போராட்ட அனல்

போராட்ட அனல்...
 
தமிழ்நாட்டில் இருள்..? 
 
 
நன்றி : புலிகேசி (முத்தமிழ் குழுமம்)


 நெய்வேலி அனல் மின் நிலைய ஒப்பந்தத் தொழிலாளர்களின் வேலைநிறுத்தம்!

 

சுரங்கம் தோண்டி பழுப்பு நிலக்கரியை வெட்டி எடுத்து, அதன்மூலம் மின் உற்பத்தி செய்து தென்னிந்தியா முழுவதையும் வெளிச்சத்தில் ஜொலிக்க வைக்கும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் பணிபுரியும் மொத்த ஊழியர்கள் சுமார்

 
 
இருபத்தேழாயிரம் பேர். இதில் நிரந்தர தொழிலாளர்கள் 14 ஆயிரம் பேர். ஒப்பந்தத் தொழிலாளர்கள் 13,000 பேர். இந்த ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான் பணிநிரந்தரம் உள்ளிட்ட தங்களது கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மார்ச் 29-ம் தேதியிலிருந்து காலவரையறையற்ற வேலைநிறுத்தத்தில் இறங்கியிருக்கிறார்கள். இதனால், தமிழகம் உட்பட ஐந்து தென்மாநிலங்கள் நிரந்தரமாக இருட்டில் மூழ்கும் அபாயம் ஏற்பட்டிருக்கிறது.

வேலைநிறுத்தத்தை முன்னின்று நடத்தும் ஜீவா ஒப்பந்தத் தொழிலாளர்கள் சங்கத்தின் பொதுச்செயலாளர் வெங்கடேசனை சந்தித்தோம்.

''என்.எல்.சி-க்காக காலம் காலமாக உயிரைக் கொடுத்து உழைப்பது ஒப்பந்தத் தொழிலாளர்கள்தான். ஆனால், எங்களுக்கு மாதச் சம்பளம் வெறும் 4,000 ரூபாய்தான். இதே வேலையைப் பார்க்கும் நிரந்தர ஊழியர்களுக்கு ஊதியம் மாதம் 15,000 ரூபாய். இந்த நிலையில், கடந்த 95-ம் ஆண்டில் கூட்டுறவு சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்தவர்களை பணி நிரந்தரம் செய்ய என்.எல்.சி. நிர்வாகம் ஒப்பந்தம் ஒன்றைப் போட்டது. அப்போது கிட்டத்தட்ட 400 பேரை பணி நிரந்தரம் செய்யாமல் விட்டுவிட்டனர். அவர்கள் கோர்ட்டில் முறையிட்டனர். அந்த வழக்கில், 'ஒப்பந்தத் தொழிலாளர்களோ கூட்டுறவு சங்கத்தில் இருப்பவர்களோ யாராக இருந்தாலும் அவர்களை சீனியாரிட்டி அடிப்படையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்' என்று கோர்ட் தீர்ப்பளித்தது. என்.எல்.சி. தரப்பில் அப்பீல் செய்யப்பட்டபோதும் இந்தத் தீர்ப்பையே கோர்ட் உறுதி செய்தது. ஆனால், நிர்வாகம் இதுவரை ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரமாக்குவது சம்பந்தமா துரும்பைக்கூட கிள்ளிப் போடவில்லை. அதனால்தான் இந்தப் போராட்டம்'' என்றார்.

மார்ச் 29-ம் தேதியிலிருந்தே நிலக்கரி வெட்டி எடுப்பது, இயந்திரங்கள் இயக்கம், மின் உற்பத்தி ஆகிய முக்கியப் பணிகள் ஸ்தம்பிக்கத் தொடங்கிவிட்டன. ஏற்கெனவே கையிருப்பில் இருந்த நிலக்கரியைக்கொண்டு தற்போது மின் உற்பத்தி நடக்கிறது. அந்தக் கையிருப்பு நிலக்கரியில் 65 சதவிகிதம் ஏப்ரல் 3-ம் தேதி வரை காலியாகிவிட்டதாம். எஞ்சியிருப்பது இன்னும் எத்தனை நாளைக்கு வரும் என்பதே நடுங்க வைக்கும் மிகப்பெரிய கேள்வி!

