ஒரு ஈழத்தின் எழுத்தாளர் மற்றும் போராளியான சோபாசக்தியை மிக மோசமான முறையில்
தமிழ் நாட்டின் புரட்சிகர சக்திகள் என அழைத்து கொண்டு இருக்கிறார்கள்
திரு .சோபா சக்தியின் வியூ என்னவென்பதை இங்கு ஒரு வாசிப்புக்காக அளிக்கிறேன் -தியாகு
(தியாகு மொத்தமா போய் அயிக்கியம் ஆகிட்டாருன்னு நினைச்சுக்காதீங்க :))
மே 2007, புதுவிசை இதழில் வெளியான நேர்காணல்.
உரையாடல்: நீலகண்டன், சிராஜுதீன்
Rogue படைப்பாளி எனத் தமிழ்ச் சூழலில் உங்களைப் பற்றிய விம்பம் குறித்து?
அப்படியா சொல்கிறார்கள்? சமூக ஒழுக்கங்கள் எனச் சொல்லப்படுபவற்றை நான் கடை பிடிக்காததினாலும் சொந்த வாழ்விலும் எழுத்திலும் காதல், சேர்ந்து வாழ்வது, குடும்பம், குழந்தைகள் போன்றவற்றை நான் மறுத்து வருவதாலும் வேலை, தொழில் போன்றவற்றில் அக்கறையற்றிருப்பதாலும் எனது போதைப் பழக்கத்தாலும் என் குறித்து இப்படியொரு விம்பம் ஏற்பட்டிருக்கலாம்.ஆனாலும் கட்டாய உழைப்பை வலியுறுத்தும், மனிதர்களைத் தொடர் கண்காணிப்பிற்குள் வைத்திருக்கும் அய்ரோப்பிய நவீன முதலாளிய சமூக அமைப்பில் முழுமையான Rogue மனநிலையில் வாழ்வது முடியாத காரியமாய்த்தானிருக்கிறது.
வீரத்தையும் தியாகத்தையும் தனிமனித ஒழுக்கத்தையும் ஆண்மையையும் தேசபக்தியையும் மொழிப்பற்றையும் உழைப்பையும் கொண்டாடும் நமது தமிழ்ச் சூழலிலோ இயக்கப் போராளியாகவோ கட்சி ஊழியனாகவோ இருப்பதைவிட Rogue மன நிலையில் வாழ்வது சவாலானது. வன்முறையும் ஒழுங்குகளும் நிறைந்த இந்தச் சமூக அமைப்பில் பித்துநிலை அல்லது Rogue மனநிலையைத் தக்க வைத்திருப்பதால் மட்டும்தான் ஒருவர் தன்னைச் சுதந்திர உயிரியாகத் தன்னளவில் உணர்ந்துகொள்ள முடியும் என்றே நான் கருதுகிறேன்.
போர்ச்சூழலும் நாடோடித்தன்மையும் கொண்ட உங்களது வாழ்வியற் பின்னணியிலிருந்து கொண்டு உங்களால் எப்படி இவ்வளவு நக்கலும் நையாண்டியுமாகக் கதை சொல்ல முடிகிறது?
நான் போரைப் பற்றியும் புகலிடத்தைப் பற்றியும் இயக்கத்தைப் பற்றியும் குடும்பத்தைப் பற்றியும் தேசியவாதத்தைப் பற்றியும் சாதியைப் பற்றியும் காதலைப் பற்றியும்தானே கதைகளைச் சொல்கிறேன். இவைகள் அனைத்தும் கேலிக்கும் கிண்டலுக்கும் உரியவைகள்தானே! இந்த வலிமை பொருந்திய சாமான்களை எதிர்கொள்ள நையாண்டியைத் தவிர என்னிடம் வேறெந்த ஆயுதங்களும் தற்போது கைவசமில்லை.
இன்றைக்கு வரைக்கும் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாகயிருந்தவர்டி எனத் தமிழ்த் தேசியர் களால் விதந்தோதப்படும் இந்திராகாந்தியின் மரணம் உங்கள் கொரில்லாவில் 'ஒரு மாடு செத்துப்போனது மாதிரியான கவலைதான் ஈழத்திலிருந்தது' என்பது எங்களுக்கு ஆச்சரியத்தை அளிக்கின்றது?
நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள். கொரில்லா நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ள என்னுடைய கிராமம் ஈழத்தின் குறுக்குவெட்டுத் தோற்றமல்ல. எனது கிராமத்தில் மக்களுக்கு 1984களில் அன்றாட அரிசியையும் மீனையும் பெற்றுக்கொள்வதுதான் ஒரே அரசியல். அரசியல் கட்சிகளின் கிளைகளோ கொடிகளோ உறுப்பினர்களோ எங்கள் கிராமத்தில் கிடையாது. தீப்பெட்டியென்றால் யானை மார்க் தீப்பெட்டி, சவர்க்காரமென்றால் சன்லைட் சவர்க்காரம், சைக்கிளென்றால் ரலி சைக்கிள் வாக்குப் போடுவதென்றால் உதய சூரியனுக்குப் போடுவது என்பவைதான் கிராம மக்களின் வாழ்க்கையாயிருந்தது.அவர்களின் ஏழ்மையும் அறியா மையும் அவர்களைத் தமக்கான அரசியல் குறித்துச் சிந்திக்கவிடவில்லை. அவர்களில் பலர் 'மகாத்மா' காந்தியின் மகள்தான் இந்திராகாந்தி என்றுகூட நம்பிக் கொண்டிருந்தார்கள். அவர்களிடம்தான் இந்திராவின் மரணம் ஒரு மாடு செத்தது போன்ற சலனத்தை ஏற்படுத்தியது. ஆனால் இந்திராகாந்தியின் சாவு யாழ்ப்பாணத்து மேட்டுக்குடிகளிடையேயும் தமிழ்த் தேசிய விடுதலை இயக்கங்களின் இளைஞர்களிடம் பெரும் பதற்றத்தை உருவாக்கியிருந்தது. அப்போது எங்களின் கைகளில் சீக்கியர்கள் யாராவது சிக்கியிருந்தால் யாழ்ப்பாணத்தில் அவர்களை உயிருடன் சமாதியாக்கியிருப்போம். அவ்வளவுக்கு எங்களுக்கு இந்திரா கிறுக்குப் பிடித்திருந்தது. யாழ்ப்பாணம் முழுவதும் இந்திராகாந்தியின் சாவையொட்டிக் கண்ணீர் அஞ்சலிகளும் வீரவணக்கக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.அப்போது ஆயிரக்கணக்கான ஈழப்போராளிகள் தமிழகத்திலும் உத்தரப்பிரதேசத்திலும் இந்திய இராணுவத்தினரால் பயிற்றுவிக்கப்பட்டுக் கொண்டிருந்தார்கள். '1985 பொங்கலுக்குத் தமிழீழம்' என்று கட்டிவிடப்பட்டிருந்த கதையாடலின் மீது பெருத்த இடியாக இந்திராவின் சாவு இறங்கியது.
1977ல் இலங்கையில் ஜே.ஆர்.ஜெயவர்த்தனா ஆட்சியைக் கைப்பற்றியதுடன் அவரின் வெளிப்படையான அமெரிக்கவுடனும் சீனாவுடனுமான உறவுகள், சுதந்திர வர்த்தக வலையம் என்ற பெயரில் மேற்கு நாடுகளின் தொழிலாதிக்கம் இலங்கையில் நிலவ வழிசெய்தது, சிறிமாவோ பண்டாரநாயக்க அதுவரை கடைப்பிடித்து வந்த இந்தியாவுக்கு அடிபணியும் கொள்கையை ஜே.ஆர்.ஜெயவர்த்தனா கைவிட்டது போன்ற காரணிகளால் இந்திய ஆளும் வர்க்கம் இலங்கையில் அரசியல் உறுதிப்பாடற்ற நிலைமைகளைத் தோற்றுவித்து இலங்கை அரசைத் தனது பூரண கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரவே ஈழப்போராளிகளைக் கருவிகளாகப் பயன்படுத்திக்கொண்டிருந்தது. போதிய அளவுக்கு உள்நாட்டு யுத்தம் மூண்டதும் அதைச் சாக்காக வைத்து இந்தியா இலங்கையின் இறைமையில் நேரடியாகவே தலையிட்டது. 1985ல் திம்புவில் நடந்த பேச்சு வார்த்தைகளும் 1987ல் செய்யப்பட்ட இலங்கை - இந்திய ஒப்பந்தமும் அதைத் தொடர்ந்த இந்திய அமைதிப்படையின் ஆக்கிரமிப்பும் முற்று முழுதாக இந்திய ஆளும் வர்க்கங்களின் பிராந்திய நலன் என்ற நிலையிலிருந்தே மேற்கொள்ளப்பட்டன. அதனால் தான் இலங்கை - இந்திய ஒப்பந்தம் சிங்கள மக்களாலும் எதிர்க்கப்பட்டது, தமிழர்களாலும் எதிர்க்கப்பட்டது. ஆனால் தொண்ணூறுகளில் சோவியத் யூனியனின் உடைவால் உலக அரசியலில் அமெரிக்கா தனிப் பெரும் வல்லரசாக உருவாகியது, இலங்கையில் மேற்கு நாடுகளின் மூலதனமும் மேற்கு நாடுகளில் இலங்கை அகதிகளும் குவிந்து கிடப்பது போன்ற காரணிகளால் இந்தியாவால் இப்போது நேரடியாக இலங்கை அரசிய லில் ஆதிக்கம் செலுத்த முடியவில்லை. இலங்கை இப்போது மேற்கு நாடுகளினதும் ஜப்பானினதும் இந்தியாவினதும் வலிமைகளைப் பரிசோதிக்கும் களமாக மாற்றப்பட்டுள்ளது. உண்மையில் இலங்கை தனது அனைத்து அரசியல் பொருளியல் இறைமைகளையும் இழந்து முற்றுமுழுதாக மறுகாலனியாக்கப் பட்டுள்ளது. இலங்கை அரசின் கதியே இதுவென்றால் விடுதலைப்புலிகளின் கதியை யோசித்துப் பாருங்கள்! இல்லாத இறைமையை அவர்கள் எங்கே போய் இழப்பது. இலங்கை அரசுக்கும் புலிகளுக்குமான அமைதிப் பேச்சுவார்த்தையை மட்டுமல்ல யுத்தத்தையும் தீர்மானிக்கும் நெறிப்படுத்தும் தீர்மானகரமான சக்திகளாக இந்த அந்நிய வல்லாதிக்கவாதிகளே இருக்கிறார்கள். ஒருகாலத்தில் இலங்கையின் இறைமை வெளிகளில் இந்தியா மட்டுமே நுழைந்தது. ஆனால் இப்போது நடப்பது கூட்டுக் கொள்ளை. ஆனால் இன்னமும் இந்திரா காந்தியை மட்டுமல்ல எம்.ஜி.ஆரையும் ஈழத்தமிழர்களின் காவல் தெய்வங்களாகக் கொண்டாடும் தமிழ்த் தேசியர்கள் இருக்கிறார்கள் என்பது மட்டுமல்ல அவர்கள் ஈழத்து அரசியலில் செல்வாக்குப் பெற்றவர்களாகவுமிருக்கிறார்கள். விடுதலைப் புலிகளின் நிலைப்பாடே அப்படித்தானேயிருக்கிறது!
