சுகாதாரம் -இந்திய நிலை

நன்றி : ரவிக்குமார் எம்.எல்.ஏ.
பத்திரிக்கை : ஜூனியர் விகடன்,23.09.2007 இதழ்.
பொதுவுடமையில் :தோழர் அக்னி
 
ஒரு மனிதனுக்குத் தேவையான அடிப்படை வசதிகள் என்னென்ன? இந்தக் கேள்விக்கு 'உண்ண உணவு, உடுக்க உடை, இருக்க ஒரு வீடு' என்றுதான் பதில் சொல்வோம். இந்தப் பட்டியலில் 'நல்ல மருத்துவ வசதி' என்பதையும் சேர்த்துக்கொள்ள வேண்டும்.

 

பல நாடுகளின் அரசியலமைப்புச் சட்டங்களில் சுகாதாரம் என்பது அடிப்படை உரிமைகளில் ஒன்றாக வைக்கப்பட்டுள்ளது. நமது அரசியல் சட்டத்தில் அப்படி வெளிப்படையாக சொல்லப்படவில்லை என்றாலும், உச்ச நீதிமன்றத்தின் பல்வேறு தீர்ப்புகளில் அதுவலியுறுத்தப்பட்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன்பு மருத்துவ மாணவர்கள், 'கட்டாய கிராமப்புற சேவை' என்ற மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் உத்தரவை எதிர்த்துப் போராட்டம் நடத்தினார்கள். 'கிராமங்களுக்கு சென்று பணியாற்றுவதில் தங்களுக்கு எவ்வித மறுப்பும் இல்லை' என்று அவர்கள் தொலைக்காட்சிகளில் பேட்டி கொடுத்ததைப் பார்த்தபோது, 'அடடா? நமது டாக்டர்கள் எவ்வளவு நல்லவர்கள்!' என்று எண்ணத் தோன்றியது. மத்திய அரசும்கூட கிராமப்புற மக்களின் ஆரோக்கியத்தில் இவ்வளவு அக்கறை காட்டுகிறதே என்று மகிழ்ச்சியாக இருந்தது. ஆனால், நமக்குக் கிடைக்கும் புள்ளிவிவரங்களோ வேறுவிதமாக இருக்கின்றன. அரசின் இந்த அக்கறை உண்மைதானா?

1991&க்குப் பிறகு இந்தியாவில் கிராமப்புற சுகாதார வசதிகள் முற்றாகப் புறக்கணிக்கப்பட்டுள்ளன. எட்டாவது ஐந்தாண்டுத் திட்டத்திலிருந்து இந்த வீழ்ச்சி ஆரம்பமாகிவிட்டது. ஏழாவது ஐந்தாண்டுத் திட்டத்தின் முடிவில் இந்தியா முழுவதுமிருந்த ஆரம்ப சுகாதார நிலையங்களின் எண்ணிக்கை
 

18,671 ஆகும். அது எட்டாவது ஐந்தாண்டுத்திட்ட கால இறுதியில் 22,149 ஆக உயர்ந்தது. ஆனால், 1997&2002&க்கு இடைப்பட்ட ஒன்பதாவது ஐந்தாண்டுத் திட்டத்தின்போது, இந்தியா முழுவதும் 693 ஆரம்ப சுகாதார நிலையங்களே புதிதாக உருவாக்கப்பட்டன. அடுத்ததாக வந்த பத்தாவது ஐந்தாண்டுத் திட்டத்திலோ நிலைமை இன்னும் மோசமாகி வெறும் 394 ஆரம்ப சுகாதார நிலையங்களே கூடுதலாக உருவாக்கப்பட்டுள்ளன. அதுபோலவே 'கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்கள்' மற்றும் 'சப்&சென்டர்'களின் எண்ணிக்கையிலும் பெருமளவில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

கிராமப்புற மக்களின் சுகாதாரத் தேவைகளுக்காக அமைக்கப்படுகின்ற கம்யூனிட்டி ஹெல்த் சென்டர்களை ஒரு லட்சம் பேருக்கு ஒன்று என்ற விகிதத்தில் அமைத்தால்கூட, இப்போது இருப்பதுபோல இரண்டு மடங்கு மையங்கள் உருவாக்கப்பட வேண்டும். இருக்கின்ற மருத்துவ மையங்களிலும் போதுமான மருத்துவர்கள் இருப்பதில்லை என்பது தனிக்கதை. அவற்றில் பணிபுரியும் மருத்துவ நிபுணர்களைப் பற்றிக்கேட்கவே வேண்டாம்.

