தந்தை பெரியார் பிறந்த நாள்-

நன்றி தோழர் அருணபாரதி :(பொதுவுடமையில்)


''புதிய உலகின் தொலைநோக்காளர் : தென்கிழக்கு ஆசியாவின் சாக்ரடீஸ் : சமூக சீர்திருத்த இயக்கத்தின் தந்தை : அறியாமை, மூடநம்பிக்கை, பொருளற்ற பழக்கவழக்கங்கள், இழிவான நடவடிக்கைகள் ஆகியவற்றின் கடும் எதிரி' - இவற்றை திராவிடர் கழகத்து தொண்டர்களோ பெரியார் பற்றுள்ளவர்களோ சொல்லவில்லை. 1970 ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகளின் சபையின் துணை அமைப்பான உலக கலாச்சார அமைப்பான யுனெஸ்கோ அமைப்பு அவருக்கு விருது வழங்கிய போது இப்படித் தான் குறிப்பிட்டனர். பெரியார் கடவுள் மறுப்பாளராகவும் பார்ப்பன(பிராமண) எதிர்ப்பாளராகவுமே பல இடங்களில் நினைவு கொள்ளப் படுகிறார். ஆனால் அவரை ஆராய்ந்து பார்த்து சிந்திக்க விரும்பபினால் உண்மை விளங்கும்.
'பிறப்பிலேயே ஒரு மனிதன் தாழ்ந்தவனாக பிறப்பது தான் விதி. அவன் கல்விக் கற்கக் கூடாது. கோயிலுக்கு செல்ல கூடாது. மற்றவர்களுக்கு அடிமை சேவகம் மட்டுமே புரிய வேண்டும்.' என்று மனிதனை மனிதனே இழிவு படுத்தும் கொடுமையான பாதகமான மனுநீதியை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப்பட்ட இந்து மதத்தில் பலதரப்பட்ட மக்கள், 'கடவுளின் கட்டளை' என்ற போர்வையில் ஏமாற்றப்பட்டு பிறருக்கு(பார்ப்பனருக்கு) அடிமை சேவகம் புரிவதை கடுமையாக எதிர்த்து போர்க்குரல் எழுப்பியவர் தான் பெரியார். பார்ப்பனர்கள் மலத்தை மிதித்து விட்டால் காலை மட்டும் கழுவுக் கொணடு விட்டுக்குள் நுழைவர். ஆனால் ஒரு தாழ்த்தப்பட்ட மனிதனின் துணி தெரியாமல் அவர் மீது பட்டுவிட்டால் கூட அதனை தீட்டு என்று குளித்து விட்டுத் தான் வீட்டிற்குள் நுழைவார். இது போன்ற மனிதத் தன்மையற்ற செயல்களை கடைபிடித்ததை கடுமையாக சாடியவர் தான் பெரியார். இரண்டாயிரம் வருடங்களாக படிக்கக் கூடாது என கல்வி புறக்கணிக்கப்பட்ட பார்ப்பனரல்லாத மக்களுக்கு கல்வி வேண்டும் என கூறி அவர்களுக்கு உதவும் வண்ணம் இடஒதுக்கீடு என்னும் நிவாரண முறையை கொண்டு வந்து சமூக நீதி நிலைநாட்ட வழிவகுத்தார். அவர் மறைந்த பின்னரும் அவரின் தாக்கம் இச்சமூகத்தின் மீது எப்படி படர்ந்திருக்கின்றது என்பதற்கு எடுத்துக் காட்டு ஆங்காங்கே நடைபெறும் பெரியார் சிலை உடைப்புகள். அவரது சிலையை பார்த்தால் கூட பொறுக்க முடியாத அளவிற்கு அவரது பகுத்தறிவு பிரச்சாரம் பார்ப்பனிய இந்துத்வ வெறியர்களுக்கு வெறுப்பூட்டியிருக்கிறது.
பார்ப்பனிய சக்திகளின் வருகைக்கு முன்னர் தமிழ்ச் சமுதாயத்தில் சாதி என்பது தொழிலை அடிப்படையாகக் கொண்ட ஓர் பிரிவு தான். தமிழர்கள் அதனை வைத்து ஒருநாளும் தமக்குள் சண்டையிட்டுக் கொண்டதில்லை. அவரவர் தம் தொழிலை செய்து கொண்டு அமைதியாக யாரையும் அடிமைப்படுத்தாது வாழ்ந்து வந்தனர். ஆனால் பின்னர் வந்த வந்தேறிகளான ஆரிய அயோக்கிய கும்பல் புராண இதிகாசங்கள் போன்ற கேட்கக் கூசும் ஆபாசக் கதைகளை அள்ளிவிட்டு பிறப்பின் அடிப்படையில் சாதி பிறப்பதாக புதிய ஏமாற்றுக் கதையையும் சொல்லி, பக்தியின் பெயரால் மிரட்டி அதை நம்ப வைத்து, ஆதித் தமிழர்களை தரம் தாழ்த்தி ஊருக்கு வெளியே குடிசைகளில் குடியமர்த்தி, அவர்தம் வீட்டு மகளிரை மட்டும் கோயில்களில் தங்கவைத்து 'இறைசேவை' என்ற பெயரால் விபசாரம் செய்வித்து அவர்களின் வாழ்வை நாசமாக்கி, அவர்தம் பிள்ளைகள் கல்விக் கற்க தடை செய்து மகா கொடுமைகளையும் அயோக்கிய தனங்களையும் கொஞ்சமும் வெட்கங்கொள்ளாமல் மதத்தின் பெயராலும் இறைவனின் பெயராலும் புகுத்தி வந்த பார்ப்பனர்களைத் தான் கண்டித்தார் பெரியார். அவர்களுக்கு மக்கள் சேவகம் புரிவது மதத்தின் பெயரில் உள்ள பயத்தின் மீது தான். அதனால் தான் மதநம்பிக்கையையே சாடினார் பெரியார். மதத்தின் பெயரால் நடக்கும் மூடத்தனங்கள் சாதிக் கொடுமைகள், மதக்கலவரங்கள் இவற்றை எதிர்த்து நாம் குரல் கொடுத்து போராட வேண்டும். 'தமிழ்நாடு தமிழருக்கே' என தமிழ்த் தேச நலனை முன்னிறுத்தி தன் இறுதிநாள்வரை வாழ்ந்த பெரியாரே 'தமிழ்த் தேசியத் தந்தை'யாவார். அவரது லட்சியத்தை நிறைவேற்ற வேண்டிய அரும்பணியை நாம்மால் முடிந்தவரை ஆற்றுவோம் என இந்நாளில் உறுதியேற்போம்.

-----------------------------------------------------------
"பாதையை தேடாதே.. உருவாக்கு" - புரட்சியாளர் லெனின்
------------------------------------------------------------
தோழமையுடன் க.அருணபாரதி

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post