கற்றது தமிழ் கிடைத்தது சிறப்பு

கற்றது தமிழ்..கிடைத்தது சிறப்பு..- துணைத் தேர்தல் ஆணையர் ஆர்.பாலகிருஷ்ணன்
Created On 04-Nov-07 05:17:58 PM

நன்றி: அந்திமழை வெப்சைட்
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் ஆணையராகத் தலைநகல் பணியாற்றும் ஆர்.பாலகிருஷ்ணன் ஐ.ஏ.எஸ். தேர்வை எழுதித் தேர்ச்சி பெற்ற முதல் தமிழ் இலக்கிய மாணவர். ஐ.ஏ.எஸ். தேர்வு மற்றும் அதற்கான நேர்காணலை முழுக்கத் தமிழிலேயே அளித்து முதல் அமர்விலேயே வெற்றியை சாதித்தவர்.ஐ.ஏ.எஸ். தேர்ச்சி பெறுவதற்கு முன்பு தினமணி நாளிதழில் துணையாசியராகப் பணி புந்திருக்கிறார். கணையாழி இலக்கிய இதழிலும் ஆலோசகர் குழுவில் தீவிரப் பங்காற்றியிருக்கிறார். மனதில் எப்போதும் கவிதை ஓடிக் கொண்டிருக்கிறது என்று சொல்லும் இவருடைய அன்புள்ள அம்மா கவிதைத் தொகுப்பை நர்மதா பதிப்பகம் வெளியிட்டுள்ளது. இடப்பெயர்கள் குறித்தும் மனிதர்களின் துணைப்பெயர்கள் குறித்தும் ஆழமான ஆய்வுகள் மேற்கொண்டு பல விரிவான ஆய்வுக் கட்டுரைகளைப் படைத்துள்ளார். தன்னுடைய வீட்டுக் கணிப்பொறியில் ஒரு பல்கலைக் கழக ஆய்வு மையம் வைத்திருக்கக் கூடிய அளவில் மிகப் பிரம்மாண்டமாக இவருடைய ஆய்வுகளுக்கான தரவுகளை சேகரித்து வைத்திருக்கிறார்.

இனி பாலகிருஷ்ணன் ...


இளங்கலை மற்றும் முதுகலைப் படிப்புக்குத் தமிழை முதன்மைப் பாடமாக எடுக்க வேண்டும் என்று உங்களைத் தூண்டிய காரணி எது?

பள்ளிப் படிப்பு முடித்ததும் என்ன செய்யவேண்டும் என்று வழிகாட்டும் அளவுக்கு எனக்குக் குடும்பப் பின்னணி கிடையாது. எனக்கும் பள்ளியில் இருந்து வெளியே வந்தபோது எதைப் படிக்க வேண்டும் என்ற தடுமாற்றம் இருந்த போது பிடித்ததை செய்ய வேண்டும் என்று தோன்றியது. நாம் எதில் முதல்வனாக விளங்க முடியும் என்ற கேள்வியை எனக்குள் கேட்டுக் கொண்ட போது தமிழ் இலக்கியத்தில் அது முடியும் என்று உறுதியாகத் தோன்றியது. இதில் கை வைத்தால் நான்தான் முதல்வனாக முடியும் என்கிற தெம்பு வந்தது. அந்தத் தெம்பு வேறு படிப்பில் கிட்டுமா என்பது சந்தேகமாகத்தான் இருந்தது. இதைப் படித்தால் வேலை கிட்டும் இதைப் படித்தால் கிட்டாது என்று தான் எல்லாப் பெற்றோர்களும் அளவு கோல்களை வைத்திருக்கிறார்கள்.நாம் எதில் தலை சிறந்து விளங்குவோமோ அதைச் செய்வதுதான் நல்லது என்று எனக்குத் தோன்றியது. தியாகராயர் கல்லூயில் பிஏ தமிழ் இலக்கியம் படிக்க சேர்ந்தபோது யாரையும் கேட்காமல் நானே முடிவெடுத்துப் போய் சேர்ந்து கொண்டேன்.

தமிழ் படிக்க உங்கள் வீட்டில் ஆதரவு கிடைத்ததா?

நான் அப்படி சேர்ந்ததும் என் வீட்டில் என்னிடம் பேசக்கூட மறுத்து விட்டார்கள் என்று சொல்லலாம். நான் ஏதோ தற்கொலைக்கு சமமான ஒரு முடிவு எடுத்து விட்டதைப் போல அவர்கள் நடந்து கொண்டார்கள். சுற்றம் நட்பு எல்லாம் கேட்டது தமிழ் படித்து நீ என்ன செய்யப் போகிறாய் என்று.
தமிழ் இலக்கியம் படிக்க வேண்டும் என்று நான் முடிவு செய்தபோது அதற்கான அடிப்படைக் காரணம், பிடித்ததை செய்ய வேண்டும் என்கிற முனைப்புத்தான்.

இதழாளராகவும் சில காலங்கள் பணியாற்றிய அனுபவங்கள் குறித்து ?

