புகாரின் - வாசிப்புக்காக

இந்த கட்டுரை ஒரு வாசிப்புக்காக உங்கள் முன்பு வைக்கப்படுகிறது
ஸ்டாலின் காலத்தில் கொல்லப்பட்ட ஒரு கம்யூனிஸ்டை பற்றி நீங்களும்
நானும் தெரிந்து கொள்வது அவசியம் -

என்னை போலவே புகாரினுக்கு இலக்கியத்தின் ,மீது மார்க்சியத்தின் இயந்திரதனமான்
அனுகுமுறை வெறுப்பை தந்து இருக்கிறது -தியாகு


நன்றி தமிழ் நிருபர் வலைதளம் -
---------------------------------------------------------------------------------------

வரலாறு தன் முன்னோக்கிய பயணத்தில் தடுமாறி செல்வது கண்டு கண்ணீர் விட விரும்புவர்கள்விட்டுக்கொள்ளட்டும்.ஆனால் அந்த கண்ணீர் எந்த பயனுமற்றது.ஸ்பினோசா அறிவுறுத்துவது போல அழுவதோ சிரிப்பதோ அல்ல,அதை புரிந்து கொள்வதே அவசியமாகும்.
- டிராஸ்கி
சோவியத் அக்டோபர் புரட்சியின் நூறாண்டு தொடங்க இன்னும் எட்டு ஆண்டுகள் முன்னோக்கி காத்திருக்கின்றன. அதன் நிலையில் சோவியத் புரட்சியும் அதன் பிறகான வரலாற்று நிகழ்வுகளும் முக்கியத்துவம் பெறுகின்றன. போல்ஸ்விக்குகள் மற்றும் அவர்களை பின் தொடர்ந்தவர்கள் சாத்தியபாட்டின் கணத்திற்குள் வருகிறார்கள். தத்துவத்தின் வரலாறும், வரலாற்றின் தத்துவமும் அதன் பின்னணியில் இயங்கி கொண்டிருக்கிறது. 20 ஆம் நூற்றாண்டின் எழுபத்தைந்து ஆண்டுகளை நகர்த்தி சென்ற ஒரு புரட்சியின் கலைஞர்கள் காலத்தின் நிழலில் தெளிவான கோடுகளை வரைந்து சென்றிருக்கிறார்கள். கடந்த நூற்றாண்டின் இறுதி பகுதி வரை உலகை துருவப்படுத்திய சோவியத் யூனியன் அதன் பின்னால் கணிசமான ஆளுமைகளை விட்டுச்சென்றிருக்கிறது. அதன் நீண்ட வரலாற்றின் பகுதியாக சிலர் முன்னுக்கு வருகிறார்கள். அவர்களில் நிக்கோலாய் புகாரின் குவியமானவர். சோவியத் வரலாற்றில் புகாரின் ஒரு தத்துவ தரிசனமாகவே இருக்கிறார். லெனினால் புரட்சியின் செல்லப்பிள்ளை எனவும், தத்துவ வார்ப்பு எனவும் அழைக்கப்பட்டவர். இவர் எழுதிய நூல்களில் சிறை கையெழுத்து பிரதி: சோசலிசம் அதன் கலாசாரமும் (The prison manuscripts: Socailaism and its Culture)முக்கியமானது. இதன் ஆங்கில மொழியாக்கத்தை லண்டனை சார்ந்த Seagull books கடந்த 2006 ஆம் ஆண்டு வெளியிட்டது. புகாரினின் மரணத்துக்கு பிறகு அவரின் விருப்பப்படியே இதன் கையெழுத்துபிரதி (சில பகுதிகள் விடுபடலுடன்) பாதுகாக்கப்பட்டது. அதன் முதல் பக்கத்தில் தன் கையெழுத்து பிரதிகளை பாதுகாப்பதற்காக புகாரின் சிறையிலிருந்து 1937 ல் ஸ்டாலினுக்கு எழுதிய கடிதம் இணைக்கப்பட்டிருக்கிறது. " இந்த புத்தகம் அநேக இரவுகளில் சோகமான மனநிலையிலிருந்து என் இதயத்திலிருந்து வெளிப்பட்டதாகும். இதை மறைந்து விட செய்யவேண்டாம் என்று உங்களிடம் மிக நேர்மையாக கேட்டுக்கொள்கிறேன். மேலும் இதன் பிரதிகள் அழிந்து விடாமல் பார்த்து கொள்ளுங்கள். மீண்டும் சொல்கிறேன். இதை அழித்து விட வேண்டாம். இது முழுவதும் என் தனிப்பட்ட விதி. இரக்கம் காட்டவும். எனக்காக அல்ல. இந்த மிகப்பெரும் பணிக்காக. " ஆனால் இந்த வேண்டுகோள் ஸ்டாலினால் முழுமையான நிறைவேற்றப்படவில்லை. சிலபகுதிகள் தொலைக்கப்பட்டன. புகாரின் கைது மற்றும் மரண தண்டனைக்கு