வளர்ச்சி + வறுமை = புரட்சி

நன்றி : ஜென்ராம், ஜூனியர் விகடன், 19.09.2007 (பொதுவுடமையில் தோழர் அக்னி சிறகு)

அமைதியான சமூக மாற்றத்தை சாத்தியமில்லாமல் செய்பவர்கள், ஒரு வன்முறைப் புரட்சியைத் தவிர்க்க முடியாதபடி உருவாக்கி விடுகிறார்கள்' என்ற வாசகத்தை அவர் அறிந்திருந்தாரா எனத் தெரியவில்லை. ஆனால், அப்படி ஒரு அர்த்தம் தொனிக்கும் வகையில்தான் அவர் பேசி இருக்கிறார்.

''நாட்டில் பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையில் பெரும் பிளவு ஏற்பட்டிருக்கிறது. இது நல்லதல்ல. இந்த இடைவெளி எப்போதெல்லாம் அதிகரித்ததோ, அப்போதெல்லாம் புரட்சி ஏற்பட்டு இருக்கிறது'' என்று வருமான வரித்துறையின் தலைமை ஆணையர் சி.ஆர்.ரவிச்சந்திரன் பேசி இருக்கிறார். கடந்த 8ம் தேதி சென்னையில் நடந்த ஒரு கூட்டத்தில் 'வருமான வரி செலுத்துவதில் உள்ள பிரச்னைகளை எப்படி அணுகுவது' என்ற தலைப் பில் பேசும்போது அவர் இதைக் குறிப்பிட்டு இருக்கிறார்.

வழக்கமாக அரசியல் தலைவர்கள்தான் இதுபோலப் பேசுவார்கள். அதுவும் ஏழ்மையில் இருக்கக்கூடிய மனிதர்களுடைய வாக்குகளைக் குறி வைத்துப் பேசுவார்கள். ஆனால் இங்கு ஓர் அதிகாரி பேசி இருக்கிறார். இது வரவேற் கத்தக்க ஒரு மாற்றம்தான்! அதே சமயத்தில், பொருளாதார ஏற்றத் தாழ்வு மட்டுமே சமூகப் புரட்சிக்கு இட்டுச் செல்லுமா என்ற கேள்வி எழுவதையும் தவிர்க்க முடியவில்லை. பொருளாதார மற்றும் உற்பத்தி உறவுகளில் தலைகீழ் மாற்றத்தை உருவாக்கும் புரட்சியைத்தான் அவர் இங்கே குறிப்பிட்டாரா என்பதும் விவாதத்துக்கு உரிய கேள்வியாகிறது. ஏனெனில், நாம் வாழும் சமூகத்தில் எது புரட்சி, எது கலகம், எது அராஜகம் என்ற வேறுபாடு பெரும் பான்மையான மக்களுக்குப் புரிந்திருக்கவில்லை.

''கலகங்கள் வெற்றி பெற்றால்

புரட்சி என்பார்கள்;

புரட்சி தோற்றுப் போனால்

கலகம் என்பார்கள்!''

என்ற கவிதை வரிகள் இங்கே நினைவில் கொள்ளத்தக்கவை!

எனவே, வருமான வரித்துறை ஆணையர் சொன்ன 'புரட்சி' என்ற சொல்லை விட்டுவிடுவோம். ஆனால், அவர் என்ன சொல்ல விரும்பியிருப்பார் என்பதைப் புரிந்து கொள்ள முடிகிறது. பெரும்பாலான இந்திய மக்களிடம் 'அமைதியின்மை' இருக்கிறது என்பதே அவருடைய பேச்சின் உட்பொருள்.


அது உண்மைதான்! திருட்டு, வழிப்பறி, கொள்ளை, ஆள் கடத்தல், பணம் பறித்தல் போன்றவற்றையும் 'அமைதியின்மை'யின் வெளிப்பாடுகள் என்று சொல்லலாம்.

