ஸ்டாலின் மகள் மரணமும் அதன் மூலம் அரசியல் செய்யும் கயவர்களும்




தோழர் ஸ்டாலின் மார்க்சியத்தின் நடைமுறைபடுத்தியவர்களில் முதன்மையானவர்
லெனின் வகுத்துதந்த போர்தந்திரங்களின் அடிப்படையில் ஒரே நேரத்தில் இரண்டாம் உலகப்போரில் இருந்து மக்களை காக்கவும் (சோவியத் மக்களை மட்டுமல்ல உலக மக்கள் அனைவரையும் )
தனது தலைவன் தந்த அருமைக்கும் பெருமைக்கும் உரிய சோவியத் சோசலிசத்தை பாதுகாக்கவும்
நடத்த போரில் வெற்றி பெற்றார் இதனாலேயே முதலாளித்துவ வாதிகளால் இன்றுவரை
எதிரியாக கொண்டு தாக்கப்படுகிறார் அவர் மீதான தாக்குதலுக்கு கிடைத்த கருவிதான் அவரது மகள்
ஸ்வெட்லானா

1.ஸ்டாலின் மீது ஸ்வெட்லானாவின் விமர்சனங்களும்
2.ஸ்டாலின் பற்றி அவர் சொன்ன புகழுரைகளும்

முன்னதை மட்டும் அரசியலாக்கி ஸ்டாலினுக்கு எதிரான பிரசாரத்தில் ஈடுபடும் கீழ்தரமான வேலையை முதலாளித்துவ வாதிகள் செய்துவருகிறார்கள் அதை பற்றி தோழர் சிவக்குமார் எழுதிய இந்த பதிவு தற்போதைக்கு முக்கியத்துவம் வாய்ந்தது ஆனாலும் தோழர் இதை இன்னும்விரிவாக எழுதி இருக்கலாம் என்பதே எனது கருத்தும்

ஸ்டாலினுக்குச் செல்லமான‌ "குட்டிச் சிட்டுக் குருவி" ஸ்வெட்லானா மரணம்; ஸ்டாலினை வசைபாட முதலாளித்துவவாதிகளுக்குக் கிடைத்திருக்கும் மற்றொரு தருணம்

- தோழர்.த.சிவகுமார்



வரலாற்றில் மிக அதிகமாக வசைபாடப் பட்டவர்; தவறாக சித்தரிக்கப்படுபவர் ஸ்டாலின் ஒருவரே என்றால் அது மிகையல்ல. லெனின் ஸ்தாபித்துக் கொடுத்த சோவியத் நாட்டில் லெனினிசத்தை மிகச் சரியாகக் கடைபிடித்து சோசலிச சமூகத்தின் நடைமுறை வெற்றியை உலகுக்கு நிரூபித்துக் காட்டியவர் என்பதனால் ஸ்டாலின் மீது முதலாளித்துவ - ஏகாதிபத்தியவாதிகளுக்குக் கடுங்கோபம். எனவே அவர்கள் அடிப்படையற்ற அவதூறுகளால் ஸ்டாலின் மீது ஏற்படுத்தி வைத்திருக்கும் பொய்ச்சித்திரம் மங்கி மறைந்துவிடாமல் இருப்பதற்காக கிடைக்கும் தருணம் எதையும் பயன்படுத்த அவர்கள் தவறுவதேயில்லை. உலகளவில் முதலாளித்துவம் மூன்றாவது உலகப் பொருளாதார நெருக்கடியில் சிக்கி மக்களின் கவனம் சோசலிசத்தீர்வை நோக்கித் திரும்பிக்கொண்டிருக்கும் இன்றைய நிலையில் அவர்களுக்குக் கிடைத்திருப்பது, ஸ்டாலினால் "குட்டிச் சிட்டுக் குருவி"(Little Sparrow) என்று செல்லமாக அழைக்கப்பட்ட அவரது மகள் ஸ்வெட்லானாவின் மரணம்.


கடந்த நவம்பர் 22 அன்று இறந்த‌ அவரது மரணச் செய்தியோடு சேர்த்து ஸ்டாலின் கொடுங்கோலன்; அவரது மகளையே பரிதவிக்க விட்டவர்; தனது மகனையே ஹிட்லருக்கு பலியாக்கிய கல்நெஞ்சக்காரர் என்பதில் தொடங்கி பழைய பாட்டுக்கள் அத்தனையையும் மீண்டும் பாடத்துவங்கியுள்ளனர்.

இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரின் நாஜிப் படையிடம் கைதியாகப் பிடிபட்ட ஸ்டாலினின் மகன் யாகோவ்-ஐ விடுவித்தால் ஜெர்மன் ராணுவத் தளபதி ஒருவனை விடுவிக்க வேண்டும் என்று ஹிட்லர் கோரினார். ஆனால் தனக்கொரு நீதி; ஊருக்கொரு நீதி என்றில்லாத வளையாத நீதிக்குச் சொந்தக்காரரான ஸ்டாலின் சாதாரண படைவீரனாகிய த‌னது மகனுக்கு ஒரு தளபதி இணையான மாற்று அல்ல‌ என்று கூறி மறுத்துவிட்டார். அதனால் அவரது மகன் நாஜிக்களால் கொல்லப்பட்டார். மனித குலத்தின் எதிர்காலத்தையே நிர்ணயிப்பதாக இருந்த அந்த யுத்தம் போன்றதொரு சூழலே இல்லாத நிலையில்கூட ஊழல் மந்திரிகளின் மகன் அல்லது மகளை மீட்பதற்காக நிபந்தனையின்றி தீவிரவாதிகளை விடுவிக்கும் அரசியல்வாதிகளைப் போற்றும் முதலாளித்துவவாதிகள் அப்பழுக்கற்ற பொதுநலத்தின் உச்சகட்ட அடையாள‌மான ஸ்டாலினை இதற்காகத் தூற்றுவது விந்தைதான்.

இவர்கள் அவதூறு சொல்வதுபோல் உண்மையில் ஸ்டாலின் பாசம் இல்லாத கல்நெஞ்சக்காரர் அல்ல. மனிதகுலத்தையே நேசிக்க முடிந்த அவரால் தன் குடும்பத்தை நேசிக்க முடியாமலா போய்விடும்? சமூகத்தின் நலனா குடும்பத்தின் நலனா என்ற கேள்வி வரும்போது, அவர் தன் குடும்ப நலனைவிட சமூகத்தின் நலனே முக்கியம் என்று முடிவுகள் எடுத்திருக்கிறார். அவ்வளவே. அதற்காக அவர் தன் மகள்மீது பாசமே இல்லாதவரா? இக்கேள்வியை சமீபத்தில் ஸ்வெட்லானாவிடமே கேட்டார் அமெரிக்காவின் விஸ்கான்சின் ஸ்டேட் ஜர்னலின் நிருபர். அதற்கு ஸ்வெட்லானா, "ஆம். அவர்(ஸ்டாலின்) என்மீது பாசத்துடனிருப்பார். நான் அவரது அம்மாவைப் போல் இருப்பேன். அவரது அம்மாவைப் போல் எனக்கும் இந்த சிவப்புத் தலைமுடிகள்; அவரைப் போன்ற தோலின் நிறம் இருக்கும்" என்று கூறினார்.

ஸ்டாலின் 1953ல் இறக்கும் கடைசித் தருணத்தில் அவருடன் இருந்தவர்களில் ஸ்வெட்லானாவும் ஒருவர். ஸ்டாலினுக்குப் பிறகு அதிகாரத்திற்கு வந்த திருத்தல்வாதி குருசேவ், ஸ்டாலினுக்கு எதிரான அவதூறு பிரச்சாரத்தில் இறங்கிய காலகட்டத்தில் 1967ல் அதாவது 14 ஆண்டுக‌ளுக்குப் பிறகுதான் அவர் சோவியத் யூனியனில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் தஞ்சம் அடைகிறார்.

அப்போதய பனிப்போர் காலத்தில் குருசேவின் சோவியத் யூனியனுக்கு எதிரான கருத்து யுத்தத்தில் அமெரிக்காவின் கைக்கருவியாக ஸ்வெட்லானா பயன்பட்டார். குருசேவ் ஸ்வெட்லானாவை துரோகி என்றார். அதேசமயம் ஸ்டாலினை அவதூறு செய்வதற்கு ஸ்வெட்லானாவையும் பயன்படுத்திக் கொண்டார்.

ஒரு மகள் என்ற முறையில் ஸ்வெட்லானாவிற்கு ஸ்டாலின் மீதிருந்த கோபம் எல்லா வீடுகளிலும் சாதாரணமாகக் காணப்படுவதுதான். "நான் விரும்பிய இலக்கியம் படிக்க முடியாமல் அப்பாவின் வற்புறுத்தலுக்காக வரலாறு படித்தேன்; அவரது விருப்பத்திற்காக நான் ஆங்கில ஆசிரியராக வேலை பார்த்தேன்; நான் தேர்ந்தெடுத்த கணவரை என் அப்பாவிற்குப் பிடிக்கவில்லை" என்று ஸ்வெட்லானா கூறுவதெல்லாம் வீடுதோறும் அன்றாடம் நாம் காணும் மனக்குறைகள்தான். தன் வீடு, தன் மனைவி-மக்கள் என்று அல்லும் பகலும் பாடுபட்டு தன் பிள்ளைகளுக்கு எத்தனை சொத்துச் சேர்த்து வைத்தாலும் "என்ன பெருசா எங்களுக்குச் சேர்த்து வச்சிட்ட" என்று அப்பாக்களை எப்போதும் திட்டிக் கொண்டிருக்கும் பிள்ளைகளை நாம் எங்கும் பார்க்கலாம். தன் குடும்பத்திற்காகவே பாடுபடும் அப்பாக்களுக்கே இதுதான் நிலமை என்றால், ஒட்டுமொத்த சமூகத்திற்காக தன் வாழ்க்கையையே அர்ப்பணித்துவிட்ட ஒருவரின் பிள்ளைக்கு தன் சுய விருப்பம்-ஆசைகள் நிராசைகளாகிப்போன தருணங்கள் நிறையவே இருக்கும். அந்தத் தந்தை ஸ்டாலினாக இருப்பதனாலேயே மகளின் அற்ப ஆசைகளை பூதாகரமாக்கி அதை நிராசையாக்கிய தந்தையை கொடுமைக்காரனாக்கிச் சித்தரிப்பது முதலாளித்துவ - ஏகாதிபத்திய ஊடகங்களின் தந்திரமே.

