--------------------------------------
உழுதவனை கொன்றுவிடு
உழைப்புதனை அபகரித்து
அழுதவனின் கையில்
அரைகாசு வேட்டியிட்டு
கரும்புக்கு கூலி இல்லை
அரிசிக்கும் அதே என்று
அலையவிட்டு அலறவிட்டு
ஏருக்கு பின்னே உலகமென்று
எழுதிட்டு போனவனின்
பேருக்கு சொல்லிவிட்டு
உழவரெல்லாம் அழுதகண்ணீர்
ஆறாக பெருகும் போது
செழுமைசேர் நாட்டில்
செந்நெல்லால் பொங்கலிட்டு
வலிமைசேர் காளைகட்டு
செழு நன்றி செய்திடுவீர்
-தியாகு
விளைநிலங்கள் ஆக்கிரமிப்பு
விளை பொருட்களுக்கு சரியான விலை கிடைக்காமை
மழை பொழியாததால் வறண்ட பூமி
எலிக்கறி திண்ணும் இன்னும் பலவாராக
தற்கொலை செய்து கொண்ட
என்னுயிர் உழவர்களுக்கு ஆதரவாக
உழவு தொழிலை கண்டுகொள்ளாத அரசமைப்புக்கு
எனது கண்டன பொங்கல் கவிதை
இது
தொடர்புடைய கட்டுரை
எடுத்த இடம் திண்ணை
நன்றி திண்ணைக்கும் இந்த கட்டுரை ஆசிரியருக்கும்
ஏன் இந்திய விவசாயிகள் தற்கொலை செய்துகொள்கிறார்கள் ?
டாக்டர் வந்தனா சிவா
ஆந்திர பிரதேஷ் பஞ்சாப் மாநிலங்களுக்குப் பின்னர், விவசாயக் கடன்களும், விவசாயிகள் தற்கொலைகளும் இன்று உத்தரபிரதேசத்திலும் தொடங்கிவிட்டன. கதவுகளைத் தட்டிக்கொண்டிருக்கின்றன. முக்கியமாக உருளைக்கிழங்கு விவசாயிகளை. விவசாயிகள் உருளைக்கிழங்கு ஒரு குவிண்டாலுக்கு சுமார் 225 ரூபாய் செலவழித்தாலும், ஒரு குவிண்டால் உருளைக்கிழங்கு 40 ரூபாய்க்கே விற்கும்படிக்கு ஆகிறது. ஒவ்வொரு குவிண்டால் உருளைக்கிழங்கிலும் சுமார் 200 ரூபாய் நஷ்டம். ஒரு ஹெக்டேருக்கும் 55000 ரூபாயிலிருந்து சுமார் 65000 ரூபாய் வரை செலவாகிறது. இதில் விதைக்கு மட்டுமே சுமார் 40000 ரூபாய் செலவாகிறது.
நாடு முழுவதும் நடக்கும் விவசாயிகள் தற்கொலைகள் அவர்கள் எவ்வளவு கஷ்டங்களுக்கு நடுவே வாழ்வதற்குப் போராடுகிறார்கள் என்பதைக் காட்டுகிறது. 2000 வருடத்துவாக்கில் சுமார் 20000 விவசாயிகள் நாடுமுழுவதும், மட்டமான விதைகள், பயிர் நாசம், உற்பத்தி செய்யப்பட்ட உணவுப்பொருட்களின் விலை சரிவு, ஏறும் கடன், உற்பத்தி செய்ய ஆகும் அதிகமான செலவு ஆகியவை காரணமாக தற்கொலை செய்துகொண்டார்கள்.
உருளைக்கிழங்கு விவசாயிகளின் இந்த நெருக்கடிநிலைமை, தக்காளி உற்பத்தியாளர்கள், பருத்தி உற்பத்தியாளர்கள், எண்ணெய்வித்து உற்பத்தியாளர்கள் ஆகியோரின் நெருக்கடி நிலைமை போலவே நேரடியாக உலகவங்கி மற்றும் அது நடாத்தும் சுதந்திர வியாபாரக் கொள்கைகள் (W.T.O. driven trade liberalisation policies) காரணமாக வந்தது. புதிய விவசாயக் கொள்கைகள் இவற்றின் நேரடியான பிறப்புக்களே.