முப்பதாயிரம் பேருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் என்று வைத்துக் கொண்டால்கூட, இப்போதுள்ளவை போதாது. சுகாதாரத் துறையை மைய அரசு இப்படிப் புறக்கணித்து வருவதால், அரசு மருத்துவ வசதிகளைப் பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை வெகுவாகக் குறைந்துவிட்டது. இதனால் தனிநபர் வருமானத் தின் பெரும்பகுதி, தனியார் மருத்துவமனைகளிடம் கொட்டப்படும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இருக்கிற சொத்தை விற்றோ, கடன் வாங்கியோதான் தனது மருத்துவத் தேவையை ஒருவர் பூர்த்தி செய்துகொள்ள வேண்டும் என்ற சூழல். ஆந்திர மாநிலத்தில் விவசாயிகள் தற்கொலை செய்து கொண்டதற்கு அவர்களின் மருத்துவ செலவுக்காகப் பெற்ற கடன்களும் ஒரு காரணம்.

'நமது உடல்நலத்தை நாம்தான் காப்பாற்றிக்கொள்ள வேண்டும். இதில் அரசாங்கம் என்ன செய்ய முடியும்?' என்ற எண்ணத்தில் யாரும் இதுபற்றி அதிகம் பேசுவதில்லை. சுகாதார வசதிகளைச் செய்து கொடுத்துதான் தீரவேண்டும் என்று அரசாங்கத்திடம் நாம் வாதாட முடியுமா? அதற்கு நமக்கு அதிகாரம் உள்ளதா? இந்த சந்தேகம் நம்மில் பலருக்கும் இருக்கக்கூடும். நிச்சயமாக நாம் அரசாங்கத்திடம் வலியுறுத்த முடியும். சர்வதேச அளவில் பொது சுகாதாரம் குறித்து உருவாக்கப்பட்டுள்ள ஒப்பந்தங்களில் இந்தியா கையெழுத்திட்டிருக்கிறது. நமது அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 21&ஐ அத்துடன் இணைத்துப் புரிந்துகொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. ஒவ்வொரு குடிமகனது உயிர்வாழும் உரிமையும், தனிமனித சுந்திரமும் காக்கப்பட வேண்டும் என்று அந்தப் பிரிவு வலியுறுத்துகிறது.

''உயிர்வாழ்வதற்கான உரிமை என்பதில் மருத்துவ வசதியைப் பெறுவதற்கான உரிமையும் உள்ளடங்கி இருக்கிறது, எனவே, அதை உத்தரவாதப்படுத்த வேண்டியது அரசின் கடமை'' என மொஹிந்தர் சிங் சாவ்லா என்பவர் பஞ்சாப் அரசுக்கு எதிராகத் தொடுத்த வழக்கில் உச்ச நீதிமன்றம் தீர்ப்பு கூறியிருப்பதை இந்த இடத்தில் சுட்டிக் காட்டுவது பொருந்தும். இதுமட்டுமின்றி, ஒரு நோயாளிக்கு சரியான நேரத்தில் சரியான மருத்துவ சிகிச்சையை ஒரு அரசு மருத்துவமனை வழங்காவிட்டால், அது அந்த நோயாளியின் உயிர்வாழும் உரிமையை மீறியதாகவே எடுத்துக்கொள்ளப்பட வேண்டும் என்று இன்னொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பதும் முக்கியமானதாகும்.

இந்தியாவில் நிலவும் மோசமான சுகாதார நிலையைக் கணக்கில் கொண்டுதான் 2002&ம் ஆண்டு 'தேசிய சுகாதாரக் கொள்கை' ஒன்று மத்திய அரசால் உருவாக்கப்பட்டது. பொது சுகாதாரத் தேவைக்கென செலவிடப்படும் தொகை மிகவும் குறைவாக இருப்பதை அப்போது ஒப்புக்கொண்ட அரசு, 2010&ம் ஆண்டுக்குள் நாட்டின் மொத்த செலவில் (ஜி.டி.பி.) இரண்டு சதவிகிதத்தை சுகாதாரத்துக்கென ஒதுக்கப்போவதாக உறுதியளித்தது. ஆனால், குறைந்தது ஐந்து சதவிகித நிதியை இதற்காக ஒதுக்க வேண்டும் என்று உலக சுகாதார நிறுவனம் பல காலமாக வலியுறுத்தி வருகிறது. ஆனால், தற்போது ஒதுக்கப்படும் நிதி, ஒரு சதவிகிதம்கூட இல்லையென்பது வேதனைக்குரியதாகும்.

