பெண்கள் தினம் -அலெக்சாண்டிரா கொலண்டைன்

பெண்விடுதலை என்பது வர்க்க போராட்டதில் இருந்து பிரிக்கமுடியாதது . அனைத்து வகை பெண்களும் விடுதலை கோருகின்றனர் ஆனால் உழைக்கும் பெண்களோ இரண்டு தரப்பில் இருந்தும் விடுதலை கோருகின்றனர் ஒன்று ஆண்கள் இன்னொன்று முதலாளித்துவம் .பெண் விடுதலைக்கு வேறு யாரையும் விட சரியான தீர்வை மார்க்சியம் மட்டுமே கூறுகிறது  அதுதான் பாட்டாளி வர்க்க விடுதலை மூலமே ஒட்டுமொத்த பெண் விடுதலையும் சாத்தியம் என்பதே அது .

இந்த விசயத்தை தன் வாழ்க்கை பூராவும் பேசியும் செயல்பட்டும் வந்த அலெக்சான்டிரா கொலண்டைன் எழுதிய இந்த கட்டுரையை இடுகிறேன் நன்றி உயிர்மை


பெண்கள்தினம் (1913) Alexandra Kollontai

தமிழில்: பானுபாரதி

----------------------------------------------------------------------------------
ரஷ்ய புரட்சியாளரான அலக்சான்ட்ரா கொலந்தாய் 1872இல் சென் பீட்டர்ஸ்பேர்க்கில் பிறந்தவர். இவரது தந்தை ரஸ்யப் படையில் இராணுவத் தளபதியாக இருந்தார். தாயார் பின்லாண்ட்டைச் சேர்ந்த ஒரு பண்ணை உரிமையாளரது மகள். அந்த நேரம் பின்லாண்ட் ரஸ்யாவினது ஒரு பகுதியாக இருந்தது. அவரது கல்வியை அங்குதான் தொடர்ந்தார். இந்த வேளையில்தான் தொழிலாளவர்க்கத்தினரதும், விவசாயிகளினதும் பிரச்சனை பற்றி அறிந்து கொள்கிறார்.

1893ல் தனது மைத்துனரைத் திருமணம் செய்துகொண்டவருக்கு குடும்ப வாழ்க்கை மிகுந்த ஏமாற்றத்தையே தந்தது. வீட்டுக்குள்ளே தான் சிறைப்படுத்தப் பட்டதாக உணர்கிறார். ஒரு பெரிய நெசவாலை ஒன்றின் கண்காணிப்பின்போது தொழிலாளர் குடியிருப்பொன்றில் இறந்து கிடந்த சிறுவனொருவனைக் காண்கிறார். இந்த நிகழ்வு அவரது வாழ்க்கையின் ஒரு திருப்புமுனையாக, அவரை ஒரு புரட்சியாளராக மாற்றியதெனலாம்.

1890களின் பின்னதாக அரசியலில் ஈடுபடத் தொடங்கும் கொலந்தாய் 1898ல் தனது குடும்ப வாழ்க்கையை விட்டு வெளியேறியபின் அரசியல் பொருளாதாரம் கற்பதற்காக சூரிச் செல்கின்றார். 1914களிலிருந்து போல்சிவிக் கட்சியில் இணைந்து செயற்படுகின்றார். அவரது முதலாவது படைப்பான "குழந்தைகளும் அவர்களது சுற்றாடலுக்கும் இடையிலான அபிவிருத்தி" மார்க்சிய சஞ்சிகையான "Obrazovaniie"இல் வெளியாகியது. லெனினது மத்திய கமிட்டியின் ஒரேயொரு பெண் உறுப்பினர். தொடர்ந்த அவரது செயற்பாடுகளில் சர்வதேச பெண்களியக்கத்தின் செயலாளராகவும் புரட்சிக்குப் பின்னர் அரசின் சமூக காப்புறுதியில் மக்கள் ஆணையாளராகவும், சோவியத் குடியரசின் ஸ்கன்டிநேவியன் நாடுகளுக்கான தூதுவராகவும், ராஜதந்திரியாகவும் பணியாற்றினார். -பானுபாரதி-

the 1st All-Russian Session of Workers' and Soldiers' Deputies June 1917
----------------------------------------------------------------------------------