நான் எம்ஏ படித்துக் கொண்டிருந்தபோது இதழியல் எனக்கு விசேஷ பாடம். அப்போது நாங்கள் கண்டிப்பாக சில நாளிதழ்களில் சிறிது நாட்கள் பணியாற்ற வேண்டும். நானும் என் நண்பர்களும் அப்படி ஒரு பயிற்சிக்காக மதுரை தினமணி இதழ் அலுவலகத்துக்குப் போயிருந்தோம். அப்போது ஏ.என்.சிவராமன் அவர்கள் சென்னையில் தங்கியிருந்தார். அவருடைய மகன் திரு.எஸ்.பத்மநாபன் மதுரை இந்தியன் எக்ஸ்பிரசில் செய்தி ஆசியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். ஏ.என்.சிவராமன் அப்போது அவருடைய மகன் வீட்டில் மதுரையில் தங்கிக் கொண்டு ஓரு மாதங்கள் தினமணி வேலைள்யுயம் பார்த்து விட்டுப் போவதை வழக்கமாக வைத்திருந்தார். நான் பயிற்சிக்காக மதுரை தினமணி சென்றிருந்த போதுதான் சிவராமன் அங்கு தங்கியிருந்தார். மேல்சட்டை கூடப் போடாமல் ஒரு நான்கு முழ காவி வேட்டியைக் கட்டிக் கொண்டு அவர் உட்கார்ந்திருந்தார். நான் கனவில் கூட நினைத்துப் பார்க்க வில்லை நான் தினமணியில் வேலை செய்வேன் என்று. இரண்டு வாரங்கள் அவருடன் இருந்திருப்போம். எப்போதும் எங்களை ஏதாவது கேள்விகள் கேட்டுக்கொண்டு இருப்பார். இலக்கியம் பற்றி, இலக்கணம் பற்றிப் பேசுவார். துளைத்துத் துளைத்துக் கேள்விகள் கேட்பார். அன்றைய செய்தித்தாளை நாம் படித்திருக்கிறோமா என்பதை சோதிப்பது போல இருக்கும் அவருடைய கேள்விகள். நாங்கள் பதினைந்து நாட்கள் பயிற்சியை முடித்து விடை பெற்றுக் கிளம்பும்போது என்னைத் தனியாகக் கூப்பிட்டார் சிவராமன். ""பரீட்சை எப்போது முடியும்?'' என்று கேட்டார். ""இன்னும் மூன்று மாதங்களில் முடியும்'' என்றேன். ""அடுத்து என்ன செய்வதாக உத்தேசம்?'' வேலைக்கு சேருவேன் என்று சொன்னேன். ""இங்கே வேலை கொடுத்தால் சேருவாயா? என்று கேட்டார். இந்த மாதிரி கேள்வியை அவடம் எதிர்பார்க்கவில்லை. இன்னொன்று, தமிழாசியர் தொழிலைத் தவிர வேறொன்றை நான் செய்வதாக கற்பனை செய்து கூடப் பார்த்திருக்கவில்லை. ஆனால் சிவராமன் அவர்கள் கேட்டபோது யோசித்து சொல்கிறேன் என்று கூட சொல்லத் தோன்றவில்லை. ""தாராளமாக'' என்று உடனே பதிலளித்தேன். ""தினமணி - இந்தியன் எக்ஸ்பிரஸ் இரண்டு பத்திகைகளையும் எடுத்துக் கொள். இரண்டிலும் கிட்டத்தட்ட செய்தி ஒரே மாதித்தான் இருக்கும். ஆங்கிலத்தில் வரும் செய்தியை நாம் தமிழில் எப்படி சொல்கிறோம் என்பதை கவனித்து விட்டு உன்னுடைய கருத்துக்களை ஒரு குறிப்பு போலத் தயார் செய்து எடுத்துக் கொண்டு வா. அதன் பிறகு நான் தகவல் சொல்கிறேன்'' என்று சொன்னார். நான் அதற்குப் பிறகு எம்ஏ தேர்வுக்குத் தயார் செய்து கொண்டு பரீட்சைகளை முடித்து என்னுடைய சொந்த ஊரான நத்தத்துக்கும் போய் சேர்ந்து விட்டேன். இதைப் பற்றி மறந்தும் போனேன். தினமணியை தொடர்ச்சியாகப் படித்து வந்தேன். சிவராமன் சொன்னது போல மொழிபெயர்ப்பு தொடர்பாக ஒரு குறிப்பைத் தயார் செய்து கொண்டிருந்தேன். எனக்குப் பல்கலைக்கழகத்தில் இருந்து செய்தி வந்தது - என்னை தினமணி அலுவலகத்தில் தொடர்பு கொள்ளச் சொன்னதாக. நான் தினமணி அலுவலகம் சென்றபோது ஒரு பயிற்சியாளராக நியமனம் செய்தார்கள். ""ஸ்த்ரீ'' பெண்ணாகவும் ஆஸ்பத்தி மருத்துவ மனையாகவும் சர்வ கலாசாலை பல்கலைக்கழகமாகவும் தினமணியின் தமிழில் உருமாற்றம் பெற்ற காலகட்டம் அது. நான்கு வருடங்கள் அங்கு பணியாற்றினேன். 1984ல் இந்திய ஆட்சிப் பணியில் தேர்வு பெறும் வரை அங்குதான் வேலை செய்தேன். ஒரு வேளை நான் ஐஏஎஸ் தேர்வு எழுதாமல் இருந்திருந்தால் நான் இதழியல் பணியைத் செய்து கொண்டிருப்பேன் என்று நினைக்கிறேன். ஒருவேளை திரைப் படத்துறைக்குப் போயிருக்கலாம்.

உங்களை ஐ.ஏ.எஸ். தேர்வு எழுதத் தூண்டியது எது?