யுத்தத்தால் சீரழிந்து போயிருக்கும் இலங்கை அரசாங்கம்கூட, பொது சுகாதாரத்துக்காக இந்தியா வைப் போல இரண்டு மடங்கு செலவிடும்போது, இந்திய அரசு இப்படி நடந்து கொள்வது அதிர்ச்சி அளிக்கிறது!

அரசாங்கத்தின் கொள்கை மற்றும் குறைந்த அளவு நிதி ஒதுக்கீட்டால் சுகாதாரத்துறையில் ஏற்படும் பாதிப்புகள் ஒருபுறமிருக்க& நமது மருத்துவர்களின் அலட்சியமும், பொருள் ஈட்டுவதில் அவர்கள் காட்டும் ஆர்வமும் ஏற்படுத்தும் கேடுகள் எண்ணிலடங்கா. ''கிராமப்புறங்களில் இருந்துதான் நாங்கள் வந்திருக்கிறோம். கிராமங்களுக்குப் போவதில் எங்களுக்குத் தயக்கமில்லை'' என மருத்துவ மாணவர்கள் சொன்னபோதிலும், யதார்த்த நிலை அப்படியில்லை.

''தமிழ்நாட்டில் உள்ள 37,733 அலோபதி மருத்துவர் களில், சுமார் எழுபது சதவிகிதத்தினர் தனியார் துறையில் பணிபுரிகின்றனர். தனியார் மருத்துவமனைகள் பெரும் பாலும் நகரப்பகுதிகளில்தான் உள்ளன. சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறங்களில் மட்டும் சுமார் பத்தாயிரம் அலோபதி டாக்டர்கள் உள்ளனர். சென்னைப் பகுதி யில் எண்ணூறு பேருக்கு ஒரு டாக்டர் இருக்கிறார். ஆனால், தமிழகம் முழுவதும் 1,590 பேருக்கு ஒரு டாக்டர் என்ற நிலையே காணப்படுகிறது'' என்று 2005&ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. மருத்துவ வசதிகளில் தற்போது நகர மற்றும் கிராமப் பகுதிகளுக்கிடையே காணப்படும் ஏற்றத்தாழ்வுக்கு இது ஓர் உதாரணம்.

நாட்டின் பொது சுகாதார அமைப்பு மோசமாக இருப்பதால் பெரும்பாலான மக்கள், தனியார் மருத்துவ மனைகளை நாடிச்செல்வதைப் பார்க்கிறோம். அப்படிப் போவதால் தனியார் மருத்துவ சேவை சிறப்பாக இருக் கிறது என்று அர்தமாகிவிடாது. அரசு மருத்துவர்கள் தனியே பிராக்டிஸ் செய்வது தடை செய்யப்படாத காரணத்தால், தனியார் மருத்துவமனைகளோடு ரகசிய ஒப்பந்தம் செய்துகொண்டுள்ள சில அரசு மருத்துவ நிபுணர்கள், தம்மிடம் வரும் நோயாளிகளை அந்தத் தனியார் மருத்துவமனைக்குச் செல்லும்படி நிர்ப்பந்திக்கின்றனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக உள்ளது. தேவையான கட்டமைப்பு வசதிகள் இல்லாத அத்தகைய தனியார் மருத்துவமனைகள் பணம் பறிக்கும் மையங்களாகவே செயல்படுகின்றன. சட்டவிரோத கருச்சிதைவுகள் தொடங்கி, உடல் உறுப்புகளைத் திருடுவது வரை சட்டத்துக்குப் புறம்பான எல்லா காரியங்களுக்கும் அவை இடமளிக்கின்றன.

