வெட்டிடச் செய்யுமா
சூதும் வாதும்
தட்டிடச் செய்யுமா
தனலென வார்த்தை
மெட்டிடா பாட்டென
இருந்த உன்னை
சுட்டிடச் செய்யுமா
சூதின் சொல்லே
சட்டென உதறிடு
சந்தப் பாட்டே
விட்டெனப் பறந்திடு
விண்ணில் நீயும்
சொற்களை அடுக்கியோ
சொன்னார் உன்மேல்
பற்களைக் கடித்துமோ
பகர்ந்தார் அன்பே
இஃதிவன் சாதியென்று
இடித்த போது
கண்டிலேன் நானும்
இனிதொரு கருத்தினை
இயம்பு நீயும்
பனியெனப் படைப்புகள்
பருக வந்தோம்
சனியெனப் பிடித்த
பொய்யின் பேச்சை
சட்டெனத் துடைத்தெறி
சரக்கும் நதியே
குடித்திடும் போதிலே
கொள்வார் நட்பு -போதை
குறைந்திடும் காலையில்
குதறி விட்டார்
குறையிலை நீ கொளும்
அன்பினில் யாண்டும்
குறைபடு மதியிடை
கொள்ளாய் நட்பே
சிரித்திட பேசிட
பேணல் நட்பா
உரக்கவே அழுகையில்
அணைத்தல் நட்பா
பேசிடும் நடந்திடும்
உனது பேனா
பேசாதிருப்பது
தமிழின் மெளனம்
பேசவே அழைக்கிறேன்
பேனா வருவாய்
பாடவே அழைக்கிறேன்
பாட்டே வருவாய்
பேசாதிருத்தலோ
பேச்சுக்கழகு !
பாடாதிருத்தலோ
பாட்டுக்கழகு !
--
தியாகு