உரிமைகளுக்காகப் போராடும் ஈழத் தமிழர்களுக்கு சர்வதேசத்தின் புரட்சிகரத் தோழமைகள் முக்கியமானவை. குறிப்பாக இந்தியாவை எடுத்துக்கொண்டால் எங்களது தோழமை கொம்யூனிஸ்டுகளுடனும் நக்ஸல்பாரிகளுடனும் தானிருக்க வேண்டும். ஆனால் ஈழப் போராட்டத்தை தலைமை தாங்கியவர்களின் தாங்குகிறவர்களின் குறுந்தேசியவாதமும் இஸ்லாமிய எதிர்ப்பும் கலாசார அடிப்படைவாதமும் அதிவலதுசாரித்தனமும் ஈழப் போராட் டத்தின் ஆதரவு சக்திகளாக வைகோவையும் நெடுமாறனையும் ராமதாஸையும் பால்தாக்கரேயையும் தான் திரட்டி வைத்திருக்கிறது. 'குருட்டுப் பூனை செத்த எலியைத்தான் பிடிக்கும்' என்பார்கள்.
உலகமயச் சூழலில் திரும்பத் திரும்ப இயக்கமாக வேண்டிய தேவைகள் இந்தியா இலங்கை போன்ற மூன்றாம் உலகநாடுகளின் தேவையாயுள்ளபோது நீங்கள் தொடர்ந்து இயக்கங்களைத் தாக்கியும் விமர்சித்தும் வருகிறீர்களே?
நான் ஒருபோதும் இயக்கங்களின் அமைப்புகளின் தேவையை மறுத்துப் பேசியதில்லை. எதிரி அமைப்பாகத்தான் இருக்கின்றான். அவன் அந்த அமைப்பைக் கட்டிக் காப்பதற்கு பொலிஸ், ஆயுதப்படைகள், நீதிமன்றம், சிறைச்சாலை என்று உபஅமைப்புகளையும் தன்னைக் காப்பாற்றும் சட்ட ஒழுங்குகளையும் தன்னை நியாயப்படுத்தும் தத்துவங்களையும் கட்டிவைத்திருக்கின்றான். பண்பாட்டுக்கூறுகளில் தன் நலனைப் பிரதிபலிக்கும் கருத்தாக்கங்களை மறைத்தும் வைத்திருக்கின்றான். இத்தனை தந்திரமாகவும் உறுதியாகவும் நிறுவப்பட்டிருக்கும் அமைப்புக்கு எதிராகப் போராடுவதெனில் எதிரி உருவாக்கி வைத்திருக்கும் நிறுவனங்களைச் சிதைப்பதெனில் நாம் நிச்சயம் அமைப்பாக வேண்டும். புரட்சிகரக் கட்சியாக வேண்டும்.
ஆனால் வரலாறு முழுவதும் நமது புரட்சிகரக்கட்சிகளின் பண்புகளை மீள்மதிப்பீடு செய்து பாருங்கள். அவர்களின் இலட்சியங்கள் முதலாளியத்திற்கு அதிகாரத்திற்கு எதிராகவிருக்கும் வேளையில் அவர்களின் அமைப்பு கட்சி வடிவங்கள் முதலாளித்துவக் கட்சிகளின் மாதிரியிலேயே வடிவமைக்கப்பட்டிருக்கின்றன. சனநாயகத்துவ மத்தியகுழு, புரட்சிகர நிறைவேற்றுக்குழு என்ற ஏதோவொரு குழுதான் அமைப்பின் முழு வேலைத்திட்டத்தையும் நிர்ணயிக்கிறது. பரந்துபட்ட மக்கள்திரளின் வித்தியாசம் வித்தியாசமான பிரச்சினைகளை வர்க்கமென்றோ தேசிய இனமென்றோ இதுவரையான நமது அமைப்புக்கள் சாராம்சப்படுத்தி வந்திருக்கின்றன. வித்தியாசங்களைச் சாராம்சப்படுத்துவது, அதிகாரத்தை ஓரிடத்தில் குவிப்பது போன்ற பண்புகளின்றி அதிகாரம் பரவலாக்கப்பட்ட புரட்சிகர அமைப்புக்களைத்தான் நாம் கண்டடைய வேண்டும். அமைப்புகள் கட்சிகள் குறித்து விமர்சனங்களை அய்ரோப்பியச் சூழலிலும் சரி தமிழகச் சூழலிலும் சரி முன்வைத்த நவீனத்துக்குப் பிந்திய முக்கிய சிந்தனையாளர்கள் இடதுசாரிகளாகவே இருந்தார்கள், இருக்கிறார்கள். உறுதியான ஏகாதிபத்திய எதிர்ப்பாளர்களாகவும் தீவிர சமூக அக்கறையாளர்களாகவுமே இருந்தார்கள். ஆனால் இங்கே என்ன நடக்கிறதென்றால் என்.ஜி.ஓ க்களிடமும் வலதுசாரி அறிவுத்துறைக் கட்டமைப்புகளிலும் தஞ்சம் புகுந்திருக்கும் அறிவுத்துறையினர், அமைப்புகள் - கட்சிகள் குறித்த நவீனத்துக்குப் பிந்திய சிந்தனைகளை எளிமைப்படுத்தித் தமது குற்ற உணர்ச்சிகளைத் தணிப்பதற்கான ஒளடதமாகத் தடவிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விவாதங்களுக்கு அப்பால் நமது சூழலைப் பொறுத்தவரை ஒருவகையான நக்ஸல்பாரி மனநிலை அறிவுஜீவிகளுக்குத் தேவை என்று சொல்லும் அ.மார்க்சுடன் நான் முழுமையாக உடன்படுகிறேன்.
உலகமயமாக்கலை இந்தியாவும் இலங்கையும் முழுமையாக ஏற்றுக்கொண்டன. இந்தியாவில் பல்வேறு இயக்கங்களும் உலகமயமாக்கலை எதிர்க்கின்றன. இலங்கையில் LTTE யின் நிலை என்ன?
2002லேயே வன்னியில் புலிகள் கூட்டிய பத்திரிகையாளர் மாநாட்டில் விடுதலைப்புலிகளின் தலைவர் தமது இயக்கத்தின் பொருளாதாரக்கொள்கை திறந்த பொருளாதரக் கொள்கைதானென்று பகிரங்கமாகவே பிரகடனப்படுத்தினார். இலங்கையில் மின்சாரம், நீர் வழங்கல் போன்ற பொதுச்சேவைகள்கூட அந்நிய பன்னாட்டு நிறுவனங்களின் கைகளிலே வீழ்ந்து கொண்டிருக்கின்றன. இந்தியா 500 மில்லியன் அமெரிக்க டொலர்கள் முதலீட்டில் இலங்கையின் கிழக்குப் பகுதியிலுள்ள சம்பூரில் ஒரு அனல்மின் நிலையத்தை அமைக்கவிருக்கிறது. 'வொய்ஸ் ஒப் அமெரிக்கா' இன்னும் இலங்கையில் இயங்கிக் கொண்டி ருக்கிறது. இது குறித்தெல்லாம் புலிகள் எப்போதுமே வாய் திறந்ததில்லை. நவீன உலக அரசியல் வரலாற்றிலேயே விடுதலைப் புலிகளைப்போல ஏகாதிபத்திய அடிவருடிகளான ஒரு தேசிய 'விடுதலை' அமைப்பை நீங்கள் கண்டிருக்க முடியாது. அண்மையில் ஈராக்கிய அதிபர் சதாம் உசேன் அமெரிக்காவால் தூக்கிலிடப்பட்டுக் கொலைசெய்யப்பட்ட நிகழ்வை எடுத்துக்கொள்ளுங்கள், இதுவரையில் புலிகள் சதாமின் கொலைக்கு வாயளவிலான ஒரு கண்டனத்தைத் தன்னும் தெரிவித்தார்களில்லை. புலிகள் முதலாளியத்தினதும் உலகமயமாக்கலின் ஆதரவாளர்கள் மட்டுமல்ல விசுவாசமான பாதுகாவலர்களும் கூட. வாரத்திற்கு ஒருமுறை வெளிநாட்டுத் தூதுவர்களையும் இராசதந்திரிகளையும் சந்திக்கும் விடுதலைப் புலிகளின் தலைவர், 1987 சுதுமலைப் பொதுக்கூட்டத்திற்குப் பின்பு கடந்த இருபது வருடங்களாகப் பொதுமக்களைச் சந்திக்கவேயில்லை என்பதையும் குறித்துக் கொள்ளுங்கள்.
சரி அங்குள்ள இடதுசாரிகளின் எதிர்ப்பு எப்படி உள்ளது?
சோஸலிச சமத்துவக் கட்சி, புதிய ஜனநாயகக் கட்சி போன்ற மிகச்சிறிய அமைப்புகள் உலகமயமாக்கலைக் கடுமையாக எதிர்த்து வருகின்றன. லங்கா சமசமாஜக் கட்சி, இலங்கைக் கொம்யூனிஸ்ட் கட்சி போன்ற பெரும் கட்சிகள் இடதுசாரிப் பாதையிலிருந்து இனவாதப் பாதைக்கு நகர்ந்து வெகுநாட்களாகின்றன.அவர்கள் அரசின் அமைச்சரவையில் இடம் பிடித்துக் கொண்டு உலகமயாக்கலுக்கு 'கொள்கை' விளக்கம் கொடுத்துக்கொண்டிருக்கிறார்கள். இன்று சிங்களக் கிராமப்புற மக்களிடமும் மாணவர்களிடமும் பெரும் செல்வாக்கைக் கொண்டிருக்கும் ஜேவிபி தனது கடந்த கால ஏகாதிபத்திய எதிர்ப்புப் பாரம்பரியத்தைக் கைவிட்டு வாக்குப் பொறுக்கிகளின் கூடாரமாகி விட்டது. புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளைப் பொறுத்தளவில் அங்கே எந்த இடதுசாரிக் கட்சிக்கும் தொழிற்சங்கங்களுக்கும் இயங்குவதற்கு அனுமதியில்லை. மக்களின் கருத்துரிமை, பேச்சுரிமை அரசியல் கூட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் நடத்தும் உரிமைகள் அனைத்துமே பாஸிசப் புலிகளால் மறுக்கப்பட்டுள்ளன. மக்களுக்குச் சுதந்திரமாக வாக்களிக்கும் உரிமைகூடக் கிடையாது. உங்களுக்கு ஒரு பாப்பாப்பட்டி கீரிப்பட்டிதான். ஆனால் எங்கள் தேசம் முழுவதுமே பாப்பாப்பட்டி கீரிப்பட்டியாய்க் கிடக்கிறது.