பிடித்ததைப் படித்தேன். எங்காவது ஆசியப் பணிக்கு செல்லலாம் என்னும் திட்டத்துடன் தான் இருந்தேன்.நான் ஏற்கனவே சொன்னது போல, என்னுடைய ஆறாம் வகுப்பில் இருந்தே மேடைகளில் ஏறிப்பேசும் வாய்ப்புக்கள் எனக்குக் கிடைத்தன.1973ல் ஒரு சந்தர்ப்பத்தில் பெருந்தலைவர் காமராஜர் அவர்களுடன் பயணிக்கக் கூடிய, அவர் முன்னிலையில் பேசக்கூடிய வாய்ப்பு எனக்குக் கிட்டியது. அப்போது நான் பத்தாவது படித்துக் கொண்டிருந்தேன். அப்போது பெருந்தலைவர் என்னிடம் ""நீ நன்றாகப் படித்து, ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்று கலெக்டராகி நிறைய பேருக்கு நல்லது செய்ய வேண்டும். நீ படித்து மற்றவர்க்கு நிறைய நல்லவற்றை செய்யலாம் என்று தனிப்பட்ட முறையில் சொன்னார். இப்படி ஐஏஎஸ் என்ற வார்த்தையை என் காதில் போட்ட முதல் மனிதர் பெருந்தலைவர் என்று சொல்லலாம். அவர் சொன்னதை நான் மறந்து விட்டேன் என்று கூட சொல்லலாம். என்னுடைய நெருங்கிய நண்பர்கள் எல்லோரும் அடிக்கடி ஐஏஎஸ் பற்றிப் பேசியதால் நானே அது குறித்து தீவிரமாக யோசிக்க ஆரம்பித்தேன். அதற்காகக் கங்கணம் கட்டிக்கொண்டு படித்தேன் என்று சொல்ல முடியாது. இடையில் நாடகத்தின் மீது ஆர்வம் வந்தது. நானே ஒரு குழுவை அமைத்துக்கொண்டு நாடகங்களில் நடிக்கத் துவங்கினேன். கவிதை எழுதினேன். பாடல்கள் பாடினேன். திரைப்படங்களில் ஆர்வம் காட்டினேன். இதில் திரைப்படமா ஐஏஎஸ் தேர்வா என்ற கேள்வி எழுந்தபோது பரீட்சை எழுதிப்பார்ப்போம். தேறினால் ஐஏஎஸ். இல்லையென்றால் பத்திகையாளனாகவோ அல்லது திரைப்படத் துறைக்கோ போவது என்று முடிவெடுத்தேன். இந்த முடிவில்தான் நான் விண்ணப்பத்தாளை வாங்கினேன். நான் ஒரு முறைதான் தேர்வு எழுதினேன். பொதுவாக ஐஏஎஸ் எழுதுபவர்கள் உடனடியாக அடுத்தடுத்து தேர்வுகள் எழுதுவார்கள். நான் ஒரு முறைதான் விண்ணப்பம் வாங்கினேன். ஒரு முறைதான் தேர்வு எழுதினேன். ஐஏஎஸ் முடிவு வந்த நாள் மிகவும் ஜனரஞ்சகமான சம்பவம் என்று சொல்வேன். ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் எனக்கு இரவுப் பணி. அந்த வெள்ளிக்கிழமை ஒன்பது மணிக்கு எனக்கு இரவுப்பணி துவக்கம். அன்றுதான் தேர்வு முடிவுகள் வெளியாகின்றன. நான் வெற்றி பெறுவேன் என்ற நம்பிக்கையில் நண்பர்களுக்கு இனிப்புக்கள் வழங்க வீட்டில் இருந்து பணம் வாங்கி வந்திருந்தேன். இந்தியா முழுக்க யார் யார் தேறி இருக்கிறார்கள் என்ற செய்தி தினமணி அலுவலகத்தில் பிடிஐ டெலிபிண்டர் வழியாக வந்து கொண்டிருக்கின்றன. நான் டெலிபிண்டர் பக்கத்தில் நிற்கிறேன். நான் இந்தத் தேர்வு எழுதியிருக்கிறேன் என்பது அங்கு யாருக்கும் தெயாது. ஒரு குறிப்பிட்ட பத்து இருபது பெயர்கள் வந்தபிறகு இப்படியெல்லாம் பார்ப்பது சரியில்லை என்று தோன்றியது. அதனால் மற்ற செய்திகள் எப்படி வருமோ அந்த வசையில் எடுத்துப் பார்க்கலாம் என்று என்னை அதில் இருந்து விலக்கி வைத்து ஒரு சிறு நடை போய்வந்தேன். மற்ற செய்திகளை மொழி பெயர்த்துவிட்டு அதன் வசையில் அந்த ஐஏஎஸ் தேர்வு முடிவினை எடுத்துப்பார்த்தேன். அப்படிப் பார்த்த போது என் பெயரும் அதில் வந்தது. அங்கு என்னுடன் பிழை திருத்தம் பார்ப்பவர்கள் மற்ற தோழர்களை அழைத்து அவர்களுக்கு இரவு உணவும் இனிப்பும் வாங்கி வரச் செய்தேன். அவர்கள் ஏதோ எனக்குத் திருமணம் நிச்சயமாகி இருப்பதைப் போல நினைத்தார்களே தவிர நான் ஐஏஎஸ் தேர்வு பெற்றேன் என்று அவர்கள் நினைக்க வில்லை. நானும் சொல்லவில்லை. ஐஏஎஸ் வந்தது திட்டமிட்டது என்று சொல்ல முடியாது. ஆனால் யதார்த்தமாக என்னுடைய இலக்கியம், இதழ்ப்பணி, நாடகம், கவிதை போன்ற எதையுமே விட்டுக் கொடுக்காமல் முதல் முயற்சியிலேயே தமிழில் தேர்வு எழுதி தமிழை விருப்பப் பாடமாக எடுத்து தமிழிலேயே நேர்காணல் கொடுத்து வெளியே வரும்போது இந்திய ஆட்சிப் பணித்துறை வரலாற்றில் தமிழை ஒரு தாளாக எழுதி நிறைய பேர் தேர்வு அடைந்திருக்கிறார்கள். அவர்கள் பல துறைகளில் மாணவர்களாக இருந்திருக்கலாம். ஆனால் இளங்கலை மற்றும் முதுகலையை தமிழில் பயின்று ஒரே முயற்சியில் நேரடித் தேர்வில் இதுவரை யாரும் வந்தது இல்லை. முதல் மாணவனாக வந்தது பற்றி தமிழக சட்டசபை தொடங்கி பல இடங்களிலும் பேசினார்கள். பல இதழ்களிலும் ஊடகங்களிலும் இது பேசப்பட்டது. அந்த வகையில் தமிழ் மாணவர்களுக்கு தமிழ் படிக்கும் ஒருவன் கெட்டுப் போக மாட்டான் என்ற ஒரு உறுதியைக் கொடுக்க முடிந்ததில் எனக்கு மட்டற்ற மகிழ்ச்சி என்றுதான் சொல்லவேண்டும்.

ஒரு இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக ஒரிசாவில் உங்களுடைய அனுபவங்கள் குறித்து...

ஐஏஎஸ் தேர்வில் வெற்றி பெற்ற போது எனக்கு ஒரிசா மாநிலம் ஒதுக்கப்பட்டது. நான் தமிழகத்தில் அதிகாரியாக வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இப்படிக் கிடைத்ததில் ஏதோ கண்காணாத ஒரு இடத்துக்குப் போக வேண்டுமா என்பதுபோல நினைத்தேன். ஆனால் இந்த 23 ஆண்டுகளுக்குப் பிறகு யோசித்துப் பார்க்கும் போது அது கூட ஒருவகையில் நல்லதுதான் என்று தோன்றுகிறது. என்னுடைய ""அம்மாவுக்கு கவிதைத் தொகுப்பின் முன்னுரையில் நான் சொல்லியிருப்பது போல, கிட்டப் பார்வையில் தட்டுப்படாதவை தூரப்பார்வையின் துலாக்கோலில் துலங்குகின்றன'' என்று. நாம் பக்கத்தில் இருந்து பார்க்க முடியாத விஷயங்களை தூரத்தில் இருந்து பார்ப்பது சாத்தியமாகி இருக்கிறது. ஒரு புதிய பண்பாடு மற்றும் மொழிச்சூழலில் பல புதிய சவால்களை சந்திக்க வேண்டும். அதிருஷ்டவசமாக இந்த சவால்கள் எனக்கு நல்ல அனுபவங்களையே பசாக அளித்தன. வெளிமாநிலப் பணி வாய்ப்பில் விசாலமாகி இருக்கிறது எனது பார்வை.

வரலாறு காணாத ஒரிஸ்ஸ புயல், பாதிரியார் கிரஹாம் ஸ்டெய்ன்ஸல்ம், அவரது இரண்டு மகன்களும் படுகொலை என்பதான இந்திய ஆட்சிப் பணியில் உங்களுடைய பல்வேறுபட்ட அனுபவங்கள் குறித்து ...?
இந்திய ஆட்சிப் பணியில் எனக்குப் பிடித்த விஷயம் அதன் விரிவான களமும், அதனால் விளைகின்ற வெவ்வேறு அனுபவங்களுக்கான வாய்ப்பும். நிதித் துறையில் சில வருடம், பழங்குடி வளர்ச்சியில் சில வருடம், பிறகு சுற்றுலாத்துறை, பண்பாட்டுத்துறை, செய்தி மக்கள் தொடர்பு, பேரிடர் மேலாண்மை ,ஒரிஸ்ஸப் மாநிலத்தின் தலைமைத் தேர்தல் அதிகாரி, இப்பொழுது தேர்தல் ஆணையம் என்று ஒரு வானவில் அனுபவம் எனக்கு வாய்த்திருக்கிறது.