உலகமயமாதல் மற்றும் வியாபார தாராளமயமாக்கல் ஆகியவை பொதுவாகவே ஒரு பெரும் விவசாய நெருக்கடி நிலையையும், முக்கியமாக உருளைக்கிழங்கு நெருக்கடிநிலையையும் 3 நிலைகளில் உருவாக்கி இருக்கின்றன.
1. 'உணவுக்கு முதன்மை ' என்ற கொள்கையிலிருந்து 'வியாபாரம் முதன்மை ' என்ற மாற்றம். 'முதலில் விவசாயி ' என்ற கொள்கையிலிருந்து 'முதலில் தொழில் நிறுவனம் ' என்ற மாற்றம்.
2. பன்முகத்தன்மை, பலதொழில் முனைப்பு கொண்ட விவசாயத்திலிருந்து, ஒரே பயிர்களை நடுவது, எல்லாப் பயிர்களும் ஒரே மாதிரியாக இருப்பது, வேதி உரங்கள், மூலதனமயமாக்கப்பட்ட உற்பத்திமுறை, விதைகள் விற்பனையை தாராளமயமாக்கல் மூலம் உற்பத்தி செலவை அதிகரிப்பது ஆகியவை நோக்கிய மாறுதல்.
3. சந்தையை தாராளமயமாக்கி, சட்டங்களைத் தளர்த்தி, அரசாங்கம் விலையை நிர்ணயிப்பதிலிருந்து விலகியதால், விவசாய உற்பத்திப் பொருட்களின் விலை சரிவு.
***
1. 'முதலில் விவசாயி ' என்பதிலிருந்து 'முதலில் தொழில்நிறுவனம் ' என்ற மாற்றம்.
இன்று புதிய விவசாய கொள்கைகள், விவசாயியை தாங்கிப்பிடிக்கும் மான்யங்களை விலக்கிவிட்டு, புதிய விவசாயத் தொழில்நிறுவனங்கள், விவசாய உற்பத்திப்பொருட்களை பண்டங்களாக மாற்றும் தொழிற்சாலைகளுக்கு புதிய மான்யங்களைத் தருகின்றன. உருளைக்கிழங்கு நெருக்கடி பற்றிய விவாதத்தின் போது, உத்தரபிரதேச விவசாய மந்திரி, குளிர்பதன தொழிற்சாலைகளுக்கும், விவசாய்ப்பொருட்களைக் கொண்டுசெல்லும் தொழில்களுக்கும் கொடுக்கும் மான்யம் பற்றி குறிப்பிட்டார். இந்த மான்யங்கள் விவசாயிகளுக்குச் செல்வதில்லை. இவை எல்லாமும் வியாபாரிகளுக்கும், தொழில்நிறுவனங்களுக்கும் செல்கின்றன. பெப்ஸிகோ பஞ்சாபில் நுழைந்தது இந்த 'முதலில் தொழில்நிறுவனம் ' கொள்கையின் உதாரணம்.
தக்காளியின் சந்தைவிலை ஒரு கிலோவுக்கு 2 ரூபாயாக இருந்தபோது, பெப்ஸிகோ கம்பெனி விவசாயிகளுக்கு 50 பைசாவிலிருந்து 80 பைசாவரை தந்தது. ஆனால், அரசாங்கத்திடமிருந்து அந்த அளவைவிட 10 மடங்கு அதிகமாக அரசாங்கத்திடமிருந்து விவசாயப்பொருட்களைக் கொண்டு செல்வது காரணமாக மான்யமாகப் பெற்றது. உத்தரபிரதேச குளிர்பதனத்தொழில் சொந்தக்காரர்கள் உத்தரபிரதேச அரசிடமிருந்து மான்யமாக 50 கோடிரூபாய்களைப் பெற்றார்கள். இதுவும் விவசாயிகளுக்குச் செல்லும் மான்யம் அல்ல. ஒரு விவசாயி குளிர்பதன சொந்தக்காரருக்கு ஒரு மூட்டைக்கு சுமார் 120 ரூபாய் செலுத்துகிறார். குளிர்பதன சொந்தக்காரர்கள் இந்த நெருக்கடிநிலையில் பணம் பண்ண விலையைக் கூட்டிக்கொண்டு இருக்கிறார்கள். உத்தரபிரதேசத்தில் சுமார் 1 கோடியே 3 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியான உருளைக்கிழங்கு இருக்கும்போது, இது கடன் பட்ட விவசாயிகளிடமிருந்து வியாபாரிகளுக்கு செல்லும் நிதி அழிவு.