இடைப்பட்ட காலத்தில் எழுதப்பட்ட நூல்கள் இவை. இவரின் முதல் நூல் 1921 ல் "வரலாற்று பொருள்முதல் வாதம்" என்ற தலைப்பில் வெளிவந்தது. அக்காலகட்டத்தில் சிந்தனை உலகில் பெரும் அதிர்வை ஏற்படுத்திய இந்நூல் பல மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு அவரை பெரும் மார்க்சிய ஆளுமை என்ற உயரத்திற்கு கொண்டு சென்றது. வேறொரு சூழலில் இதை நாம் குறிக்கும் நிலையில் புகாரின் அக்டோபர் புரட்சியின் நட்சத்திர கூட்டத்தை சார்ந்த புதல்வர்களில் ஒருவர். பன்முகப்பட்ட ஆளுமை கொண்டவர். ஓர் அரசியல் வாதியாக கலை இலக்கியம், விஞ்ஞானம், தத்துவம் போன்ற துறைகளில் ஆழ்ந்து அகன்ற அறிவு கொண்டவர். புரட்சிக்கு பிந்தைய ஆண்டுகளில் ஒரே நேரத்தில் மத்திய குழுவிலும், சோவியத் விஞ்ஞான கழகத்திலும் உறுப்பினராக புகாரின் இருந்தார். அக்காலகட்டத்தில் இலக்கியத்தின் சமூக பரிமாணங்கள் பற்றிய கோட்பாடுகளில் இயந்திரத்தனமான பார்வையற்றவர்களில் புகாரின் ஒருவர். சோவியத் கம்யூனிஸ்ட் கட்சியின் முதுகெலும்பாக இருந்த புகாரின் ஸ்டாலினின் சர்வாதிகார அணுகுமுறைக்கு துரதிஷ்டவசமான நிலையில் பலியானார். 1938ல் நிகழ்ந்த புகழ்பெற்ற மாஸ்கோ சதி வழக்கின் பிரதான குற்றவாளி அவரே. வெளிநாட்டு சக்திகளுக்கு உளவு கூறியது, தேசத்துரோகம், அரசியல் படுகொலைகள் செயதல், அரசை கவிழ்ப்பதற்கு சதி செய்தமை ஆகியவை அவர் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகள். இவரோடு சேர்த்து மேலும் இருபது பேர் மீது இதே குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்த விசாரணையின் போது புகாரினின் செயல்தந்திரமாக அமைந்த ஒப்புதல் வாக்குமூலம் குவியமான ஒன்று. வரலாறு ஒன்றின் பக்க பிழையாக இதையும் மீறி அவரின் மரணத்தண்டனை நிறைவேற்றப்பட்டது.
ஸ்டாலினிய இலக்கியங்களில் புகாரின் ஓரு கொடூர உருவமாகவே சித்தரிக்கப்பட்டிருக்கிறார். அதே நேரத்தில் டிராஸ்கியவாதிகள் அவரை குலாக்குகளின் நண்பராகவே கருதினர். புகாரின் மீது அவர்கள் திரும்ப திரும்ப சொல்லும் குற்றச்சாட்டு இது தான். அவர் விவசாயிகளை நோக்கி "உங்களை வளப்படுத்திக்கொள்ளுங்கள்" என்றார். புகாரின் இதை புரட்சியின் ஆரம்பகட்டத்தில் குறிப்பிட்ட தருணத்தில் சொன்னார்.ஆனால் அது மட்டுமே அவருடைய நிலைபாடல்ல. கால மாற்றத்தை நோக்கி வெளிப்படுத்தப்பட்ட ஒன்றாகவே அதை நாம் கருத வேண்டியதிருக்கிறது. புகாரினை பொறுத்தவரை அவர் தன் பலம் மற்றும் பலவீனம் இரண்டின் இடைவெளியை கடக்க முடியாதவராக இருந்தார். எளிதில் உணர்ச்சிவயப்படக்கூடியவராகவும், ஆழ்ந்த உணர்ச்சி செறிவுள்ளவராகவும் அரசியல் நெருக்கடிகளின் தாளாமையால் அழக்கூடியவராகவும் இருந்தார். 