இந்த அமைதியின்மைக்கு என்ன காரணம்? ஒருபுறம் உலகக் கோடீஸ்வரர் கள் பட்டியலில் இந்தியர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. மறுபுறம் கோடிக்கணக்கான மக்கள் சராசரியாக ஒரு நாளைக்கு நூறு ரூபாய்கூட சம்பாதிக்க முடியாத நிலையில் இருக்கிறார்கள். இந்தப் பிளவு, சமூகத்தின் அமைதிக்கு இடையூறாக இருக்கிறது. இந்த இருதரப்பில் அரசு கோடீஸ்வரர் களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறது. இதன் காரணமாகவே நாட்டின் பல பகுதிகளில் அரசாங்கங்களை எதிர்த்துப் போராட்டங்கள் நடைபெறுகின்றன. இந்தப் போராட்டங்களை நோக்கி மக்களை உந்தித் தள்ளும் முக்கியமான நிகழ்வு என்ன? பத்து சதவிகித பொருளாதார வளர்ச்சியை நோக்கிய இந்தியாவின் பயணத்தில் நிலத்தை, வசித்த வீட்டை, பார்த்துக் கொண்டிருந்த வேலையை லட்சக்கணக்கான மக்கள் இழக்க நேர்கிறது என்பதுதான்!

பத்து சதவிகித பொருளாதார வளர்ச்சியை எட்டுவதற்காக நம்முடைய அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகள் என்ன? லட்சக்கணக்கான மக்களை இடம்பெயரச் செய்யும் பெரிய அணைகள், ஆயிரக் கணக்கான ஏக்கர்கள் நிலத்தை கையகப்படுத்தும் தொழிலகங்கள் மற்றும் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள், பழங்குடியினர் வாழும் பகுதிகளில் சுரங்கம், தொழிற்சாலைகள் மற்றும் சுற்றுலா வளாகங்கள் போன்றவை நம்முடைய வளர்ச்சிக்கு அடையாளங்களாக முன்னிறுத்தப்படுகின்றன. சுதேசி தொழில்கள் நசிந்துப்போய் ஆயிரக்கணக்கான தொழிற்சாலைகள் மூடப்படுவதற்குக் காரணமாக இருக்கும் பன்னாட்டு மூலதனம் தங்கு தடையின்றி இந்தியாவுக்குள் வருவதற்கு ரத்தினக் கம்பள வரவேற்பு அளிக்கப்படுகிறது. இந்த நடவடிக்கைகள் காரணமாக ஏராளமான மக்கள் பெரும்பாதிப்புக்கு உள்ளாகிறார்கள். இவ்வாறு பாதிக்கப் படும் மக்கள், அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராகப் போராடுகிறார்கள்.

கடந்த இரண்டு வருடங்களாக, நிலம், வேலை, குடியிருப்பு ஆகியவற்றை இழக்கும் மக்கள் நடத்தும் போராட்டங்கள் குறித்த செய்திகளை நாம் அடிக்கடிபார்க்க முடிகிறது.2006 ஜனவரி யில் ஒரிசா மாநிலத்தில் கலிங்காநகர் என்னும் இடத்தில் டாடா எஃகு ஆலைக்காக நிலம் கையகப்படுத்தப் படுவதை எதிர்த்து பழங்குடியினர் சாலை மறியலில் இறங்கினர். நவி மும்பையில் ரிலையன்ஸ் நிறுவனத்தின் சிறப்புப் பொருளாதார மண்டலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து 30,000 விவசாயிகள் திரண்டனர். மேற்கு வங்கத்தில் சிங்கூர், நந்திகிராம் பகுதிகளில் போராட்டங்கள் தீவிரமடைந்தன. மகாராஷ்டிரா, ஹரியானா, ஒரிசா, ஜார்க்கண்ட், மத்தியப் பிரதேசம், சட்டீஸ்கர் ஆகிய மாநிலங்களில் 'வளர்ச்சித் திட்டப்' பணிகளை எதிர்த்து மக்கள் போராடி வருகிறார்கள். ஆந்திராவில் நிலம் கோரி இடதுசாரிகள் தலைமையில் போராட்டம்நடக்கிறது.