தாராளமயமாக்கலுக்குப் பிறகு வருடாந்தர பட்ஜெட்டுகள் தொழில்நிறுவனங்களுக்கு சாதகமாக அவர்கள் வரிகொடுக்க வேண்டாம் என்றும், அவர்கள் குளிர்பதன தொழில்சாலைகளைக் கட்ட மான்யமாகவும், உற்பத்திப் பொருட்களை ஏற்றுமதி செய்ய மான்யமாகவும், வியாபாரி விரும்பும் துறைமுகங்களுக்கு உற்பத்திப் பொருட்களை கொண்டு செல்லும் போக்குவரத்துக்கு மான்யமாகவும் மேலும் மேலும் ஏறிக்கொண்டிருக்கிறது. சமீபத்தில் அறிவிக்கப்பட்ட 5 வருட ஏற்றுமதி கொள்கை இவ்வாறு தொழில்நிறுவனங்கள் தங்கள் தான்யங்களை துறைமுகங்களுக்குக் கொண்டு செல்ல உதவுவதற்காக 100 கோடி ரூபாயை ஒதுக்கியிருக்கிறது. கூடவே, பொதுமக்களின் பணம் விவசாயிகளின் நிலத்தைக் கையகப்படுத்தி, துறைமுகங்களுக்குக் கொண்டு செல்ல சாலைகள் போடுவதற்காக செலவிடப்படுகின்றது.
2001 இல் கோதுமை ஏற்றுமதி அனுபவம், அரசாங்கம் மக்களிடம் கொண்டுள்ள அக்கறையின்மையை வலுவாக வெளிக்காட்டிவிட்டது. எஃப்.சி.ஐ (புஃட் கார்பரேஷன் ஆஃப் இந்தியா) ஒவ்வொரு டன்னுக்கும் சுமார் 8300 ரூபாய் ஆன கோதுமையை, (வெளியே சந்தை விலை 7000 ரூபாய்), இந்தியாவுக்கு அகில உலக சந்தை விலை ரூ 4300 ரூபாய் என்று உலகச் சந்தை நிலவரம் தெரிவித்தது.
கோதுமையை உலகச் சந்தை -குறைந்த - விலைக்கு விற்க ஒப்புக் கொண்டது மட்டுமின்றி , ராஜ்புராவிலிருந்து ஜாம்நகருக்கு கோதுமையைக் கொண்டு செல்லவும் மானியம் தரப்பட்டது. கர்கில் கம்பெனிக்கு கமிஷன் தரப்பட்டது. இதனால் ஃபுட் கார்பொரேஷனுக்கு குவிண்டாலுக்கு 130 ரூ மானியமாய்க் கிடைத்தது. ஆனால் உழவர்களுக்கு எதுவும் கிட்டவில்லை. கர்கில் கம்பெனி இந்திய கோதுமையை ஏற்றுமதி செய்வதற்காக வாங்குவதில் முன்னிலையில் உள்ளது.
2. ஒரே பயிர் தரக்கட்டுப்பாடு பெயரில் (Monocultures and Standardisation )
புதிய விவசாயக் கொள்கையின் பாதிப்பு என்னவென்றால் - தானியங்களிலிருந்து நகர்ந்து காய்கறிகள், அழுகிவிடக் கூடிய பயிர்களை நோக்கி நகர்ந்தது. தானியங்கள் உள்ளூரிலேயே சேமிக்கவும் பாதுகாக்கவும் முடியும். ஆனால் தக்காளி உருளைக்கிழங்கு போன்றவை உடனே விற்றாக வேண்டும். இதனால் உணவு தன்னிறைவுக்குப் பதிலாக விவசாயிகளின் அச்சத்தை அதிகரிக்கலாயிற்று. இப்படி ஒரே பயிரை வலியுறுத்தும் செயலை 'வேறுபயிர்கள் ' -diversification- என்று அழைக்கும் இரட்டைப் பேச்சுப் பொய்யை என்னவென்று சொல்ல ?
