தமிழ் வலையுலகில் முற்போக்காளராவது எப்படி ?

எடுத்த இடம் :http://kaargipages.wordpress.com

இது கொஞ்சம் சிக்கலான மேட்டர் தான். முதலில் எழுத்தில் நடிப்பது எப்படி என்று ஓரளவுக்காவது தெரிந்து வைத்திருத்தல் நலம். அப்புறம் இந்த பிரபஞ்சத்தின் கீழ் வரும் எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் ஏதாவது ஒரு கருத்தைச் சொல்லித் தொலைக்கும் 'தில்' மிகவும் அவசியம். இன்னுமொரு முக்கிய விசயம் என்னவென்றால்.. "கட்டற்ற சுதந்திரம்" போன்ற எந்த ஒரு அர்த்தமும் இல்லாத வார்த்தைகளாகப் பார்த்து ஒரு பத்து பதினைந்து வார்த்தைகளைப் பிடித்து வைத்துக் கொள்ள வேண்டும். இந்த வார்த்தைகளை ஒரு தாளில் எழுதி கண்ணுக்குத் தெரியும் ஏதாவது ஒரு இடத்தில் ஒட்டி வைத்துக் கொள்ளலாம்.. இது பதிவெழுதும் போது மறந்து விடாமலிருக்க
உதவும்.

இனி இந்த முற்போக்கு வேடம் போடும் போது முக்கியமாய் கவனிக்க வேண்டிய சமாச்சாரங்களைப் பற்றி பார்க்கலாம்…

முன்பே சொன்ன மாதிரி நாட்டில் கழுதை பேண்டது, பன்றி மோண்டது என்று என்ன நடந்தாலும் அதில் நம்முடைய கருத்து என்று ஏதாவது ஒரு கன்றாவியை சொல்லித் தொலைத்து விடுவது அவசியமானது. இடையிடையே, "எனக்கு கம்யூனிஸம் பிடிக்கும் ஆனால் கம்யூனிஸ்டுகளைப் பிடிக்காது. ஏங்கெல்ஸ் ஒரு தெய்வப்பிறவி ஆனால் மார்க்ஸ் கொஞ்சம் சரியில்லை. பெரியாரை நான் காதலிக்கிறேன் - இந்த பெரியாரிஸ்டுகள் ரொம்ப மோசம். ஓஷோவை நான் காதலிக்கிறேன் - ஆனால் எனக்கு இடது கண் மட்டும் தான் அவர் ( ஏன்னா.. வலது கண்ணைத்தான் ஏற்கனவே பெரியாருக்கு பட்டா போட்டாச்சே)" இப்படி படிப்பவன் மயிரைப் பிய்த்துக் கொள்வது போல எதையாவது உளரிக் கொண்டே இருக்கவேண்டும்.

அவ்வப்போது "ஆயிரம் வருசத்துக்கு முன்னே போவோம்", "ரெண்டாயிரம் வருசத்துக்கு பின்னே போவோம்", "கற்பனைக் கழுதைக்கு காகிதம் போடுவது எப்படி?" என்பது போன்ற தலைப்புகளில் எதையாவது கிறுக்கி வைத்துக் கொள்வது மிக அவசியம். எக்குத் தப்பாய் உள்ள பூந்து கொண்ட எவனையும் ஒரு நிமிடம் "இப்ப நான் எங்கே இருக்கேன்?" என்று பேந்தப் பேந்த முழிக்க வைத்து விடுவதில் தான் நம் தொழில் ரகசியமே அடங்கி இருக்கிறது.