1929 ல் டிராஸ்கியை நாடு கடத்துவதற்கு கட்சியின் மத்திய குழுவின் ஆதரவை ஸ்டாலின் பெற்றுக்கொண்ட போது புகாரின் அதை எதிர்த்து அழுது புலம்பினார். வேறொரு சூழலில் ஸ்டாலின் நிலத்தை பலாத்காரமாக கூட்டுடமையாக்கியதன் விளைவாக உக்ரைனில் பஞ்சம் ஏற்பட்டது. அப்போது உக்ரைன் இரயில் நிலையத்தில் பசியால் வயிறு சுருங்கி போய் நின்றிருந்த சிறுவர் கூட்டத்தை புகாரின் கண்டார். அந்த தருணத்தில் மிகவும் உணர்ச்சிமயமாகி இரக்கப்பட்டவராக அந்த சிறுவர் கூட்டத்திற்கு தன் கையிலுள்ள அனைத்தையும் கொடுத்தார். பின்னர் வீட்டிற்கு சென்று நடந்த சம்பவத்தை தன் மனைவி அன்னா லறீனாவிடம் சொல்லி குலுங்கி குலுங்கி அழுதார் புகாரின். ஆக புகாரின் மேற்சொன்ன பலகீன அம்சங்களால் நிரம்பியவர் என்பது தெளிவாகிறது. புரட்சிக்கு பிந்தைய ஆண்டுகளில் புகாரின் போல்ஸ்விக் கட்சியின் அதிதீவிர இடதுசாரி பிரிவை சார்ந்திருந்தார். 1918 மற்றும் 1920 க்கும் இடைப்பட்ட காலத்தில் இடதுசாரி பிரிவிலும் 1921 மற்றும் 1924 க்கும் இடைப்பட்ட கட்டத்தில் அவர் அதற்கு எதிர் பிரிவிலும் இருந்தார். புகாரினின் கருத்தியல் நிலைபாடு விவசாய வர்க்கத்துடன் சம்பந்தப்பட்டிருந்தது. லெனின் 1921 ல் யுத்தகால கம்யூனிசத்தின் கடுமையை கைவிட்டு புதிய பொருளாதார கொள்கையை ஆரம்பித்திருந்தார். இது விவசாயிகளிடமிருந்து கண்டிப்பாக தானியம் பெறுவதை நிறுத்தியது. விவசாயிகளுக்கு குறிப்பிட்ட அளவு பரிவர்த்தனை சுதந்திரத்தை மீட்டளித்தது. மேலும் சில்லறை வர்த்தகத்திற்கும், சிறிய அளவிலான கைத்தொழில் முயற்சிகளுக்கும் ஆதரவு வழங்கியது. அந்த தருணத்தில் புகாரின் புதிய பொருளாதார கொள்கைக்கான ஆதரவாளனாக மாறினார். அதை பாதுகாப்பதற்கும், பலப்படுத்துவதற்குமான செயல்களில் இறங்கினார். புதிய பொருளாதார கொள்கையின் ஆரம்ப கட்டத்தில் கிராமிய பொருளாதார வளர்ச்சிக்கு உதவக்கூடிய சிறந்த வழி மேல்மட்ட விவசாயிகளின் வளர்ச்சிக்கு உதவுவது என்றும் அதனால் ஏனைய விவசாயிகள் வேலைவாய்ப்புகளையும், பிற உதவிகளையும் அடைவார்கள் என்று புகாரின் நினைத்தார். "நமது விசாலமான விவசாய வண்டியை நம் பின்னால் இழுத்துக்கொண்டு சிறு சிறு எட்டுகள் வைத்து நாம் முன்னேறுவோம்" என்று 1925 ல் அவர் கூறினார். இவ்வாறான நீண்ட படிப்படியான சோசலிச பொருளாதார வளர்ச்சி திட்டத்தை புகாரின் தன் மனக்கிடங்கில் கொண்டிருந்தார். 1926 க்கும் 1929 க்கும் இடைப்பட்ட கட்டத்தில் அவருக்கும் ஸ்டாலினுக்கும் இடையே விவசாய வர்க்கம் பற்றிய நிலைபாட்டில் பெரிய வேறுபாடு எதுவும் இருக்கவில்லை. அக்காலகட்டத்தில் பெரும்பான்மையாக இருந்த நடுத்தர விவசாய வர்க்கத்திற்கும் அரசுக்கும் இடையேயான உறவை பேணுவதில் இருதரப்பினரும் ஒத்த கருத்தை கொண்டிருந்தனர். நகரங்களை மேம்படுத்துவதற்கு தானிய விநியோகம் அவசியம். ஆனால் அது பலாத்காரமற்ற வழிகளில் மேற்கொள்ளப்பட வேண்டும். நிலத்தை கூட்டுடமையாக்குதல் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் இது படிப்படியாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதாக இருதரப்பினரும் ஏற்றுக்கொண்டிருந்தார்கள். டிராஸ்கி தலைமையிலான இடதுசாரி எதிர்ப்பாளர்களின் நிலைபாடு இதற்கு நேரெதிராக இருந்தது. பின்னர் காம்னேவ் மற்றும் ஜினோவ் ஆகியோர் இதில் இணைந்து கொண்டனர். விவசாய வர்க்கம் பற்றிய இடதுசாரி எதிர்ப்பாளர்களின் நிலைபாடு டிராஸ்கியின் சீடரான பிரியோபிரசென்ஸ்கியால் அதன் கூர்மையான வடிவத்தில் முன்வைக்கப்பட்டது. சோவியத் அரசின் மிக அவசரமான பணி ஆரம்ப மூலதன திரட்டலாகும். (Primitive accumulation) வேறொரு