முத்துகுமாரின் இறுதி ஊர்வலம் -மூண்டெழுமா கணல்

நன்றி: தோழர் ஸ்டாலின் மூலம்:http://vinavu.wordpress.com/2009/01/31/eelam15/

அவநம்பிக்கையால் நிரம்பிய சூழலிலும் நம்பிக்கையூட்டும் தருணம் எப்போதாவது தோன்றத்தான் செய்கின்றது. ஆயினும் அது தோன்றி மறையும் ஒரு தருணம் மட்டுமா, அன்றி புதியதொரு நிகழ்வுப் போக்கின் துவக்கமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்கவேண்டியிருக்கிறது.
இப்பதிவை எழுதும் இந்த நேரத்தில் முத்துக்குமாரின் இறுதிப் பயணம் கொளத்தூரிலிருந்து பெரம்பூரைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. பல்வேறு அமைப்பினரும் அமைப்பு சாராத தமிழ் உணர்வாளர்களுமாக பல்லாயிரக்கணக்கானோர் காட்டாற்று வெள்ளம் போல் கரை புரண்டு செல்ல, அந்த வெள்ளத்தின் மீது மிதந்து செல்கிறான் முத்துக்குமார்.
பேரணியின் துவக்கத்தில் பாதையெங்கும் மலர் தூவிச்செல்லும் ஒரு வாகனம். அதனைத் தொடர்ந்து எமது தோழர்கள் ( ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு ) முழக்கமிட்டுச் செல்கிறார்கள். இந்திய மேலாதிக்கத்துக்கு எதிரான முழக்கங்கள். மேலாதிக்கத்தின் நோக்கத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். ஈழத்தமிழ் மக்களின் சுய நிர்ணய உரிமைக்கு ஆதரவான முழக்கங்கள். இரண்டு நாள் போர் நிறுத்தம் எனும் பித்தலாட்டத்தை அம்பலப்படுத்தும் முழக்கங்கள். காஷ்மீரிலும் வட கிழக்கிந்தியாவிலும் தேசிய இனங்களை நசுக்கும் இந்திய இராணுவத்துக்கு எதிரான முழக்கங்கள். தமிழின விரோத பார்ப்பனக் கும்பலுக்கு எதிரான முழக்கங்கள்.
அடுத்த வரிசையில் வருகிறார்கள் கட்சித் தலைவர்கள். முன்னே அணிவகுத்துச் செல்லும் முழக்கங்கள் பலவற்றின் கருத்துடன் முரண்படும் தலைவர்கள். இந்த தன்னெழுச்சியின் வெள்ளத்தில் தம்மையும் தம் அடையாளத்தையும் பேணிக் கரைசேர்வதெப்படி கொள்வதெப்படி எனும் சிந்தனையில் ஆழ்ந்தபடி நடைபோடும் தலைவர்கள்.
அவர்களைத் தொடர்ந்து வருகிறது கருத்துகள் ஏதும் எழுப்பாத பாண்டு வாத்தியம்.
அதன் பின்னே முத்துக்குமாரைத் தாங்கிய வாகனம். தமிழகத்தின் மவுனத்தையும், கட்சிகளின் துரோகத்தையும் கண்டு மனம் வெதும்பி, தீப்பாய்வது என்ற முடிவில் முத்துக்குமார் எழுதிய கடிதம் அவனுடைய சிந்தனையோட்டத்தின் தடயங்களைக் காட்டுகிறது. மரிக்குமுன்னர் தன் இறுதி யாத்திரையை அவன் மனக்கண்ணில் ஓட விட்டிருப்பான். ஐயமில்லை. அந்தக் காட்சி இதுதானா, இதனினும் வலிதா?… யாரறிவார்? மரணம் விட்டுச்செல்லும் புதிர்களில் இதுவும் ஒன்று.
முத்துக்குமாரின் பின்னே பல்லாயிரக்கணக்கில் மக்கள் வெள்ளம். பல்வேறு அமைப்பினர்…. பல்வேறு முழக்கங்கள்…. குமுறி வெடிக்கும் கதறல்கள்…. கோபங்கள்.
"ராஜபக்சே ஒழிக! பொன்சேகா ஒழிக! காங்கிரசு ஒழிக! ஓட்டுக்கட்சி துரோகிகள் ஒழிக! பிரபாகரன் வாழ்க! புலிகளின் தாகம் தமிழீழத் தாயகம்! சோனியாவே இத்தாலிக்கு ஓடு! ஜெயலலிதா ஒழிக! போர்நிறுத்தம் செய்! தமிழர்களைக் கொல்லாதே!"
ஒழுங்கமைக்கப்படாத இரைச்சலாக, ஒழுங்கமைக்கப்பட்ட கோபமாக, தன்னை முன்னிறுத்தும் நடிப்பாக, தன்னுணர்விழந்த கதறலாக.. முத்துக் குமாரைத் தொடர்கிறது மக்கள் வெள்ளம். கட்சிக் கொடிகளோ பதாகைகளோ வேண்டாம் என்பதை எல்லோரும் ஆரம்பத்தில் கடைப்பிடித்திருப்பதாக கூறுகின்றனர் பேரணியில் சென்று கொண்டிருக்கும் எமது தோழர்கள். ஆயினும் பின்னர் பல்வேறு அமைப்புக்களின் பதாகைகள் ஊர்வலத்தை வண்ணமயமாக்கின.