ஆனாலும், சில நிகழ்வுகள் நெஞ்சை விட்டுப் போகாது. 1999ல் வரலாறு காணாத புயல் ஒரிஸ்ஸாவைத் தாக்கிய போது துயர் துடைப்புப் பணியில் கொஞ்சம் தோள் கொடுக்க முடிந்தது. புயலால் பெரிதும் பாதிக்கப் பட்ட ஜாஜ்பூர் மாவட்டத்தின் கலெக்டர், மாவட்டத்தை விட்டே வெளியேறி விட்ட நிலையில் அரசுத் தரப்பில் யார் வந்தாலும் அடித்து உதைக்கத் தயாராக இருந்தார்கள் அந்த மாவட்டத்து மக்கள். இதற்கு 13 வருடங்களுக்கு முன்னால் அந்த ஊரில் இரண்டு ஆண்டுகள் நான் உதவி கலெக்டராக இருந்ததை நினைவில் வைத்து அந்த மாவட்டத்திற்கு அவசர கால கலெக்டராக ஓரிரு மாதம் போக வேண்டும் என்று மாநில முதல்வரும், தலைமைச் செயலரும் என்னைக் கேட்டுக் கொண்டனர். சாலைகள் எல்லாம் உடைந்து எங்கும் நீர்க் காடாக இருந்த அந்த இடத்திற்கு நான் மோட்டார் சைக்கிளில் பயணம் செய்து கலெக்டர் பொறுப்பை ஏற்க வேண்டியதாயிற்று. ஏழு வாரங்கள்; ஒரு நாளைக்கு 18 மணி நேரம் உழைப்பு. மின்சாரம் இல்லை. தொலைபேசி இல்லை. அமெச்சூர் ரேடியோ மூலம் முதல்வரிடமும், தலைமைச் செயலரிடமும் பேச வேண்டிய நிலைமை. ஒரு வழியாக நிலைமை கட்டுக்குள் வந்தது.

மீண்டும் இரண்டாண்டுகளுக்குப் பிறகு 2001ல் அந்த மாவட்டத்தில் பெரிய வெள்ளம் ஏற்பட்ட போது மீண்டும் சிறப்பு அதிகாரியாக அங்கு மூன்று வாரம் சென்றேன். அப்போது ஒரு நாள், ஒரு கிராமத்திலிருந்து பத்து பதினைந்து பேர் வாடகை வண்டி எடுத்துக் கொண்டு என்னை பார்க்க வந்திருந்தார்கள். என்ன பிரச்சனை என்றால் "ஒன்றுமில்லை' சும்மா பார்க்க வந்தோம் என்றார்கள். பிரச்சனை எதுவும் இல்லாமல் கையில் மனு எதுவும் இல்லாமல் இவர்கள் எதற்காக வர வேண்டும் என்று புரியாமல் நான் நின்றபோது, புயல் வந்த போதும், மீண்டும் வெள்ளம் வந்த போதும் நீங்கள் வந்து செய்கின்ற பணிகள் எல்லோருக்கும் தெரியும்; ஆனால் நாங்கள் உங்களைப் பற்றிக் கேள்விப்பட்டு இருக்கிறோமே தவிர, நேரில் பார்த்தது இல்லை, எனவே எங்களுக்குள் பணச் செலவைப் பகிர்ந்துக் கொண்டு ஒரு வாடகை வண்டி பிடித்து உங்களைப் பார்க்க வந்தோம் வேறொன்றுமில்லை என்று சொல்லிவிட்டு கிளம்பிச் சென்றார்கள். அரசாங்க விருது கொடுத்தால் கூட நான் அவ்வளவு நெகிழ்ந்து போயிருக்க மாட்டேன். கண்கள் பனித்தன.
இன்னும் எவ்வளவோ அனுபவங்கள். 1989ல் வன்முறையில் ஈடுபட்ட மதவெறியர்களுக்கு எதிராக எடுத்த அதிரடி நடவடிக்கை. அந்தச் சம்பவத்தில் ஒரு வன்முறையாளன் என்னைக் கொலை வெறியுடன் தாக்க முயன்றான். 1998 - 99ல் மயூர்பஞ்ச் மாவட்டக் கலெக்டராக இருந்த போது ஆஸ்திரேலிய பாதிரியார் கிரஹாம் ஸ்டூவர்ட்ஸ் ஸ்டெய்ன்ஸல்ம், அவரது இரண்டு மகன்களும் படுகொலை செய்யப் பட்ட நிகழ்ச்சி பக்கத்து மாவட்டமான கியோன்ஜாரில் நடந்தது. ஸ்டெய்ன்ஸல்ம் அவரது குடும்பத்தாரும் வசித்தது மயூர்பஞ்ச் மாவட்டத்தில் தான். படுகொலை நிகழ்ச்சிக்கு இரண்டு நாட்கள் முன்பு அவரும் அவரது குடும்பத்தாரும் எங்களது வீட்டிற்கு வந்து இரண்டு மணி நேரம் பேசிக் கொண்டிருந்தார்கள். அடுத்த 48 மணி நேரத்திற்குள் கொலை நிகழ்ச்சி நடந்த கிராமத்திற்கு நானே சென்று மூவரின் கருகிய சடலங்களை பரிசோதனைக்கு அனுப்பி பின்னர் இறுதிச் சடங்குக்கான ஏற்பாடுகளை செய்ய நேரிட்ட அவல நினைவுகளின் ஞாபக வடுக்கள் இன்னும் ஆறாமல் இருக்கிறது.

