தோழர் பன்னீர் செல்வமும் அவரது போரும்

தோழர் பன்னீர்செல்வம் -நன்றி திரு பிரபாகரன் (கட்டுரை ஆசிரியர்)

தோழர் பன்னீர்செல்வம் - கோவை மாநகர பெரியார் திராவிடர் கழகத்தின் துடிப்பான செயல் வீரர். சட்டக் கல்லூரி மாணவர். தமிழ்நாடு மாணவர் கழகத்தின் அமைப்பாளர்களில் ஒருவர்.

இரட்டைக் குவளை எனும் தீண்டாமைக்கு எதிராக களமிறங்கிய அவர், காமிரா பொருத்தப்பட்ட செல் பேசியுடன் கிராமம் கிராமமாகப் புறப்பட்டார். 143 கிராமங் களில் தேனீர்க் கடைகளில் இரட்டைக் குவளை முறை நடைமுறைப்படுத்தப் படுவதை கடும் ஆபத்து களுக்கிடையே ரகசியமாகப் படம் பிடித்தார். அந்தப் படங் களில் சிலவற்றை 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஆங்கில நாளேடு (அக்.4, 2007) முதல் பக்கத் திலேயே வெளியிட்டது. சட்டக் கல்லூரியில் படிக்கும் மாணவர் பன்னீர்செல்வம், செல்பேசி காமிராவைப் பயன்படுத்தி, தீண்டாமையை நிலை நிறுத்தும் இரட்டைக் குவளை முறையை வெளிச்சத்துக்குக் கொண்டு வருகிறார் என்ற தலைப்பில் செய்தி வெளியிட் டுள்ளது. பன்னிரண்டாம் வகுப்பு மாணவனாக இருந்த போதே பெரியார் திராவிடர் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்ட பன்னீர்செல்வம், கழகப் போராட்டங்களில் முன்னிலையில் நிற்பவர். 27 சதவீத இடஒதுக்கீட்டுக்கு எதிராக உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த செய்தியை கேட்டவுடன், அடுத்த சில மணி நேரங்களிலே, தோழர்களுடன் போராட்டக் களத்தில் இறங்கினார். நீதிபதிகள் உருவத்தை பாடையில் படுக்க வைத்து தோழர்களுடன் பாடையைத் தூக்கிக் கொண்டு - நீதிபதிகளுக்கு எதிராக முழக்கமிட்டு, கோவை நகரத்துக்குள் 5 கிலோ மீட்டர் தூரம் வலம் வந்த காட்சியை நகரமே அதிர்ச்சியுடன் பார்த்தது. அதற்குப் பிறகுதான் காவல்துறை அவரை கைது செய்தது. 'என்.டி.டி.வி.' இக்காட்சியைப் படம் பிடித்து உலகம் முழுதும் ஒளிபரப்பியது.
தனியார் பொறியியல் கல்லூரிகளில் தாழ்த்தப்பட் டோர், பிற்படுத்தப்பட்டோர் இடஒதுக்கீடுகளை, உச்சநீதி மன்றம் முழுமையாக ரத்து செய்த அறிவிப்பு வந்தவுடன் - அதே போல், சேலம் ரயில்வே கோட்டம் தடைப் படுத்தப்பட்டது என்ற அறிவிப்பு வந்தவுடன், தன்னைத் தீயிட்டு எரித்து, எதிர்ப்பைக் காட்ட பெட்ரோல் டின்னுடன் கோவை பேருந்து நிலையத்துக்கு வந்த போது காவல் துறையினரால் மடக்கிக் கைது செய்யப் பட்டார். மூட நம்பிக்கை ஒழிப் பிலும் முன்னணியில் நிற்கக் கூடியவர். கழகம் நடத்தும் மூட நம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் - முதுகில் அலகு குத்திக் கொண்டு, கடவுள் மறுப்புடன் கார் இழுத்து வருவார். பிரிக்கால் தொழிற்சாலையில், தொழிலாளர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு எதிராக, 5000 தோழர்களைத் திரட்டிப் போராடியவர். அவர்தான் இப்போது தமிழ்நாடு காவல்துறைக்கு அறைகூவல் விடுத்துள்ளார்.

"இரட்டைக் குவளை முறை எங்கே இருக்கிறது? ஆதாரம் காட்ட முடியுமா?" என்று கேட்ட காவல்துறைக்கு, இதோ ஆதாரங்கள் என்று பதிலளித்துள்ளார். படங்களை வெளியிட்ட 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு - அந்த செய்தியில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளது."
'செல் கேமிரா'க்கள் இளைஞர்களின் நவீன நாகரீகத்துக்கான அடையாளங்கள் மட்டுமல்ல. சில நேரங்களில் சமூக சீர்கேடுகளுக்கு எதிரான ஆயுதமாகவும் பயன்படுகிறது. தகவல் தொழில்நுட்பப் பிரிவில் படிக்கும் மாணவர்கள் இந்த காமிராக்களைப் பயன்படுத்தி, குறும்படம் தயாரிக்கிறார்கள் என்றால், என்.பன்னீர் செல்வம், கிராமங்களில் நிலவும், தீண்டாமைக்கு எதிராக, இந்த 'செல் கேமிராவை'ப் பயன்படுத்தியிருக்கிறார்

