அமெரிக்க எலியும் இந்தியனின் வயிறும்

பி.டி. என்று சொல்லப்படும் மரபணு மாற்று விதையில் விளைந்த பருத்தி இலைகளை தின்றதால் ஆடு, மாடுகள் மரணம் - இந்த செய்தி ஆந்திர மாநிலம், அடிலாபாத் மாவட்டத்தில் இருக்கும் தலைமடுகு கிராம விவசாயிகளின் சோகம். அந்த ஒரு கிராமத்தில் மட்டும் 40 மாடுகளும் 300 ஆடுகளும் உயிரை விட்டுள்ளன.
இந்த கிராமத்தை சேர்ந்த ஷேக் அஜீஸ் என்கிற ஏழை விவசாயி 15,000 ரூபாய் போட்டு ஒரு ஜோடி ஏர் மாடு வாங்கியிருக்கின்றார். பி.டி. காட்டுப் பகுதியில் மிச்சம் மீதி இருக்கின்ற தழையில் மேய விட்டிருக்கின்றார். அதற்கு பிறகு வயிறு உப்பிப் போய் மாடுகள் விழுந்தன. வைத்தியம் பார்த்தும் பலன் இல்லாமல் பரிதாபமாக மாடுகள் மாண்டு போயின. இதனால் வாழ்க்கையே இருண்டு விட்டதாக அஜீஸ் கதறுகிறார்.
வைரஸ் ரத்தத்தில் புகுந்து உயிர் அணுக்களையெல்லாம் அழித்து நோய் எதிர்ப்பு சக்தியை முடக்கிப்போடுவதுதான் எய்ட்ஸ். அதே போலதான், மரபணு மாற்றப்பட்ட பி.டி. பருத்தி இலை-தழைகளை தின்ற ஆடு மாடுகளுக்கும் எய்ட்ஸ்.
செய்தி தீயாய் பரவியதும் மெதுவாக விழித்துக்கொண்டு பி.டி. பருத்திக் காடுகளில் ஆடு, மாடுகளை மேய விடாதீர்கள் என்று அறிவிபு கொடுத்திருக்கின்றது ஆந்திர அரசாங்கம். இறந்த ஆடு மாடுகளின் கல்லீரல், மண்ணீரல் இதையெல்லாம் ஹைதராபாத் கால்நடை உயிரியல் ஆராய்ச்சி நிலையத்திற்கு அனுப்பி ஆராய்ந்து பார்த்ததில் நைட்ரேட்,திரவ சயனைடு போன்ற கொடுமையான விஷம் இருந்தது உறுதியாகியுள்ளது. அப்படியெனில் மனிதர்கள் அந்த உணவுப்பொருள்களை உட்கொண்டால்? நினைத்து பார்க்கும்போதே தலை சுற்றுகின்றது. அதுவும் இது பி.டி. விதையினால் உற்பத்தி செய்யப்பட்ட காய்கறி என்று எந்த அடையாளமும் அந்த காய்கறியில் இடப்போவதில்லை. அப்படி செய்தால் யாரும் வாங்க மாட்டார்கள் என்பது நிச்சயம்.
இந்த பி.டி. பிரம்மாக்கள் பி.டி. உணவுப்பொருள்களை அமெரிக்காவில் எலிகளுக்குக் கொடுத்து பரிசோதித்துப் பார்த்ததில் எலிகளுக்கு எந்த தொந்தரவும் ஏற்படவில்லை என்று சொல்லிக்கொண்டிருக்கின்றனர். அந்த மாதிரியான கம்பெனிகளின் ஊதுகலாக மாறிவிட்ட ஜி.இ.ஏ.சி.(GEAC-Genetic Engineering Approval Committee) அதிகாரிகள் சிலரும் அதை வரி பிறழாமல் சொல்லிக்கொண்டிருக்கின்றனர். ஆந்திர விபரீதத்திற்கு இவர்களெல்லாம் என்ன பதில் சொல்லப்போகின்றனர்?
இதுவரை அ.ராசா தான் மத்திய சுற்றுச்சூழல் மந்திரியாக இருந்தார். அவருக்கு கீழேதான் ஜி.இ.ஏ.சி. அமைப்பு வருகின்றது. அவர் நல்லவர்... அப்பிராணி... ஆன அவரி சுற்றி இருப்பவர்கள் பலரும் மகா மட்டமானவர்கள்! இல்லையென்றால் அவருக்கு தெரியாமலேயே பி.டி. நெல்லை நேரிடையாக வயல் சோதனைக்கு விடுவார்களா? பி.டி. நெல்லுக்கு ஹரியானாவில் தீ வைத்தார்கள்... கோயம்பத்தூரில் பிடுங்கி எறிந்தனர். அதற்கு பிறகுதான் அவருக்கே செய்தி தெரியுமாம். ஒரு அமைச்சர் சொல்லகூடிய வார்த்தைகளா இவைகளெல்லாம்? இவர்களை நம்பி நம் நாட்டை ஒப்படைத்திருக்கின்றோம்!
இந்த பி.டி. நிறுவனம் தலைவாசல் வழியாக நுழைவதை விட புறவாசல் வழியாக நுழைவதைதான் பெரிதும் விரும்புகின்றனர். இந்த உயிரியல் நுழைவுக்கும் விசா, பாஸ்போர்ட் கொடுப்பது ஜி.இ.ஏ.சி. அமைப்புதான். ஆனால், இந்த தந்திர சாலிகள் ராஜாவுக்கு தெரிவிக்காமலேயே உள்ளுக்குள் லெட்டர் பரிவர்த்தனை செய்து சயின்ஸ் அண்ட் டெக்னாலஜி அமைச்சகத்தி, ஆர்.சி.ஜி.எம்.(RCGM-Review Committee on Genetic Manipulation) வழியாக உத்தரவு வாங்கி வயல் சோதனையில் குதித்தனர்.
மாப்பிள்ளை செத்தா என்ன... பொண்ணு செத்தா என்ன... மாலை பணம் கிடைத்தால் சரி என்று நினைக்கின்ற அந்த நிறுவனங்கள் பருத்தி விவசாயிகள் பாடையில் போகின்றபோதும் விதைக்கான ராயல்டியில் குறியாக இருக்கும் கொடுமையை எங்கே போய் சொல்ல?
அணு உலை அடங்கிப்போனால் கூட பரவாயில்லை... வீட்டு அடுப்பு உலை அணைந்து போனால்... நினைக்கவே நெஞ்சு பதறுகிறது.
நன்றி 10/06/2007 - பசுமை விகடன் -- வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post