உலக கொலைகாரன் அமெரிக்கா

நன்றி : திரு அவர்கள்  ஆலமரம் பிளாக்ஸ்பாட்
 
கடந்த சில வாரங்களுக்கு முன்னர் பாகிஸ்தானில் வான்வெளி தாக்குதலில் குழந்தைகள் உட்பட 18 அப்பாவி மக்களை கொன்றிருக்கிறது அமெரிக்கா. உலகத்தையே தீவிரவாதத்தின் பிடியிலிருந்து இரட்சிக்கப் போவதாக சின்னவர் (!) ஜார்ஜ் புஸ் கொக்கரித்து கிழம்பியது முதல் கொல்லப்பட்ட மக்களின் எண்ணிக்கை பல்லாயிரம். இந்த கொலைப்பட்டியல் ஈராக், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் என நீளுகிறது.

நியூயார்க் நகரில் இரட்டை கோபுரங்கள் தகர்க்கப்பட்ட பின்னர் அமெரிக்காவின் பார்வை ஆசியாவின் பக்கம் திரும்பியது. குறிப்பாக இஸ்லாமிய நாடுகளை குறிவைத்து. ஜனநாயகத்தை (அது என்ன வெங்காயமோ?) உருவாக்க போகிறோம் என்ற போர்வையில் தனது இராணுவ கொடுக்குகளை திசைகளெல்லாம் பரப்பியது. உலகத்தின் சமாதானம் அமெரிக்கா கதையளக்கிற ஜனநாயகத்தின் சட்டைப்பையில் இருப்பது போல நாமும் நம்பினோம். அது சரி, அமெரிக்கா பெயரளவிலாவது ஜனநாயகம் உள்ள நாடு இல்லையா? அப்போ அமெரிக்கா ஏன் மற்ற நாடுகள் விவகாரத்தில் தலையிடணும்? ஜனநாயகம் என்பது "மக்களால், மக்களுக்காக" என்பது தானா? இல்லை அமெரிக்காவால் உலகத்துக்காக என்பதா? தனது வீட்டு கொல்லைப் புறத்தில் கறுப்பின மக்களின் உயிரை, உணர்வை அடக்கி அடிமையாக வைத்திருக்கும் அமெரிக்கா என்கிற அடக்குமுறை தேசமா விடுதலை, சமாதானம், சுதந்திரம் பற்றி பேசுவது. அதுவும் மனித உரிமை, சட்டம், நாடுகளின் சுதந்திரம் இவற்றை மதிக்காத "ஜார்ஜ் புஸ்கள்" எல்லாம் இப்படி புறப்பட்டால்?

ஈராக்கில் சதாம் உசேன் என்கிற அடக்குமுறை ஆட்சியானால் மடிந்த மக்களை விட, அமெரிக்க பொருளாதார தடைகளில் மடிந்த குழந்தைகள், கற்பிணி பெண்கள், அபலைகள் எண்ணிக்கையில் அதிகம். சதாமுக்கு எதிரான யுத்தத்தில் ஐ.நா. சபை தடை செய்த 'டிப்ளீட்டட் யுரேனியம்' கலந்த ஆயுதங்களை ஈராக் முழுவதும் பயன்படுத்தியது அமெரிக்கா. இது காற்று, குடிநீர், நிலம் அனைத்தையும் கதிர்வீச்சில் பரப்பியது. அதன் விளைவாக எண்ணற்ற சிறு குழந்தைகள் லூகீமியா என்கிற இரத்தப்புற்று நோயால் அவதியுறுகின்றனர்.

வியெட்னாம் யுத்தத்திற்கு பிறகு தனது படைகள் கொல்லுகிற மக்களின் எண்ணிக்கைகளை அமெரிக்கா வெளியிடுவதில்லை. தனது இரத்தக்கறை படிந்த கரங்களை உறைக்குள் ஒளித்து வைக்கிற அமெரிக்க யுக்திகளுள் இதுவும் ஒன்று. நடுநிலையளர்கள் கணக்கில் 50,000க்கும் மேற்பட்ட ஈராக்கியர்களை யுத்தம் பலிவாங்கியது. ஈராக்கில் பல்லாயிரகணக்கான சிறுமழலைகளின் உயிரை, உறவினர்களை, தாய் தந்தையரை பலிவாங்கி அனாதையாக்கியது தான் அமெரிக்காவிற்கு ஜனநாயகம் என்றால், இந்த வெங்காயம் (?) இருந்தால் என்ன? இல்லாவிட்டால் என்ன? இல்லாத ஆயுதத்திற்காக ஈராக் மக்களின் மன அமைதியை, வாழ்வை, உயிரை பலிவாங்கிய அமெரிக்காவை எந்த சர்வதேச ஒழுங்குமுறை தண்டிக்கும்?