இப்போதே, உற்பத்தியாக வேண்டிய 2,490 மெகாவாட் மின்சாரத்துக்குப் பதிலாக வெறும் 1,000 மெகாவாட் மின்சாரம் மட்டுமே உற்பத்தி ஆகிறது. நிலக்கரி இருப்பு தீர்ந்து போனால் மின்உற்பத்தியும் அவ்வளவுதான். ஒப்பந்தத் தொழிலாளர்களின் போராட்டத்தை முடிவுக்குக்கொண்டுவர, ஏப்ரல் முதல் தேதி சென்னையிலும், இரண்டாம் தேதி நெய்வேலியிலும் நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்துவிட்டதால் தீவிரமாகி யிருக்கிறது போராட்டம். தங்களுக்கு ஆதரவாக நிரந்தர தொழிலாளர்களின் ஒத்துழைப்பைக் கேட்டிருக்கிறார்கள் ஒப்பந்தத் தொழிலாளர்கள்.

இந்த நிலையில்... சுரங்க வாசலில் மறியல் போராட்டத்தில் இறங்கிய தொழி லாளர்களை போலீஸ் கைது செய்த தால் போராட்டத்தின் கொந்தளிப்பு அதிகரித்துவிட்டது.

தொழிற்சங்கத்தின் சிறப்புத் தலைவர் குப்புசாமி நம்மிடம், ''ஒப்பந்தத் தொழிலாளர்களுக்காக ரெண்டுவருஷத்துக்கு ஒப்பந்தக்காரர்கள்கிட்ட போட்ட டெண்டர் 138 கோடி ரூபாய். ஆனா, இதே அளவுள்ள நிரந்தர ஊழியர்களின் வருட சம்பளம் 516 கோடி ரூபாய். எந்தளவுக்கு எங்க உழைப்பு சுரண்டப்படுதுன்னு பார்த்துக்குங்க. இது மட்டுமில்ல, எங்களுக்கு குவார்ட்டர்ஸ், மருத்துவ வசதி, போனஸ் எதுவுமே கிடையாது. எங்களை நிரந்தரமாக்குங்கனு நிர்வாகத்துக்கிட்ட ஒவ்வொரு முறையும் நாங்க போராடுறப்ப, 'அது உங்களுக்கும் உங்க ஒப்பந்ததாரர்களுக்கும் உள்ள பிரச்னை'னு சொல்லி நிர்வாகம் தட்டிக் கழிச்சுடுது. இதுக்கெல்லாம் நிரந்தரமான தீர்வு கிடைக்கும் வரை ஓயமாட்டோம்'' என்றார் ஆவேசத்துடன்.

போராட்டம் குறித்து என்.எல்.சி. தரப்பில் அதன் பி.ஆர்.ஓ-வான ஸ்ரீதரிடம் பேசினோம். ''இது ஒப்பந்ததாரர்களுக்கும், அவர்கள் கீழுள்ள தொழிலாளர்களுக்கும் இடையேயான பிரச்னை. நிறுவனத்தின் பணிகளும் பாதிக்கப்படுவதால் நாங்களும் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறோம். மாவட்ட ஆட்சியர், கண்காணிப்பாளர் ஆகியோரும், எங்கள் அதிகாரிகளும் தொடர்ந்து பேசி வருகிறார்கள். அதன் அடிப்படையில் முடிவுகள் மேற்கொள்ளப்படும்'' என்றார்.

இந்தப் பிரச்னையில் ஒரு நல்ல தீர்வு கிடைக்க வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் தா.பாண்டியன், அமைச்சர் ஆற்காடு வீராசாமி மூலமாக முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார். ஏ.ஐ.டி.யூ.சி. தலைவரும் கோவை எம்.பி-யுமான சுப்பராயன் நெய்வேலியில் நடக்கும் மறியல் போராட்டத்தில் கலந்துகொள்ளப் போகிறார்.

இந்த முயற்சிகள் எல்லாம் விரைவில் நடந்து, தொழிலாளர் போராட்டம் ஒரு முடிவுக்கு வரவேண்டும். இல்லையேல், தமிழகமெங்கும் அந்தகாரம் கோலோச்ச ஆரம்பித்துவிடும்!
 
நன்றி : ஜூவி.

--
தியாகு

-
""உலகின் எங்கோ
ஒரு மூலையில்
நடக்கும் அநியாயத்தைக்
கண்டு உங்கள்
மனம் கொதித்தால்
நாம் இருவரும் தோழர்களே........""

--- சே குவேரா
============================

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post