முதல்வர் அவர்களுக்கு ஒரு குடிமகனின் மடல்

முதல்வர் அவர்களுக்கு ,
தமிழகத்தில் இரண்டாவது முறையாக ஆட்சி பொறுப்பேற்ற நீங்கள்
தமிழகத்துக்கு பொருளாதார ரீதியாக செய்யும் உதவிகள் எல்லாம் சரியே ஆனால் தன்மானம்தானே மிகப்பெரிய பரிசு
ஆம் தமிழனுக்குள் இன்னும் இருக்கும் சாதிய ஒடுக்கு முறையான இரட்டை குவளை முறையை ஒழிக்க எதாவது ஒரு கோப்பில் கையொப்பம் இடுங்கள் தாழ்த்தபட்டவர்கள் என்பவர்கள் இனிமேலும் இல்லை என்ற நிலையை உங்கள் அரசு உருவாக்க வேண்டும் என்பதே எனது கோரிக்கை .


------------------------------
-----------------------------------------------------------------






மதுரை: தமிழகத்தில் 12 மாவட்டங்களில், 213 கிராமங்களில் மேற்கொண்ட ஆய்வில், 104 கிராமங்களில் இன்னும் இரட்டை குவளை முறை இருப்பது மதுரை "எவிடன்ஸ்' அமைப்பு மூலம் தெரியவந்துள்ளது.

மதுரையில் 13 கிராமங்கள், திண்டுக்கல்லில் 24 கிராமங்கள், சிவகங்கையில் 15 கிராமங்கள் என 213 கிராமங்களில் நிலவும் தீண்டாமை பாகுபாடுகளை இந்த அமைப்பு ஆய்வு செய்தது. இதில், 104 கிராமங்களில் டீக்கடைகளில் இரட்டை குவளை முறை இன்னும் இருப்பது கண்டறியப்பட்டது. சில கிராமங்களில் குறிப்பிட்ட சமூகத்தினர்களுக்கு கண்ணாடி குவளையும், ஆதிதிராவிடர்களுக்கு சில்வர் குவளையும், பிளாஸ்டிக் கப்பும் கொடுக்கப்படுகிறது.

மயானத்திலும் பாகுபாடு: தமிழகத்தில் 208 கிராமங்களில் ஜாதி ரீதியாக மயானங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில் 97 கிராமங்களில் ஆதிதிராவிடர் சடலத்தை பொதுப்பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. 153 கிராமங்களில் மாற்று ஜாதியினர் குடியிருப்பு வழியாக எடுத்துச் செல்ல முடியாது. ஆதிதிராவிடர் மயானங்களில் தண்ணீர், மின்சாரம், கொட்டகை என எந்த அடிப்படை வசதியும் இல்லை. சலூன் கடைகளில்கூட பாகுபாடு பார்க்கப்படுகிறது. 142 கிராமங்களில் ஆதிதிராவிடர்களுக்கு முடிவெட்டக்கூடாது என தடையுள்ளது. சில கிராமங்களில் முடிவெட்டும் கருவிகள் இரண்டு "செட்' வைத்துக் கொண்டு, அதில் ஒன்றை ஆதிதிராவிடர்களுக்குபயன்படுத்துகின்றனர். இதேபோல், ரேஷன் கடைகள், ஆஸ்பத்திரிகள், சாவடிகள் என அனைத்து இடங்களிலும் பாகுபாடு தொடர்கிறது. 45 ஆதிதிராவிட பஞ்., தலைவர்கள் வன்கொடுமைக்கும், சித்ரவதைக்கும் ஆளாகியுள்ளனர்.

"எவிடன்ஸ்' நிர்வாக இயக்குனர் கதிர் கூறியதாவது :இந்திய அரசியல் சாசனம் பிரிவு 17ல் தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது. தீண்டாமையை கடைபிடிப்பது குற்றம் என்றுள்ளது. ஆனால் தீண்டாமை ஒழிப்பு என்பது சடங்குத்தனமான நடவடிக்கையாகவே உள்ளது. பேராசிரியர்கள், வக்கீல்கள், சமூக ஆர்வலர்கள் போன்ற குழுக்களை மாவட்டந்தோறும் அமைத்து, அனைத்து கிராமங்களிலும் தீண்டாமை குறித்த விரிவான ஆய்வை மேற்கொள்ள வேண்டும். தீண்டாமை கண்காணிப்பு குழு என்கிற சமூக ஆர்வலர்கள் குழுவினை ஒவ்வொரு தாலுகாவிலும் ஏற்படுத்த வேண்டும், என்றார்.

------------------------------------------

24 ஆண்டுகளாக இரட்டை குவளை முறை... முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்ல மக்கள் கோரிக்கை!