அமெரிக்கா என்ற அடக்குமுறை தேசத்தின் இரத்தகறை படிந்த வரலாற்றில் இது ஒன்றும் புதிதல்ல. எல்சால்வடோர், பொலிவியா, கொலம்பியா, சிலி, பிஜி என பல லத்தீன் அமெரிக்க நாடுகளில் அமெரிக்க தேசமும் அதன் ராணுவ, அரசியல் தலைமையும் நடத்திய படுகொலைகள் எண்ணிலடங்காதவை.
ஆப்பிரிக்க நாடுகளின் கனிம வளங்களை கொள்ளையக்க வசதியாக பொம்மை அரசுகளை உருவாக்கியதும், சர்வாதிகாரத்தை உருவாக்கி உரமூட்டி வளர்த்த ரத்தசகதி நிறைந்த வரலாறும் ஏராளம். உலகமே இன்று அமெரிக்க தேசத்தின் கொலைக்களமாக மாறியிருக்கிறது

அமெரிக்காவின் இரத்த வெறி பிடித்த கொலைகள் எண்ணிலடங்கா. அவற்றில் நாடுகளின் தலைவர்களையே நடுங்க வைத்தது சிலி நாட்டில் அமெரிக்கா தனது கைகூலி படைகளை வைத்து அரங்கேற்றிய அரசியல் படுகொலை. அமெரிக்க வரலாற்றில் எப்படி செப்டம்பர் 11, 2001 மறக்கமுடியாததோ அதைப்போல, சிலிநாட்டு குடிமக்கள் செப்டெம்பர் 11, 1973ஐ மறக்கமாட்டார்கள்.

அன்று சிலி நாட்டை ஆட்சி செய்தவர் சால்வடோர் அலெண்டே. முறைப்படி மக்க்களால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் அவர். செப்டெம்பர் 11, 1973 அன்று அலண்டேக்கு எதிராக அவரை பாதுக்காக்க வேண்டிய ராணுவம் அமெரிக்கவால் களமிறக்கப்பட்டது. அலண்டேயின் அரசதலைவர் மாளிகை முற்றுகைக்குள்ளானது, அவர் உயிரை குடிக்க துவக்குகள் காத்திருந்தன. அதையுணர்ந்தும் அஞ்சாத நெஞ்சுடன் நாட்டு மக்களுக்கு உணர்ச்சிபூர்வமான உரையாற்றிகொண்டிருந்தார் அலெண்டே.

தனது நாட்டு மக்களின் வாழ்வை, தான் மேலாக பற்று வைத்திருந்த சிலி நாட்டை ஒரு போதும் அடக்குமுறையாளர்களுக்கு அடிபணிந்து விட்டுக்கொடுக்க அவர் தயாரில்லை. எதிரியின் கைகளில் கோழைத்தனமான தான் வாழ்வை விட வீரனாக மரணத்தை தழுவ விரும்பினார் அலெண்டே. இனிய நண்பர் பிடல் காஸ்ரோ தனக்கு வழங்கிய அழகிய துப்பாக்கியால் தன்னை தானே சுட்டுகொண்டார் அலெண்டே. இந்த அரசியல் கொலைக்கு பின்னால் இயங்கியது யார்? அன்று வெள்ளை மாளிகையில் இருந்த நிக்சன் தலைமையிலிருந்த அமெரிக்க அரசும் சி.ஐ.ஏவும்.