உலக மார்க்ஸியர்களால் ஓடுகாலிப் பட்டம் சூட்டப்பட்ட டிராட்ஸ்கியை நீங்கள் ஆதரிப்பது?
இப்படி எடுத்தவீச்சுக்கு ஓடுகாலி, கந்தலாண்டி, திரிபுவாதி, திருத்தல்வாதி, கலைப்புவாதி, காட்சிவாதி, துரோகி என்று பட்டங்கள் கட்டித்தானே நாசமாய்ப்போய் நடுத்தெருவில் நிற்கிறோம். இலங்கையின் முதலாவது இடதுசாரிக் கட்சியான லங்கா சமசமாஜக் கட்சியின் தலைவராகயிருந்த கொல்வின் ஆர்.டி. சில்வாவும் கட்சியின் பெரும்பான்மை உறுப்பினர்களும் ட்ராட்ஸ்கியவாதிகளே. 1939ல் கட்சி ஸ்டாலினின் தலைமையிலான மூன்றாவது அகிலத்தின் மீது நம்பிக்கையின்மைத் தீர்மானத்தை நிறைவேற்றியது. உலகம் முழுவதும் இடதுசாரிக் கட்சிகளிலிருந்து ட்ராட்ஸ்கிஸ்டுகள் வெளியேற்றப்பட்டுக் கொண்டிருந்தபோது இலங்கையின் முதலாவது இடதுசாரிக்கட்சி, கட்சியிலிருந்த ஸ்டாலினிஸ்டுகளை வெளியேற்றியது. ஆக இலங்கையைப் பொறுத்தளவில் ஓடுகாலிப்பட்டம் ஸ்டாலினிஸ்டுகளுக்கு என்பது வரலாற்றின் முரண்நகை.
மலையக மக்களின் பிரசாஉரிமையை சேனநாயக்க அரசு பறித்தபோது அதற்கெதிராக ல.ச.ச. கட்சி தீவிரமாகப் போராடியது. தனிச்சிங்களச் சட்டமசோதா விவாதத்தின்போது ட்ராட்ஸ்கிஸ்டுகளான என்.எம்.பெரேராவும் கொல்வின் ஆர்.டி.சில்வாவும் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகள் முக்கியமானவை, தீர்க்கதரிசனமானவை. "உங்களுக்கு அமைதியான அய்க்கியமான ஒரு இலங்கை வேண்டுமா அல்லது இரண்டாகத் துண்டாடப்பட்ட இரத்தப் பெருக்கெடுத்த ஏகாதிபத்தியப் பிசாசுகளால் விழுங்கப்படப்போகும் இரண்டு இலங்கைகள் வேண்டுமா? அதனால் இந்து சமுத்திரம் முழுவதும் ஏகாதிபத்தியப் பிசாசுகளுக்கு இரையாகும்", "இரண்டு மொழிகளென்றால் ஒருநாடு! ஒரு மொழியென்றால் இருநாடு!" என்றார் கொல்வின் ஆர்.டி. சில்வா. 1964ல் ல.ச.ச.கட்சி அரசோடு இணைந்துகொண்டதைத் தொடர்ந்து கட்சியிலிருந்து வெளியேறியவர்களால் 1968ல் தோழர். கீர்த்தி பாலசூரியாவை செயலாளராகக் கொண்டு புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் தோற்றுவிக்கப்பட்டது. கழகம் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் இலங்கைக்கான பிரிவாயிருந்தது. 1990களில் புரட்சிக் கொம்யூனிஸ்ட் கழகம் 'வடக்குக் கிழக்கிலிருந்து சிறிலங்கா இராணுவமே வெளியேறு! தமிழ் - முஸ்லீம் -சிங்களப் பாட்டாளிகளின் அய்க்கியம் ஓங்கட்டும்!!' என்பதையே தனது முதல் முழக்கமாய்க் கொண்டு இயங்கியது. நான் 1993லிருந்து 1997வரை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்காகப் பிரான்ஸில் வேலை செய்தேன். இங்கிருந்து வருகிறது என் ட்ரொட்ஸ்கியப் பாரம்பரியம்.
இப்பொழுது புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் சோஸலிச சமத்துவக் கட்சியாகப் பெயரையும் பண்பையும் மாற்றிக் கொண்டுவிட்டது. எனக்கும் கட்சியின் மீது ஆயிரெத்தெட்டு விமர்சனங்கள் உள்ளன. ஸ்டாலினிசமா? ட்ராட்ஸ்கிஸமா? என்று புகலிடப் பத்திரிகைகளில் முரட்டுத்தனமான விவாதங்களில் ஈடுபட்ட காலத்தையும் நான் கடந்து வந்துவிட்டேன். ஆனால் லியோன் ட்ரொட்ஸ்கி என்ற ஆளுமைமீது எனக்குள்ள ஈடுபாடு இன்னமும் அப்படியேதானுள்ளது. மார்க்ஸிய இயக்கத்திற்குள் காரல் மார்க்சுக்கு அடுத்தபடியாகத் தோன்றிய இலக்கிய ஆளுமை ட்ரொட்ஸ்கியே என்பார்கள். பிரஞ்சு எழுத்தாளர் ஆந்ரே பிரட்டனும் மெக்ஸிகோ ஓவியர் ரிவேராவும் இணைந்து 1938ல் வெளியிட்ட புகழ்பெற்ற அறிக்கையான 'சுதந்திரமான புரட்சிகரக் கலையை நோக்கி' என்ற அறிக்கைக்குப் பின்னணியிலிருந்தவர் ட்ராட்ஸ்கியே. கலை இலக்கியத்தின் சுதந்திரம் குறித்த அவரின் கருத்துக்களே எனக்கு இப்போதும் வழிகாட்டி.
ஈழத்தில் சாதியில்லை எனத் திரும்பத் திரும்ப பத்மநாபா அய்யர் சொல்வதிருக்கட்டும், எஸ். பொவும் சொல்கிறாரே?
ஈழத்தில் சாதியில்லை என்றால் பத்மநாபன் தன் பெயருக்குப் பின்னால் இன்னமும் எதுவித குற்றவுணர்வுமில்லாமல் போட்டிருக்கும் 'அய்யர்' பட்டத்தையும் இயல் விருதோடு சேர்த்து இவருக்கு ரொரன்டோ பல்கலைக்கழகமா கொடுத்தது? இந்த மாபாவி வெறும் சாதி அபிமானி மட்டுமல்ல அய்ரோப்பிய புலம்பெயர் இலக்கியச்சூழலில் ஆட்காட்டியாக, தலையாட்டியாகவும் இருந்து வருகிறார். 'மூன்றாவது மனிதன்' என்றொரு சிற்றிதழ் இலங்கையிலிருந்து வெளியிடப்படுவதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.அந்த இதழ் சனநாயத்தையும் கருத்துரிமையையும் முக்கிய கோரிக்கைகளாக முன்னிறுத்தித் தோழர்.எம்.பௌஸரால் நீண்ட காலங்களாகவே வெளியிடப்படுகிறது. கடந்த வருடம் இலண்டனில் நடந்த இலக்கியச் சந்திப்புக்காகத் தோழர்களால் பௌஸரும் அழைக்கப்பட்டிருந்தார். அப்போது இலக்கியச் சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவில் இடம் பெற்றிருந்த பத்மநாபன் பௌஸரின் வருகையைத் தடுத்து நிறுத்த முயன்றார். எனினும் மற்றைய சந்திப்பு ஏற்பாட்டுத் தோழர்கள் பௌஸரை அழைப்பதில் உறுதியாக நின்றார்கள். உடனே சந்திப்பு ஏற்பாட்டுக் குழுவிலிருந்து விலகிய இந்தத் துட்டப் பார்ப்பனர் பௌஸர் ஒரு இஸ்லாமியப் பயங்கரவாதி, அல்கைதாவின் கூலிப்படை என்றெல்லாம் வதந்திகளை உருவாக்கி உலவவிட்டார். இந்த வதந்தி புலி ஆதரவு இணையத்தளங்களிலும் பிரசுரிக்கப்பட்டது. இதனால் பௌஸருக்கு பெருத்த சிரமங்கள் ஏற்பட்டன. இது குறித்து பௌஸர் வழங்கிய நேர்காணலைத் தோழர்கள் இப்போதும் thenee.com என்ற இணையத்தளத்தில் படிக்கலாம். ஆனால் பத்மநாபனைக் கேட்டால் ஈழத்தில் சாதிமட்டுமா இல்லை… முஸ்லீம்கள் மீதான புலிகளின் அடக்குமுறையும் தானில்லை என்றுதான் சொல்வார்.