மேலே சுட்டிக் காட்டப்பட்டிருக்கும் மக்கள் போராட்டங்களைத் தவிரவும் பல வகைகளில் மக்கள் எதிர்ப்பைக் காட்டுகிறார்கள். ஆனால், இந்த எதிர்ப்பு எல்லாம் முறைப்படுத்தப்பட்ட அரசியல் எதிர்ப்பாக வெளிப்படவில்லை. இருந்த போதிலும் மக்களுடைய எதிர்ப்பைக் கண்டு அரசு தயங்குகிறது. சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்கு அளிக்கப்படும் நிலத்தின் அளவைக் குறைத்தல், பாதிக்கப்படுவோரின் மறுவாழ்வு என்று சில நடவடிக்கைகளை எடுக் கிறது. இவை போதுமானவையாக இல்லை என்பதால் போராட்டங்களும் தொடர்கின்றன. இந்தப் போராட்டங்களை எல்லாம் அந்தந்த மாநில அரசாங்கங்களும் கடுமையாக ஒடுக்குகின்றன.

போராட்டங்களை ஒடுக்குதல் என்பதற்குக் காவல் துறை நடவடிக்கை என்று மட்டும் பொருளல்ல. கோடிக்கணக்கான பணச் செலவில் ஊடகங்களுக்கு அரசு விளம்பரங்கள், அந்த விளம்பரம் பெற்ற நன்றியை வெளிப்படுத்தும் விதத்தில் போராட்டச் செய்திகளை ஊடகங்கள் மறைத்தல் மற்றும் திரித்தல், அரசு திடீரென்று கண்டுபிடித்து பயன்படுத்தும் சொற்கள் எல்லாமே ஒடுக்குதலின் பகுதிகள்தான். திடீரென்று ஏவப்படும் 'சொல்' அடக்குமுறை என்றால் என்ன என்று நீங்கள் கேட்கக்கூடும். ஓர் அணை கட்டுகிறோம் என்று வைத்துக்கொள்ளுங்கள். அதனால் பாதிக்கப் படும் குடியிருப்புப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் அனைவரையும் 'திட்டத்தால் பாதிக்கப்பட்டவர்கள்' என்று அரசு அங்கீகரிப்பதில்லை. அவர்களில் பெரும்பாலானவர்களை, 'ஆக்கிரமிப்பாளர்களாக' அரசு அறிவித்து விடுகிறது. அவர்கள் புறம்போக்கு நிலத்தில் குடியிருப்பதை அரசு அப்போதுதான் 'கண்டறிகிறது'!

வளர்ச்சி மற்றும் பொதுநன்மை கருதி அந்தப் பகுதியில் பாதிக்கப் படுவோர் விட்டுக்கொடுக்க வேண்டும் என்று 'வளர்ச்சி'யின் ஆதரவாளர்கள் உபதேசம் செய்கிறார்கள். இந்தக் கருத்தை அரசும் ஏற்றுக் கொள்வதாகவே தெரிகிறது. இந்த கருத்தை அனைவரையும் ஏற்றுக்கொள்ளச் செய்வதற்கு மிகவும் எளிய கணக்கு மூலம் முயற்சி மேற்கொள்ளப்படுகிறது. 100 கோடி மக்களின் நல்வாழ்வுக்காக 1 லட்சம் பேர் கஷ்டப்பட நேர்ந்தால் அதைப் பொறுத்துக்கொள்ள வேண்டும் என்பது அவர்களுடைய அறிவுரை! பாதிக்கப்படுவோரின் வாழ்க்கைக்கு ஆதாரமான சொத்தே அவர்கள் குடியிருக்கும் வீடு அல்லது நிலம் அல்லது வேலையாகத்தான் இருக்கும். அதை இழந்தாலும் அவர்கள் பொறுத்துக்கொள்ள வேண்டுமாம்!

இவர்களுடைய இந்த வாதத்தை சற்றே திருப்பிப் போடுங்கள். அம்பானி, டாடா உள்ளிட்ட இந்தியாவின் முதல் ஓராயிரம் பணக் காரர்களின் சொத்துக்களை 100 கோடிப் பேரின் நலனுக்காக கையகப் படுத்தலாமா என்று கேளுங்கள். இந்தக் கேள்வி காதில் விழுந்த அடுத்த நொடி, 'வளர்ச்சி'க்கு ஆதரவாக பேசுபவர்கள் காற்றில் கரைந்து காணாமல் போய்விடுவார்கள்!

Post a Comment

Please Select Embedded Mode To Show The Comment System.*

Previous Post Next Post