பொதுவாக முக்கியமான பொறுப்புகள் என்று பலரும் நினைக்கிற வெவ்வேறு துறைகளில் பணி செய்தாலும் நான் எனக்கு அளிக்கப் பட்ட தனிப்பட்ட அங்கீகாரம் என்று கருதுவது ஒரிஸ்ஸப் மாநில பண்பாட்டுத் துறை செயலாளராக நியமிக்கப் பட்டதைத் தான். சுற்றுலா, செய்தி மக்கள் தொடர்பு ஆகிய இரு துறைகளோடு மூன்றாவது பொறுப்பாக பண்பாட்டுத் துறையும் எனக்கு வழங்கப்பட்ட போது நான் கொஞ்சம் தயங்கினேன். ஒரிஸ்ஸப் மாநிலத்தைச் சாராத பிற மாநிலத்தைச் சேர்ந்த ஓர் அதிகாரியை பண்பாட்டுத் துறைக்கு நியமிக்கக் கூடாது. மேலும், ஒரிஸ்ஸப் கேடரில் இலக்கியத் தகுதி வாய்ந்த பல உள்ளூர் அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பதைச் சுட்டிக் காட்டினேன். அதற்கு, பண்பாடு என்பது மொழி சம்பந்தப்பட்டது மட்டுமல்ல அதை விட அகலமானது, ஆழமானது; ஒரிஸ்ஸப்வைப் பற்றி பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ள நீங்கள் பண்பாட்டுத் துறைக்கு தலைமை ஏற்பது பொருத்தமே என்று பதில் வந்தது. அந்த நம்பிக்கையைக் காக்கும் வகையில் பண்பாட்டுத்துறை பல புதிய முன்னோடி நடவடிக்கைகளில் முனைப்புடன் ஈடுபட்டது. இந்தியாவிலேயே முதன் முறையாக பண்பாட்டு வரைபட தொகுப்பு வெளியிட்டோம். பண்பாடு சார்ந்த ஆய்வுகளை, நிகழ்வுகளை வலுப்படுத்த தனியாக நிதி ஆதாரம் ஒன்றை ஏற்படுத்தினோம். ஆவண காப்பகங்களின் தூசு துடைத்து அரிய கைப்பிரதிகளை நூல் வடிவம் செய்தோம்.

பொதுவாக அரசாங்கப் பணி பற்றியும், குறிப்பாக ஐ.ஏ.எஸ். போன்ற அகில இந்திய பணிகள் பற்றியும் ஒரு விதமான எதிர்மறையான கருத்துரு, மனத்தோற்றம் நிலவுகிறது. மலிந்து வருகிற ஊழல்களும், நலிந்து வருகிற மதிப்பீடுகளும் இதற்குக் காரணிகளாகும். இருந்தாலும் இன்றைக்கும் ஐ.ஏ.எஸ். பணித் தேர்வில் வெற்றி பெறுபவர்களில் பாதிப் பேர் பொறியாளர்கள், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற கல்வி நிறுவனங்களில் படித்தவர்கள்தான். பணிச் சுமையும் அழுத்தமும், எவ்வளவு தான் இருந்தாலும் இந்த விசாலமான களம் தருகிற வித்தியாசமான அனுபவங்களில் ஒரு ஈர்ப்பு இருக்கத்தான் செய்கிறது.

இந்தியவியல் மற்றும் திராவிட இயல் குறித்த ஆய்வுகளில் உங்களுக்கு ஆர்வம் ஏற்பட்டது எப்படி?

1985ல் பழங்குடிகள் வாழும் ஒரு மாவட்டத்தில் பணியாற்றும் வாய்ப்புக் கிடைத்தது. கோராபுட் என்ற அந்த இடத்தில் 40க்கும் மேற்பட்ட மொழிகளைப் பேசும் பழங்குடியினர் வசிக்கிறார்கள். இதை ஒரு வாழும் மானிடவியல் ஆய்வுக்கூடம் என்று சொல்லலாம். அப்போது நான் சில பழங்குடி மக்களின் மொழிகளைக் கற்றுக் கொள்ள முயற்சி செய்தேன். ஏற்கனவே நான் ஒரிய மொழியில் பேசவும், படிக்கவும், எழுதவும் கற்றிருந்தேன். அந்தப் பகுதியில் "குவி, கோண்டி, கோயா, ஓல்லாரி, பார்ஜி' போன்ற திராவிட குடும்பத்தைச் சேர்ந்த மொழிகள் பேசப்படுகின்றன. அவர்களது மொழியில் பயன்படுகின்ற சில சொற்கள் நமது சங்க இலக்கியங்களில் புழங்கிய சொற்களை எதிரொலிக்கும். மூல திராவிடத்தின் வேர்களைக் கண்டறிகிற திராவிட பழங்குடிகளின் வாழ்க்கை முறைகளை பார்த்து உணர்கிற இந்த வாய்ப்பு; எனக்குள் கிளர்ந்த ஆர்வம் என்னை மானிடவியல், திராவிடவியல் சார்ந்த ஆய்வுக்குள் திருப்பி விட்டது. இன்னும் சொல்லப் போனால் சத்திஸ்கரிலுள்ள பஸ்தர்; ஒரிஸ்ஸப்விலுள்ள கோராபுட் மாவட்டங்களை சங்க இலக்கியம் காட்டும் வாழ்க்கை முறையின் வாழும் காட்சியகம் என்றே சொல்லலாம். தொல்காப்பியம் மற்றும் சங்க அக இலக்கியங்கள் காட்டும் அகத்திணை மரபுகளின் ஆதார வேர்களை இங்கு காணலாம் பகற்குறி, இரவுக்குறி, பாங்கர் ஒழுக்கம், பாங்கியர் ஒழுக்கம், நற்றாய், செவிலித்தாய் மரபுகள், உடன் போக்கு என்றெல்லாம் படித்த இலக்கிய மரபுகள் நடைமுறையில் உள்ள அதிசயத்தை நானே பார்த்திருக்கிறேன். இன்றைய தமிழனுக்குக் கரந்தை மலர் எப்படி இருக்கும் என்று கூடத் தெரியாது. ஆனால் பஸ்தரிலுள்ள திராவிடப் பழங்குடிகளின் காதல் பாட்டுகளில் கரந்தை மலரின் தரிசனம் கிடைக்கிறது.