அர்த்தத்தில் சொன்னால் சாத்தியமான, விரைவான தொழிற்புரட்சி கிளம்புவதற்கு ஏற்ற வகையில் சூழல்களை உருவாக்குவதாகும். அதாவது மேற்குலகில் முதலாளித்துவம் செய்தது மாதிரி விவசாயிகளை சுரண்டுவதன் மூலமே அது சாத்தியப்படும் என்பது அவர்களின் வாதம். இவர்கள் விரைவான தொழிற்புரட்சி வேண்டும் என்று கோரிய நிலையில் பலாத்காரம் தவிர்க்கப்பட வேண்டும் என்று விரும்பினர். இவ்வாறான நிலையில் டிராஸ்கி முழுமையான உட்கட்சி ஜனநாயகத்தை கோரி நின்றார். 1926 க்கும் 1929 க்கும் இடைப்பட்ட கட்டத்தில் இடதுசாரி எதிர்ப்பை முறியடிப்பதில் புகாரின் ஸ்டாலினுக்கு உதவினார். அவர்களை மௌனியாக்குவதற்கும், எதிர்ப்பு தெரிவித்த எல்லோரையும் கட்சியை விட்டு நீக்குவதற்கும் ஸ்டாலின் எடுத்த நடவடிக்கைகளை அவர் மௌனமாக அங்கீகரித்தார். தானும், ஸ்டாலினும் பொருளாதார பிரச்சினைகளை நேருக்கு நேர் பார்த்தவர்கள் என்பதும் , அதன் விகசனத்தில் நான் பங்கு கொண்டிருக்கிறேன் என்பதும் புகாரினின் வாதமாக இருக்கலாம். இந்த நடவடிக்கையால் நனவிலி நிலையில் ஸ்டாலின் கைகளில் அதிகாரத்தை குவியச்செய்வதற்கு தானே காரணமானார். மையப்படுத்தப்பட்ட பொருளாதார கட்டுப்பாடு, பெருமளவிலான கைத்தொழில்மயமாக்கம், நிலத்தை கூட்டுடமையாக்கம் ஆகியவற்றை நோக்கி 1928-1929 ல் ஸ்டாலின் தன்னை திருப்பினார். இது உடனடியாக மேலிருந்து திணிக்கப்பட்ட புரட்சியின் வடிவத்தில் மனித விலைகளை பொருட்படுத்தாது நிகழ்த்தப்பட்டது. புகாரின் இந்த உடனடி மாற்றத்தின் அறிகுறிகளை ஆரம்பத்தின் புரிந்து கொண்டார். அச்சமயத்தில் அவரும் கட்சியின் மத்திய குழுவின் உறுப்பினராக தான் இருந்தார். ஆனால் 1928 ல் இடதுசாரி எதிர்ப்பாளர்களுடன் உறவை ஏற்படுத்தி கொண்டார். காம்னேவை அவர் சந்தித்தார். இந்த உரையாடல் பற்றி காம்னேவின் குறிப்பு ஒன்று பின்வருமாறு தெரிவிக்கிறது " அவன் ஒன்றையும் விட்டு வைக்க மாட்டான். அவன் நம்மை அழித்து விடுவான். அவன் தான் புதிய செங்கிஸ்கான்." தங்களுக்கு எதிரான வேறுபாடுகள் ஸ்டாலினின் எதிர்ப்பை விட முக்கியத்துவம் குறைந்தவை என்று காம்னேவிடம் புகாரின் கூறினார். மேலும் "அவன் கொள்கைகள் அற்ற சதிகாரன். பழிவாங்கவும் முதுகில் குத்தவும் மட்டுமே அவனுக்கு தெரியும்" என்று கோபமாக கூறினார். புகாரின் தன் இறுதியான கோட்பாட்டு நிலைபாடுகளை 1928 ல் சோவியத் பத்திரிகையான பிராவ்தாவில் எழுதிய கட்டுரை ஒன்றிலும், கட்சியின் மத்திய குழுவிற்கு தான் எழுதிய கட்டுரையிலும் ஆவணமாக சமர்பித்தார். இந்த ஆவணங்கள் பொதுமக்களின் வாழ்க்கை தரத்தை தியாகம் செய்வதிலும், பலாத்காரமாக பெறப்பட்ட மூலதனத்தின் அடிப்படையில் நடைபெறும் கைத்தொழில்மயமாக்கத்தையும் கடுமையாக எதிர்த்தார். இது விவசாயிகள் மீதான இராணுவ பிரபுத்துவ சுரண்டலுக்கே வழிவகுக்கும் என்றார். விவசாயத்திற்கும், கைத்தொழிலுக்கும் கனரக மற்றும் மெதுரக தொழிலுக்கும் இடையே சமநிலையை கடைபிடிப்பது அவசியம் என்றார். இப்பொருளாதார பிரச்சினைகளை கட்சியை பலப்படுத்துவதுடன் இணைத்து நோக்கினார்." நம்பிக்கையின் பேரில் ஒரு சொல்லை கூட ஏற்றுக்கொள்ள வேண்டாம். மனசாட்சிக்கு விரோதமாக