இன்றைய இளைஞன் , தனிமனித சாகசக்காரனக இருக்கிறான் - எஸ்.இராமகிருஷ்ணன்

 குறிப்பு: பொதுவாகவே தமிழ் திரைப்படங்கள் தனிமனித பிரச்சனையில் ஆரம்பித்து தனிமனித தீர்வாகத்தான் முடிகின்றன பிரச்சனை சமூகரீதியில் இருந்தாலும் இதை அலசி பேசுகிறார் இந்த கட்டுரையில் -தியாகு
நன்றி : அந்திமழை இணையதளம்

கோபக்கார இளைஞன் என்ற பிம்பம் 1950 களின் மத்தியில் ஆவேசமாக இயக்கிக் கொண்டிருந்த நாடகத்துறையினரை நோக்கியே அடையாளப்படுத்தப்பட்டது. ஆரம்பகால தமிழ் சினிமாவின் கதாநாயகர்கள் புராண மற்றும் இதிகாச புருஷர்களைப் போல தர்மத்தை நிலை நாட்டுவதை தனது நோக்கமாகக் கொண்டிருந்தனர். வீரத்தை விடவும் காதலே மேலோங்கிய காலகட்டமது . கதாநாயகனுக்கு என்று தனித்த பிம்பம் . அப்போது முழுமையாக உருவாகவில்லை . மாறாக கதாநாயகன் அழகில் சிறந்தவனாகவும் நன்றாக பாடத்தெரிந்தவனாகவும் இருந்தால் போதுமானதாகயிருந்தது.

சமூக மாற்றத்திற்காக குரல் கொடுத்த முதல் கோபக்கார கதாநாயகன் என்று பராசக்தியின் சிவாஜி கணேசனைச் சொல்லலாம். இந்தக் கோபம் தனி நபர் சார்ந்ததில்லை. மாறாக தன்னைச் சுற்றிய சமூகம் ஏன் இப்படியிருக்கிறது என்ற ஆவேசமே அதன் பின்னால் இருந்தது.

இதே காலகட்டத்தில் வெளியான எம்.ஜி.ஆர் திரைப்படங்களில் பெரும்பாலும் கதாநாயகன் தனி நபர் சாகசத்தால் எதையும் வென்றுவிடுகின்றவனாக இருந்ததை குறிப்பிடவேண்டும் . 1976 - ல் இந்தியில் வெளியான சஞ்சீர் என்ற திரைப்படம் இந்தியத் திரையுலகிற்கு ஒரு கோபக்கார இளைஞனை அடையாளம் காட்டியது. அது அமிதாப்பச்சன் . அதுவரை ராஜேஷ்கன்னாவிற்கு இருந்த வசீகரம் மங்கிய காலகட்டமும் அதுவே . இன்னொரு பக்கம் நாடெங்கும் வேலையின்மை , லஞ்ச , வறுமை தலைவிரித்திருந்தது. அரசியல் ரீதியாக மிசா அறிமுகமானது. அத்தோடு நக்ஸல்பாரி இயக்கம் காரணமாக ஆயுதம் ஏந்திய புரட்சிப்பாதை உருவாகியிருந்தது.

இந்தப்படத்தை தமிழில் எம்.ஜி.ஆர். ' சிரித்து வாழ வேண்டும் ' என்ற பெயரில் நடித்த போது இந்தியில் இருந்த கோபக்கார இளைஞன் கதாபாத்திரம் ஒடுக்கப்பட்டு வழக்கமான சாகசம் செய்யும் கதாநாயகன் பற்றியதாக உருவானது. இதில் இன்னொரு முரண் இந்திப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக பிரான் நடித்த சூதாட்ட விடுதி நடத்தும் கதாபாத்திரத்தையும் எம்.ஜி.ஆரே. நடித்தது. ஆகவே இந்தி சினிமாவில் உருவானது போன்ற கோபக்கார இளைஞனைப் பற்றிய திரைப்படம் தமிழில் அன்று உருவாகவில்லை.

ஆனால் 1980 - களில் தீவார் என்ற இந்திப்படத்தை தமிழில் தீ என்று ரஜினிகாந்த் நடிக்கத் தொடங்கிய பிறகே கோபக்கார இளைஞன் என்ற படிமம் தமிழில் முழுமையாக உருக்கொண்டது.

இந்திய சினிமாவில் தீவார் மிக முக்கிய திரைப்படமாகும் . அப்பாவை திருடன் என்று பொய்யாக குற்றம் சாட்டியதோடு, மகன் கையில் அப்பன் ஒரு திருடன் என்று பச்சை குத்தியதால் ஒருவன் வாழ்வு எப்படி திசைமாற்றம் கொள்கிறது என்பதை தீ விவரிக்கிறது. இதன் இன்னொரு பக்கம் கமல்ஹாசன் நடித்த வறுமையின் நிறம் சிவப்பு மற்றும் அபூர்வ ராகங்கள் திரைப்படங்களின் வழியே சமூக கோபம் ஒரு தனி மனிதனின் வாழ்வை எப்படி புரட்டிப் போடுகிறது என்பதை சித்தரிக்கின்றது.