பெண்கள்தினம் என்பது என்ன? உண்மையில் அப்படியொன்று தேவைதானா? இது மத்தியதரவர்க்கப் பெண்களினதும், பெண்களினது வாக்குரிமைக்காகப் போராடியவர்களினதும் நாளாக ஒப்புக் கொள்ளப் பட்டதில்லையா? இது தொழிலாளர் இயக்கத்தின் ஒற்றுமைக்குப் பாதகமான விடையம் இல்லையா? இவ்வாறான மாறுபட்ட கருத்துக்கள், ஆட்சேபனைகள் இன்னமும் ருஸ்யாவில் கேட்ட வண்ணம்தான் இருக்கின்றன. ஆனால் வெளி நாடுகளில் இத்தகைய ஆட்சேபனைகள் தற்போது எழுவதில்லை. அங்கே தேவைகள் நிறைவு செய்யப்பட்டு வாழ்க்கையைப் பற்றிய தெளிவான பதில்களை அவர்கள் கொண்டுள்ளனர்.

பெண்கள் தினம் என்பது பெண் தொழிலாள இயக்கத்தின் நீண்ட இறுக்கமான ஒரு சங்கிலியின் பிணைப்புப் போன்றது. ஒழுங்கமைக்கப்பட்ட பெண் தொழிலாளர் படையின் படிப்படியான உழைப்பினால் உருவாக்கப் பட்டுள்ளது. இருபது வருடங்களுக்கு முன்பு சிறிதளவிலான தொழிலாளப் பெண்களே இங்கும் அங்குமாக தொழிற் சங்கங்களிலும் கட்சிகளிலும் இணைந்திருந்தனர். இப்போது 292000 இற்கும் மேற்பட்ட பெண் உறுப்பினர்கள் ஐரோப்பிய தொழிற்சங்கங்களில் இருக்கின்றனர். ஜேர்மன் தொழிற் சங்கத்தில் இரண்டுலட்சம் உறுப்பினர்களும், ஒருலட்சத்து ஐம்பதாயிரம்பேர் தொழிற் கட்சியிலும், ஒஸ்ற்ரியாவில் 47,000 உறுப்பினர்கள் தொழிற் சங்கத்திலும், இருபதாயிரம் உறுப்பினர்கள் கட்சியிலும் அங்கம் வகிக்கின்றனர். இத்தாலி, ஹங்கேரி, டென்மார்க், ஸ்வீடன், நோர்வே, சுவிட்சர்லாந்து போன்ற நாடுகளில் பெண்கள் அமைப்பாக ஒன்று பட்டனர். சோசலிசப் பெண்கள் அமைப்பில் அங்கம் வகிக்கும் பெண்கள் ஒரு மில்லியன் ஆகும். எத்தகைய மிகப்பெரிய பலம் வாய்ந்த சக்தி! இத்தகைய பலம் பொருந்திய சக்தியின் குரலுக்கு வாழ்க்கைச் செலவு, குழந்தைத் தொழிலாளர்களின் பிரச்சனைகள், பெண் தொழிலாளர்களது உரிமைகளைப் பேணுவதற்குரிய சட்டங்களைப் பேணுதல் போன்ற அது எழுப்பும் கேள்விகளுக்கு உலகை ஆள்பவர்கள் பதிலளிக்க வேண்டியவர்களாகின்றனர்.

ஒரு காலத்தில் உழைக்கும் ஆண் தொழிலாளர்கள் தாங்கள் மட்டுமே முதலாளித்துவத்துக்கு எதிரான யுத்தத்தை தனித்துத் தமது தோளிலே சுமக்க வேண்டியவர்களாக இருக்கின்றனர் என்று கருதினர். அதன் அடிப்படையில் பழமைவாத உலகத்திற்கெதிரான யுத்தத்தில் தங்கள் பெண் மக்களின் பங்கேற்றலை நிராகரித்து தனித்து நின்றனர். ஆயினும் தொழிலாள வர்க்கப் பெண்கள் தங்கள் உழைப்பு சக்தியை விற்பனை செய்ததன் மூலம் உழைப்பு சந்தையில் பெண் தொழிலாளர்களது தேவை அதிகமாகியது. தொழிலாள வர்க்கத்துப் பெண்களும் உழைப்பில் ஈடுபட்டனர். தொழிற் சங்கத்துச் செயற்பாடுகள் உழைப்புச் சுரண்டல் பற்றிய எந்தவித தெளிவுமற்ற தொழிலாள வர்க்கத்துப் பெண்களால் தொழிற்சங்க செயற்பாடுகள் செயலிழந்து போகும் அல்லது பின் தள்ளப்படும் என்ற கருத்தே ஆண்களிடம் இருந்தது. ஆனால் சட்ட ரீதியாகவும், சமூகத்திலும் எந்தவித உரிமைகளுமற்று காலங்காலமாக அடுப்போடும் கணவனதும் தந்தையினதும் பணிப்பின் பேரில் சகல பணிகளையும் நிறைவேற்ற நிர்ப்பந்திக்கப்பட்ட பெண்களுக்கு தொழிற்சங்க செயற்பாடுகள் பற்றியோ, உலக நடப்புக்கள் பற்றியோ என்ன தெளிவு இருந்துவிட முடியும்?