கோராபுட் மாவட்டத்திற்கு அடிக்கடி வருகிற அமெரிக்க மொழியியல் அறிஞர் நார்மன் ஜல்டே எனது மானிடவியல், பழங்குடி மொழிகளைப் பற்றிய ஆர்வத்தைப் பார்த்து என்னுடைய மேலதிகாரியிடம் "இவர் ஐ.ஏ.எஸ்.ள்ஸ தூக்கிபோட்டு விட்டு அமெரிக்கா வந்து ஆராய்ச்சி செய்வது நலம்' என்று யோசனை சொல்லி விட்டுப் போனார். ""அப்படிப் போயிருக்கலாமா'' என்ற யோசனை அவ்வப்போது எனக்குள் வருவது உண்டு.
பழங்குடி மொழிப்படிப்பு, மானிடவியல் தகவல் சேகரிப்பு என்று தொடங்கிய நான் 1991 முதல் இடப் பெயர் ஆராய்ச்சி என்று சொல்லக்கூடிய ஊர்ப்பெயர் ஆய்வில் என் முழுக் கவனத்தையும் செலுத்தினேன். பெயர்கள் பற்றிய சிந்தனை நான் கல்லூரியில் படிக்கிற காலத்திலேயே எனக்குள் முளைத்திருந்தது. தமிழ் மாணவனாகிய நான் மதுரை, கபாடபுரம், என்ற ஊர்ப் பெயர்களின் தோற்றம் பற்றி தலையைக் குடைந்து கொண்டிருந்தேன். தொல்காப்பிய இலக்கணப்படி "ச' என்கிற சகர ஒலி எந்த ஒரு தமிழ்ச் சொல்லின் முதல் எழுத்தாக (மொழி முதலாக) வர முடியாது. அப்படி என்றால் தமிழ் வளர்த்த அவையை சங்கம் என்றது ஏன்? கபாடபுரம், மதுரை போன்ற ஊர்ப் பெயர்களின் மூல வேர் தமிழ் சார்ந்ததாகக் தோன்றவில்லை. அப்படி என்றால் அந்த இடங்கள் தமிழ் காத்த அவயத்தோடு எப்படித் தொடர்பு பெற்றன. ஆட்டனத்தி, ஆதிமந்தி, பேகன் போன்ற பெயர்கள் அடிப்படையில் தமிழ்ப் பெயர்களா-? புலவர்களின் பெயர்களோடு வருகிற "மோசி' போன்ற ஊர்களின் தடயங்கள் பெயரளவில் கூட இப்போது இல்லையே என்று யோசிப்பேன். இந்த விஷயங்கள் பற்றி மதுரை பேராசிரியர்களிடம் "குண்டக்க மண்டக்க' கேள்விகளை கேட்டு "எக்குத்தப்பாக' வாங்கிக் கட்டிக் கொள்வேன்.
பழங்குடி மாவட்டங்களில் பணி வாய்ப்பும் ஆந்திரா, பீகார், சத்திஸ்கர் மற்றும் மகாராஷ்ராவில் உள்ள பழங்குடிப் பகுதிகளில் பயண அனுபவமும் எனக்குள் முளைத்த பழைய கேள்விகளுக்கு புதிய உரம் போட்டன.

சத்திஸ்கரில் உள்ள பஸ்தர் மாவட்டத்தில் நாடு என்று முடிகிற ஊர்ப் பெயர்கள் 272 உள்ளன. தமிழ்நாட்டில் கூட நாடு என்று முடிகிற ஊர்ப்பெயர்களை விரல் விட்டு எண்ணி விடலாம். இன்னொரு சுவையான செய்தி இ தமிழ்நாட்டில் தமிழ் என்ற சொல் தாங்கிய ஊர்ப் பெயர் எதுவுமில்லை. ஆனால் தமிழ்குடி, தமிழ்கோடா, தமிழி போன்ற ஊர்ப் பெயர்கள் ஒரிஸ்ஸப்விலும், பீகாரிலும் உள்ளன. இந்த ஊர்ப் பெயர்கள் ஏதோ இங்கொன்றும் அங்கொன்றுமாய் தற்செயலாக வழங்குவதாகத் தெரியவில்லை. ஏனென்றால் இந்த ஊர்ப் பெயர்களோடு பழனி, போடி, தேனி, குமிழி போன்ற மதுரை மாவட்ட கேரள இடுக்கி மாவட்ட ஊர்ப் பெயர்களும் வட மாநிலங்களில் வழங்குகின்றன.

ஊர்ப்பெயர் ஆராய்ச்சியில் இதுவரை எதுவரை வந்திருக்கிறீர்கள்?
தொடக்கத்தில் மாவட்ட வாரியான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆவணங்களை வைத்து ஊர்ப் பெயர்களைத் தொகுத்து ஆராய்ந்தேன். மூட்டை மூட்டையாய் ஆவணங்கள் குவிந்தன. அப்போது தான் கம்ப்யூட்டர் தொழில் நுட்பம் பிரபலமாகி வந்தது. 1992ல் இந்தியாவிலுள்ள எல்லா ஊர்ப் பெயர்களையும் மாநில வாரியாக, மாவட்ட வாரியாக கணிப்பொறியில் பதிவு செய்தேன். கணிப்பொறி மென்பொருள் துறையிலுள்ள எனது நண்பர்களின் உதவியுடன் எனது ஆராய்ச்சிக்கென்று தனிப்பட்ட முறையில் "பாரதம்' என்ற பெயரில் புதிய மென் பொருளை ஒரு வகையான தேடுதல் இயந்திரம் (நங்ஹழ்ஸ்ரீட் உய்ஞ்ண்ய்ங்) என்று கூடச் சொல்லலாம் இ தயார் செய்த பின் எனது ஆராய்ச்சியில் வீச்சும், விரைவும் பன்மடங்காகியது. அப்படிப்பட்ட ஒரு தேடுதலில் தான் முன்பு சொன்னபடி பழனி, இடுக்கி, தேனி, தேக்கடி போன்ற பெயர் தொகுதிகள் தமிழ் நாட்டுக்கு வெளியே இருப்பது தெரிந்தது. ஒரு காலத்தில் மனிதர்கள் ஒரு இடத்திலிருந்து ஒரு இடத்திற்குக் கூட்டம் கூட்டமாய் குடிபெயர்ந்து போன போது அவர்களுடன் சேர்ந்து தங்களது பண்பாட்டு மரபுகளையும், பழங்காலத்து நினைவுகளையும் அவற்றோடு சேர்த்து தங்களது ஊர்ப் பெயர்களையும் கொண்டு சென்றார்கள். ஊர் என்பது வெறும் மண்ணும், மரங்களையும், வீடுகளையும் சுமக்கும் நிலம் மட்டும் அல்ல. அது மனிதர்களின் நினைவுகளின் கோர்வை. உணர்வுகளோடு ஐக்கியமான விஷயம். விட்டுச் சென்றாலும் விலகி விடாமல் தொட்டுத் தொடர்கிற தொன்மையின் தொப்புள்கொடி. எனவே, ஊர்ப் பெயர்களின் வால்களைப் பிடித்துக் கொண்டு வழித்தடத்தைப் பின் தொடர்ந்தால் நமது பழமையின் தலையைத் தொட்டு விடலாம் என்று நான் பரிபூர்ணமாக நம்புகின்றேன்.