யாரும் நம்மை சீந்தாமல் விட்டு விடும் நிலை மிகவும் ஆபத்தானது. அப்படி ஏதாவது ஒரு நிலைமை ஏற்படுவது போல் வாசனை தென்பட்டால் "18 வயதுக்கு மேல் மட்டும் உள்ளே வரவும்" என்னும் மசால்வடை டிஸ்கியைத் தலைப்பில் போட்டு விட்டு, உள்ளே ஏதாவது ஒரு மூன்று X போட்ட இனையதளத்தில் இருந்து உருவிய ஆபாச வீடியோ காட்சியை ஓட விட்டால் போதும். எதிர்த்து எவனும் - "ஏண்டா பெண்மையைப் போற்றுவோம்னு நீ தானடா சொன்னே?" என்று எக்குத்தப்பாய் கேட்டு விட்டால், "அப்ப நீ பாத்தே தானே? கக்குடா எல்லாத்தையும்.." என்று முற்போக்காகப் பேசி சமாளித்துக் கொள்ளலாம். இல்லையென்றால் "அழகை ஆராதிக்கத்
தெரியாத தலைகீழாய்த் தொங்கும் முண்டங்கள்" என்று அடுத்த பதிவிலேயே சொல்லி நம்மை ஒரு 'கலா' ரசிகனாகவும் காட்டிக் கொள்ளலாம்.

மூத்திரச் சந்தில் ஒன்னுக்குப் போனது, கக்கூசில் கக்கா போனது, பாரின் விஸ்கி குடித்தது, தம்மடித்தது, சட்டை போடாமல் சலம்பல் பண்ணியது என்று வகை தொகையே இல்லாமல் செய்த அத்தனை அல்பத்தனங்களையும் வீடியோ படக்காட்சிகளாக பதிவு செய்து
கொள்வது நல்லது. ஏனென்றால் கற்பனைக் கழுதை காலை நொண்டும் சமயங்களில் இந்த வீடியோக்களைத் தனித்தனியாக ரிலீஸ் செய்து பார்ப்பவர்களைப் பதற வைத்து விடலாம். நமக்கும் பொழுது குஷாலாகப் போகும். வீடியோக்கள் கையைக் கடிக்கும் போது நமீதாவோ
சகீலாவோ இல்லை வேறு ஏதாவது ஒரு கழிசடையோ பனியனைக் கழட்டுவது மாதிரியான "தூய கலைப்" படங்களை எங்காவது சுட்டுப் போட்டுக் கொள்ளலாம். இந்தப் பின்ன-வீனத்துக்கும் (பின்காலனீயம்!?) இப்படிக் கழட்டிப் போடப்பட்ட பனியன்களுக்கும் விட்ட குறை தொட்ட குறை ஏதோ இருந்து தொலைப்பதால் நம்மை 'அந்த' மாதிரி பதிவர்களும் "இவனை நம்ம லிஸ்டில் சேர்த்துக் கொள்ளலாமா வேண்டாமா?" என்று மண்டையைக் குடாய்ந்து கொண்டே இருப்பார்கள்.

இத்தனையையும் செய்து விட்டு வலையுலகில் "அடுத்தவன்" செய்யும் ஆபாசத்தை எதிர்க்காவிட்டால் எப்படி? அதனால் பார்ட்டைமாக
அதையும் எதிர்த்து ஒரு பத்துப் பதினைந்து பதிவுகள் போட்டு வைத்துக் கொள்ளலாம். பிற்காலத்தில் எழுதப்படும் ( வேற எவன் எழுதுவான் நாமே தான்) இந்த ஆபாச எதிர்ப்பு வரலாற்றில் நாமக்கும் ஒரு இடம் கிடைத்தது போலாகி விடும். இப்படி ஆபாசத்தை எதிர்த்த கையோடு செக்ஸை எப்படி கண்டபடி கொண்டாடுவது என்றும் இடையிடையே சொல்லி வைக்கலாம். எவனும் நம்மைப் பார்த்து, "அப்ப உங்க வீட்ல "எல்லாமே" நடுத்தெருவிலே தான் கொண்டாடுவீங்களா?" என்றெல்லாம் கேட்டு விடமாட்டான். பின்னே 'அதென்ன' பொங்கலா கொண்டாட?

