மருத்துவ கொலைகள்

-நன்றி தோழர் அக்னி இறகு
கடந்த வாரம் மருந்து வாங்க சென்றிருந்தேன். மருந்தின் விலையை கேட்டு தலை சுற்றிப்போனேன். காரணம் 1 மாதத்தில் மருந்தின் விலை 25% ஏறி இருந்தது. காரணம் என்ன என்று விசாரித்தால் மருந்து கடைக்காரர் சராசரியாக எல்லா மருந்துகளும் இந்த அளவுக்கு விலை ஏறியுள்ளது. இன்னமும் ஏறலாம் என்றார். காரணம் உற்பத்தியாளர்களே விலையை ஏற்றியதுதான். அவர்களுக்கு ஏன் இந்த விலையை ஏற்றத்தோன்றியது? அதுவும் பல ஆண்டுகளாக விற்று வரும் ஒரு மருந்தின் விலையை?

>உற்பத்தி செலவு ஏறியதா?
>போக்குவரத்து செலவு ஏறியதா?
>வரிகள் உயர்ந்தனவா?
>மொத்த விலைவாசி ஏறியதா?
>தேவைப்பாடு அதிகரித்ததா?

உற்பத்தி செலவு ஊதிய உயர்வுகாரணமாகவும், மூலப்பொருள்களின் விலை உயர்வு காரணமாகவும் ஏறும். ஆனால் மொத்த விலைவாசி உயர்வே 6 மாதமாக 6%தான் உயர்ந்தது என்பது மத்திய அரசு பஞ்சப்படியை 6% உயர்த்தியதிலிருந்தே தெரிகிறது. ஒரு மாதத்தில் அப்படி விலையேறி இருந்தாலும் ஒட்டுமொத்தமாக உற்பத்தி + போக்குவரத்து செலவுகள் 10% கீழாகவே இருக்கவேண்டும். வரிகள் உயர்ந்துவிடவில்லை. தேவைப்பாடு நிலையாக அதே அளவுதான் உள்ளது.

பின்னர் ஏன் விலையேற்றம்? இது உற்பத்தியாளர்களே தன்னிச்சையாக லாப நோக்கில் ஏற்றிய விலைதான் என்பது நிதர்சனமாக தெரிகின்றது. இதற்கு அவர்கள் சொல்லும் காரணம் அவர்கள் ஆராய்ச்சிக்காக அதிக அளவு செலவு செய்தனராம். சரி ஆராய்சிக்காக அதிக அளவு செலவு செய்திருந்தால் புதிய மருந்துகள் அல்லது உற்பத்தியை துவங்கி 5 ஆண்டுகளுக்குள்ளாக உள்ள மருந்துகள்தான் விலையேறி இருக்க வேண்டும். ஆனால் 10-15 ஆண்டுகளாக விற்பனை செய்து கொண்டிருக்கும் மருந்துகள் ஏன் ஏற வேண்டும்? இன்னுமா அவர்கள் Break Even Point ஐயே எட்டவில்லை? ஆனால் இவர்களின் பங்குகள் பங்கு சந்தையில் குவிக்கும் லாபம் மிக அதிகம்.

சமீபத்தில் மருந்துகளின் மீதான கட்டுப்பாட்டினை மத்திய அரசு மருந்து சட்டத்திருத்தம் மற்றும் காப்புரிமை சட்ட திருத்தம் மூலமாக விலக்கிக் கொண்டது. இதன் விளைவாக ரேபிஸ் மருந்துக்கான விலை அடுத்த மாதமே இரண்டு மடங்காகிவிட்டது. அதாவது 400 ரூபாயிலிருந்து 800 ரூபாயாக உயர்ந்துவிட்டது. இதன் காரணமாக அரசு மருத்துவமனைகளில் இந்த மருந்து கிடைப்பதில்லை. ஏழைகள் இது போன்ற மருந்துகளை காசு கொடுத்து வாங்கும் நிலையி இல்லை. நாட்டில் 20 கோடிக்கும் அதிகமானோர் மாத ஊதியமாக 600 ரூபாய் கூட பெறுவதில்லை என்பது அரசின் அறிக்கை. அப்படிப்பட்டவர்கள் வெறி நாய்க்கடிக்கு ஆளானால் அவர்களின் நிலை? மருந்து வாங்க பணமில்லாததால் மரணிக்க வேண்டியதுதான்.

கொலை என்றால் என்ன? உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுவது அல்லது பறிக்கப்படுவது.

இங்கு நோயாளி இருக்கிறார்,
மருந்து இருக்கிறது,
வைத்தியம் பார்க்கும் மருத்துவர் இருக்கிறார்,
மருத்துவமனைகள் இருக்கிறது.

ஆனால் நோயாளியிடம் மருந்து வாங்க பணமில்லை. அதனால் உயிரிழப்பு ஏற்படுகிறது. இங்கு அந்த நோயாளியின் உயிர் வாழும் உரிமை மறுக்கப்படுகிறது. இதை கொலை என்று சொல்லாமல் என்ன சொல்ல? இன்னுமொரு கொடுமை என்னவென்றால் இவ்வாறு இறப்பவர்களின் இறப்பு சான்றிதழில் நாய்க்கடியால் இறந்துபோனார் என்று சொல்லப்படுவதால் இந்தவகை மருத்துவ கொலைகள் வெளியில் தெரிவதில்லை. மாறாக மருந்து வாங்க பணமில்லாததால் மரணமடைந்தார் என்று சான்றளிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டால் இதுபோன்று நாடு முழுவது நடக்கும் மருத்துவ கொலைகளின் பட்டியல் வெளிவரும். அதில் அதிர்ச்சிகள் நிறைந்திருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

என்ன கொடுமை சார் இது?

--
வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/

நா.பிரதாப் குமார்.

92 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post