ஆனால் அமெரிக்காவில் தஞ்சமடைந்த முதல் நாளில் பத்திரிக்கையாளர்களிடம் பேசும்போது குருசேவின் சோவியத் யூனியனை ஸ்வெட்லானா விமர்சித்தாலும் தன் தந்தை மீது மேலே கூறிய மனக்குமுறல்களைச் சொன்னாலும் ஸ்டாலினுக்கு எதிரான குருசேவின் திருத்தல்வாதக் கும்பலின் அவதூறைப் பற்றிச் சொல்லும்போது "என் தந்தையை நேசிக்கிறேன்; அவர் மீது மதிப்பு வைத்திருக்கிறேன். இன்று ஸ்டாலின் மீது மட்டுமே குற்றம் சுமத்தப்படும் அந்தப் பயங்கரமான சம்பவங்களுக்கு எங்கள் அரசியல் தலைமைக் குழுவில் இருந்த மற்றவர்களே பொறுப்பானவர்கள்" என்றே சொன்னார்.

பின்னர் தனது புகலிட வாழ்க்கையின் ஆரம்ப காலத்தில் ஸ்வெட்லானா தன் தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்ட ஏமாற்றங்களுக்கு ஸ்டாலினைப் பொறுப்பாக்கி என்ன எழுதியிருந்த போதும் பின்னாட்களில் அவர் ஸ்டாலினுக்கு ஆதரவாக வெளிப்படையாகப் பேசவும் ஆரம்பித்துவிட்டார். 1982ல் லண்டன் டைம்ஸ் பத்திரிக்கையின் நிருபரிடம் ஸ்வெட்லானா தான் அவருக்கு (ஸ்டாலினுக்கு) துரோகம் இழைத்து விட்டதாகவும், "நான் செய்த காரியங்களுக்கு என் தந்தை என்னைக் கொன்றே போட்டிருப்பார்" என்றும் கூறுகிறார். அவரது இந்த மனமாற்றத்தின் பாதிப்பில் எழுதியதால்தான் அவரது கடைசி சுயசரிதை நூலை வெளியிட எந்த பதிப்பகத்தாரும் முன்வரவில்லை போலும்.

ஸ்டாலினது இறப்பைப் பற்றி நினைவுகூரும்போதுகூட ஸ்வெட்லானா "அவர் இறந்தபோது நான் என் நம்பிக்கை அனைத்தையும் இழந்து விட்டேன். என்றுதான் கூறுகிறார்.

இருந்தாலும் ஸ்டாலின் எனும் அந்த மாபெரும் வரலாற்று மனிதரோடு வாழ்க்கையில் உடன்பயணிக்க வேண்டுமானால், அவரது தோழர்களுக்கு மட்டுமல்ல, மனைவி-மகன்-மகளுக்கும்கூட ஒரு குறைந்தபட்ச தியாக-அர்ப்பணிப்பு உணர்வு தேவைப்படுகிறது. அந்த அர்ப்பணிப்பை அவரது மகன் யாகோவ் கடும் சோதனைக் காலத்தில் தந்தையுடனிருந்து தன் உயிரையும் தியாகம் செய்து நிரூபித்து விட்டார். ஆனால், பாவம் மகள் ஸ்வெட்லானாவால் அந்த உயரத்தை கடைசிவரை எட்டமுடியாமலேயே போய்விட்டது.

ஸ்டாலினுக்குத் தெரியாது; தன் உடன் இருந்தவர்களே தான் கட்டியெழுப்பிய இந்த பூலோக சொர்க்கத்தை நிர்மூலமாக்கப் போகிறார்கள் என்று. ஸ்டாலினுக்குத் தெரியாது; தன் அன்பு மகளே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் கைக்கருவியாகப் பயன்படப் போகிறாள் என்று. ஆனாலும் அந்த மாமனிதன் இறக்கும் அந்தக் கடைசித் தருணம் வரை அவரது அன்பு மகள் ஸ்வெட்லானா அவருக்குச் செல்லமான "குட்டிச் சிட்டுக் குருவி"தான்.

தொடர்பிற்கு :
thasivakumar@gmail.com
9443080634
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

3 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post