எந்த இமேஜும் இல்லாத பதிவர் என்ற இமேஜ் தான் இருப்பதிலேயே ரொம்ப முக்கியமான ஒன்று. கூடவே, "தத்துவமே இல்லாத தத்துவம்", "எந்த இஸமும் இல்லாத இஸம்" இப்படி சில தத்துவங்களையும் இஸங்களையும் உருவாக்கிக் கொள்வது மிகவும் சிறப்பானது. இப்படி படாத பாடுபடெல்லாம் படுவது எதற்காக?… கரெக்ட்! "க்ரூப்பிஸமே இல்லாத ஒரு இஸம் கொண்ட ஒரு க்ரூப்பை" உருவாக்கத்தான். இந்த க்ரூபிற்கு பல்வேறுபட்ட "வரலாற்றுக் கடமைகள்" இருக்கிறது. முக்கியமானதை அடுத்த பத்தியில் சொல்கிறேன். உடனடி வரலாற்றுக் கடமை பற்றி மட்டும் இந்தப் பத்தியில். "காலையில் எனக்கு நீளமா குசு பிரிந்தது" என்று நாம் ஒரு பதிவு போடுகிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள், அதர் ஆப்சனை பயன்படுத்தி ஊடுருவும் நம்ம க்ரூப் மெம்பர் பிடல் காஸ்ட்ரோ பெயரில் வந்து "தோழர், எனக்கு படாரென்று பிரிந்தது. உங்களுக்கென்ன புஸ்ஸென்றா?" என்று "விவாதத்தைத்" தொடங்கி வைப்பார். அடுத்து ஜார்ஜ் புஸ் வந்து "யார்ராவன் என்னோட பேரை இழுக்கறது" என்று சீறுவார். பின்னாடியே சேகுவேரா பாய்ந்து வந்து "பார்த்தீர்களா தோழர் இந்த ஏகாதிபத்திய திமிரை?" என்று பதறுவார். இப்படியாக கும்மியடிப்பது கூத்தடிப்பது என்று சமூகத்துக்குத் தேவையான சகலத்தையும் நமது மெம்பர்களே கவனித்துச் செய்து கொள்வார்கள்.

நமது கீபோர்டு சமூகத்துக்காக இப்படி மாடாய் உழைத்து ஓடாய்த் தேய்ந்த பின்னும் நன்றியில்லாத இந்த வலைச் சமூகம் நம்மை புறக்கனிக்கும் ( ஹிட் கவுண்டர் ஏறலைன்னா பின்ன இன்னா அர்த்தம்?) ஆபத்து இருக்கத்தான் செய்கிறது. அப்படி ஏதாவது ஒரு சமூகக் கொடுமை நமக்கு நேர்ந்து விட்டால்…? "மன வருத்தத்துடன் என் எழுத்துக்களுக்கு நிரந்தர ஓய்வு தருகிறேன்" என்று ஒரு பதிவைப் போட்டு விட்டு, "அக்கா நான் போறேன்", "அண்ணே நான் போறேன்", "மதினி நான் போறேன்", "ஐயா நான் போறேன்", "தாய்க்குலமே நான் போறேன்", "தம்பிமார்களே நான் போறேன்", "ஒன்னு விட்ட பெரியப்பா நான் போறேன்"  "ரெண்டு விட்ட சித்தப்பா நான் போறேன்" "மூனு விட்ட மாமா நான் போறேன்" "நாலு விட்ட அத்தே நான் போறேன்" என்று சில பல பின்னூட்டங்களை சிதற விட வேண்டும். இப்போது தான் மேலே நாம் உருவாக்கிய "க்ரூபிஸமே இல்லாத க்ரூப்பின்" வரலாற்று முக்கியத்துவம்  வாய்ந்த அந்த வரலாற்றுக் கடமை ஆரம்பமாகிறது. ஒவ்வொருத்தராக ஓடி வந்து "ஐயையோ போகாதீங்க தோழர்", "நீங்க மட்டும் திரும்பி வர்ரேன்னு சொல்லைன்னா நான் டீக்குடித்துக் கொள்வேன்", "ஒரு அப்பாவா சொல்றேன், திரும்ப வந்துடுங்க ப்ளீஸ்" என்றெல்லாம் பாசத்தை பிழிந்து விடுவார்கள்.