எஸ். பொ. ஈழத்தில் சாதியில்லை என்று ஒருபோதும் சொல்லியிருக்கமாட்டார். அவர் அண்மையில் எழுதிய தன்வரலாற்று நூலான வரலாற்றில் வாழ்தலில் கூட ஈழத்தின் சாதிக்கொடுமைகளைப் பற்றி விரிவாகவே எழுதியிருக்கிறார். கொம்யூனிஸ்ட் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினரான து.வைத்தியலிங்கம் கூடத் தன்னிடம் சாதி பாராட்டியதை அவர் அந்த நூலில் பதிவு செய்திருக்கிறார். ஆனால் புலிகள் தலையெடுத்த பின்பு ஈழத்தில் சாதியொடுக்குமுறைகள் குறைந்திருக்கின்றன என எஸ்.பொ சொல்லியிருக்கக்கூடும். இன்று ஈழத்தில் தீண்டாமைக் கொடுமைகள் ஓரளவுக்கு குறைந்திருக்கிறதென்றால் அதைக் குறைத்த பெருமை எஸ்.ரி.என்.நாகரத்தினம், கே.டானியல் போன்றவர்கள் தலைமை தாங்கிய தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தையே சேரும். புலிகள் உட்பட எல்லாத் தேசிய விடுதலை இயக்கங்களுமே சாதிப்பிரச்சினைகளை கையிலெடுக்கத் தயங்குகிறார்கள். என்றைக்கு அவர்கள் சாதிய ஒழிப்பை முழுவதுமாக உண்மையாக முன்னெடுக்கிறார்களோ அன்று அவர்கள் ஈழத்து வெள்ளாளர்களால் முற்று முழுவதுமாகக் கைவிடப்படுவார்கள் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். சாதியத்தின் வேர்கள் அதன் வரலாற்றுரீதியான இயங்குமுறைமைகள், இந்துப் பண்பாட்டுத்தளத்தில் அதன் அசைக்க முடியாத வலிமை, ஈழத்து ஆதிக்க சாதிகளின் சாதியக் கூட்டுமனம், அரசியல்- பொருளியல்- பண்பாடு - இலக்கியம் என அனைத்துத் தளங்களிலும் நிறைந்திருக்கும் அதன் ஆதிக்கம் என்பவற்றைச் சிறுபான்மைத் தமிழர் மகாசபை, தீண்டாமை ஒழிப்பு வெகுசன இயக்கத்தின் தொடர்ச்சியால்தான் நாம் எதிர்கொள்ள முடியும். சாதிய விடுதலையை மையச் சிந்தனையாக இலட்சியமாக வரித்துக் கொண்ட தலித்துகளின் தலைமையில் அமைந்த ஓர் அமைப்பால்தான் ஈழப்புலத்திலிருந்து சாதியை ஒழிக்கும் திசையில் நேர்மையுடனும் உறுதியுடனும் செயற்பட முடியும். அதை விடுத்து சாதியத்தை ஒரு பேசுபொருளாகவே கொள்ளாத தமிழ்த் தேசியம் சாதியத்தை வெற்றிகொள்ளுமென்பது மடமைத்தனம். புத்தராலும் மார்க்ஸியத்தாலும் சாதிக்க முடியாததைக் கேவலம் பாஸிசம் சாதித்துவிடுமென்றா எஸ்.பொ நம்புகிறார்!
தமிழகத்தில் தலித் இலக்கியத்திற்கு முக்கிய இடமொன்று உருவாகியுள்ளது. ஆனால் உங்களால் டானியலை பருமனாக்கிய அளவுக்கு அரசியலாக்க முடியவில்லையே ஏன்?
பதில் மிகவும் எளிமையானது. உங்களுக்கு ஒரு ஜோதிபா பூலேயும் அயோத்திதாஸரும் அம்பேத்கரும் பெரியாரும் இருந்தார்கள். எங்களுக்கென்று யாருமில்லையே. நாங்கள் கே.டானியலை தலித் இலக்கிய முன்னோடி என்று நிறுவுவதை யார் ஏற்றுக்கொள்கிறார்களோ இல்லையோ டானியல் இப்போது உயிருடன் இருந்தால் அவர் நிச்சயமாக ஏற்றுக்கொண்டிருக்கமாட்டார். டானியல் தனது இறுதிக்காலம் வரை கொம்யூனிஸ்டாகவே வாழ்ந்தவர். அவர் சாதிய ஒழிப்பிற்காகத் தன்னை முற்றுமுழுதாக அர்ப்பணித்துப் போராடிய போதிலும் அவர் கட்சியின் விதிகளுக்கு உட்பட்டே இயங்கவேண்டியிருந்தது. அவர் அங்கம் வகித்த சீனச் சார்புக் கொம்யூனிஸ்ட் கட்சி ஈழத்துச் சமூக அமைப்பின் பிரதான முரணாகச் சாதியத்தை அடையாளம் காணவில்லை. தவிரவும் இந்துமத ஒழிப்பையோ தலித்துகள் பவுத்த மதத்தில் இணைவதையோ அவர்கள் ஆதரிக்கவுமில்லை. கட்சியின் தலைமை வெள்ளாளர்களிடமே இருந்ததையும் நாம் கவனிக்க வேண்டும். டானியல் கட்சியில் நிம்மதியாக இருந்தார் என்று சொல்வதற்கில்லை. அவர் நான்கு தடவைகள் கட்சியிலிருந்து நீக்கப்பட்டிருக்கிறார். இந்த நீக்கங்களை டானியலின் சாதிய விடுதலை முன்னோக்கும் கட்சியின் வர்க்க விடுதலை முன்னோக்கும் இடைவெட்டிக் கொண்ட புள்ளிகளாகத்தான் நாம் கருத வேண்டியிருக்கிறது.
டானியலின் எழுத்துக்களிலிருந்து அவரும் மரபு மார்க்ஸியர்களைப் போலவே சாதியத்தை நிலமானிய சமூக அமைப்பின் விளைவாகவும் சாதி வர்க்கப் புரட்சியுடன்தான் முடிவுக்கு வரும் என்றும் கருதிக் கொண்டிருந்தார் என்றுதான் உணர முடிகிறது. இது சாதியம் புலிகளால்தான் முடிவுக்கு வரும் என்ற கருத்தைக் காட்டிலும் எத்தனையோ மடங்கு மேலானது என்றாலும் இன்றைய தலித் அரசியலுக்குப் பொருந்தாத பார்வை. இதைத்தான் எங்களிடம் பெரியாரும் அம்பேத்கரும் இருந்திருக்கவில்லை என்று சொன்னேன்.இங்கேதான் டானியலை அரசியலாக்க முடியாத பிரச்சினையிருக்கிறது. டானியலும் அவரது தோழர்களும் விட்ட இடத்திலிருந்து நாங்கள் தொடங்கலாமேயொழிய அவர்களின் அரசியலை அடியொற்றிச் செல்வது முடியாத காரியம். இதில் காலக் குழப்பம் எதுவுமில்லை. புத்தரும் அம்பேத்கரும் பெரியாரும் டானியல் காலத்திலும் தலித் விடுதலை அரசியலுக்கு வழிகாட்டிகளாக ஆசான்களாக இருந்திருக்கிறார்கள். இன்றைய தலித் விடுதலை அரசியலுக்கும் வழிகாட்டிகளாக யிருக்கிறார்கள்.
பின்நவீனத்துவம் அய்ரோப்பியச் சூழலுக்கு பொருந்தும் நமது சூழலுக்குப் பொருந்தாது என இங்குள்ளவர்கள் சொல்கிறார்களே?
பின்நவீனத்துவநிலை என்பது ஒரு தத்துவமோ அரசியல் இயக்கத்தின் வேலைத்திட்டமோ இலக்கியக் கோட்பாடோ கிடையாது. அது அறிதல் முறைகளின் தொகுப்பு. பின்நவீன அறிதல்முறைகள் தமிழில் அறிமுகப்படுத்தப்பட்டபோது அது மேற்கிலேயே காலாவதியான போக்கு என்று டெர்ரி ஈகிள்டன் போன்றவர்களைச் சான்றாதாரங்களாக நிறுத்தி இங்கு எதிர்ப்புத் தெரிவிக்கப்பட்டது. ஆனால் இன்று மேற்கத்திய அறிவுத்துறையை பின் நவீனத்துவப் பூதம் பிடித்து ஆட்டிக்கொண்டுதானிருக்கிறது. இலக்கிய, அரசியல், மொழியியல் துறைகளில் ஆரம்பித்த பின்நவீனத்துவ ஆய்வுமுறைகளின் வீச்சு இன்று பல்கலைக்கழக பாடவிதானங்களிலும் முக்கியத்துவம் பெற்றுவிட்டன. எனவே இப்போது என்னயிருந்தாலும் பின்நவீனத்தவம் நமது சூழலுக்குப் பொருந்தாது என முனக ஆரம்பித்திருக்கிறார்கள். நவீனத்துவத்தின் ஒற்றைப்படைத்தன்மைக்கும் பன்மைகளின் நிராகரிப்புக்கும் எதிராகக் கேள்விகளை உற்பத்தி செய்துகொண்டேயிருக்கும் ஓர் அறிதல் முறைமை நமது சூழலுக்குத் தேவையில்லை என்று சொல்வதில் ஏதாவது அறிவுநாணயம் இருக்க முடியுமா? பின்நவீனத்துவம் அறிதல் முறைகளின் தொகுப்பு என்பதை மீறி பின்நவீனத்துவம் ஒரு விடுதலை மார்க்கம், விடுதலை அரசியல் வேலைத்திட்டம், எல்லா ஒடுக்குமுறைகளுக்கு மான தீர்வென்றெல்லாம் யாரும் சொல்லவில்லையே.
பின்நவீனத்துவம் கடவுளுமல்ல அபினுமல்ல.
சமீபகாலமாய் பெண் எழுத்துக்கள் குறித்து ஆபாசம் விளம்பரம் தேடுகின்ற உத்தி என்றெல்லாம் பேசப்படுகின்றதே சக படைப்பாளியாய் நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
இன்னும் எத்தனை காலத்திற்குத்தான் எத்தனை நேர் காணல்களில் எத்தனை பத்திரிகைகளில்தான் இந்தத் தேய்ந்து போன கேள்வியையே கேட்டுக்கொண்டி ருக்கப்போகிறீர்கள்? நானே பத்திரிகைகளில் மூன்றாவதோ நான்காவதோ தடவையாக இந்தக் கேள்விக்குப் பதில் சொல்கிறேன். ஆபாசம், விளம்பரம் தேடும் உத்தியென்றெல்லாம் எவன் சொன்னான்? அப்துல் ரகுமான், சிநேகிதன், பழனிபாரதி, பொன்னீலன் போன்றவர்களின் உளறல்களுக்கெல்லாம் இன்றைய நவீன இலக்கிய விமர்சனப் பரப்பில் ஏதாவது மதிப்பிருக்கிறதா? சில வருடங்களுக்கு முன்பு பெண்ணிய எழுத்துகள் குறித்து எனக்கு ஒரு விமர்சனமிருந்தது. அவர்களில் ஓரிருவரைத் தவிர மற்றவர்கள் உடலரசியல், காதல், குடும்ப மதிப்பீடுகளைத் தாண்டிச் செல்ல மறுக்கிறார்கள் என்ற கருத்தை ஒரு நேர்காணலில் கூட நான் சொல்லியிருந்தேன். ஆனால் இன்று அணங்கு, பனிக்குடம் போன்ற இதழ்களையும் livingsmile.blogspot.com போன்ற இணையங்களையும் படித்துப்பாருங்கள். பெண்ணிய அரசியல், உடல் அரசியல் என்பவற்றோடு மட்டும் நின்றுவிடாமல் அவர்கள் பரந்துபட்ட அரசியல், இலக்கிய கருத்துகளையும் விவாதங்களையும் முன்னெடுக்கிறார்கள். புனைவு, அ-புனைவு நாடகம், ஆவணப் படங்கள், நேரடி அரசியல் என அவர்கள் ஆர்த்தெழுந்திருக்கும் இந்தக் காலகட்டம் தமிழில் பெண்ணிய வெளிப்பாடுகளின் திருப்புமுனைக் காலகட்டம் என்றே நான் கருதுகிறேன். குறிப்பாக இவர்களுக்குப் பார்ப்பன சாதிப் பின்புலம் கிடையாது. உண்மையில் இவர்கள் தங்கள் தலைமுறையைச் சார்ந்த ஆண் எழுத்தாளர்களை விடத் தீவிரமாக இயங்குகிறார்கள். விவாதங்களைத் துணிச்சலுடன் எதிர்கொள்கிறார்கள்.
