர வர்க்கம் நாமும் அந்த நிலைக்கு உடனடியாக வரவேண்டும் என்ற ஆசையில் உறுப்பினராக முன்வருகிறது. ஆனால், நடைமுறை அனுபவம் கசப்பாக இருப்பதால் சங்கிலித் தொடர் வணிகத்திலிருந்து அறுந்த சங்கிலி துண்டாக உதிர வேண்டிய நிலைமை ஏற்படுகிறது.
எத்தனை பேர் ஏமாந்தாலும் பெரிய பெரிய புள்ளிகளை தங்கள் நிகழ்ச்சிகளுக்கு அழைத்து, "இதோ பாருங்கள்.. இவரைப் போல நீங்களும் ஆகவேண்டாமா?" என ஆசை உணர்ச்சிகளைத் தூண்டிவிடும் கலையை சங்கிலித் தொடர் வணிக நிறுவனங்கள் நன்றாகவே கையாள்கின்றன. தங்கக்காசு மோசடியில் ஈடுபட்ட கோல்டு குவெஸ்ட் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் விஜயஈஸ்வரனுடன் மத்திய மந்திரிகள், உயரதிகாரிகள், திரைப்பட நட்சத்திரங்கள் நிதியமைச்சர் ப.சிதம்பரத்தின் மனைவியும், வழக்கறிஞருமான நளினி சிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டிருக்கிறார்கள். பிரபல வழக்கறிஞர்கள், காவல்துறை உயரதிகாரிகள் எனப் பலரும் இந்த நிறுவனத்திற்கு ஆதரவாகப் பேசி, மக்களின் ஆசை உணர்ச்சிகளைத் தூண்டியதில் முக்கிய பங்கு வகித்திருக்கிறார்கள்.
ஐ.பி.எஸ். படித்த காவல்துறை உயரதிகாரிகள் கூட இப்படிப்பட்ட மோசடி நிறுவனங்களை அடையாளம் காணமுடியாமல் ஏமாறுகிறார்கள் என்று கேட்டால், "போலீஸ்காரர்கள்தான் எளிதில் ஏமாந்து விடுவார்கள். ஏட்டு முதல் எஸ்.பி. வரை பலரையும் ஏமாற்றியவர் என புகழ்பெற்ற சிவகாசி ஜெலட்சுமி, காவல்துறை வட்டாரத்திற்குள் நுழைந்தது. எப்படித் தெரியுமா? சங்கிலித் தொடர் வணிகம் நடத்துவதாகவும், அதில் நீங்கள் உறுப்பினரானால் நிறைய சம்பாதிக்க முடியும் என்று சொல்லித்தானே ஜெயலட்சுமி இங்கே வந்தார்" என்று பழைய குப்பைகளைக் கிளகிறார்கள் காவல்துறை வட்டாரத்தினர். சங்கிலித்தொடர் வணிகத்தின் ஆசை உணர்ச்சிகளில் காவல்துறையினரே ஏமாறும்போது, பொதுமக்கள் ஏமாறுவதில் வியப்பில்லை. காந்தபடுக்கை, கம்ப்யூட்டர், தங்கக்காசு என எதன் பெயரிலாவது படித்த & நடுத்தர மக்களை மோசடி செய்வது தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றது. பொருளாதாரக் குற்றம், குண்டர் சட்டம், சிறைத்தண்டனை என சட்டங்கள் தீவிரமாகப் பாய்ந்தாலும், சட்டத்தைவிடவும் சட்டத்தின் ஓட்டைகளை நன்கு அறிந்திருக்கும் மோசடி ஆசாமிகள் தப்பித்து வந்து புதுப்புது வழிகளில் ஏமாற்றுத் திட்டங்களை அறிமுகப்படுத்தியபடியே இருக்கிறார்கள்
--
தியாகு
-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""
--- சே குவேரா
============================