ஒரு சொல்லை கூட சொல்ல வேண்டாம். என்றும் அவர் கட்சி உறுப்பினர்களை கேட்டுக்கொண்டார். டிராஸ்கி குழுவினருடன் மறைமுகமாக தொடர்பு வைத்துக்கொண்ட போதும் தான் காரணமாக கட்சிக்கு எதுவும் நேர்ந்து விடக்கூடாது என்பதில் மிகக்கவனமாக இருந்தார் புகாரின். இதன் தொடர்ச்சியில் 1929 ன் இறுதிபகுதியில் கட்சியின் மத்திய குழுவை விட்டு புகாரின் நீக்கப்பட்டார். அதனை தொடர்ந்து முக்கியத்துவம் இல்லாத பதவிகளில் அமர்த்தப்பட்டார். ஒரு சில ஆண்டுகளில் கட்சி அமைப்பு மற்றும் அதற்கு வெளியே எதிர்ப்பாளர்களின் இருப்பு கேள்விக்குறியானது. ஸ்டாலினின் களையெடுப்பு மற்றும் அழித்தொழிப்பு படலம் ஆரம்பானது. 1937 பிப்ரவரியில் புகாரின் கைது செய்யப்பட்டார். அடுத்த ஆண்டு நடைபெற்ற சதிவழக்கில் அவரே முக்கிய எதிரியானார். புகழ்பெற்ற மாஸ்கோ விசாரணையின் போது அவர் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் சோவியத் வரலாற்றில் ஆழ்ந்து பதிந்திருக்கிறது. மூன்று நாள் விசாரணையின் போது அவர் அளித்த குற்ற ஒப்புதல் வரலாற்றாசிரியர்களிடம் பல்வேறு கேள்விகளை எழுப்பி இருக்கிறது. அவரை 1987 ல் சோவியத் நீதிமன்றம் குற்றமற்றவர் என்று அளித்த தீர்ப்பும், அவர் மனைவியின் நினைவு குறிப்புகளும் புகாரின் ஏன் நீதிமன்றத்தில் தன் குற்றத்தை ஒப்புக்கொண்டார் என்பது பற்றிய கேள்வியை எழுப்புகிறது. மேலும் விசாரணையின் போது நீதிமன்றத்தில் புகாரின் நடந்து கொண்ட விதமும், உளவாளியாக இருந்தமை, கொலைச்சதி போன்ற குற்றச்சாட்டுகளை மறுத்தது போன்றவை இதன் மீது சந்தேகத்தை எழுப்புகின்றது. மேலும் நீதிமன்றத்தில் விசின்ஸ்கியுடன் நடந்த விவாதத்தில் பின்வருமாறு குறிப்பிட்டார். " குற்றஞ்சாட்டப்பட்டவனின் ஒப்புதல் வாக்குமூலம் என்பது இடைக்கால யுகத்தின் ஒரு நீதித்துறை கோட்பாடே." இவ்வாறு நடந்து கொண்டதன் மூலம் இவ்வழக்கு ஒரு நிறுவலே என்பதை வெளி உலகுக்கு தெரியப்படுத்துவது அவரின் நோக்கமாக இருக்கலாம். மேலும் அவரின் மனைவி அன்னா லறினா சோவியத் பத்திரிகை ஒன்றுக்கு அளித்த நேர்காணல் புகாரின் மனைவி மீது மிகுந்த நேசனை வைத்திருப்பதை அறிவித்தது. புகாரினை குறித்த விரிவான நூலை எழுதிய அமெரிக்க சிந்தனையாளரான ஸ்டீபன் கோகன் இதைப்பற்றி கூறும் போது புகாரின் கைதுசெய்யப்பட்டதற்கும் விசாரணைக்கும் இடைப்பட்ட கட்டத்தில் குற்றத்தை ஒப்புகொள்ள வேண்டி உடல் ரீதியாகவும், மனோரீதியாகவும் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார் என்கிறார். மேலும் அவரின் மகன் கண்முன்னால் ஸ்டாலினின் காவல்துறையால் அடிக்கப்பட்டார். அதன் வலி புகாரினினை கடுமையாக உறுத்தியது. இதன் தொடர்ச்சியில் சோவியத் புரட்சியின் ஆரம்ப காலகட்டத்தில் எதிர்ப்பாளர்கள் ஒற்றையாக அல்லாமல் அவர்களை சார்ந்திருப்பவர்களுடன் மொத்தமாக அழிக்கப்பட்டார்கள்.