அனிதாவுக்கு வாழ்த்து -விகடனில் கவிதை்

இன்று விகடனில் அனிதாவின் கவிதைகள்
வெளிவந்துள்ளன!
அவருக்கு என் வாழ்த்தை தெரிவித்து கொள்கிறேன்

இதோ அவரது கவிதை

ஒற்றை ரோஜா

விடுதி அறையைச் சுத்தம் செய்கையில்
இரும்பு பீரோ இடுக்கிலிருந்து
பூந்துடைப்பத்தில் ஒட்டிக்கொண்டு வந்தது
நீள் காம்புமாய் ஒடியும் இலைகளுமாய்
கறுத்துவிட்டிருந்த ஒற்றை ரோஜா.

எனக்கு முன் இருந்தவரோ
அதற்கு முன் இருந்தவரோ
யாருடையதாகவும் இருக்கலாம்.

மறந்ததா மறுத்ததா எனத்
தெரியாதபட்சத்தில்
மடல்விலக்கி தூசு அகற்றி சுவரில்
ஒட்டிவிட்டேன்.

கொடுத்தவரும் பெற்றவரும்
இன்னும் பிரியாமல் இருக்கவும் கூடும்!


**********************************

கோள்களின் நிழல்கள்

நினைவிருக்கிறதா உனக்கு

பின்னோக்கிய யுகங்களின் ஒரு பிரபஞ்ச
வெளியில்
நம் முதல் சந்திப்பை.
கிரகங்களின் இடுக்குகளில் அமர்ந்து
நூற்றாண்டுகளாய் தொடர்ந்த பேச்சுக்களை

இரண்டாவது பால் வீதி முனையின்
விருப்பமில்லா விடைபெறுதல்களை
தேகங்கள் மாறி மாறி நுழைந்தும்
சலிக்காத கண்ணாமூச்சிகளை
பிறந்ததுமே தேடத் துவங்குகிறேன்
உன்னை ஒவ்வொரு முறையும்.
இம்முறையும்.

ஜனனங்கள் பலவாகி ரேகைகள் மாறினும்
இப்பொழுதும் அடையாளத்துக்கு உதவும்
உன்னுள் படிந்த என் மோகங்களும்
என்னுள் பரவிய உன் வெட்கங்களும்!

*********************************

கரிசனம்

அனல் தகித்து
எடை கூடிய உடலின்
முறுக்கிப் பிழியும் வலி பொறுத்து
இல்லாத வெளியில்
என்னுடன் நடந்துகொண்டிருந்தேன்

தொலைபேசியின் இரக்கமற்ற சிணுங்கலில்
உலுக்கி எழுப்பி
உறங்குகிறாயா என்கிறாய்.
ஆமாம்!


***வாழ்த்துக்கள் தோழியே!***
தியாகு

2 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post