தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம் -அருணபாரதி

தேவதைகளுக்கு எழுதப்பட்ட மரண சாசனம்
"எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" என்று சுருண்டிருந்த உடல் நடுங்கும் வண்ணம் வார்த்தைகள் கோபத்துடன் அவளிடம் இருந்து வந்தன. தேய்ந்து கொண்டு போன குரலிலும் இவ்வளவு கோபம் கொண்டு சொல்கிறாள், அந்த வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவின் கட்டிலில் வாடிய மலரென கிடக்கும் கௌசிகா. அவள்தான் உதயகுமார், பாக்கியலட்சுமியின் முதல் கனவு. அவர்களை பொறுத்த வரை குடும்பத்தின் நம்பிக்கை. குமுளமுனை மகா வித்தியாலயத்தின் அனைவரும் அறிந்த உயர்தரம் பயிலும் கெட்டிக்கார மாணவி அவள். அவள் செஞ்சோலை வளாகத்தில் நடக்கும் வதிவிட தலைமைத்துவ பயிற்சி நெறியில் கலந்து கொள்ள பாடசாலை சார்பில் தயாரானாள். அதற்கு முன்"தமிழ்த்தினம்" என்னும் மாணவர்களின் தமிழ்த்திறமைக்கான போட்டி ஒன்றில் தமிழ் இலக்கண பிரிவில் போட்டியிட சென்றாள். அருகில் இருந்த முல்லைத்தீவு மகாவித்தியாலயத்தில் இருந்து கலைப்பிரியா என்னும் மாணவியும் கலந்து கொண்டாள்.போட்டிக்களை முடித்துகொண்ட சில நாட்களிலேயே , செஞ்சோலை வளாகத்திற்கு தலைமைத்துவ வதிவிட பயிற்சி நெறியில் கலந்து கொள்ள வந்துவிட்டனர். ஒகஸ்ட் 14 ம் நாள் 2006 ஆம் ஆண்டு காலை 7 மணி செஞ்சோலை வளாகம் எங்கும் முல்லைத்தீவு, கிளிநொச்சி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த மிகச்சிறந்த மாணவிகளால் நிறைந்திருந்தது.அப்போதுதான் யாரும் எதிர்பார்த்திராத யாரும் கற்பனை செய்ய முடியாத அந்த சம்பவம் நடந்தேறியது. திடீரென அங்கு வந்த இலங்கை அரசின் "கிபிர்" எனப்படும் யுத்தக்குண்டு விமானங்கள் நான்கு சேர்ந்து தாழ பதிந்து பதிந்து வீசிய குண்டுகள் அங்கு கூடியிருந்த நூற்றுக்கணக்கான மாணவிகளின் உடல்களை கிழித்து ரத்தசகதியில் போட்டன. ஒலியை விட வேகம் கூடிய , இலங்கை விமானப்படையின் யுத்த விமானங்களில் ஏறத்தாழ 40 வீதமான விமானங்கள் வந்து ஒவ்வொன்றும் 250 கிலோ எடையுள்ள, யுத்தத்தில் வீசப்படும் குண்டுகளை தங்கள் மீது வீசும் என அவர்கள் கற்பனை கூட செய்து இருக்கவில்லை என்பதினால் அவர்கள் ஓடி ஒளிந்து தப்பித்து கொள்ள முடியமால் போனது. தங்களது பாடசாலைகளின் சார்பில் தமிழ்த்தின போட்டியில் கலந்து கொண்ட மாணவிகள் முதல் இரு இடங்களை பெற்றிருந்த சந்தோச செய்தி இரு பாடசாலைகளின் முதல்வர்களுக்கு கிடைத்தாலும்இவை எவற்றையும் அறியதவளாய் கிபிர் குண்டுகளால் கிழிக்கப்பட்ட கலைப்பிரியா உயிரற்ற உடலாக புதுக்குடியிருப்பு வைத்திய சாலையில் கிடந்தாள். அதே போல் கௌசிகாவும் மரணத்துடன் போராடிக்கொண்டு இருந்தாள். (இதுதான் கெளசிகா)
குண்டுகள் அவள் வயிற்றை கிழித்து குடல்களை பெருஞ்சேதம் செய்திருந்தன. மருந்துவர் அவளின் காயத்தின் நிலை பற்றி இன்னொரு மருந்துவருடன் ஆங்கிலத்தில் உரையாடியது அவளது காதிலும் விழுந்தது. (இதுதான் கலைப்பிரியா)
கௌசிகா இனிமேல் உயிருடன் இருக்கபோவதில்லை என்பதை தெரிந்துகொண்டாள். தன்னுடன் பக்கத்தில் இருந்து சண்டை போட்டு விளையாடிய சிறுவர்கள், உறவினர்கள் எல்லாருடனும் கதைக்க வேணும் போல இருப்பதாக சொன்னாள். அவள் விருப்பப்படி ஊரே வந்து குவிந்தது. ஒகஸ்ட் 14 ம் நாள் 2006, காலை 10 மணியிருந்து 7 மணிவரை- புதுக்குடியிருப்பு வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சை பிரிவில் கௌசிகாவின் கட்டிலை சுற்றி அவள் பார்க்க விரும்பியவர்கள் நின்றிருந்தனர். அவள் உயிர் வலிக்க வலிக்க தனது இறுதி வார்த்தைகளை மெல்ல மெல்ல உதிர்ந்தாள். "அம்மா....நான் மீள முடியாது போல் இருக்கிறது என்னை கட்டிப்பிடிச்சுக்கொண்டு படுங்கோ அம்மா""தங்கச்சி விலோ...நீ அம்மாவின்ர சொல்லை கேட்டு நடக்க வேணும், நீ ஒருத்திதான் மிஞ்சப்போகின்றாய் கவனம்" "அப்பா நீங்கள் இனிமேல் குடிக்க கூடதப்பா"சிங்களப் படைக்கு முன்னால் மாணவர்களும் எதிரியாச்சு, இனி மாணவர்கள் மாணவராக இருந்தால் போதாது அவன் நினைக்கிற மாதிரியே எதிரியாகவே மாற வேண்டும்""எங்களை அடித்த கிபிர்களை சுட்டுவிழுத்த வேண்டும்" அம்மம்மா, அன்ரி, சித்தப்பா, மாமா, அப்பப்பா எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ, அம்மா உன்னை பிரியும் காலம் வருகுது. என்னை கட்டியணைம்மா...""எல்லாரும் எனக்கு சோடா பருக்குங்கோ""அம்மா என்னை கொஞ்சிக்கொண்டு படு அம்மா" "கஜி...தேவாரம் பாடு""பாய்....பாய்....பா....ய்ய்...இரவு 7.15 மணியளவில் எல்லோருடைய வேண்டுதல்கள், நேர்த்திகள், அழுகைகள் தாண்டி அவள் கையசைப்புடன் அவர்களிடம் இருந்து விடைபெற்றாள்

(ஒகஸ்ட் 14 ஆம் நாள் ஈழத்தின் செஞ்சோலை சிறுவர் இல்ல வளாகத்தில் வதிவிட பயிற்சி நெறியில் ஈடுபட்டிருந்த 52 மாணவிகள் இலங்கையரசின் விமானப்படை விமானங்களால் குண்டு வீசிக் கொல்லப்பட்டனர்)


தகவலுக்கு நன்றி : தோழர் அருணபாரதி

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post