விவசாய அமைச்சர் ஹ்உகம் சிங் யாதவ், உத்திரப் பிரதேச விவசாய அமைச்சர் ஹ்உகும் சிங் இருவருமே விவசாயப் பொருட்களை நுகர்பொருளாய் மாற்றிப் பதப்படுத்தும் தொழில் ஒரே விதத்தில் தரத்தில் இயங்காததே , உருளைக்கிழங்கு விவசாயிகள் கஷ்டப் படும்போது கொள்முதல் செய்ய இயலாமைக்குக் காரணம் என்று தெரிவித்தனர். ஆனால் இந்திய சமையலறையில் ஒரே அளவில் உருளைக் கிழங்கு இருக்க வேண்டிய அவசியமில்லை. நம் 'உருளைக் கிழங்கு மசாலா 'வும், 'உருளைக் கிழங்கு பரோட்டாவும் ' , செய்ய உருளைக்கிழங்கு ஒரே அளவில் இருக்க வேண்டாம். ஆனால் மக்டொனால்ட் வறுவல் தயாரிக்க ரஸ்ஸட் கம்பெனியின் ஒரே அளவு உருளைக் கிழங்கு தேவை.
மக்டொனால்ட் கம்பெனிக்கு ரஸ்ஸட் பர்பாங்க் தேவைப்பட்டது. ஏனென்றால் அது பெரிய கம்பெனி. மக்டொனால்ட் விதிகளின் படி 40 சதவீத வறுவல்கள் 2-3 அங்குலம் நீளமாகவும், 40 சதவீதம் மூன்று அங்குலத்திற்கு மேலாகவும் இருக்க வேண்டும். இந்த நிபந்தனைக்கு ரஸ்ஸட் விளைச்சல் ஒத்துப் போகிறது. உணவுத் தொழிற்சாலைகளின் தேவை- ஒரே பயிர், ஒரே விதமான விளைச்சலைக் கோருகிறது. 'பிற பயிர்கள் ' diversification- என்ற பெயரில் ஒரே பயிரைப் பயிரிட வற்புறுத்தப் படுகிறது. விதைகள் கம்பெனிகள் வலுப்பெறுவது, ஒரே விதமான பயிர் பயிரிடப்படுவதும் ஒன்றுடன் ஒன்று இணைந்தது. இன்று அமெரிக்காவில் உருளைக் கிழங்கின் 12 வகைகள் தான் உள்ளன. 2000 வகைகள் இருந்த இடத்தில் இப்படி. இதிலும் 40 சதவீதம் ரஸ்ஸட் பர்பேங் கம்பெனியுடையது. 1970-ல் 28 சதவீதமாய் இது இருந்தது. ஏக்கர் கணக்கில் ஒரே விதமான பயிர் இருபப்து - அயர்லாந்தில் ஏற்பட்ட உருளைக்கிழங்கு பஞ்சம் போன்ற ஒரு நிலையைத் தோற்றுவிக்க வல்லது.
ஒஇரே விதமான பயிர் உற்பத்தி செய்வது பெரும் விளைச்சலைக் கொடுக்கும் என்று கணக்கிட்டார்கள். உலக உற்பத்தியை விடவும் இந்தியப் பயிர் உற்பத்தி குறைவு என்று பெப்சி தான் வினியோகித்த விளம்பரத்தில் குறிப்பிட்டது. பெப்சியின் ஒரு பிரிவான சப்ரிடாஸ் என்ற விதை உற்பத்தி தொழிற்சாலை, உருளைக்கிழங்கை 58 சதவீதம் அதிகரிக்கும் என்று விளம்பரம் செய்தார்கள் - மூன்று வருடத்தில் உருளைக்கிழங்கு ஹெக்டேருக்கு 19-லிருந்து 30 டன்னாக உயரும் என்று சொன்னார்கள்.