இத்தகைய பின்னடைவுகளும், எந்தவித உரிமைகளுமற்று பெண்கள் கீழ்ப்படுத்தப் படும் நிலமைகளும் அதனாலேயே அவர்களிடமுள்ள அசிரத்தையான தன்மைகளும் தொழிலாள வர்க்கத்தினர்க்கு அனுகூலமானதாக இருக்கவில்லை. அதேவேளை இவை நேரடியான பாதிப்புக்களை ஏற்படுத்தவே செய்யும். ஆனால் பெண் தொழிலாளர்களை எவ்வாறு அமைப்பில் ஈடுபடுத்துவது?, அவர்களை எவ்வாறு விழிப்படையச் செய்வது?

ஏனைய நாடுகளில் சோசலிச ஜனநாயக அடிப்படையில் தற்காலிகமாகவேனும் இத்தகைய கேள்விகளுக்கு எதுவித தீர்வும் இருக்கவில்லை. தொழிற்சங்க அமைப்புக்களின் கதவுகள் பெண்களுக்காகத் திறந்து விடப் பட்ட போதும் மிகக் குறைந்தளவிலான பெண்களே அங்கத்தவர்களாகப் பதிவு செய்து கொண்டனர். ஏன் இந்த நிலமை? தொழிலாள வர்க்கம் பெண் தொழிலாளர்கள் சட்ட ரீதியாகவும்> சமூக ரீதியாகவும் மிகவும் கீழ்ப்படுத்தப்பட்ட பிரிவினராக இருப்பதை ஆரம்பத்தில் புரிந்து கொள்ளவில்லை. நூற்றாண்டு காலமாக பெண்கள் வன்முறைக்குள்ளாக்கப் பட்டும்> பயமுறுத்தல்களுக்கு ஆளாக்கப்பட்டுமிருந்த சூழலிலிருந்து அவர்களை வெளியே கொண்டு வருவதற்கு சிறப்பான அணுகுமுறைகளும், மிகுந்த ஊக்கவிப்பும் தேவை என்பதை அவர்கள் அறிந்திருக்கவில்லை.

அத்தோடு உழைப்பில் ஈடுபடும் ஒரு பெண் தாயாகவும், மனைவியாகவும் இருக்க வேண்டியவளாகின்றாள் என்பதையும் இவர்கள் புரிந்து கொள்ளவில்லை. ஆனால் எப்பொழுது தொழிலாளர்களின் சோசலிசக் கட்சி இதைப் புரிந்து கொண்டதோ அந்த நேரமே அவர்களது பிரச்சனைகளுக்காகக் குரல் கொடுத்ததுடன் தம்மோடு இணைத்தும் கொண்டது. ஏனைய நாடுகளிலும் சோசலிசவாதிகள் பெண் தொழிலாளர்களுக்கான விசேடமான பாதுகாப்பை உறுதிப்படுத்தக் கோரியும், குழந்தைகளுக்கும் பெண்களுக்குமான உதவித்தொகை வழங்கப்பட வேண்டும் எனவும், பெண்கள் அரசியலில் ஈடுபடவும்> அதனூடாக தங்களது உரிமைகள், பாதுகாப்பு என்பவற்றை உறுதிப்படுத்தக் கோரியும் குரல் கொடுத்தனர்.