சட்டக் கல்லூரியில் இரண்டாவது ஆண்டு படிக்கும் பன்னீர்செல்வம், கடந்த 3 மாதங்களில் தமிழ்நாடு முழுதும் 300 கிராமங்களில் வலம் வந்து, தலித் மக்களுக்கு எதிரான பல்வேறு வடிவங்களிலான தீண்டாமைகளை, தனது கையடக்க கேமிராவுக்குள் பதிவு செய்துள்ளார். சாதி இந்துக்கள் கண்ணெதிரே, தலித் மக்கள் செருப்பு போட்டு நடக்கக் கூடாது. சைக்கிளில் போகக் கூடாது. பல கிராமங்களில் இவர்கள் முடி வெட்டிக் கொள்வதற்கு, வெகுதூரம் போக வேண்டியிருக்கிறது. உள்ளூர் முடிதிருத்தும் கடைகளில் அவர்களுக்கு முடிவெட்டப்படுவதில்லை. இவர்களுக்கு தனியாக சுடுகாடுகள், தேனீர்க்கடைகளில் தனிக் குவளைகள் என்று பட்டியலிடுகிறார் பன்னீர்செல்வம். செல்பேசியில் பேசிக் கொண்டிருப்பது போல் நடித்து, இந்தத் தீண்டாமைகளை அவர் படம் பிடித்துள்ளார். "எனக்குத் தெரியும், இது மிக ஆபத்தான வேலை. என்னைக் கண்டுபிடித்துவிட்டால், சாதி வெறியர்கள் என்னை அடித்தே கொன்று விடுவார்கள். இந்த ஆபத்துகள் எனக்குத் தெரியும். ஆனாலும், தீண்டாமை ஒழிப்பில் எனக்குள் இருந்த ஆவேசமும், உறுதியும், என்னை இதில் ஈடுபட வைத்தது. வழக்கு தொடர வேண்டுமானால், உறுதியான ஆதாரங்கள் வேண்டும் என்று காவல்துறையினர் கேட்கிறார்கள். இதோ ஆதாரங்களை, எனது காமிராவுக்குள் திரட்டிக்கொண்டு வந்திருக்கிறேன்" என்கிறார். கே320 வகையிலான 'சோனி எரிக்கன்' கோமிராவை அவர் பயன்படுத்தியுள்ளார். படங்கள் எடுத்து முடித்தவுடன், அருகிலுள்ள கணினி மய்யங்களுக்குச் சென்று அந்தப் படங்களை கணினிக்கு மாற்றி, குறுந்தகட்டில் பதிவு செய்துள்ளார். அண்மையில் கோவை மதுக்கரை அருகேயுள்ள திருமலையம்பாளையம் பகுதியிலுள்ள அஞ்சல் நிலையத்துக்குள் தலித் மக்கள், அனுமதிக்கப்படாததை இவர் அம்பலப்படுத்தியதைத் தொடர்ந்து, அந்தப் பெண் அஞ்சலக அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார். தொண்டா முத்தூர் ஒன்றியத்தில் வெள்ளிமலைப் பட்டினம், ஜகீர்நாயக்கன்பாளையம் ஆகிய ஊர்களில், தேனீர்க் கடைகளில் இரட்டை தம்ளர் முறை இருப்பதை அவர் படம் பிடித்தார், பிறகுதான் காவல்துறையே ஒப்புக் கொண்டு, 11 வயது தலித் சிறுவன் தந்த புகாரின் அடிப்படையில் காவல்துறை வழக்கு பதிவு செய்தது" என்று 'இந்தியன் எக்ஸ்பிரஸ்' ஏடு எழுதியுள்ளது.

செய்தி எதிரொலி

'இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளேடு கழகத் தோழர் பன்னீர்செல்வம் எடுத்த படங்களையும், செய்தியையும் வெளியிட் டதைத் தொடர்ந்து, அந்தந்த ஊர் களுக்கு விரைந்து காவல்துறை நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது என்ற செய்திகள் கிடைத்துள்ளன. தொண்டாமுத்தூர் ஒன்றியத்தில் உள்ள கரடிமலை, நரசிங்கபுரம், வெள்ளிடை மலை ஆகிய ஊர்களில், இரட்டைக் குவளை இருந்த 15 தேனீர்க் கடைகளை காவல்துறையினர் மூடி விட்டனர். வெள்ளரிக்கம் பாளையம் கிராமத்தில், இரட்டை தம்ளர் வைத்திருந்த நான்கு தேனீர்க் கடை உரிமையாளர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட் டுள்ளதோடு, 15 பேர் மீது விசாரணை நடக்கிறது. இரண்டு பேர் தலைமறை வாகி விட்டனர். இதே ஒன்றியத்தில் - தலித் மக்களுக்கு முடிவெட்ட மறுக்கும் தோளம்பாளையம் கிராமத்திலுள்ள முடிவெட்டும் நிலையம் முன், போராட்டம் நடத்த கழகம் தயாராகி வருகிறது. பெரியார் திராவிடர் கழகம் தொடங்கி வைத்த தீண்டாமை எதிர்ப்புப் போராட்டம் வெற்றிகளை குவித்து வருகிறது.

தீண்டாமைக்கு எதிரான பெரியார் திராவிடர் கழகத்தின் சாதி எதிர்ப்புப் போராட்டத்தை பல நூறு பன்னீர் செல்வங்கள் உறுதியாக முன்னெடுப் பார்கள். இவர்கள் பெரியாரின் லட்சியப் போராளிகள்.

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post