இஇந்தியாவில் இதனை ஒத்த சாகுபடிகள் பெறப்பட்டுள்ளன. ஜலந்தரில் மத்திய உருளைக்கிழங்கு ஆய்வு மையத்தின் துணையுடன் ஹெக்டேருக்கு 40 டன் வரை சாகுபடி கிட்டியும் உள்ளது. குஜராத்தில் 50-60 டன்கள் உற்பத்தியும் கிடைத்துள்ளது. முதல் பசுமைப் புரட்சியின் போதும் பாரம்பரிய விதைகளை மறுத்து பெரும் உற்பத்தி விதைகளை அறிமுகம் செய்தது போலவே , ' வேறு வேறு பயிர்கள் ' என்ற பெயரில் விலைஏற்றிய உருளைக்கிழங்கு விதைகளை அறிமுகம் செய்கிறார்கள். இதனால் விவசாயிகள் கடனாளியாகிறார்கள்.
வர்த்தகத்தை முன்னிறுத்திய விவசாயத்தில் ஒரே விதமான பயிர் விதைகளும், விதைகளின் மீது ஒரு குழுமம் செலுத்தும் மேலாண்மையும் , உற்பத்திச் செலவை அதிகரிக்கின்றன.
3. விலைக் கட்டுப்பாடு
அரசாங்கம் அவ்வப்போது கொள்முதல் விலை, கொள்முதல் மையம் என்று சும்மாவேனும் அறிவித்தாலும், அரசின் விலைக்கட்டுப்பாடு, உலகமயமாதலின் பின் மறைந்தே போயிற்று. உருளைக்கிழங்கிற்கு குவிண்டால் ஒன்றுக்கு 195 ரூபாய் என்று விலை அறிவித்தது அரசு. எட்டு கொள்முதல் மையங்கள் திறக்கப் படும் என்றும் அறிவித்தது. ஆனால் கொள்முதல் நடைபெறவில்லை. உழவர்களுக்கும் சரியான விலை கிடைக்கவில்லை. இதனால் உருளைக்கிழங்கு விலை ரூ 40லிருந்து 100 வரையில் ஆயிற்று. விவசாயப் பொருட்களை உள்ளிடாய்க் கொண்டு உருளைக் கிழங்கு வறுவல் போன்றவை உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளுக்கு இது பெரும் பரிசாக ஆயிற்று. கிலோ 40 பைசாவிற்கு வாங்கி 200 கிராம் வறுவல் 10 ரூபாய் என்று இவர்கள் விற்கிறார்கள். 200 கிராம் உருளைக்கிழங்கு விலை 8 பைசா. 131 லட்சம் மெட்ரிக் டன் உற்பத்தியான உருளைக் கிழங்கினால் இந்தத் தொழிற்சாலைகள் அடைந்த லாப்ம் 200 கோடி ரூபாய். பெப்சி மக்டொனால்டுக்கு கொள்ளைலாபம். உழவர்களுக்கு தற்கொலை.
பஞ்சாபில் உருளைக் கிழங்கு பயிரிடும் விவசாயிகளின் நிலைமையும் இதே போல் தான் உள்ளது. உள்ளீடுகளின் விலையேற்றதினால், விற்று லாபம் காண முடியாமல் தவிக்கிறார்கள் என்று ட்ரிப்யூன் செய்தி சொல்கிறது.
பெரும் நட்டத்தால் உருளைக்கிழங்கு விவசாயிகள் தம்முடைய சொத்துகளை விற்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளார்கள். இப்படி விற்றுத்தான் வங்கிக்கடனையும், கமிஷன் ஏஜெண்டுகளிடம் பெற்ற கடனையும் அடைக்க வேண்டும்.