அலெண்டே என்ன குற்றம் செய்தார்? அவர் பயங்கரவாதியா? அவர் பக்கத்து நாடுகள் மீது படையெடுத்து அச்சுறுத்தினாரா? படுகொலைகள் நடத்தினாரா? இல்லை மக்களின் பணத்தை கொள்ளையடித்தாரா? ஓங்கி உயர்ந்த தீப்பந்தத்துடன் நிற்கிற சுதந்திரதேவியே பதில் சொல்! வெள்ளை மாளிகை என்ற பெயரில் இயங்கும் அமெரிக்க நாட்டு அரச தலைமை பீடத்தில் இருந்த, இருக்கிற கள்ளமனம் படைத்தவர்களே சிலி நாட்டு மக்களுக்கும் உலகுக்கும் பதில் சொல்! சிலி மக்கள் மட்டுமல்ல, உலகமெங்கும் வரலாற்றை மறவாத மனதுகளில் அலையாய் மோதுகிற கேல்விகள் இவை.

இந்த படுகொலைக்கு பின்னணி என்ன?

செப்டெம்பெர் 4, 1970ல் சோசலிச கொள்கை கொண்ட சால்வடோர் அலெண்டே 36.2 சதவிகித வாக்குகள் பெற்று வெற்றியடைந்தார். தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜார்ஜ் அலெச்சண்ட்ரி (சி.ஐ.ஏ வால் வெற்றிபெறுவார் என நம்பப்பட்டவர் இவர். முன்னள் அரசதலைவர்) 34.9 சதவிகிதம் பெற்றார். இன்னொரு வேட்பாளர் கிறிஸ்தவ ஜனநாயக கட்சியை சார்ந்த ரடொமிரொ றொமிக் 27.8 சதவிகித வாக்குகள் பெற்றார், இவரது செல்வாக்கு இருந்த மக்களிடம் அலெண்டேயின் செல்வாக்கும் காணப்பட்டது. அப்போதைய சட்டப்படி மக்கள்வாக்குகளில் (popular votes) பெரும்பான்மையில்லையெனில், காங்கிரஸ் அதிக வாக்குகள் பெற்ற இருவரில் ஒருவரை அரசதலைவராக தேர்ந்தெடுக்கும் (இது ஒன்றும் மக்களாட்சியில் புதிதல்ல, அமெரிக்க அரச தலைவர்கள் ஜார்ஜ் புஸ், பில்கிளிண்டன் மற்றும் பிரிட்டிஸ் பிரதமர் மார்கரெட் தாட்சர் இதே முறையில் தான் தேர்ந்தெடுக்கப்பட்டனர்). இந்த நிலையில் அமெரிக்க அரசும், சி.ஐ.ஏவும் பல சதித்திட்டங்களுடன் திரைமறைவு மிரட்டல் அரசியலில் இறங்கியது. சிலி நாட்டின் இராணுவத்தளபதி சி.ஐ.ஏ கைக்கூலியாக வைத்த கடத்தல்காரர்களால் கொல்லப்பட்டார். நாட்டின் ஆபத்தான நிலையை உணர்ந்த காங்கிரஸ் அலெண்டே தான் அரச தலைவர் என நவம்பெர் 3, 1970ல் அறிவித்தது.

அலெண்டே ஆட்சியில் பல வங்கிகள், சுரங்கங்கள் நாட்டுடமையாக்கப்பட்டது. சுகாதார அமைப்பில் சீர்திருத்தம், கல்வியில் சீர்திருத்தம், குழந்தைகளுக்கு இலவச பால் என பல மக்கள்நல திட்டங்கள் செயல் படுத்தப்பட்டது. முந்தைய அரசின் விவசாய வளர்ச்சித்திட்டங்கள் முடுக்கிவிடப்பட்டன. வெளிநாட்டு கடன்களை திருப்பி செலுத்த காலவரம்பு நிர்ணயிக்கப்பட்டது. எல்லா தரப்பு மக்களின் ஊதியத்தை உயர்த்திய அதே வேளையில் பொருட்களின் விலையேறாமல் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டது.