நாமும் கொஞ்சம் பிகு பன்ன வேண்டும். அதிகமில்லை ஜெண்டில்மேன், ஜஸ்ட் ஒரு மூணு மணி நேரத்துக்குத் தான். பதிவைப் போட்டோ மா.. மார்னிங் ஷோ போனோமா( போறேன்னு சொன்னதே அங்க தானே!)… திரும்பி வந்து அடுத்த பதிவைப் போட்டு விட வேண்டும். இல்லையென்றால் "சர்தான் போடா நாயே" என்று நம்மைக் கழட்டி விட்டு விடும் அபாயம் நிறைந்த விளையாட்டு இது. "ஆப்ரிக்காவில் இருந்து தந்தி வந்தது", "அண்டார்டிக்காவில் இருந்து டிரங்கால் வந்தது" "செவ்வாய் கிரகத்தில் இருந்து டிரங்கு பெட்டி வந்தது" என்று எதையாவது சொல்லிக் கொள்ளலாம். காரணமா முக்கியம்? "போனதற்கும்", "வந்ததற்கும்" கவிதைகள் எல்லாம் கூட வரும். ரொம்பவே சுவாரஸ்யம் தரும் ஆபத்தான விளையாட்டு இது. எச்சரிக்கையாக விளையாட வேண்டும்.

திரும்பி வந்த பின்? பழைய விளையாட்டுகளைக் கொஞ்சம் ஒதுக்கி வைத்து விட்டு ( இதற்கும் அதிகமில்லை ஜெண்டில்மேன். ஒரு மூணு பதிவுக்குத் தான்) பதிவுலகத்தை அடுத்த கட்டத்துக்குக் ஜாக்கி போட்டு உயர்த்தும் நம்முடைய வரலாற்று லட்சியத்தை செயல்முறைப் படுத்த ஆரம்பித்து விட வேண்டியது தான். "புகைப்படம் எடுப்பது எப்படி?", "சோறு தின்பது எப்படி?" "தின்ற பின் முக்காமல் முனகாமல் கக்கா போவதற்கு என்ன செய்ய வேண்டும்?" "போன பின் சரியாக எப்படி கழுவுவது?" என்று பல்வேறு பட்ட அறியாமையில் மூழ்கிக் கிடக்கும் (பதிவுலக)மக்களுக்கு ( ஒட்டு மொத்தமா கூட்டிக் கழிச்சா ஒரு முன்னூனூனூறு பேர் தேறுவாங்க!) பயன்படும் பதிவுகள் சிலவற்றை அள்ளித் தெளித்து விட வேண்டும்.

இப்படி ஒரு வழியாக நம்முடைய பொழுதும் போவதோடு முற்போக்கு முலாம் பூசிக் கொண்ட மாதிரியும் ஆகிவிடும்.

ஒரு குறிப்பு : கடந்த இரண்டாண்டுகளாக தமிழ் வலைப்பதிவுகளை மேய்ந்த அனுபவத்தில், இதன் போக்குகளைப் பற்றியும் இந்த தளத்தில் இயங்கும் பதிவர்கள் சிலரின் போக்குகள் பற்றியும் எனக்குள் ஏற்பட்ட ஒரு சித்திரத்தின் சிறிய பகுதி தான் இது. மக்கள் பிரச்சினைகள் பற்றி ஒரு பக்கம் சில பதிவர்கள் மிகவும் அக்கறையோடு, தங்கள் மதிப்பான நேரத்தையும், பணத்தையும் செலவு செய்து பேசிக் கொண்டிருக்க, மறுபுறமோ போலித்தனமான முற்போக்கும், வெட்டி மேட்டிமைத்தனமும் நிறைந்த குட்டிமுதலாளித்துவ அல்பைத்தனங்களே பரவலான கவனிப்பைப் பெறுகிறது. இந்த போக்குகள் எனக்கு ஆச்சர்யத்தை அளிக்கவில்லை. எந்த தகவலும் சுலபத்தில் கிடைக்கும் வாய்ப்பு பெற்ற, நல்ல அறிவு கொண்ட இவர்களின் இந்த போக்குகள் ஆதங்கத்தைத் தான் தருகிறது. அதன் கிண்டலான வெளிப்பாடு தான் இது. அவர்களின் வார்த்தைகளில் சொன்னால் - ஜஸ்ட் கும்மி!



--

14 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post