கில் காலான் கிராமத்தில் இருக்கும் சோட்டா சிங் (பெயர் மாற்றப் பட்டுள்ளது) சொன்னார்: ' 20 ஏக்கரில் உருளைக் கிழங்கு பயிரிட்டேன், 10 ஏக்கர் என்னுடையது, பத்து ஏக்கர் குத்தகைக்கு எடுத்தது. ஒரு ஏக்கருக்கு 12000 ரூபாய் செலவு செய்தேன், ஒரு குவிண்டாலுக்கு 100 ரூபாய் என்று விற்றால் கூட எனக்கு ஒரு லட்சம் நட்டமாகும். ' அவருடைய கடன் 11 லட்சத்தை அடைக்க வேண்டி ஒரு ஏக்கரை விற்கப் போவதாய்ச் சொன்னார்.
இன்னொரு விவசாயி ஷவிந்தர் சிங் உருளைக்கிழங்கு பயிரிட்டால் மூன்று லட்சம் கடனை அடைத்துவிடலாம் என்று கணக்கிட்டு உருளைக்கிழங்கு பயிர் செய்வதாய்ச் சொன்னார். உருளைக் கிழங்கு நல்ல வருமானம் தரும் பயிர் என்பதால். ஆனால் இப்போது அவர் கடன் ஐந்து லட்சத்தைத் தாண்டிவிட்டது. சரியான விலை கிடைக்காததால் , தினசரி செலவுக்காகவே மிகக் குறைந்த விலைக்கு விற்கவேண்டியதாயிற்று. ட்ரிப்யூனில் சந்த ர் பிரகாஷ் இது பற்றி ' வியாபாரிகள் கூட்டணி அமைத்து விவசாயிகளைச் சுரண்டுகிறார்கள் ' என்று கட்டுரை (ஏப்ரல் 3, 2003) எழுதியுள்ளார்.
அக்டோபர் 2000-ல் ஹரியானா கிடங்குகளில் வந்த 10 லட்சம் கோதுமை, தனியாட்களுக்கு விற்க வேண்டியதாயிற்று. காரணம் அரசாங்கம் கொள்முதல் செய்ய முன்வரவில்லை. இதில் 47 சதவீத அளவு விற்பனை செய்யப்பட்டது நட்டத்திலேயே: அதாவது நிர்ணயிக்கப்பட்ட விலைக்கு 14 சதவீதம் குறைவான விலையில். 510ரூ நிர்ணய விலை என்றால், தனியாட்களுக்கு 400 ரூபாய்க்கு விற்கவேண்டிய கட்டாயம்.
பஞ்சாபில், விவசாய இடுபொருள்களை வாங்குவதற்காக தம்முடைய நகையையும், மாடு-ஆடுகளையும் அடகு வைத்தது மட்டுமல்லாமல், கமிஷன் ஏஜெண்டுகளிடமும், கடன் கொடுப்பவரிடமும் , தம்முடைய அடிப்படை உணவுத்தேவைகளுக்காக கடன் வாங்கவேண்டியதாயிற்று. இவர்களின் அறுவடை அடிமாட்டு விலைக்கு விற்கத் தயாராய் இருந்தனர். அக்டோபர் 11-ல் சமனா மாவட்டத்தில் காக்ரா கிராமத்தில் அவதார் சிங் தற்கொலை செய்து கொண்ட செய்தி இப்படிப் பட்ட தற்கொலைகளில் முதல் செய்தியாய் வந்தது. தன் அறுவடையை 400ரூபாய்க்குக் கூட ஒரு வாரமாகியும் அவரால் விற்க முடியவில்லை.
மார்ச் 2001, கடன் தொல்லையால் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள் என்று ஒப்புக் கொள்ளும் முதல் மானிலமாயிற்று.
உலகமயமாதல், விவசாயம் நாசமாவதினால் விவசாயிகள் உயிர் குடிக்கிறது. விவசாயம் சார்ந்த வணிகத்திற்கு இது உதவுகிறது, இருப்புகள் அதிகம் என்றும், உள்நாட்டுச் சந்தையில் தேவைகள் இல்லை என்று பிரமையை உருவாக்கி இந்த வணிகம் கொள்ளை லாபம் ஈட்டுகிறது.
வியாபாரமே முதன்மை என்ற கொள்கை விவசாயிகளுக்குத் தற்கொலைக்குச்சமம் என்பது மட்டுமல்ல, நாட்டின் உணவுப் பாதுகாப்பின் தற்கொலைக்குச் சமமே.