இவர்களை தொடர்ந்து இதே பாதையில் தன்னை உருவாக்கிக் கொண்டவர் விஜயகாந்த். அவரது ஆரம்பக் கால படங்கள் யாவும் கோபக்கார இளைஞனின் கதைகளே.

தமிழ் சினிமாவில் பாடலும் நகைச்சுவையும் இல்லாமல் படம் எடுக்க முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை. இந்த இரண்டுமே கோபக்கார இளைஞர்கள் கதாபாத்திரத்திற்கு பெரிய இடையூறாக அமைந்தன. மிகுந்த ஆவேசத்துடன் போராடிக்கொண்டிருக்கும் கதாநாயகன் , அதை மறந்து டூயட் பாட வேண்டிய கட்டாயம் தமிழ் சினிமாவில் நடந்தது. அத்தோடு கதாநாயகர்களே நகைச்சுவையை மேலெடுத்து செல்ல வேண்டிய நிர்பந்தம் உருவானதால் கோபக்கார இளைஞனாக மட்டும் அவர்களால் தாக்குபிடிக்க முடியவில்லை.

அந்த பிம்பம் உருவாக்குவதில் ஏற்பட்ட சிக்கல்களைச் சமாளிப்பதில் ரஜினி , கமல் இருவரும் தங்களுக்கென தனியான வழியை உருவாக்கிக் கொண்டார்கள் . விஜயகாந்த் தனக்கு நகைச்சுவை வராது என்பதை ஆரம்ப படங்களிலே ஒதுக்கிவிட்டார். அதன் பின்பு வந்த கதாநாயகர்கள் பலரும் இந்த மூன்றில் கலவையால் உருவானவர்களே.

1990 களுக்குப் பிறகான சினிமாவில் வெற்றிபெற்ற பெரும்பான்மை படங்கள் கோபக்கார இளைஞனின் கதைகளே. ஆனால் இந்த கோபக்கார இளைஞன் முந்தைய காலகட்டத்தைப்போல தர்மத்தின் காவலன் அல்ல. மாறாக இவனே ஒரு ரவுடியாகவோ , போக்கரியாவோ , கடத்தல்காரனாகவோ இருக்கக் கூடியவன். ஆனால் அவனது நோக்கம் நியாயத்தை நிலை நாட்ட வேண்டும் என்பதாகும்.

மணிரத்னம் இயக்கிய 'நாயகன்' படத்தை இதற்கான தொடக்கம் என்று சொல்லலாம் . நாயகனின் வெற்றிக்குப் பிறகு நிழல் உலகைச் சேர்ந்தவர்கள் தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரங்களாக உருவாகத்தொடங்கினர். சுரேஷ் கிருஷ்ணா இயக்கி கமல்ஹாசன் நடித்த 'சத்யா' திரைப்படம் கோபக்கார இளைஞனைப் பற்றிய மிக யதார்த்தமான படமாகும். கடந்த பத்தாண்டுகளில் வெளியான படங்களில் அந்நியன் இந்த வகை திரைப்படங்களில் தனித்து குறிப்பிட வேண்டியது. இப்படம் சராசரியான இளைஞன் ஒருவன் சமூக அவலங்களால் எவ்விதமான மனப்பிறழ்விற்கு உள்ளாகிறான் என்பதையும், ஒடுக்கப்பட்ட உணர்வுகள் பீறிட்டு கிளம்பும் போது அவன் தரும் தண்டனைகள் எப்படியிருக்கின்றன என்பதையும் மிக இயல்பாக வெளிப்படுத்தியிருக்கின்றது. இதை போன்று இளைஞனின் கோபத்தை மையமாகக் கொண்டதே விக்ரமின் சாமி , தூள் , தில் போன்ற படங்களும் .

விஜய்யின் பெரும்பான்மை திரைப்படங்களும் கோபக்கார இளைஞனின் வடிவங்களே. ஆனால் அவை சமூகக் கோபங்கள் அல்ல. தன்னை நம்பிய ஒருவருக்காகப் போராடும் இளைஞனின் சாகசத்தை முன்வைப்பவை. இதே பாதையில் தான் சிம்பு , சூர்யா , ஆர்யா , விஷால் யாவரும் பயணம் செய்கின்றார்கள். ஆனால் 1980 களில் இருந்தது போன்று இன்றுள்ள கோபக்கார இளைஞனின் சமூகக் கோபமில்லை. மாறாக அடிதடியையும் வன்முறையையும் தானே கையில் எடுத்துக் கொண்டு தனி நபர் சாகசங்களை நோக்கிய சூப்பர்மேன் பிம்பத்தை உருவாக்குவதே நோக்கமாக உள்ளது.

Courtesy :த சன்டே இந்தியன் வார இதழ்

--
தியாகு

-
மாறுதல் என்ற வார்த்தையை தவிர அனைத்தும்
மாற்றத்துக்கு உட்பட்டவை -மார்க்ஸ்

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post