ஒரே மாதிரியான ஊர்ப் பெயர்கள் வெவ்வேறு நாடுகளில், வெவ்வேறு மொழிகளில், வெவ்வேறு பொருள்களில் வழக்கத்தில் இருப்பது தற்செயலாகக் கூட நிகழலாம். இப்படி அங்கொன்றும் இங்கொன்றுமாய் உதிரியாக இல்லாமல் ஒரே மாதிரியான ஊர்ப்பெயர்கள் ஒரு தொகுப்பாக நதி கடந்து, மலை கடந்து வெவ்வேறு இடங்களில் வெவ்வேறு நாடுகளில் பயன்படுத்தப் படுவது தற்செயலாக நடக்க முடியாது. எனவே உதிரிப் பெயர்களை ஆராயாமல் ஊர்ப் பெயர்களை பண்பாட்டு அடையாளம் சார்ந்த தொகுதிகளாக நான் பார்க்கத் தொடங்கிய போது பல புதிய உண்மைகள் புலப்பட்டன.

அப்படிப்பட்ட சில தொகுதிகளைப் பற்றி விளக்க முடியுமா?

ஒரிஸ்ஸாவில் உள்ள கோனார்க்கில் உள்ள சூரியக் கோவில் உலகப் புகழ் பெற்றது. அந்தக் கோவிலில் சூரியக் கடவுள் உடம்பை ஒட்டிய உடை அணிந்து, கால்களில் குதிரை வீரர்கள் அணிகிற காலணி அணிந்து கம்பீரமாகக் காட்சியளிப்பார். நமது தென்னிந்தியக் கோவில்களில் சூரியக் கடவுள் மற்ற கடவுள்களைப் போல வெறும் காலில் நிற்பார். மேலும் கோனார்க் கோயிலில் இந்தியாவோடு எந்த வகையிலும் தொடர்பு படுத்த முடியாத ஒட்டகச் சிவிங்கியின் சிற்பம் இரண்டு இடங்களில் தெளிவாக செதுக்கப் பட்டிருக்கும். சிலைகளாய் நிற்கிற மனிதர்களில் கூட இந்தியர் அல்லாத வெளிநாட்டு முகங்களின் சாயல்கள் தெரியும். இதுவரை வந்த ஆராய்ச்சிகளில் எல்லாம் இதற்கு பல்வேறு காரணங்களை கற்பிக்க முயன்றுள்ளன. ஆனால், அவற்றில் எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. எனவே, எனது ஆராய்ச்சியின் எல்லைகளை விரிவு செய்து இந்தியாவின் மற்ற சூரியக் கோவில்களையும் ஆராய்ந்த போது இந்தியத் துணைக் கண்டத்தின் தொன்மையான சூரியக் கோவில் என்று கருதப்படுகிற மூலஸ்தான் (இப்போது பாகிஸ்தானில் உள்ள மூல்தான்) என்ற இடத்தில் இருந்த சூரியன் கோவில் அருகே சந்திரபாகா என்ற நதி ஒடுவது தெரிந்தது. ஒரிஸ்ஸப்வில் உள்ள கோனார்க் அருகிலும் சந்திரபாகா என்ற நதி உள்ளது. இந்தப் புனித நதி இப்போது வற்றி வறண்டு விட்டது. இந்தத் தொடர்பைப் பின்பற்றிய போது இப்போது பாகிஸ்தானில் உள்ள பல ஊர் பெயர்கள் ஒரிஸ்ஸப்வில் கோனார்க் பகுதியிலும் விரவிக் கிடப்பது வெளிச்சத்திற்கு வந்தது. இந்த தடத்தைப் பின் பற்றித் தொடர்ந்த போது, ஈரானில் கோனார்க் என்ற பெயரில் மூன்று ஊர்கள் இருப்பதையும், அந்த ஈரானிலேயே ஒரிஸ்ஸப்வில் கோனார்க்கைச் சுற்றி பிராச்சி பள்ளத்தாக்கு பகுதியில் வழங்கும் நூற்றுக் கணக்கான பெயர்களின் பிரதி பிம்பங்கள் அச்சு மாறாமல் அப்படியே வழங்குவதையும் கண்டறிந்தேன். ஒரிய மக்கள் தங்களது பண்பாட்டு அடையாளங்களின் அடிப்படை மையமாக வைத்துக் கொண்டாடும் பூரி, கோனார்க், சில்கா, கட்டாக் போன்ற இடப் பெயர்களைச் சுற்றி பண்டைய பாரசீக சூரிய வழிபாடு, தீ வழிபாட்டுத் தொடர்புகளின் படிமங்கள் உள்ளன என்ற கருதுகோளை நான் முன் வைத்த போது எனக்கே கொஞ்சம் கவலையாகத்தான் இருந்தது. ஒரிய அறிவு ஜீவிகளும், ஆய்வாளர்களும் எப்படி எடுத்துக் கொள்வார்கள் என்று. உள்ளூர்காரன் சொன்னாலும் ஏற்றுக் கொள்ளலாம் ஆனால் வெளியூரிலிருந்து வந்தவன் சொன்னால் வேறு மாதிரியாகவும் ஆகலாம். ஒரிஸ்ஸா மக்கள் திறந்த மனத்துடன் என்னை ஏற்றுக் கொண்டார்கள். உண்மையை நோக்கிப் பயணிப்பது தான் ஆய்வு. அந்த வகையில் ஒரிஸ்ஸப் எனக்குப் பல வகைகளில் களம் அமைத்துக் கொடுத்தது என்று சொல்லலாம்.

உங்களது இடப்பெயர், இந்தியவியல் ஆய்வுகளின் இலக்குகள் ..?