அ. சாதிக்பாட்சா
Comment (3)   ·   print   ·   T+  

முதலமைச்சர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதியில் இரட்டை குவளை முறை கடைபிடிக்கப்படுவதாக சர்ச்சை கிளம்பி இருக்கிறது. இது, முதல்வர் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்டால்தான் நடவடிக்கை வரும் என்று தொகுதி மக்கள் நம்புகிறார்கள்.
திருச்சி டு திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் மாநகராட்சி எல்லையிலிருந்து இரண்டு கிலோ மீட்டரில் உள்ளது நவலூர் குட்டப்பட்டு. ஸ்ரீரங்கம் தொகுதிக்குள் அமைந்துள்ளது இந்த கிராமத்தில் குறிப்பிட்ட சமூகத்தினர் பெரும்பான்மையாக வசிக் கிறார்கள். இதனால் ஊருக்குள் இவர்கள் வைத்ததுதான் சட்டம்.
இந்த ஊரில் ’சேட்டு டீக்கடை’ மிகப் பிரபலம். இதன் சொந்தக் காரரான வெங்கடாஜலம் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்தவர். இருபத்து மூன்று வருடங்களுக்கும் மேலாக டீ ஆற்றிக் கொடுத்துக் கொண்டிருக்கும் இவரது கடையில்தான் காலம் காலமாக இரட்டை டம்ளர் முறை கடைபிடிக்கப்படுவதாக புகார் வாசிக்கிறார்கள்.
சில ஆண்டுகளுக்கு முன்பு வரை சேட்டு டீ கடையில், தலித் மக்களுக்கு அலுமினியம் டம்ளரிலும் மற்றவர்களுக்கு எவர்சில்வர் டம்ளரிலும் டீ கொடுத்தார்களாம். இப்போது தலித்களுக்கு கண்ணாடி டம்ளரிலும் மற்றவர்களுக்கு எவர்சில்வர் டம்ளரிலும் டீ, காபி கொடுக்கிறார்கள்.
விஷயம் கேள்விப்பட்டு நாம் அங்கு போனபோது கூட, இரட்டை டம்ளர் சிஸ்டம் இருப்பதைக் கண்கூடாகவே பார்த்தோம். ஏன் இந்த வேறுபாடு? என்று கடை வெங்கடாசலத்திடம் பேச்சுக் கொடுத்தோம். நம்மை ஏற இறங்கப் பார்த்தவர், ’’ஊருக்குள்ள நிறையப் பேரு சபரிமலைக்கு போறவங்க. அதனால, அவங்களுக்கு தனியா எவர்சில்வர் டம்ளர்ல டீ தர்றோம்’’ என்று சொன்னார்.
அந்தக் கடையில் எவர்சில்வர் டம்ளரில் டீ அருந்திவிட்டுச் சென்ற சிலரிடம் நாம் பேச்சுக்கொடுத்துப் பார்த்ததில் அவர்கள் யாருமே சபரிமலைக்கு போவதாக சொல்லவில்லை. கண்ணாடி டம்ளரில் டீ குடித்துக் கொண்டிருந்த சிலரிடம் பேசியபோது, ’’இந்தக் கொடுமை இங்கே காலம் காலமா நடக்குதுங்க. நாங்க மட்டும் தனியா வந்து டீ குடிக்கிறப்ப இப்படி செஞ்சாக் கூட பரவாயில்லைங்க, வெளியூருல இருந்து நண்பர்கள் வரும்போது அவங்களை அழைச்சுகிட்டு டீ கடைக்கு போனா, அப்பவும் தனி டம்ளரில் டீ குடுத்து எங்கள அசிங்கப்படுத்துறாங்க. அந்த நேரத்துல எங்களோட வந்திருக்கிற நண்பர்கள் எங்கள ஒரு மாதிரியா பாக்குறப்ப அவமானமாவும் கேவலமாவும் இருக்கும். என்ன பண்ணச் சொல்றீங்க. எங்காளுங்களுக்குள்ள ஒத்துமை இல்லாததால எதிர்த்துக் கேக்க முடியல; எல்லாத்தையும் சகிச்சுக்க வேண்டி இருக்கு’’ என்று புலம்பினார்கள். இவர்களிலேயே ஒரு பிரிவினர், ’’எங்கள அவங்க வேத்துமையா பாக்குறதால நாங்க அந்தக் கடை பக்கமே போறதில்லைங்க” என்கிறார்கள்.
இங்கே அவங்க மட்டும் தான் பஞ்சாயத்து தலைவரா வரமுடியும் எங்களுக்கு வாய்ப்பே கிடைக்காது. ஒவ்வொரு முறையும் தேர்தலுக்கு முந்தியே ஊர்க் கூட்டம் போட்டு அவர்களே ஒரு வரை தலைவராக தேர்ந்தெடுத்துக்குவாங்க. எங்க தரப்பில் சூர்யாங்கிற தம்பி இந்த கொடுமைகளை எதிர்த்து இரண்டு தேர்தல்களில் போட்டியிட்டார். அவரால ஜெயிக்க முடியல. கடைசியில், அவர் மர்மமான முறையில செத்துப் போயிட்டாரு. நாங்க எல்லாரும் விவசாய கூலிகளா இருக்கதால அவங்கள நம்பித்தான் பிழைக்க வேண்டி இருக்கு. சம உரிமை கேட்டால் வேலைக்கு கூப்பிட மாட்டாங்காங்கிறதாலயும் எல்லாத்தையும் சகிச்சுக்க பழகிக்கிட்டோம்.
’தலித் ஒருவரை அவமானப்படுத்தும் நோக்கத்தில் அல்லது உணர்வுகளை புண்படுத்தும்விதமாக இது போன்ற செயல்களில் ஈடுபடுவது எஸ்.சி,எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டம்1989 பிரகாரம் தண்டனைக்குரிய குற்றம். இதற்கு 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும் என்கிறார் திருச்சியின் பிரபல வழக்குரைஞர் மார்ட்டின்.
சட்டம் ஒழுங்கை கையில் வைத்திருக்கும் முதல்வர் தொகுதியில் இப்படியொரு அவலம் இருப்பது குறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் ஜெயஸ்ரீ முரளிதரனிடம் எழுத்துப்பூர்வமாக புகார் கொடுத்திருக்கிறோம். முதல்வர் கவனத்துக்கு அவர் எடுத்துச் செல்லப்படலாம் என்று நம்பிக் காத்திருக்கிறோம்.

1 Comments

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post