அதே வேளையில் அலெண்டேயின் அரசு எதிர்ப்பையும் தேடியது. இம்முறை எதிர்த்தவர்கள் கணகில்லா நிலங்களை தனது கைகளில் அனுபவித்து வந்த பணம்படைத்தவர்களும், பிற்போக்குத்தன கல்வியை சோசலிச கல்விமுறை மாற்றியதை விரும்பாத கத்தோலிக்க மதமும். அசராத அலெண்டே தனது சீர்திருத்தத்தை ஏழைமக்கள் பயன்படும் திட்டங்களாக உருவாக்கினார். அவை கல்வி, வேலைவாய்ப்பு, பொதுகட்டமைப்புகள் என தொடர்ந்தன. முதல் வருடம் நாட்டில் பொருளாதரம் வரலாறு காணாத முன்னேற்றமடைந்தது.
தொடர்ந்து வந்தது அலெண்டேவின் நெருக்கடியான காலம். கடைகளில் பொருட்களை வர விடாமல் தடுத்து கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்பட்டது. இதன் பின்னால் இருந்தது அலெண்டேயின் எதிரிகளான செல்வம் படைத்தவர்கள். டிரக் உரிமையாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியது. சர்வதேச சந்தையில் சிலிநாட்டு ஏற்றுமதி கனிமமான செம்பு (காப்பர்) விலைவீழ்ச்சி. சர்வதேச பெரியண்ணன் அமெரிக்காவின் பொருளாதார நெருக்கடிகளும் கூடவே தேடிவந்தது. தொடர்ந்து நாடே பொருளாதார நெருக்கடியை சந்தித்தது.

இராணுவத்தின் டாங்கி பிரிவு ஜூன் 29, 1973 கர்னல் ரொபெர்டொ சொயுபெர் தலைமையில் அரச தலைவர் மாளிகையை முற்றுகையிட்டது. இராணுவ புரட்சி முறியடிக்கப்பட்டு ஆகஸ்டு 9ல் ஜெனரல் ப்ரட்ச் இராணுவ தலைமை ஏற்றார். அவரும் நெருக்கடிகளால் இராஜினாமா செய்தார். ஆகஸ்டு 22 பினொசெட் ராணுவ தலைமை பொறுப்பேற்றார் அவர் தலைமையில் தான் இராணுவ புரட்சி அரங்கேறியது.

தொடர்ந்து பினொசெட் ஆட்சிப்பொறுப்பில் 17 வருடங்கள் அமெரிக்காவின் ஆசியுடன் சர்வாதிகாரியாக இருந்தார். இந்த இராணுவ சர்வாதிகார ஆட்சியில் கொல்லப்பட்ட அப்பாவிகள் எண்ணிக்கை, சித்திரவதை செய்யப்பட்டோர், சிறைகொடுமை அனுபவித்தவர்கள் பல்லாயிரம் மக்கள். இந்த கொடுங்கோன்மை ஆட்சிக்கு பாதையமைத்தது அமெரிக்கா என்பதற்கான உறுதியான ஆவணங்களை தற்போது வெள்ளைமாளிகையால் வெளியிடப்பட்டது. அமெரிக்காவின் பொருளாதார தடைகள் அலெண்டேவின் ஆட்சியை பலிவாங்க அடிப்படையாக இருந்ததை அமெரிக்க அரசு ஆவண்ங்கள் உறுதிபடுத்துகிறது. முதல் முறையாக சிலி நாட்டில் சர்வாதிகார ஆட்சியை அமர்த்திய பெருமையும் சிலி மக்கள் வாழ்வை குலைத்த பெரும்பேறும் அமெரிக்கா என்ற அரச வல்லாதிக்கத்தை சேரும். பினொசெட் ஆட்சிப் பொறுப்பிலிருந்து இறங்கிய பின்னர் பிரிட்டனில் கைது செய்யப்பட்டு சித்திரவதைக்கு எதிரான வழக்கு தொடுக்கப்பட்டதும் உடல்நிலை காரணம் சொல்லப்பட்டு அந்தக் கோழையை சிலி நாட்டுக்கு அனுப்பி வீட்டுக்காவலில் சக்கரநாற்காலியில் முடக்கிவைத்தது தனி வரலாறு.

"வாழ்க சிலி! வாழ்க மக்கள்! வாழ்க தொழிலாளர்! எனது தியாகம் வீண்போகாது...." இது அலெண்டே என்ற அசைக்க முடியாத வீரனின் கடைசி குரல்கள் வானொலியில் மக்களுக்காக. வரலாற்றில் அந்த வீரனின் காலடியில் வீழ்ந்து கிடக்கிறது இராணுவ வல்லமை பொருந்திய அமெரிக்கா.
வருகிறேன் அமெரிக்கா என்னும் இரட்சகனின் (!) இரத்தக்கறை படிந்த வரலாற்றுடன்.

நினைவுகளுடன்
திரு


--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post