கொடிகள் இல்லையெனினும் கட்சிகள் இருக்கத்தானே செய்கின்றன? பதாகைகள் இல்லையெனினும் கொள்கைகள் இருக்கத்தானே செய்கின்றன? "என்னுடைய உயிரை ஆயுதமாக ஏந்துங்கள்" என்று தன் உயிலில் குறிப்பிட்டிருந்தான் முத்துக் குமார்.
ஆயுதம் ஒன்று இல்லாததனால்தான் தமிழகத்தில் போர் தொடங்கவில்லை என்று அவன் எண்ணியிருக்க வேண்டும். அல்லது தன் உடல் எனும் ஆயுதமே போரையும் போர்க்குணத்தையும் தமிழகத்தில் தோற்றுவித்துவிடுமென்று அவன் எதிர்பார்த்திருக்க வேண்டும்.
அந்த எதிர்பார்ப்பு நிறைவேறுமா என்பதுதான் கேள்வி.
நேற்று முன்தினம் இரவு முத்துக்குமாரின் உடலை கொளத்தூர் வணிகர் சங்க கட்டிடத்திற்குக் கொண்டு வந்தார் வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையன். நேற்று காலை 9 மணி முதல் தலைவர்கள் வரத்தொடங்கினர். மருத்துவர் ராமதாசு, திருமா, நெடுமாறன், வைகோ, தா.பாண்டியன், நல்லகண்ணு என பாதுகாப்பு இயக்கத்தை சேர்ந்த அனைவரும் வந்து அஞ்சலி செலுத்திய பின் வணிகர் சங்கக் கட்டிடத்தினுள் சென்றனர். வெளியே முத்துக்குமாரின் உடல் வைக்கப்பட்டிருந்த இடத்தில் கூட்டம் அலைமோதிக் கொண்டிருந்தது. செங்கல்பட்டில் உண்ணாவிரதமிருந்து கைது செய்யப்பட்ட மாணவர்கள் பேசிக்கொண்டிருந்தனர். பச்சையப்பன் கல்லூரி வாயிலில் காலை மறியல் போராட்டம் செய்த பு.மா.இ.மு தோழர்கள் ஊர்வலமாக முழக்கமிட்டபடி வந்து கொண்டிருந்தனர்.
அஞ்சலி செலுத்துவதற்காக இரும்புத் தொப்பி அணிந்த போலீசார் சகிதம் மேடையில் ஏறினார் புரசை திமுக எம்.எல்.ஏ பாபு. போலீசை மேடையை விட்டு இறங்கச் சொன்னார்கள் எமது தோழர்கள். "என் பாதுகாப்புக்குத்தான் அவர்கள் வந்திருக்கிறார்கள்" என்றார் எம்.எல்.ஏ. "எங்கள் மீது நம்பிக்கை இல்லாமல் போலீசு பாதுகாப்பா?" என்று மக்கள் கூட்டம் கொந்தளிக்க அந்த இடத்திலிருந்து ஓடினார் எம்.எல்.ஏ. ஆள் படை சகிதம் பந்தாவாக வந்து இறங்கிய அதிமுக மதுசூதனன் நிலைமையைப் புரிந்து கொண்டு, படை பரிவாரங்களை ஓரமாக நிற்க வைத்துவிட்டு, தனியாக வந்து மாலையைப் போட்டுவிட்டு அவசரம் அவசரமாக இடத்தைக் காலி செய்தார்.
இறுதி ஊர்வலத்தை எப்படி நடத்துவது என்ற ஆலோசனை உள்ளே நடக்கத் தொடங்கியிருந்தது. இன்றைக்கே, (அதாவது 30ம் தேதி வெள்ளிக்கிழமையன்றே) அடக்கம் செய்து விடலாம் என்பது தலைவர்களின் ஒருமனதான கருத்து. "குறைந்த பட்சம் ஒரு நாளாவது வைத்திருந்து மக்களை ஏராளமாகத் திரட்ட வேண்டும். அவருடைய மரணத்தின் அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற வேண்டும்" என்பது ம.க.இ.க தோழர்கள் முன்வைத்த கருத்து. வணிகர் சங்கத் தலைவர் வெள்ளையனும் இதே கருத்தைக் கொண்டிருந்தார். "இங்கிருந்து ஊர்வலமாக தூத்துக்குடி எடுத்துச் செல்லலாம்" என்று முத்துக்குமாரின் உறவினர் சிலர் கருத்து கூறினர்.
இது தொடர்பான விவாதத்தில் தலைவர்கள் கூறிய கருத்துகள் கண்ணாடிப் பேழைக்குள் உறங்கிக் கொண்டிருந்த முத்துக் குமாரின் காதுகளில் விழுந்திருக்க வாய்ப்பில்லை.

--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

4 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post