எந்தளவிற்கு தொழிற்கட்சி பெண் தொழிலாளர்கள் பற்றி அதிகளவான அக்கறை கொண்டதோ, அந்தளவிற்கு அதிகளவிலான பெண்கள் தொழிற் கட்சியோடு இணைந்து கொண்டனர். பெண்கள் என்ற ரீதியில் தாங்கள் முகம் கொடுக்கின்ற பிரச்சனையை உணர்ந்துகொண்டு தமக்காகவும் குரல் கொடுப்பதால், தொழிற்கட்சி தங்களது விடுதலைக்காகவும் போராடுகின்ற அமைப்பு என்பதில் பெண்கள் நம்பிக்கை கொண்டனர். பெண் தொழிலாளர்கள் தமக்குள் அமைப்பாக ஒன்றுபட்டு தங்களது இலக்கை எட்டுவதற்குக் கடுமையாக உழைத்தனர். அதிகளவிலான பெண் தொழிலாளர்கள் சோசலிசக் கட்சியில் இணைந்து கொண்டனர். வேறுசில நாடுகளில் கட்சியில் பெண்கள் பிரிவென தனியாக அமைக்கப்பட்டு, பல்வேறு நிர்வாக அலகுகளாகப் பிரித்து பெண்களாலேயே நிர்வகிக்கப் படுகின்றது. இவர்கள் தொழிற்சங்கத்திலோ அல்லது பெண்கள் அமைப்புக்களோடோ இணைந்து கொள்ளாத பெண்கள் மத்தியிலும் பணி புரிகின்றனர். கர்ப்பிணித் தாய்மாருக்கான உதவி, சிறுகுழந்தைகளைக் கொண்ட தாய்மாருக்கான உதவி, பெண்களுடைய உழைப்புத் தொடர்பான சடட ஒழுங்குகள், பால்வினைத் தொழிலில் பெண்களை ஈடுபடுத்துவதற்கு எதிரான நடவடிக்கைகள், குழந்தைகளின் இறப்பு வீதம், பெண்களுடைய அரசியல் உரிமைகளுக்கான பிரேரணைகள், அதிகளவிலான வாழ்க்கைச் செலவீனத்துக்கு எதிரான தீர்மானங்கள், அடிப்படை வீட்டு வசதிகள் போன்றவற்றை முன்நிறுத்தி இயங்குகின்றளர்.

கட்சியிலுள்ள பெண் தொழிலாளர்கள் பொதுவான விடையங்களுக்காக கட்சியுடன் இணைந்து செயலாற்றும் அதேவேளை, பெண்ணுரிமைக்காகவும் உழைத்தார்கள். பெண்களது கோரிக்கைகளுக்காக கட்சியும் இணைந்து குரல் கொடுத்தது. உழைக்கும் பெண்களின் கோரிக்கைகள் கட்சியின் வேலைத் திட்டங்களில் ஒன்றாக இருந்தது.

பெண்கள் தினத்திலன்று இன்னமும் கிடைக்கப் பெறாமல் இருக்கும் உரிமைகளுக்காக பெண்கள் குரல் கொடுக்கின்றனர். ஆனால் சிலர் கேட்கின்றனர் "பெண்கள் ஏன் இவ்வாறு குரல் எழுப்புகின்றனர்?, ஏன் பெண்களுக்கான தினம் நினைவு கூரப்பட வேண்டும்?" சோசலிசப் பெண்கள் இயக்கத்திற்கும், மத்தியதர வர்க்கப் பெண்ணிய வாதிகளுக்கும் இடையிலான வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாதவர்களால்த்தான் இவ்வாறான கேள்விகளை எழுப்ப முடியும்.

மத்தியதர வர்க்கத்துப் பெண்ணியவாதிகளது இலக்கு என்ன? தங்களது சமூகத்தினுள்> தங்களது தந்தையருக்கும், சகோதரருகளுக்கும், கணவனுக்கும் இருக்கக்கூடிய சகல உரிமைகளையும் அதிகாரத்தையும் பெற்றுக் கொள்வதே அவர்களது இலக்காகும். ஆனால் சொத்துரிமைகள், பிறப்பு சார்ந்த எல்லா விதமான சலுகைகளையும் இல்லாமல்ச் செய்வதே பெண் தொழிலாளர்களது இலக்காக இருந்தது. தொழிலாள வர்க்கப் பெண்களைப் பொறுத்த வரையில் முதலாளி ஸ்தானத்தில் இருப்பவர் ஆணா பெண்ணா என்பதெல்லாம் முக்கியமற்றது. ஏனைய தொழிலாள வர்க்கத்துடன் இணைந்து ஒரு உழைப்பாளியாக தன்னுடைய தனித்துவத்தை அவளால் பேண முடியும்.