(ஜார் மன்னனின் குடும்பம் அழிக்கப்பட்டதுடன் அவனின் வீட்டு நாய் கூட கொல்லப்பட்டது.) ஸ்டாலின் குற்றத்தை ஒப்புகொள்ள மறுத்த எதிர்ப்பாளர்களை கூண்டோடு அழித்தார். அவர்களின் குடும்பங்கள் கூட நிர்மூலமாக்கப்பட்டன. இதே நிலை தன் மனைவிக்கு வந்துவிடக்கூடாது என்பதில் புகாரின் தெளிவாக இருந்தார். தான் கைது செய்யப்படுவதற்கு முந்திய நாட்களில் கட்சியின் எதிர்கால தலைமுறையினருக்கு புகாரின் தன் கைப்பட எழுதிய கடிதம் ஒன்றை தன் மனைவியிடம் கொடுத்து இதை வாழ்நாள் முழுவதும் மனக்கிடங்கில் வைத்திருக்க வேண்டும் என்றும், தற்போது வெளியிட வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும் தான் இனி திரும்ப வர போவதில்லை என்றும் தன் மகனை ஒரு போல்ஸ்விக்காகவே வளர்த்தெடுக்கும் படியும் மனைவியிடம் கூறினார். மனைவியின் மனக்கிடங்கில் பாதுகாக்கப்பட்ட வரிகள் பல ஆண்டுகளுக்கு பின் கோர்பசேவிடம் அன்னா லறினாவால் ஒப்புவிக்கப்பட்டன. இதன் வழி நீதிமன்றத்தில் புகாரின் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் அக்காலத்தில் நடைபெற்ற குடும்ப அழிப்பிலிருந்து தன் மனைவியின் உயிரை காப்பாற்றுவதற்கான செயல்தந்திரமாக இருந்திருக்கலாம் என்று கருத முடிகிறது.ஸ்டாலினுக்கும் புகாரினுக்கும் இடையே மோதல் என்பது ஸ்டாலின் விவசாய நிலங்களை பலாத்காரமாக கூட்டுடமையாக்க தீர்மானித்த விவகாரத்தில் ஏற்பட்டது. ஸ்டாலினை கானல் நீரின் காட்சி மாதிரி திரும்பி பார்க்கும் போது இந்த விவகாரம் பற்றி என்ன நினைத்தார் என்பது பற்றி தெரிய வரும். இரண்டாம் உலகப்போரில் நாசிகளின் ஆக்கிரமிப்பினால் நிகழ்ந்த வேதனைமிக்க அனுபவம் கூட விவசாய நிலங்களின் கூட்டுடமையாக்கத்திற்கான தன் போராட்டம் போல் அவ்வளவு மோசமாக இருக்கவில்லை என்று ஒருமுறை சேர்ச்சலிடம் ஸ்டாலின் கூறினார். ஒருகோடி விவசாயிகள் தன் கைகளை பற்றி நின்றதாக குறிப்பிட்டார். இருந்தும் சோவியத்திற்கு அது அத்தியாவசியமாக இருந்தது. மேலும் புரட்சிக்கு பிறகு விவசாய வர்க்கம் தீவிர மாற்றத்திற்குள்ளாகி இருந்தது கவனிக்கப்படவில்லை. எதார்த்த நிலையில் அது முழுமையடையாத இடைநிலை வர்க்கமாகவே இருந்தது. விவசாய வர்க்கமே விரும்பாத இந்த திட்டம் அநேக மனித உயிர்களை விலையாக கொடுத்தது. பல விவசாயிகள் தங்கள் கால்நடைகளை கொன்றனர். தானியங்கள் தீயிட்டு கொளுத்தப்பட்டன. இதன் பிற்பாடு சோவியத் விவசாயம் நீண்டகாலத்திற்கு பின் தங்கியே இருந்தது. 1929 ல் ஸ்டாலினால் மேற்கொள்ளப்பட்ட கூட்டுடமையாக்கம் என்பது அவசரமாக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கை என்றே வரலாற்று தரவுகளிலிருந்து கூற முடியும். காரணம் கூட்டுப்பண்ணை முறைக்கு மாறுவதற்கான விவசாய இயந்திரங்கள் மற்றும் பிற வசதிகளுக்கான நிதி தேவையை ஈடுகட்டும் நிலையில் அப்போதைய சோவியத் பொருளாதாரம் இருக்கவில்லை. பூரணமாக கூட்டுடமையாக்கத்திற்கு 150000 இயந்திரங்கள் தேவைப்படும் என்று 1930 ல் அதிகாரபூர்வமாக கணக்கிடப்பட்டிருந்தது. ஆனால் 1929 ல் வெறும் 3000 இயந்திரங்களே உற்பத்தி செய்யப்பட்டன. 1932 ல் அது 50000 மாக உயர்ந்தது. இத்தகைய பொருளாதார முரண்பாடுகள் காரணமாக இத்திட்டத்தை குறைந்த வேகத்தில் ஸ்டாலின் முன்னகர்த்தி இருக்கலாம் என்று சோவியத் விமர்சகர்கள் குறிப்பிடுகிறார்கள். ஸ்டாலின் இந்த வேகம் அவசியமானது என்று கருதியதால் சோவியத் அதற்கான பெரும் வரலாற்று விலையை கொடுக்க வேண்டியதாயிற்று.