சுகிர்தராணியும் மாலதி மைத்ரியும் பேசுகின்ற அரசியல் முக்கியமானது என்பதில் கருத்து வேறு பாடில்லை. ஆனால் காலச்சுவட்டோடு அவர்கள் நின்று பேசுவதை எப்படிப் பார்க்கிறீர்கள்?
நான் இந்தத் தடவை தமிழ்நாட்டிற்கு வந்ததிலிருந்து பார்க்கிறேன், என்ன யாரைப் பார்த்தாலும் காலச்சுவடு பூச்சாண்டியே காட்டிக்கொண்டிருக்கிறீர்கள்? நாங்கள் எல்லோரும் கூண்டோடு அச்சப்படுமளவிற்கு அது என்ன சிறப்பு அதிரடிப்படையின் ஆயுத முகாமா? அது மாதத்திற்கு அய்யாயிரமோ பத்தாயிரமோ விற்கும் ஓர் பத்திரிகை! காலச்சுவடு பெரியாரைக் கொச்சைப்படுத்தியது, தொடர்ந்து இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களைப் பரப்பும் களமாய் இருக்கிறது, அது சுந்தர ராமசாமியின் காலந்தொட்டே இடதுசாரி எதிர்ப்பைக் கடைப்பிடிக்கிறது, பார்ப்பன சங்கத்தின் விளம்பரங்களை வெளியிடுகிறது, சமயத்தில் ஒரு மது விலக்குப் பிரச்சாரப் பத்திரிகை போல எழுதுகிறது என்றெல்லாம் எனக்கு நீண்டகாலமாகவே காலச்சுவட்டின் மீது கடும் விமர்சனங்களிருக்கின்றனவே தவிர இதில் பதற்றப்படுவதிற்கு எதுவுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. காட்டில் துட்ட மிருகங்கள் ஆயிரமிருந்தாலும் பூனைக்கு எலிதான் எதிரி என்பது மாதிரி யிருக்கிறது உங்களின் காலச்சுவடு மீதான அணுமுறை.
பெரியாரிய, இஸ்லாமிய, இடதுசாரி எதிர்ப்பு என்பதெல்லாம் குட்டி பிஜேபி நிலைப்பாடுதான். இப்படியான அதிவலதுசாரிப் பத்திரிகையோடு கலகப் பிரதிகளையும் இந்துத்துவ எதிர்ப்புப் பிரதிகளையும் எழுதுவதாகச் சொல்பவர்களால் எப்படி இணைந்திருக்க முடியும்?
உங்கள் கொள்கைப்பற்று வரவேற்கத்தக்கது என்றாலும் கூட நீங்கள் தமிழ் இதழியல் பதிப்புச் சூழல்களையும் புரிந்துகொள்ள வேண்டும். இங்கே மிகச்சில மூத்த எழுத்தாளர்களையும் மு.க.கனிமொழியையும் தவிர்த்து மற்றவர்களுக்கான பிரசுர வாய்ப்புக்கள் இன்னமும் சிக்க லாகத்தானிருக்கின்றன. நமது தோழமைக்குரிய எல்லா எழுத்தாளர்களும் நானும்கூட குமுதம், விகடன் குழும இதழ்களில் எழுதிக்கொண்டுதானிருக்கிறோம். எழுதுவதற்கான வாய்ப்புகளைப் பயன்படுத்தி நமது கருத்துக்களைச் சமரசமில்லாமல் சொல்வதென்பது வேறு வாய்ப்புகளுக்காகவே சமரசம் செய்துகொண்டு வாய்ப்பளிப்பவர்களின் அல்லக்கைககளாகச் செயற்படுவதென்பது வேறு. அல்லக்கைகளை விட்டுவிடுவோம். காலச்சுவட்டில் எழுதிக்கொண்டிருக்கும் மாலதியும் சுகிர்தராணியும் பேசுகின்ற அரசியல் முக்கியமானது என்பதில் நீங்களும் உடன்படுகிறீர்கள். காலச்சுவட்டுக்காக அவர்கள் தங்கள் அரசியல் நிலைப்பாடுகளிலிருந்து இறங்கி வரவில்லை. இலக்கியத்தைப் பொருட்படுத்தாத தமிழ்க் கூட்டு மனநிலையைக் கருத்தில் வைத்துத்தான் நாம் தனி எழுத்தாளர்களை மதிப்பீடு செய்ய முடியும். இந்த இலக்கிய மறுப்புச் சமூகப் படுகுழியிலிருந்து அரவத்தையோ அல்லது கயிற்றரவையோ பிடித்துத்தான் ஏற வேண்டியிருக்கிறது.
புலம்பெயர்ச் சூழலில் பெண் படைப்பாளிகள் பெரிதாக உருவாகாத காரணங்கள் என்ன?
அப்படிச் சொல்லிவிட முடியாது. அய்ந்தரைக் கோடித் தமிழர்கள் வாழும் தமிழ்நாட்டிலிருந்து எத்தனை பெண் படைப்பாளிகள் உருவாகியிருக்கிறார்கள்? மாமிகளைக் கழித்துவிட்டுப் பார்த்தால் கவனிக்கத்தக்க பெண் எழுத்தாளர்களாக ஒரு இருபது பேர்கள் இருப்பார்களா? அப்படிப் பார்த்தால் அய்ந்து இலட்சத்திற்கும் குறைவாகயிருக்கும் புலம் பெயர்ந்த எங்களிடையேயிருந்தும் ஆழியாள், பிரதிபா தில்லைநாதன், நிரூபா, றஞ்சினியென்று நான்கு பேர் உருவாகித்தானேயிருக்கிறார்கள். பெண் படைப்பாளிகளென்றில்லை புகலிடத்தில் ஆண் படைப்பாளிகளை எடுத்துக் கொண்டாலும் அவர்களிலும் கவனிக்கத்தக்க எழுத்தாளர்களாக நான்குபேர்தானேயிருக்கிறார்கள். இதற்கு மேலும் குறிப்பிடக்கூடிய படைப்பாளிகள் உருவாகாததற்கும் வலுவான காரணங்கள் இருக்கின்றன.
புகலிடச் சூழலில் தமிழர்கள் செறிவற்று வாழ்வதால் தொடர்ச்சியான இலக்கிய உரையாடல்களை நடத்துவதற்கும் படைப்பு மனநிலையைத் தக்க வைத்திருப்பதற்குமான வாய்ப்புகள் குறைவு. புகலிடப் படைப்பாளிகளில் யாருமே கல்வித்துறை சார்ந்தவர்களல்ல. சீவியத்திற்காக இரவுபகலாக வேறு துறைகளில் உழைத்துக்கொண்டு இலக்கிய வாசிப்புக்கும் இலக்கியப் பயிற்சிக்கும் நேரம் ஒதுக்குவதும் கடினம். இதைத் தவிர நேரடியான அரசியல் வேலைகளிலும் புனர் வாழ்வுப் பணிகளிலும் அவர்கள் தங்களது நேரத்தில் பெரும்பகுதியைச் செலவழிக்கிறார்கள். இவை எல்லாவற்றிற்கும் மேலாக புகலிட எழுத்தாளர்கள் தொடர்ச்சியான கண்காணிப்புக்குள் இருக்கிறார்கள். எழுதுவதாலும் பத்திரிகைகள் வெளியிட்டதாலும் புகலிட எழுத்தாளர்கள் பலதடவைகள் புலிகளால் தாக்கப்பட்டிருக்கிறார்கள். 'தொழிலாளர் பாதை' பத்திரிகையை விற்ற தோழர்கள் பாரிஸ் வீதிகளில் வைத்துப் புலிகளால் இரண்டு தடவைகள் தாக்கப்பட்டார்கள். 'மனிதம்', 'தாயகம்' போன்ற பல பத்திரிகைகள் புலிக் குண்டர்களால் மிரட்டப்பட்டிருக்கின்றன. இவ்வளவு பிரத்தியேகமான சிக்கல்களையும் எதிர்கொண்டுதான் புகலிடத்திலிருந்து எழுத வேண்டியிருக்கிறது.
கருணையால் உலகு தழுவிய பவுத்தம் இலங்கையில் இனவாதத்திற்குப் பலியாகி விட்டது தானே?
ஒருபோதுமில்லை. இன்று இத்தனை வருட யுத்தத்திற்குப் பின்னும் சிங்களவர்களின் பகுதியான கொழும்பிலும் ஏனைய நகரங்களிலும் தமிழர்கள் ஆபத்தில்லாமல் வாழ்கிறார்கள், தொழில் செய்கிறார்கள், கல்வி கற்கிறார்களென்றால் பெரும்பாலான பவுத்தர்கள் இனவாதிகள் இல்லையென்றுதானே அர்த்தம். ஆனால் புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளில் நுழையும் ஒரு சிங்களவர் உயிரோடு திரும்பிச் செல்ல முடியாதே.