மத்தியதர வர்க்கத்துப் பெண்ணியவாதிகள் எல்லா இடத்திலும், தமக்கான சம உரிமைகளைக் கோருகின்றனர். தொழிலாள வர்க்கத்துப் பெண்கள் ஆண் பெண் உட்பட ஒவ்வொரு பிரஜைக்குமான உரிமைகளைக் கோருகின்றனர். ஆனால் 'நாங்கள் உழைப்பாளர்களாக மட்டுமல்லாது, நாட்டின் பிரஜையாக இருப்பதுடன் பெண்ணாகவும் தாயாகவும் இருக்கின்றோம் என்பதையும் மறந்து விடவில்லை. ஒரு பெண்ணாக, தாயாக எதிர்கால சந்ததியினரை எமது கரங்களிலே சுமந்துகொண்டு முன்னேறுகின்றோம். ஆகவே குழந்தைகளுக்கும் எங்களுக்குமான பாதுகாப்பையும் அக்கறையையும் அரசிடமிருந்தும், சமூகத்திடமிருந்தும் நாங்கள் கோருகின்றோம்."

பெண்ணியவாதிகள் அரசியல் உரிமைகளுக்காகக் கடுமையாகப் போராடுகின்றனர். ஆனால் இங்கேதான் எமது வழிகள் வேறு படுகின்றன. மத்தியதர வர்க்கத்துப் பெண்களைப் பொறுத்தவரை அரசியல் உரிமை என்பது தொழிலாள வர்க்கத்தின் உழைப்பினால் பெறப்படுகின்ற இலாபத்தை அடிப்படையாகக் கொண்டு கட்டமைக்கப் பட்டிருக்கும் உலகத்துள் தங்களை இணைத்துக் கொள்வதற்கான ஒரு வழி மட்டுமேயாகும். ஆனால் நேர்மாறாக தொழிலாளப் பெண்களைப் பொறுத்தவரை அரசியல் உரிமை என்பது சமதர்மத்தை நோக்கிய கடினமானதும், வலிகள் நிறைந்ததுமான நீண்டதொரு பாதையாகும்.

மத்தியதர வர்க்கப் பெண்ணியவாதிகளும் தொழிலாள வர்க்கப் பெண்களும் பயணிக்கின்ற இந்த இரு வழிகளும் நீண்ட காலமாக தனித்தனியாகவே பிரிந்து செல்கின்றன. இது மிகவும் வெவ்வேறான இலக்குகளை நோக்கிய வாழ்முறைக்கு கொண்டு சென்றுள்ளது. ஒரு தொழிலாள வர்க்கப் பெண்ணுக்கும் பண்ணை எஜமானிக்கும் வீட்டு வேலை பார்க்கும் பெண்ணுக்கும்> அவளது எஜமானிக்குமிடையில் அவரவரது ஈடுபாடுகள் என்பவற்றிற்கிடையில் மிகப் பெரிய முரண்பாடுகளே காணப் படுகின்றது. ஆகவேதான் தொழிலாள வர்க்கத்து ஆண்கள் பெண்கள் தினத்தையிட்டோ அல்லது பெண்கள் மாநாடு பற்றியோ அச்சமடையத் தேவையில்லை.

ஒவ்வொரு விசேடமானதும் முற்றிலும் வேறானதுமான தொழில் முறைகள் தொழிலாளப் பெண்கள் மத்தியில் அவர்களது செயற்படும் தன்மையை உயர்த்திப் பிடிக்கவும், ஒரு சிறந்த எதிர் காலத்துக்காக உழைப்பவர்களின் வரிசையில் சேர்ந்து கொள்வதற்குமான வழிகளாகின்றது. பெண்கள் தினமும், பெண் தொழிலாளர்களது சுய பிரக்ஞையை ஏற்படுத்துவதற்குமான ஆழமான நீண்டகால செயற்பாடுகளும் பிளவு படுத்தப்பட வேண்டியவையல்ல. மாறாக அவை தொழிலாள வர்க்கத்தோடு இணைந்ததாக அமைய வேண்டும்.

மிகுந்த ஆர்வத்துடனும், திட நம்பிக்கையுடனும் தொழிலாள வர்க்கத்திற்காக உழைக்கின்ற அதேவேளை, பெண் உரிமைக்காகவும் உழைக்கின்ற தொழிலாள வர்க்கப் பெண்கள், பெண்கள் தினத்தோடு இணைந்து கொள்கிறார்கள்.


உயிர்மெய்-7, 2008

--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
வலைப்பூ:www.thiagu1973.blogspot.com
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post