புகாரினின் முதல் சிறைப்புத்தகமான சமீபத்தில் வெளிவந்த சோசலிசமும் அதன் கலாசாரமும் (Socialism and its culture) முழுமையாக தொகுக்கப்படவில்லை. காரணம் ஸ்டாலினின் காவல்துறையால் அதன் பெரும்பகுதி இல்லாமல் ஆக்கப்பட்டது.வரலாற்று பொருள்முதல்வாதத்தை தொடர்ந்து புகாரினை மாபெரும் அறிவுஜீவி என்ற நிலைக்கு உயர்த்தியது இந்நூல். இதில் புகாரின் கலாசாரத்திற்கும் நாகரீகத்திற்குமான வித்தியாசத்தை ஆராய்கிறார். கலாசாரம் என்பது வரலாற்று ரீதியாக தீர்மானிக்கப்பட்ட சமூகத்தின் தகுதிப்பாடுகள், அந்த சமூக அமைப்புகளின் பல்வேறு பொருளாயத வடிவங்கள் இவற்றை உள்ளடக்கி இருக்கிறது. இந்த கலாசாரங்களின் வடிவ தொகுதி மற்றும் அது சார்ந்த மக்கள் திரளின் மாற்றமே நாகரீகங்களை உருவாக்குகிறது. இதனை குறித்து புகாரின் விரிவாக ஆராயும் பகுதி புத்தகத்தில் விடுபட்டிருக்கிறது. மேலும் சோவியத் யூனியனில் சோசலிச கட்டுமானத்திற்கான தேவை பற்றியும் அதன் வரலாற்று ரீதியான வளர்ச்சி பற்றியும் புகாரின் ஆராய்கிறார். மேலும் அதை நடைமுறைப்படுத்துவது என்பது சோவியத்தை எது முன் தொடர்ந்து வந்திருக்கிறது, எது பின் தொடரப்போகிறது என்பதை எதிர்கொள்வதில் தான் இருக்கிறது. மேலும் முதலாளித்துவ உற்பத்தி முறை இலாபம் சார்ந்த உற்பத்தி நோக்கத்தை அடிப்படையாக கொண்டது என்றும், அதற்கு மாற்றாக சோசலிச பொருளாதாரமே வெகுஜனதிரளின் தேவையை பூர்த்திசெய்யும் ஒன்று என்றும்,செழுமையான, கலாசாரரீதியான வாழ்க்கைக்கு உசிதமானது என்றும் புகாரின் வெளிப்படுத்தினார். ஆனால் நம் பருண்மையான வரலாற்றுச் சூழலில் சோசலிச பொருளாதார முறையானது மிகுந்த சிரமமானதும், சிக்கலானதும் கூட. அது தன் தூரத்தை சிறிது சிறிதாக தான் கடக்க முடியும். அது பல கட்ட வளர்ச்சி படிகளை உள்ளடக்கி இருக்கிறது. ஆகவே தான் வரலாற்றை பருண்மையானது என்கிறார் புகாரின். அக்கால சோசலிச எதிரிகள் சோசலிச சமூக அமைப்பு முறையை கற்பனா வாத முழுவயிறு என்றார்கள். அதற்கு பதிலளித்த புகாரின் அது முழுவயிறு பூர்ஷ்வாக்களின் தவறான கருத்தாகும். சோசலிச சமூகம் அந்த பொருளாதய கலாசாரத்தை தாண்டி செயல்படும் கருவி. மேலும் சோவியத் மற்றும் மேற்குலகில் பாசிச அபாயத்தை குறித்து வெளிப்படுத்தும் புகாரின் பாசிசம் என்பது "பூர்ஷ்வா அதிகார மற்றும் அதிகாரமற்ற இயங்கியலின் உயிருள்ள பிரதிபலிப்பு. இது பூர்ஷ்வாக்களின் இராணுவ அமைப்பை கெட்டிப்படுத்துவதுடன் முதலாளித்துவ சமூகத்தின் வழக்கமற்ற விமர்சனபாங்கு நிலைமையையும் நடைமுறைப்படுத்துகிறது." எதார்த்தத்தில் சோசலிசமே இந்த முரண்பாடுகளை தீர்க்கிறது. சோசலிசத்தின் பொருளாதார அடிப்படைகளை குறித்து ஆராயும் புகாரின் அதன் தீர்க்க தரிசனங்களை கவனத்தில் கொள்ள வேண்டும் என்கிறார். மேலும் விவசாய நடைமுறை குறித்து மார்க்சின் கடிதங்களை மேற்கோள்காட்டினார். மார்க்ஸ் தன் நண்பர் ஒருவருக்கு எழுதிய கடிதத்தில்" விவசாய சீர்திருத்தம் மற்றும் தனிஉடைமையை மாற்றுவது என்பது வரப்போகும் புரட்சியின் ஆல்பா மற்றும் காமா வாக இருக்க வேண்டும்" என்றார். அதாவது கிரேக்க எழுத்தை போன்று ஒன்றன் பின் ஒன்றாக இருக்க வேண்டும். இதனடிப்படையில் தான் அவரின் சோசலிசமயமாக்கல் நிலைபாடு இருந்தது. சோவியத் பொருளாதாரம் முழுமையையும் புரட்சிகரமாக்குவதற்கு பெருந்தொழில்களும், இயந்திர உற்பத்தியும் தேவை. ஆனால் இவை எல்லாவித தொழில்களின் வளர்ச்சியோடு சமநிலைப்பட வேண்டும். நம் முன்னால் நிற்கும் முக்கிய விஷயம் என்பதே உழைக்கும் மக்களின் வளர்ச்சி