மிகப்பெரும் வணிக மையங்களாக உருவெடுத்து வரும் தனியார் மருத்துவமனைகளின் முறைகேடுகளுக்கு அரசாங்கமும் பலவிதங்களில் உடந்தையாக இருக்கிறது. இதற்கு ஒரேயரு உதாரணத்தை மட்டும் பார்க்கலாம். பல தனியார் மருத்துவமனைகள் சலுகை விலையில் நிலங்களைப் பெற்றுள்ளன. பல்வேறு மருத்துவ உபகரணங்களை வரிச் சலுகை பெற்று வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்துள்ளன. தாம் சிகிச்சை அளிக்கும் நோயாளிகளில் முப்பது சதவிகிதம் பேருக்கு இலவசமாக சிகிச்சை அளிப்பதாக வாக்குறுதி அளித்தே இந்தச் சலுகைகளை அந்த மருத்துவமனைகள் பெற்றுள்ளன. அதேபோல் அந்த மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகளை ஒதுக்குவதிலும், பரிசோதனைகளை மேற்கொள்வதிலும் இப்படி ஒரு குறிப்பிட்ட சதவிகிதம் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளுக்கு இலவசமாக செய்யப்பட வேண்டும். ஆனால், எந்தவொரு தனியார் மருத்துவமனையும் இந்த வாக்குறுதிகளைக் காப்பாற்றுவதில்லை.

இது தொடர்பாக கடந்த 2004&ம் ஆண்டில் நாடாளு மன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டபோது& அதற்கு பதில ளித்துப் பேசிய சுகாதாரத்துறை இணை அமைச்சர், ''சுகாதாரம் என்பது மாநிலப் பட்டியலில் இருப்பதால் இதற்கான வரைமுறைகளை மாநில அரசுகள்தாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்'' என்று கூறினார்.

சுகாதாரம் மாநில பட்டியலில் இருந்தாலும், மருந்து விலைகளைக் கட்டுப்படுத்துவது உள்ளிட்ட கொள்கை முடிவுகளை எடுக்கும் அதிகாரம் மத்திய அரசிடம் தான் உள்ளது. 'காட்' ஒப்பந்தத்துக்குப் பிறகு இந்திய சட்டங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ள திருத்தங்களின் விளை வாக மருந்து விலைகள் பலமடங்கு உயரும் அபாயம் ஏற்பட்டு இருக்கிறது. இதற்கு மத்திய அரசே காரணம். தனியார் பொறியியல் கல்லூரிகளில் ரெய்டு நடத்தியது போல, தனியார் மருத்துவமனைகளிலும் அதிரடி சோதனை செய்து, இலவச மருத்துவ வசதி தொடர்பான வாக்குறுதிகள் கடைபிடிக்கப்படுகிறதா என்பதை தமிழக அரசு கண்டறிந்தால் என்ன? அவற்றில் மேற்கொள்ளப்படும் வருமான வரி சோதனைகளைவிட முக்கியமானதல்லவா இது? அத்துடன் இப்படி சலுகைகள் பெற்றுள்ள தனியார் மருத்துவமனைகளின் பட்டியலையும், அவை பெற்றுள்ள சலுகைகளையும் தமிழக அரசு தனது இணையதளத்தில் வெளிப்படையாக அறிவித்தால் பொதுமக்களிடமும் இதுபற்றி ஒரு விழிப்பு உணர்வு ஏற்படும்.

ஒரு நாட்டின் ஆரோக்கியம் அதன் பொருளாதார வலிமையில் மட்டுமல்ல, அந்த நாட்டு மக்களின் ஆரோக்கியத்திலும் அடங்கியுள்ளது. தமது குடிமக்களை நோய்களுக்கு பலியாக்கிக்கொண்டு, தான் வலிமையோடு இருப்பதாக ஒரு அரசு மார்தட்டிக்கொள்ள முடியாது. இதை மத்திய&மாநில அரசுகள் உணர வேண்டும். வறுமைக் கோட்டுக்கு கீழே உள்ள மக்கள் அனைவருக்கும் இலவசமாக 'மெடிக்கல் இன்ஷ¨ரன்ஸ்' செய்வதற்கு திட்டம் ஒன்றை மாநில அரசு உருவாக்கிட வேண்டும். தேசிய அறிவுசார் ஆணையம் உருவாக்கப்பட்டு, அதன் பரிந்துரைகள் இப்போது செயல்வடிவம் பெறவுள்ளன. அதுபோல மத்திய அரசு 'தேசிய சுகாதார ஆணையம்' ஒன்றை உருவாக்க வேண்டும். புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவமனை போன்ற சிறப்பு மருத்துவமனைகளை முதல்கட்டமாகத் தமிழகத்தில் உள்ள ஆறு மாநகராட்சிகளிலாவது துவக்கு வதற்கு தமிழக அரசு முன்வர வேண்டும்.

--
வலைப்பூ(BLOG) : http://agnisiraku.blogspot.com/

நா.பிரதாப் குமார்.


 

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post