எனது ஆய்வுகள் பன்முகத் தன்மை கொண்டவை. பண்டைய புலப் பெயர்வுகளின் வழித் தடங்களைத் தேடி அறியும் முயற்சியில் இடப் பெயர் ஆய்வோடு சேர்ந்து அகழ்வாய்வு, மானிடவியல், தொல்விலங்கியல், தொல் பயிரியல், வரலாற்று ஆவணங்கள், கல்வெட்டுக்கள் என்று பல்வேறு துறைகளையும் துணை சேர்த்துக் கொள்கிற கட்டாயம் இருக்கிறது. பெயர்களைப் பற்றிய ஆய்வுகளுக்கு ஒரு அறிவியல் தகுதியை அமைத்துத் தரவேண்டும் என்பது எனது இலக்கு. 2005ல் ஆந்திரா, ஒரிஸ்ஸப் எல்லையில் வசிக்கும் கோயா என்ற திராவிட பழங்குடியினரின் வேர்கள் ஆப்பிரிக்காவாக இருக்கலாம் என்ற கருத்தை முன் வைத்து ஓர் ஆய்வுக் கட்டுரை எழுதினேன். திருவனந்தபுரத்தில் இருக்கும் திராவிட மொழியியல் வல்லுனர் வ.அய்.சுப்ரமணியம் பதிப்புச் செய்யும் அனைத்துலக திராவிட மொழியியல் ஆய்வு இதழில் இக்கட்டுரை வெளியிடப் பட்டது. இக்கட்டுரையில் ஆந்திர ஒரிஸ்ஸப் எல்லையில் அமைந்திருக்கும் கோராபுட்டிலிருக்கும் 462 ஊர்கள் அப்படியே அச்சு மாறாமல் நைஜீரியாவிலுள்ள ஊர்களின் பெயர்கள், ஆறுகள், மலைகளின் பெயர்களோடு பொருந்துவதை பட்டியலிட்டிருக்கிறேன். கோராபுட்டிலிருக்கிற அனைத்துப் பழங்குடியினரின் குடிப் பெயர்கள், மொழிப் பெயர்கள், குடும்பப் பெயர்கள், தனிமனிதர்களின் பெயர்கள் அனைத்தும் அப்படியே நைஜீரியா ஊர்ப் பெயர்களாக உள்ளன. இந்தப் பெயர்களின் பயணத்தைப் பழங்கால மனிதர்களின் பயணங்களின் தடம் காட்டும் தடயங்கள் என்று கருதுகின்றேன். இதை உறுதிப்படுத்தும் வகையில் சமீபத்தில் மானிட மரபியல் அறிஞரான ரா.பிச்சப்பன் தனது குழுவினருடன் ஒரிஸ்ஸப் சென்று கோயா பழங்குடியினரின் மரபியல் மாதிரிகளை சேகரித்துள்ளார். இந்த மரபியல் ஆய்வு முடிவுகள் இடப் பெயர் மற்றும் குடிப் பெயர்களை அடிப்படையாக வைத்து நான் சொல்லியிருக்கும் கருதுகோளிற்கு வலுச் சேர்க்கும் என்று நம்புகிறேன்.

குடிப்பெயர்கள் (சாதிப் பெயர்கள்) மற்றும் குடும்பப் பெயர்கள் குறித்தும் உங்கள் ஆய்வு செல்கிறதே?

ஊர்ப் பெயர்களுக்கும் மனிதர்களின் குடிப் பெயர்கள் மற்றும் ஜாதிப் பெயர்களுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. இவற்றை அறிவியல் ரீதியாக ஆய்வு செய்தால் பண்டைய குலப் பெயர்களின் வேர்களையும், திசைகளையும் ஒரளவு தீர்மானிக்க முடியும் என்று நம்புகிறேன். வரலாறு என்பது மன்னர்களின், அவர்களின் மனைவிகளின் மற்றும் அவர்களின் வைப்புகளின் வரலாறு மட்டும் அல்ல. அதைவிட மக்களின் வரலாறு மகத்தானது. ராமன் ஆண்டாலும், ராவணன் ஆண்டாலும் மனித நாகரீகச் சங்கிலி முட்டி மோதி முன்னேறித்தான் இருக்கிறது. முகம் தெரியாத மனிதர்களின் முகவரி இல்லாத வரலாறுகள் ஊர்ப் பெயர்களிலும், குடிப் பெயர்களிலும் உறைந்து போயிருக்கின்றன. அரசியல், மத எல்லைகளைத் தாண்டி ஒரு மனித வரலாறு இருக்கிறது. அந்தப் பயணத்தின் குறியீடாக உள்ள இடப் பெயர்களையும், இனப் பெயர்களையும் துணை கொண்டு அந்த பண்பாட்டுச் சரித்திரத்தின் ஊடே நாம் பயணிக்க முடியும் என்று நம்புகிறேன். அந்த பயணத்தில் நம் மனம் இன்னும் விசாலப்படும்.

உங்களுடைய தீவிரமான பணி நெருக்கடிகளுக்கு இடையில் படிப்பு, ஆய்வு போன்றவற்றிற்க்கு நேரம் எப்படி ஒதுக்க முடிகிறது? உங்கள் நேரத்தை எப்படி சமன் செய்கிறீர்கள்?

நான் ஆராய்ச்சியாளனாக வேண்டும் என்ற கனவுகளோடு தமிழ் இலக்கியம் படித்தவன். ஆனால் விபத்தாகக் கிடைத்த வேலையை வேண்டாம் என ஒதுக்காமல் பத்திரிக்கையாளனாக வாழ்க்கையைத் தொடங்கி ஒரு ஐ.ஏ.எஸ். அதிகாரியாக ஆனவன். இங்கேயும் பணியில் சேர்ந்த முதல் நாள் முதல் இன்று வரை சட்டம் ஒழுங்கு, புயல், வெள்ளம், தேர்தல் மேலாண்மை என்று ஏதோ ஒரு வகையில் நெருக்கடி நிறைந்த, இழ்ண்ள்ண்ள் ஙஹய்ஹஞ்ங்ம்ங்ய்ற் சார்ந்ததாகவே எனது பணிச் சூழல் உள்ளது. ஆனாலும் என்னுடைய ஆராய்ச்சிப் பணியை விட்டுக் கொடுக்காமல் தொடர்ந்து வருகிறேன். தவிர்க்க முடியாத சூழ்நிலையைத் தவிர மற்ற நாட்களில் அதிகாலையில் சுமார் 2 மணி நேரமும் மற்றும் வேலை முடிந்து வீடு திரும்பிய பின் இரவில் மீண்டும் ஓரிரு மணி நேரம் ஆராய்ச்சிக்கு செலவிடுகிறேன். விடுமுறை நாட்களை எனது ஆராய்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்கிறேன். இந்த ஆய்வில் என்னை முழு மனதுடன் ஈடுபடுத்திக் கொள்வதற்கான முழு முனைப்பினையும் எனக்கு வழங்கும் குடும்பம் அமைந்தது எனக்குக் கிடைத்த வரம். எனது மனைவியும் குழந்தைகளும் என் ஆய்வு தொடர்பான சிறு செய்தி கிடைத்தாலும் அதை உடனே எனக்குத் தருவார்கள். எனது மகள்கள் இருவரும் படித்து பெரிய ஆளாகி எனக்கு என்று தனியாக பெரிய நூலகத்தோடு ஆராய்ச்சி நிறுவனம் அமைத்துத் தருவதாக அடிக்கடி வாக்குறுதி அளித்து எனக்கு உற்சாகமூட்டிக் கொண்டிருக்கிறார்கள். என்னுடைய ஆய்வில் என்னை ரசிக்கும் எனது குடும்பம். இது எனக்குக் கிடைத்த பேறு என்று சொல்வேன்.

தெற்கு வாசலில் தொடங்கிய பயணத்தை வடக்கு வாசலில் கொஞ்சம் திரும்பி பார்த்திருக்கிறேன். வாய்ப்புக்கு நன்றி.

நேர்காணல் : ராகவன் தம்பி

இந்த நேர்காணல் 'வடக்கு வாசல் ' மாத இதழில் வெளிவந்தத


--
தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

5 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post