அரசும் அரசியலதிகாரத்தைச் சுவைக்கத் துடிக்கும் மதத்தலைவர்களும் சிங்கள மக்களைப் பவுத்தத்தின் பெயரால் சிறுபான்மை இனங்களுக்கு எதிராக அணி திரட்டப் பல வருடங்களாகவே முயன்றுவருவது உண்மைதான். ஆனால் எப்படிப் பரந்துபட்ட தமிழ் மக்கள் இந்த யுத்தத்தை விரும்பவில்லையோ அது போலவே சிங்கள மக்களும் இந்த யுத்தத்தை வெறுக்கிறார்கள். தமிழ்த் தேசிய - சிங்கள இனவாத சக்திகளின் தடுப்பரண்களையும் மீறி சுனாமி அனர்த்தத்தின் போது அந்த மக்கள் ஒருவர் மீதான மற்றவரின் வாஞ்சையை மறுபடியும் நிரூபித்துக் காட்டினார்கள். சுனாமி நிவாரண நிதியாகக் கிடைத்த வெளிநாட்டுப் பணத்தை எப்படிக் கொள்ளையடிப்பது என்று அரசும் புலிகளும் சண்டையிட்டுக் கொண்டிருந்தபோது சத்தமேயில்லாமல் பாதிக்கப்பட்ட தமிழ் - முஸ்லீம் மக்களுக்குச் சிங்கள மக்கள் உதவிகளை வழங்கிக்கொண்டிருந்தார்கள்.
சுதந்திரம் சமத்துவம் சகோதரத்துவம் என்கின்ற கருத்தாக்கத்தை உலகுக்கு வழங்கிய பிரான்ஸிலிருந்து பேசுகிறீர்கள். பிரான்ஸ் ஈழத் தமிழர்களை கருப்பர்களை இஸ்லாமியர்களை எப்படி நடத்துகின்றது?
பல நூற்றாண்டுகளுக்கு முன்னமே நமது கணியன் பூங்குன்றனார் யாதும் ஊரே யாவரும் கேளிர் என்றார். நமக்குப் பிரஞ்சுக்காரர்கள் கேளிர்தான். ஆனால் நாம் பிரஞ்சுக்காரர்களுக்குக்கு நாம் கேளிரா? என்பதுதான் பிரச்சினையே! மூன்றாம் உலகநாடுகளில் வெள்ளையர்கள் கொலனி பிடித்துக் கொள்ளையடிக்கும்வரை கொள்ளையடித்து, ஒட்ட உறிஞ்சிவிட்டு வெளியேறியபோது உருவாக்கி வைத்துவிட்டுவந்த தேசிய இனச்சிக்கல்களாலும், இனக்குழு மோதல்களாலும், வெள்ளையர்கள் தங்கள் ஆயுத வணிகத்திற்காக மூன்றாம் உலகநாடுகளில் War lordகளை உருவாக்கிவிட்டதாலும் போர்களால் நாடிழந்து வீடிழந்து ஏதிலிகளாகத் தஞ்சம்கோரி ஓடிவரும் மூன்றாம் உலக மக்களை வரவேற்பதற்காக அய்ரோப்பிய அரசுகள் தமது எல்லைகளில் "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்று வரவேற்பு வளைவுகளை வைத்திருப்பதில்லை.அவர்கள் எல்லைகளில் கொழுத்த வேட்டை நாய்களையும் இனவெறி பிடித்த பொலிஸ் குண்டர்களையும்தான் வைத்திருக்கிறார்கள். அய்ரோப்பாவின் எல்லைகளுக்குள் நுழைய முற்படும் ஈழ, இஸ்லாமிய, கறுப்பு, சீன அகதிகள் நாள்தோறுமே கிழக்கு அய்ரோப்பாவின் பனிப்பாலைகளில் நடந்து வருகையில் விறைத்தும் போலந்தின் ஆறுகளில் மூழ்கியும் இறக்கிறார்கள். அத்திலாந்து சமுத்திரத்தில் படகுகளோடு ஜலசமாதி அடைகிறார்கள். மீறியும் மேற்கு அய்ரோப்பிய எல்லைகளைத் தொடுபவர்களில் கணிசமானோர் உடனடியாகவே அவர்களின் சொந்த நாடுகளுக்குக் கொலைக்களங்களுக்கு கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்படுகிறார்கள்.
அய்ரோப்பாவில் அகதிகளை வரவேற்பதற்கான சட்டமான 'Geneva 25 July 1952 'அகதிச் சட்டம் நிறைவேற்றப்படும்போது அய்ரோப்பாவின் சமூக பொருளியல் நிலைமைகள் வேறுமாதிரியிருந்தன. அது அய்ரோப்பிய முதலாளியத்தின் செழுமைக் காலமாயி ருந்தது. அய்ரோப்பிய மூலதனத்துக்குப் பெருமளவிலான கூலிகள் தேவைப்பட்ட காலமது. தவிரவும் நடந்து முடிந்திருந்த இரண்டாம் உலகப்போரின் வடுவும், அப்போதைய சோவியத் யூனியனிலிருந்தும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்தும் வெளியேறிய முதலாளியச் சாய்வுச் சிந்தனையாளர்களுக்கும் கலைஞர்களுக்கும் ஸ்டாலினிஸ எதிர்ப்பாளர்களுக்கும் புகலிடம் கொடுத்து அவர்கள் மூலம் கொம்யூனிஸ எதிர்ப்பைப் பரப்புரை செய்வதும் ஜெனிவா அகதிச் சட்டம் நிறைவேற்றப்பட்டதற்கான மற்றைய காரணங்கள். இந்த மூன்று காரணிகளும் இன்றைய அய்ரோப்பியச் சமூக, பொருளியல் சூழல்களில் பெருமளவு அர்த்தமற்றுப் போய்விட்டன. 1980களில் தொழிற்துறையில் நிகழந்த தகவல் தொழில்நுட்பப் புரட்சியுடன் அய்ரோப்பிய முதலாளியம் அபரிமித உற்பத்தி நெருக்கடிக்குள் மறுபடியும் ஒருமுறை சிக்கிக்கொண்டது. பல்கிப் பெருகிய உற்பத்தி சக்திகளால் முதலாளிய சந்தையில் கடும் போட்டிகள் உருவானதால் மலிவு விலையில் உற்பத்திப் பொருட்களை வழங்கும் நிறுவனங்களே சந்தைப்போட்டியில் வெற்றியடையும் நிலையுருவாகியது. இந்தச் சிக்கலிலிருந்து தப்பிப்பதற்காக மலிவான கூலித்தொழிலாளர்கள் நிறைந்திருக்கும், தொழிற்சங்க உரிமைகள் வலுவற்றிருக்கும் மூன்றாம் உலக நாடுகளை நோக்கி உலக முதலாளியம் மூலதனங்களையும் தொழிற் சாலைகளையும் நகர்த்தியது. இப்போது Nike இந்தோனேசியாவிலும் Coke இந்தியாவிலும் கொடி கட்டிப் பறக்கின்றன.மேற்குநாடுகளில் தொழிற்சாலைகள் பெருமளவு மூடப்பட்டதாலும் ஆட்குறைப்பாலும் அய்ரோப்பியத் தொழிலாளர்களுக்கு வேலை பறந்தது. இன்று பிரான்ஸில் வேலையில்லாதோரின் தொகை 12 விழுக் காடாயிருக்க, அய்ரோப்பிய யூனியனில் வேலையில்லாத இளைஞர்கள் தொகையின் சராசரி 15 விழுக்காடாயிருக்க அய்ரோப்பிய அரசுகள் தமது கதவுகளை அகதிகளுக்கு இறுக மூடிக்கொள்கின்றன. இப்போது அய்ரோப்பிய முதலாளியத்திற்கு மூன்றாம் உலகநாடுகளிலிலிருந்து மூன்றாம் உலக மக்களின் வரிப்பணத்தில் கல்வி கற்று முடித்த விஞ்ஞானிகளும் மருத்துவர்களும் கணனி நிபுணர்களும்தான் தேவையேயொழிய அகதிகள் என்ற சிறப்புப் பெயரில் அழைக்கப் படும் கூலித் தொழிலாளர்கள் தேவையில்லை.இன்று பிரான்ஸில் மட்டும் 300000 நிராகரிக்கப்பட்ட அகதிகள் 'Sans Papiers 'என்ற பரிதாபத்துக்குரிய அடையாளத்தோடு வதிவிட உரிமை, மருத்துவ உதவி, வேலை செய்வதற்கான உரிமை, சமூகநல உதவிகள் எதுவுமற்றுத் திருடர்கள்போல வாழ்ந்து துன்பத்தில் உழன்று கொண்டி ருக்கிறார்கள். அரசியல் அகதிகளைப் புதிதாக ஏற்றுக் கொள்ள பிரான்ஸ் மறுப்பதற்கு இன்னொரு புனிதக் காரணமும் உள்ளது. பிரான்சுக்கு அகதிகளாக வருபவர்களில் பெரும்பாலானோர் முசுலீம்களே. இவர்கள் ஆப்கானிஸ்தான்,, ஈரான், ஈராக், சூடான், நைஜீரியா, செனகல், மாலி, அல்ஜீரியா, துனிசியா, மெராக்கோ, துருக்கி, பாகிஸ்தான், வங்காளதேசம் மற்றும் கிழக்கு அய்ரோப்பிய நாடுகளிலிருந்து வருகிறார்கள்.ஏற்கனவே கூலித்தொழிலாளர்களாக வட ஆப்பிரிக்காவிலிருந்து அழைத்து வரப்பட்டு இரண்டு மூன்று தலைமுறைகளாக பிரான்ஸிலேயே தங்கிவிட்ட முசுலீம்களோடு கடந்த இருபது ஆண்டுகளில் அகதிகளாகப் பிரான்சுக்கு வந்து சேர்ந்த முசுலீம் மக்களும் சேர்ந்தபோது பிரான்ஸின் இரண்டாவது பெரிய மதமாக இஸ்லாம் மாறிவிட்டது. பிரான்ஸில் இஸ்லாமியர்கள் குறிப்பிடத்தக்க அரசியல் சக்திகளாக மாறிக் கொண்டிருக்கிறார்கள். பொறுக்குமா சிலுவைப் போராளிகளின் வாரிசுகளுக்க
ு? அவர்கள் அகதிகளுக்கு மூடிய கதவுகளில் முசுலீம்களின் பெயரால் ஒருபெரிய பூட்டையும் இப்போது தொங்க விட்டிருக்கிறார்கள்.எதிர்வரும் அதிபர் தேர்தலில் இன்றைய ஆளும் கட்சியான UMPயின் வேட்பாளராக நிறுத்தப்பட்டிருக்கும் நிக்கொலா சார்க்கோஸியின் குரல் ஒரு நியோ நாஸியின் குரல் போலவே ஒலித்துக் கொண்டிருக்கிறது. அவர் பிரான்ஸின் முதன்மையானதும் உடனடியானதுமான பிரச்சினையாக குடியேற்றவாசிகளையும் அகதிகளையும்தான் குறிப்பிடுகிறார். சென்ற அதிபர் தேர்தலில் இடதுசாரி வேட்பாளர் லியனல் ஜோஸ்பனை முந்திக்கொண்டு இரண்டாவது இடத்தைப் பிடித்தவர் பச்சை இனவாதியான லூ பென். லூ பென்னின் பெருகிவரும் செல்வாக்கும் சார்க்கோஸி போன்றவர்கள் நாட்டின் அதிஉயரடி பீடத்தில் அமருவதும் நம்மை நெருங்கிவரும் அபாயங்களை அறிவித்துக் கொண்டிருக்கின்றன. "Liberté, Égalité, Fraternité" என்று முழங்கியபடியேதான் இவர்கள் வியட்நாமிலும் அல்ஜீரியாவிலும் வகைதொகையில்லாத கூட்டுப் படுகொலைகளை நடத்தி முடித்தார்கள். சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்று சொல்லியபடியேதான் கடல் கடந்த மாகாணங்கள் என்ற பெயரில் நான்கு நாடுகளையும் பதினொரு தீவுகளையும் இன்றுவரை பிரஞ்சுக் கொலனிகளாக வைத்து சுரண்டிக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் பேசும் சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்பதெல்லாம் அய்ரோப்பியர்களுக்கு மட்டும்தான். "ஓர் அய்ரோப்பியனைக் கொல்வது ஒரே கல்லில் இரு பறவைகளைக் கொல்வதாகும். அது ஒடுக்குபவனையும் அவனால் ஒடுக்கப்படுபவனையும் ஒரே சமயத்தில் ஒழித்துக்கட்டுவதாகும்: அங்கே கிடப்பது ஒரு பிணம்; அங்கே இருப்பது ஒரு சுதந்திர மனிதன்" என்று சார்த் சும்மாவா சொன்னார்?