பற்றியதாகும். முதலாளித்துவத்திற்கும், சோசலிசத்திற்குமான அடிப்படை வித்தியாசமே சுரண்டலை ஒழிப்பதாகும். இங்கு வாடகை முறை மக்களுக்கு திருப்பப்படுகிறது. மக்கள் அவர்களுக்காக அவர்களின் சொந்த விதியை தானே தேர்வு செய்யும் நிலைக்கு மாற்றப்படுகிறார்கள். நடைமுறைரீதியில் சோசலிசம் சமூக உழைப்பின் அதிஉற்பத்தி திறனை உள்ளடக்கி இருக்கிறது. விளைவாக பொதுவான நிலையில் உயர்மட்ட கலாசார வளர்ச்சியையும் ஏற்படுத்துகிறது. மேலும் தனிமனிதன் மற்றும் சமூகத்திற்கிடையேயான உறவை ஆராய்கிறார் புகாரின். அரிஸ்டாடில் மனிதனை சமூக விலங்கு என்றார். மார்க்ஸ் அதை சமூகமயமான மனிதன் (Socialised man) என்பதாக மாற்றினார். மனிதன் இருப்பு ரீதியாகவும், பிரக்ஞைபூர்வமாகவும் சமூகத்தோடு இணைக்கப்பட்டிருக்கிறான். ஆக வர்க்க சமூகத்தில் மனிதன் என்பவன் துண்டிக்கப்பட்டவன். மாபெரும் உழைப்பு பிரிவினை அவனை பிரித்து வைத்திருக்கிறது. இது ஆண்/பெண் என்ற நிலையிலும் நீள்கிறது. இந்த பிரிவினையிலிருந்து அவன் முழுமையாக்கப்பட்ட மனிதனாக மாற்றப்பட்ட வேண்டும் என்றார். இந்த விஷயத்தில் ஸ்டாலினுக்கும் அவருக்குமான வித்தியாசம் என்பது ஸ்டாலின் இதை விரைவான, சர்வாதிகாரமான வழியில் நிறைவேற்றப்பட வேண்டும் என்றார். புகாரின் மெதுவான, படிப்படியான சமூக வேறுபாடுகள் மீதான தகைமையை புரிந்து கொண்டு சாத்தியமாக்க வேண்டும் என்றார். நிலவும் எல்லா பிரச்சினைகளையும் ஒரே இரவில் தீர்த்து வைக்க முடியும் என்ற ஸ்டாலினின் நம்பிக்கைக்கு புகாரின் மாறுபட்டு இருந்தார். கூட்டுடையாக்கத்தின் மீறல்கள் அப்பட்டமாக எங்கும் நிகழ்ந்தன. இவ்வாறான மேலிருந்து திணிக்கப்படும் புரட்சிக்கு எதிரான நிலைபாட்டை கொண்டிருந்த புகாரின் பொருளாதாரத்தை அதீத மத்தியப்படுத்துவதற்கு எதிராக போராடினார். தனித்தனி அரசு நிறுவனங்களின் சுயாதீனத்தை ஆதரித்தார். தரத்தை கடைபிடிக்கும் வழிமுறை என்ற நிலையில் நிறுவன முயற்சிகளுக்கிடையே போட்டியை அவர் விரும்பினார். "பொருளாதாரத்திற்காக நுகர்வோன் அல்ல. நுகர்வோனுக்காக பொருளாதாரம்" என்பதை முன்வைத்தார். சந்தை கருவியை முதலாளித்துவ சிந்தனை முறையிலிருந்து வேறுபடுத்த முயன்றார்.(சமீர் அமீன் இந்த விஷயத்தில் உடன்படுகிறார்) சோசலிச பொருளாதார முறையில் சந்தை ஒரு பயனுள்ள அம்சமாக இருக்க முடியும் என்றார். பெரிஸ்ரோய்க்கா காலத்தில் கோர்பசேவ் புகாரினின் கருத்தியல் அம்சங்கள் சிலவற்றை தான் நடைமுறைப்படுத்த முயன்றார். 1988 ல் புகாரினும் அவருடன் சேர்ந்து குற்றம் சுமத்தப்பட்டவர்களும் சோவியத் நீதிமன்றத்தால் குற்றமற்றவர்கள் என்று விடுதலை செய்யப்பட்டனர். அதற்கு முந்தைய ஆண்டில் சோவியத்தில் வெளியிடப்பட்ட கடிதம் ஒன்றில் புகாரின் பின்வருமாறு குறிப்பிட்டார்." விரைவாகவோ அல்லது தாமதித்தோ என் தலை மீது சுமத்தப்பட்ட அழுக்குகளை வரலாற்று வடி கழுவித்துடைத்து விடும் என்பதில் எனக்கு சந்தேகமில்லை." அவரின் கனவு மாதிரியே அது துடைக்கப்பட்டது. அவரின் மற்ற இரு புத்தகங்களான Philosopical arabseques, How it all began போன்றவை புகாரினை சோவியத் வரலாற்றின் மாபெரும் தத்துவ தரிசனமாக இன்றும் நிலைப்படுத்துகின்றன. இவ்வகையில் புகாரின் தன் வாழ்நாளை முழுமையாக அனுபவிக்க முடியாவிட்டாலும் வரலாற்றை புரிந்த கொண்ட மனிதராக இப்போதும் இருக்கிறார்.
--
தியாகு

-
""
எப்பொருள் யார்யார் வாய்கேட்பினும் அப்பொருள்
மெய்பொருள் காண்பதறிவு
-வள்ளுவர்
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post