பார்ப்பனர்களே இல்லாத ஈழம் - புலம்பெயர் சூழலிலிருந்து எழுதிக்கொண்டிருக்கும் நீங்கள் பார்ப்பன எதிர்ப்பை முன்வைத்துப் பேசுவதற்கான முகாந்திரங்கள் என்ன?
சிங்களவர்களையே கண்ணால் பார்த்திராத நீங்களெல்லோரும் சிங்கள எதிர்ப்புப் பேசுகிறீர்களே அதுபோல் நான் நிச்சயமாகப் பேசவில்லை. ஈழத்துச் சூழல் பார்ப்பனர்களே இல்லாத சூழல் என்று சொல்வது சரியாகாது. அவர்கள் அற்பசொற்ப தொகையிலிருந்தாலும் அவர்களின் வாழ்க்கைமுறை பார்ப்பனிய வாழ்க்கை முறையாகவேயிருக்கிறது. அவர்கள் பார்ப்பனர்களாகத்தான் வாழ்கிறார்கள். இன்றும் பார்ப்பனர்கள் ஈழத்தில் முற்று முழுவதுமாகத் தீண்டாமையைக் கடைபிடிக்கிறார்கள். அவர்கள் அரசியலிலும் பொருளியலிலும் நேரடி ஆதிக்கசக்திகள் இல்லைதான். ஆனால் இந்துப் பண்பாட்டுத்தளத்தில் அவர்கள்தான் உச்சத்திலிருக்கிறார்கள். பார்ப்பனியம் என்பது வெறுமனே சாதியடுக்கில் உச்சத்திலிருப்பது மட்டுமல்ல சாதியத்தை வடிவமைத்துக் காத்து வருவதும் அதுதான் என்ற புரிதல் எனக்கிருக்கிறது.
இன்னொரு முக்கியமான விசயமுமிருக்கிறது. இந்திய ஆளும்வர்க்கம் ஈழத்தமிழர்களின் பிரச்சனையையை தனது நலன்களது நோக்கிலேயே ஆரம்பம் முதலே அணுகிவருகிறது. அது அதற்காக அமைதிப்படையின் காலத்திலே எங்கள் மக்களை ஆயிரக்கணக்கில் கொன்றொழித்தது. சிறுமிகளையும் பெண்களையும் பாலியல் சித்திரவதைகள் செய்து புதைத்தது. ஆயிரக் கணக்கான இளைஞர்களை அங்கயீனம் செய்தது. இந்திய ஆளும் வர்க்கம் என்பது யார்? இந்திய அரசின் பெரும்பாலான உயரதிகாரிகளும் படைத்தளபதிகளும் இந்திய அரசின் கொடுமைகளை இன்றுவரை நியாயப்படுத்திக்கொண்டிருக்கும் ஊடகச் செல்வாக்குமிக்கவர்களான 'இந்து' ராம் போன்றவர்களும் யார்? அவர்கள் பார்ப்பன- பனியா நலன்களை மட்டும் கருத்திலே கொண்ட சாதிப்பற்றாளர்கள், சனநாயக விரோதிகள். இந்தியப் பார்ப்பனர்களின் அதிகார விருப்புகளும் ஆதிக்க எல்லைகளும் இந்தியாவுடன் மட்டும் நின்று விடுவதில்லை. அது ஈழம் வரைக்கும் தனது விஷ நாவை எறிந்துதான் வைத்திருக்கிறது. அது அரசியலில் என்றாலும் சரி! பண்பாட்டில் என்றாலும் சரி! இலக்கியத்தில் என்றாலும் சரி!
சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டதென அசோகமித்திரன் சொல்கின்றாரே?
அவர் அதை மட்டுமா சொன்னார்? 'சங்கராச்சாரியார் மீது விசாரணை தொடங்க முன்னமே பத்திரிகைகள் சங்காரிச்சாரியரைக் கொச்சைப்படுத்திவிட்டன' என்றார். 'தமிழகத்தில் பார்ப்பனர்களின் நிலைமை நாஸிகளின் கைகளில் அகப்பட்ட யூதர்களைப் போலாகிவிட்டது' எனச் சொன்னார். சிறுபத்திரிகையொன்று நடத்துவதற்காக அவரின் வீடேறிக் கதை கேட்கப்போன தோழர்களை 'பார்ப்பனர்களைத் திட்டத்தானே பத்திரிகை தொடங்குகிறீர்கள்?' எனத் திட்டித் துரத்திவிட்டார். இப்போது சிறுபத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டதெனச் சாபமிட்டிருக்கின்றார். அசோகமித்திரனுக்கு மட்டுமல்ல தமிழக, ஈழத்து ஆதிக்கசாதி எழுத்தாளர்கள் பலருக்கும் எண்பதுகளிற்குப் பிந்திய சிறுபத்திரிகைகளின் போக்குகள் உவப்பில்லாமல்தான் போய்விட்டன.அமைப்பியல்வாதம், பின்நவீனத்துவம் போன்ற புதிய சிந்தனை முறைமைகளும் அவை சார்ந்த கலை, இலக்கிய வெளிப்பாடுகளும் விமர்சன மரபுகளும் ஒரு பேரலையெனத் தமிழ் இலக்கியப் பரப்பிற்குள் நுழைந்து அதுவரையிருந்த இலக்கிய பீடங்களையும் ரசிகமணி விமர்சகர்களையும் கவிழ்த்துப் போட்டதை அவர்களால் பொறுத்துக்கொள்ளவே முடியவில்லை. 'கண்டதையும் தின்றுவிட்ட வாலைத் தூக்கிக் கழிக்கும் மிருகங்கள்' என்றார் சுந்தர ராமசாமி. 'சமூக விரோத எழுத்துக்கள்' என்றார் யமுனா ராஜேந்திரன். கொஞ்சம் புத்திசாலிகளான ஆதிக்கசாதி விமர்சகர்கள் 'இவர்களுடைய எழுத்துக்கள் புரிவதேயில்லை' என்றார்கள். இப்படி இவர்களால் அழுக்காறு கொள்ள முடிந்ததே தவிர இவர்களால் இந்தப் புதிய சிந்தனைகளைக் கோட்பாட்டுத் தளத்திலோ புனைவுத் தளத்திலோ எதிர்கொள்ள முடியவில்லை. முக்கியமாக இந்தப் புதிய சிந்தனைமுறைமைகள் குறித்த அறிமுகங்களும் ஆக்கபூர்வமான உரையாடல்களும் பார்ப்பனர்கள் அல்லாதவர்களால் நடத்தப்பட்ட சிறு பத்திரிகைகளில்தான் முழுவதுமாக முன்னெடுக்கப்பட்டன. இந்தப் புதிய சிந்தனைமுறைகளும் கோட்பாடுகளும் இலக்கியத்தளத்தில் தலித், பெண்ணிய, விளிம்பு நிலை மனிதர்களின் பிரதிகளை முன்னிறுத்த தலித், பெண்ணிய, விளிம்புநிலைப் பிரதிகள் நவீன தமிழ் இலக்கியத்தின் முக்கிய பேசுபொருட்களாயின. புதிய புதிய எழுத்தாளர்கள் பல்வேறு நிலப்பகுதிகளிலிருந்தும் சிறப்பான இலக்கியப் பிரதிகளை எழுதத் தொடங்கினார்கள். பார்ப்பன எழுத்தாளர்களின் பீடங்கள் ஆட்டங்காணத் தொடங்கின. எண்பதுகளுக்குப் பிந்திய சிறுபத்திரிகை இயக்கத்தில் அவர்களுக்கு இடமேதுமில்லை. இந்த வயிற்றெரிச்சலோடுதான் அசோகமித்திரன் சிறு பத்திரிகைகளின் காலம் முடிந்து விட்டது என்கிறார். பொறுத்திருந்து பாருங்கள் அசோகமித்திரன் போன்றவர்கள் தமிழ் இலக்கியத்தின் காலம் முடிந்துவிட்டது என்றும் விரைவில் சாபமிடுவார்கள்.
ஒரு இலக்கியவாதியாகவும் செயல்பாட்டாளராகவும் இருக்கும் நீங்கள் பிரான்சின் மீதான விமர்சனங்களை எழுதியோ பேசியோ வெளிப்படுத்திவிடுகிறீர்கள். புலம்பெயர்ந்து பிரான்சில் அடைக்கலம் கண்டுள்ள மற்றவர்கள் இவ்விமர்சனங்களை எவ்வாறு வெளிப்படுத்திக் கொள்கிறார்கள்? அப்படி வெளிப்படுத்திக் கொள்வதற்கான சுதந்திரம் அங்கிருக்கிறதா?
முதலாளிய அமைப்புமுறையை நடத்திச் செல்வதற்கு அவசியமான அளவிற்குப் பிரான்ஸின் ஆட்சியாளர்கள் முதலாளிய சனநாயகத்தை அனுமதித்திருக்கிறார்கள். அகதிகளுக்கான அமைப்புகளும் வதிவிட அனுமதி நிராகரிக்கப்பட்டவர்களுக்கான சங்கங்களும் போர் எதிர்ப்பு இயக்கங்களும் G நாடுகளுக்கான எதிர்ப்பு இயக்கங்களும் பிரான்ஸில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இவர்களின் போராட்டங்களை இந்தியப் பொதுவுடமைக் கட்சிகளின் தொழிற்சங்கங்களின் போராட்ட வடிவங்களோடு நாம் ஒப்பிட்டுச் சொல்லலாம். அந்த ரேஞ்சுக்கு மேல் எதுவுமில்லை. சொல்லப்போனால் இந்தியாவில் பொதுவுடமை இயக்கங்களாவது அற்ப சொற்ப வெற்றிகளைச் சாதிக்கின்றன. பிரான்ஸிலோ ஒரு மாலைநேர ஒன்றுகூடல், மத்தியதர வர்க்க இளைஞர்களின் சாகசம் என்பவற்றை மீறிப் போராட்டங்கள் வெகுசனங்களின் கவனயீர்ப்பையோ குறிப்பிடத்தகுந்த வெற்றிகளையோ அண்மைக்காலங்களில் பெறுவ தில்லை. ஈராக்கின் மீதான அமெரிக்காவின் யுத்தம் குறித்தோ சதாம் உசேனின் படுகொலை குறித்தோ 'ப்ச்' என்ற இதழ் வெடிப்பைத் தாண்டி இன்னொரு சத்தம் பிரான்ஸிலிருந்து எழவில்லை. எங்காவது அறிவுத்துறையினர் மத்தியிலிருந்தோ பல்கலைக் கழகங்களின் மண்ட பங்களிலிருந்தோ ஏதாவது ஈனசுரம் எழுந்திருக்கலாம். ஆனால் அது என் காதுகளிலோ அல்லது பாரிஸ் தெருக்களிலோ சதுக்கங்களிலோ விழவில்லை. 2005 ஒக்ரோபரில் இரண்டு வடஆபிரிக்க இளைஞர்கள் பொலிஸாரால் துரத்தப்படும்போது மின்மாற்றியில் சிக்கி உயிரிழந்தபோது கறுப்பின இளைஞர்களாலும் அரபு இளைஞர்களாலும் முன்னெடுக்கப்பட்ட தன்னெழுச்சியான அரச எதிர்ப்புப் போராட்டத்தின்போது அரசு கடுமையான அடக்குமுறைகளை ஏவியது. போராட்டக்காரர்கள் ஒளிந்திருப்பதாகக் கூறிக் காவற்துறை ஒரு பள்ளிவாசலுக்குள் புகுந்து கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசியது. மூவாயிரத்துìகும் மேலான இளைஞர்கள் கைதுசெய்யப்பட்டனர். குற்றவாளிகள் எனக் கருதப்பட்டவர்களை நாடு கடத்துவதற்குச் சிறப்புச் சட்டம் இயற்றப்பட்டது. அய்ம்பது வருடங்களிற்குப் பின் குறிப்பிட்ட நகரங்களில் அவசரகாலச் சட்டமும் ஊரடங்குச் சட்டமும் அமுலுக்கு வந்தன. சுருக்கமாகச் சொன்னால் சட்டங்களை மீறாமல் சட்டங்களை எதிர்த்துப் போராடலாம் என்பதுதான் பிரான்ஸின் கண்கட்டி சனநாயகம். இந்த பெயரளவிலான சனநாயகத்திற்குக் கூட ஆபத்து வருவதற்கான அறிகுறிகளும் தென்படுகின்றன. சீனா போன்ற நாடுகளில் சனநாயக அமைப்பே இல்லாத போதும் அங்கே முதலாளியம் வேகமாக வளர்ந்து வருவதால் முதலாளிய வளர்ச்சிக்குச் சனநாயக அமைப்பு இன்றியமையாததுதானா என்ற திசைகளில் முதலாளித்துவ அறிவுஜீவிகள் சிந்திக்கத் தொடங்கியுள்ளனர்.
சிங்கள பேரினவாதத்தை அரச வன்முறை மூலம் நிலைநிறுத்துகிற இலங்கை ஆட்சியாளர்கள் ஒரு புறம். சாதிய மேலாதிக்கத்திலும் முஸ்லிம் வெறுப்பிலும் ஏகாதிபத்திய ஆதரவிலும், மாற்றுக் கருத்துக்களை,அமைப்புகளை சகித்துக்கொள்ளாத அ-ஜனநாயகப் போக்கிலும் சிக்குண்டிருக்கும் விடுதலைப் புலிகள் மறுபுறம். இவ்விரு கருத்தோட்டங்களுமே நிராகரிக்கப்பட வேண்டியது என்பதை மிக வலிமையாக தங்களது கொரில்லா, ம், வேலைக் காரிகளின் புத்தகம் ஆகியவை தெரிவிக்கின்றன. எனில் இலங்கைக்கு எத்தகைய சமூகத்தை மாற்றாக முன்மொழிகிறீர்கள்?
இலங்கை அரசும் விடுதலைப் புலிகளும் தமது சொந்த அரசியல் நலன்களை முன்னிறுத்தியே காய்களை நகர்த்தி வருகின்றனர். இருதரப்புகளுக்கும் முட்டுக்கொடுத்து நிற்கும் சிங்களப் பேரினவாத மற்றும் தமிழ்த்தேசிய அமைப்புகள் சிங்கமும் புலியும் தின்றதுபோக எஞ்சும் மிச்சம் மீதிக்காக அடித்துக்கொண்டு கிடக்கிறார்கள். இந்த யுத்தம் மக்களின் யுத்தமல்ல. இந்த யுத்தத்திற்கும் வெகுசனங்களின் நலன்களுக்கும் எதுவித நேர்மறையான தொடர்புகளுமில்லை.அரசு நாட்டின் ஒருமைப்பாட்டைக் காப்பாற்றுவதற்காகப் பயங்கரவாதத்தோடு யுத்தம் செய்வதாகச் சொல்கிறது. புலிகளோ தமிழ் மக்களின் விடுதலைக்காக யுத்தம் செய்வதாகச் சொல்கிறார்கள். இவர்களின் இந்த யுத்த சன்னதத்திற்குள் கொல்லப்படுபவர்களும் காணமற் போனவர்களும் வதைமுகாம்களில் அடைக்கப்பட்டிருப்பவர்களும் யார்? ஏழைச் சிங்களக் கிராமப்புற இளைஞர்கள் இராணுவத்தில் சேர்க்கப்படுகிறார்கள். புலிகளோ மும்முரமாகப் பிள்ளை பிடிப்பதில் ஈடுபட்டுள்ளார்கள். இன்று புலிகளின் கட்டுப் பாட்டுப் பிரதேசங்களில் வாழும் மக்கள் குடும்பத்திற்கு ஒரு பிள்ளையைக் கொலைகாரப் புலிகளுக்கு தாரைவார்த்தே ஆகவேண்டும் என்பது கட்டாயம். இளைஞர்களும் யுவதிகளும் இராணுவத்திற்கு ஒளிந்து திரிந்த காலம் போய் இப்போது புலிகளுக்கு ஒளிந்து திரிகிறார்கள். புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதிகளிலிருந்து இளையவர்கள் வெளியேறுவதற்கும் மணம் முடிப்பதிற்கும் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.இந்த அர்த்தமற்ற யுத்தம் முப்பது வருடங்களாகத் தமிழ் முஸ்லீம் மக்களுக்குச் சாதித்த நன்மைகள் என்ன? தமிழர்களாலேயே பல்லாயிரக்கணக்கான தமிழர்களும் முஸ்லீம்களும் கொல்லப்பட்டிருக்கிறார்கள். இலட்சக்கணக்கானோர் புலிகளால் நாட்டிலிருந்து துரத்தப்பட்டிருக்கிறார்கள். இருபது வருடங்களாக அரசும் புலிகளும் விட்டுவிட்டுத் தொடரும் பேச்சுவார்த்தைகளால் விளைந்த நன்மைகள் என்ன? அரசின் சிறைகளில் காலவரையற்ற தடுப்புக் காவல்களில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் அடைக்கப்பட்டிருக்கிறார்கள். போதாதற்கு 1980ளில் சித்திரவதைகளுக்கும் கொலைகளுக்கும் பெயர்பெற்ற ஸ்தலமாயிருந்த பூசா தடுப்புமுகாமை மீண்டும் திறக்கப்போவதாக மகிந்த ராஜபக்ஷ அறிவித்துள்ளார். வடபகுதியிலிருந்து புலிகளால் கொள்ளையிடப்பட்டு விரட்டப்பட்ட முஸ்லீம்களால் இன்னும் வடபுலத்தில் மீளக் குடியேற முடியவில்லை.இன்று நமக்குத் தேவையாயிருப்பது தமிழ்- சிங்கள- முஸ்லீம் மக்களின் அய்க்கியம்தான். ஆனால் இந்த அய்க்கியம் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதில் சிங்கள, தமிழ் இனவாதிகள் மட்டுமல்லாது ஈழப்பிரச்சினையில் செல்வாக்குச் செலுத்திக்கொண்டிருக்கும் அந்நிய சக்திகளும் கவனமாயிருக்கிறார்கள். இலங்கை உழைக்கும் மக்களின் அரசியல் அய்க்கியம் மட்டும்தான் பேரினவாத அரசையும் பாஸிஸப் புலிகளையும் தோற்கடிக்கும். அந்த அய்க்கியம்தான் இலங்கையின் இறைமைவெளிகளில் அத்துமீறி நுழையும் சர்வதேச வல்லாக்க சக்திகளையும் மறுகாலனியாக்கத்தையும் எதிர்த்து நிற்கும். அந்த அய்க்கியம்தான் தீவின் சிறுபான்மை இனத்தவர்களுக்கு அரசியல் உரிமைகளையும் தீர்வையும் வழங்கும். இனவாதமும் யுத்தமும் தமிழ், சிங்கள முதலாளிய அரசியலாளர்களின் நலன்களிலிருந்தே உயிர் வாழுகின்றன என்ற புரிதலோடு இடதுசாரி அரசியல் இயக்கங்களின் வழியேதான் நாம் இந்தத் திசைவழியை நோக்கி நகரமுடியும். உண்மையில் இந்த அரசியல் வழியில் முன்கை எடுக்க வேண்டியவர்கள் சிங்கள இடதுசாரிகளே. அவர்களின் செயற்திறன்தான் பெரும்பான்மை இனத்தின் மீது சிறுபான்மை இனங்களிற்கு நம்பிக்கையை ஏற்படுத்தும். தமிழ்
--
தியாகு
-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================